எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

அ.முத்துலிங்கம்


I

என்னுடைய மகள் ஒரு multitasker. தமிழில் வேண்டுமென்றால் அட்டாவதானக்காரி என்று சொல்லலாம். ஒரு காரியத்தை ஒரு நேரத்தில் செய்வதென்று இல்லை. ஒரு சர்க்கஸ்காரி போல பல காரியங்களை ஒரே சமயத்தில் செய்யவேண்டும்.

அன்று அலுவலகத்தில் இருந்து வந்ததும் பதிலியை ( answering machine ) அமுக்கிவிட்டாள். அது தன் பாட்டுக்கு அன்றுதான் சேகரித்த தகவல்களை அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டு வந்தது. வீட்டு தபால் பெட்டியில் விழுந்திருந்த கடிதங்களை அசிரத்தையாக தட்டிப்பார்த்து மேசையிலே எறிந்தாள். அதே சமயம் நுண்ணலை அடுப்பிலும் எதையோ வைத்து பட்டனை அமுக்கி சுழலவிட்டாள். இத்தனைக்கும் என் மகளின் நாரியில் அப்ஸரா 60 பாகை கோணத்தில் உட்கார்ந்திருந்தாள். அப்படியே அவளை இடது பக்கமாக கழற்றி தூக்கி எடுத்து என்னிடம் கொண்டு வந்தாள். நானும் ஒருமாதமாகக் காத்திருந்து, ஆறாயிரம் மைல் தாண்டி வந்த ஒரு பார்சலை பெறுவதுபோல, அவளைப் பெற்றுக் கொண்டேன்.

அப்ஸரா என்றால் அவளுக்கு இன்னும் ஒரு வயது எட்டவில்லை ; பத்து மாதம்தான். ‘அப்பா, இந்த கிறேப்ஸை இவளுக்கு குடுங்கோ ‘ என்று சொல்லி விட்டு அப்படியே சுழன்று கைபேசியில் ஏதோ ஒரு எண்ணை அமுக்கத் தொடங்கினாள் என் மகள்.

அப்ஸராவுக்கு பிடித்தது சிவப்பு, விதை இல்லாத திராட்சை. அதிலும் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று அப்போதுதான் ஐஸ் பெட்டியில் வைத்து எடுத்ததுபோல இறுக்கமாக இருக்கும். மற்றது மிருதுவான தசைகளைக் கொண்டது. இரண்டாவதுதான் அவளுக்கு பிடிக்கும். தொட்டுப் பார்த்து அதை உறுதி செய்தபிறகுதான் வாயை திறப்பாள். ஒரு முழு திராட்சையையும் அவளால் சமாளிக்க முடியாது. ஏனென்றால் முன்னுக்கு இரண்டு பற்கள், அதுவும் கீழ் பற்கள், பஸ்மதி அரிசிபோல, இப்போதுதான் தோன்ற ஆரம்பித்திருந்தன. திராட்சையை நீளப் பாதியாக நறுக்கி ஒரு பாதியை அவளுக்கு தருவேன். முகத்தை நாலு கோணலாக மாற்றி வாயை பல அசைவுகள் செய்து சாப்பிடுவாள். இதற்கிடையில் மற்ற பாதியை நான் சாப்பிட்டு விடுவேன்.

மீண்டும் வேண்டுமென்பாள். அவளுக்கு அவசரம். இன்னுமொன்றை நறுக்குவேன். வாயில் இருப்பது தீர்ந்துவிட்டதா என்று தீர்மானித்துதான் அடுத்ததை அனுப்பவேண்டும் என்பது என் மகளுடைய கட்டளை. மீற முடியாது. மீறினால் வேலை போய்விடும்.

‘ஆ, காட்டு. ஆ, காட்டு. ‘ அவள் வாயை திறந்தாள். எல்லாமே அங்கே சிவப்பாக இருந்தது. திறந்து அப்படியே வைத்திருந்தாள்.

ஒரு முறை கிருஷ்ணர் தவழும் பருவத்தில் வாயில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறார். யசோதை அவருடைய இடுப்பிலே தூக்கிப் பிடித்து வாயை காட்டு என்றாள். கிருஷ்ணர் பெட்டி போன்ற சிறு வாயை திறந்தார். அப்போது யசோதை அங்கே பிரபஞ்சத்தைக் கண்டாளாம்.

எனக்கும் அப்படியே தோன்றியது. உலகத்திலேயே அழகான காட்சி. சோகமான காட்சியும்கூட. இன்னுமொரு திராட்சையை அவளுடைய வாய்க்குள் போட்டேன். அது தன் பயணத்தை தொடங்கியது.

இந்த அலுப்பு பிடிக்கும் நடைமுறையில் சில மாற்றங்களைக் கொண்டுவர நான் முயன்றேன். ஒரு முறை பாதி திராட்சையை அவள் கையில் கொடுத்து நான் வாயை ஆவென்று வைத்துக்கொண்டேன். அந்த பாதி திராட்சையை என் வாய்க்குள் அவள் வைக்கவேண்டும் என்பது என் விருப்பம். அது அவளுடைய சின்ன மூளைக்குள் ஏறவில்லை.

மனிதர்களுடைய வாயை இவ்வளவு குளோசப்பில் அவள் பார்த்ததில்லை. பெருவிரலில் எக்கி நின்று என் வாயை புகுந்து பார்த்தாள். பிறகு முகர்ந்தாள். மிகவும் அதிசயமான ஒன்றாக இருந்தது. பிறகு பரவசமாகி அந்த பற்களை தொட்டுப் பார்ப்பதற்கு பிரயத்தனமானாள். நான் எவ்வளவு முயன்றும் அந்த திராட்சையை என் வாய்க்குள் வைக்கவேண்டும் என்பது அவளுக்கு பிடிபடவே இல்லை. நாலு கறுப்பு நிரப்பிகள் கொண்ட என் பல் வரிசைகளை விளையாட்டு காட்டுகிறேன் என்றே நினைத்துக் கொண்டாள்.

நான் விடாமுயற்சிக்காரன். எப்படியும் இன்னும் இரண்டு நாளைக்குள் இந்த வித்தையை அவளுக்கு பழக்கி விடுவேன். அப்போது திராட்சைகள் இன்னும் சீக்கிரமாக மறையும். அது வரைக்கும் நான் வேலையிலிருந்து நீக்கப் படாவிட்டால்.

II. முதல் நாள்

இந்த முதல் நாள் என்பது முக்கியமானது. இதை நான் அப்ஸராவுக்காக எழுதுகிறேன். ஒரு காலத்தில் நான் எழுதியதை அவள் வாசித்துப் பார்ப்பாள். அப்போது அவளுக்கு தன்னுடைய முதல் நாள் எப்படி இருந்தது என்பது புரியும். அவளாக இதை எழுத முடியாது ஏனென்றால் அவளுக்கு இப்பொழுதுதான் பத்து மாதம் நடக்கிறது. ஒரு குழந்தைக்கு முதல் பத்து மாதம் மிகவும் முக்கியம் என்று சொல்கிறார்கள். தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் காலம் சரியாக 280 நாட்கள். இதை பத்து பெளர்ணமிகள் என்றும் சொல்லலாம். பத்துமுறை சந்திரன் பூமியை சுற்றிய காலம். அல்லது பத்துமுறை சந்திரன் தன்னை தானே சுற்றிய காலம். இரண்டும் ஒன்றுதான். ஒரு குழந்தை தாயின் கருவிலே பத்து மாதம் இருந்துவிட்டு முற்றிலும் அந்நியமான உலகத்துக்குள் வருகிறது. இந்த புது உலகத்தில் மூச்சு விடவும், வாயினால் உண்ணவும் பழகுகிறது. பத்து மாதம் பூரணமாகும்போது அது கர்ப்பத்தில் வாழ்ந்த காலமும், வெளியுலகில் வாழ்ந்த காலமும் சமமாகிறது. பத்து மாதத்திற்கு பிறகுதான் குழந்தை முழுக்க முழுக்க வெளியுலக வாசியாகிறது.

அதி வேக விமானத்தில் பறக்கும்போது ஒலி அரணைக் கடக்கும் அந்த விநாடியில் கிளிக் என்று ஒரு சத்தம் கேட்கும். அதுபோல குழந்தைகளும் பத்துமாதக் கெடுவை தாண்டும்போது ஒரு சிறு அதிர்ச்சி அடைகிறார்கள். அப்ஸராவுக்கு பத்து மாதம் பூர்த்தியாகிவிட்டது. சப்பணம் கட்டி உட்காருவாள். வேகமாக தவழுவாள். எழுந்து நிற்பாள். ஆனால் நடக்க மாட்டாள். ஒவ்வொருமுறை டொக்டரிடம் போகும்போதும் அவளுடைய நீளத்தை அளந்து 24 இன்ச், 26 இன்ச் என்று குறித்துக் கொள்வார்கள். இப்பொழுது உயரம் 29 இன்ச் என்று குறித்து வைக்கிறார்கள்.

கால்களின் உபயோகம் இப்பொழுதான் அவளுக்கு தெரிகிறது. இவ்வளவு காலமும் கீழ் மேலாகத் தெரிந்த உலகத்தை முதல் முறையாக பக்கவாட்டில் பார்க்கிறாள். எல்லாமே மாறிவிட்டது. அவளுக்கு வேண்டிய பொருளை அவளாகவே தவழ்ந்துபோய் எடுத்துக் கொள்ளலாம். மற்றவர்கள் தயவு தேவையில்லை. அவள் இப்பொழுது சிந்திக்கும் திறமுடைய ஒரு தனி ஆள்.

என்னுடைய மகள் குழந்தைகள் காப்பகம் ஒன்றை தேடினாள். வேலைக்கு போகும்போது அப்ஸராவை அங்கே விட்டு போகலாம். நல்ல காப்பகமாக இருக்கவேண்டும். வீட்டுக்கு அண்மையில் உள்ள மூன்று காப்பகங்களுக்கு கணவனும், மனைவியுமாக போய்ப் பார்த்தார்கள். அதிலே ஒன்று பிடித்திருந்தது. பளிச்சென்ற விசாலமான கட்டடம். புதிதாகக் கட்டியது. அதிலே ஒரு விசேஷம் இருந்தது. மற்ற டேகேர் போல சாதாரண வீடாகக் கட்டி பின்பு டேகேராக மாற்றப்பட்டதல்ல. ஒரு முழு ஏக்கரில் முற்றிலும் குழந்தைகளுக்காக கட்டப்பட்டது. ஒரு குழந்தை கட்டடக் கலைஞர் நிர்மாணித்து, ஒரு குழந்தை என்ஜினியர் கட்டியது போல. இங்கே பெரியவர்கள்தான் அட்ஜஸ்ட் பண்ணி போகவேண்டும்.

உதாரணம் இங்கே இருந்த தண்ணீர் போக்கி, கொம்மோட் போன்றவை குழந்தைகள் உயரத்துக்கு கட்டப்பட்டிருந்தன. குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் பிளக் ஓட்டைகள். சின்னக் கைகள் அம்பிடும் தள்ளு லாச்சிகளோ, கப்போர்டுகளோ இல்லை. வயர்கள் இல்லை. விழுந்தால் கால்களில் உராய்வு ஏற்படாத மாதிரி தரை அமைப்பு. அவர்கள் திறக்கமுடியாதபடி கதவுகள், சாளரங்கள் என்று முன் எச்சரிக்கையுடன் அமைக்கப்பட்டிருந்தன. வெப்ப தட்ப சாதனங்கள்கூட குழந்தைகளுக்கு செளகரியமான அளவில் இயங்கின.

ஆனால் பெற்றோர்கள் சமாளித்து போகவேண்டும். கதவுகளுக்கு கடவு இலக்கங்கள் இருந்தன. அதை ஞாபகத்தில் வைத்திருக்கும் பெரியவர்கள் உள்ளே போய் வரலாம். குறிப்பிட்ட எல்லைகளை தாண்டி குழந்தைகளிடம் ஒருவரும் அணுக முடியாது.

இந்த காப்பகம் என் மகளுக்கு நல்லாகப் பிடித்துக்கொண்டது. ஆனால் ஒரு பிரச்சினை இருந்தது. அப்ஸரா இன்னும் தளர் நடை (toddler ) பருவத்தை எட்டவில்லை. கைக்குழந்தை (infant) வகுப்பில் அவளுக்கு இடமில்லை. ஆகவே அப்ஸராவின் பெயரை பதிவு செய்துவிட்டு வந்து அவள் நடக்கத் தொடங்கும் நாளுக்காக காத்திருந்தோம்.

மழை பெய்து நிலம் நனைந்த ஒரு நாள் மாலை. எங்கள் வீட்டு செல்ல நாய் ஈரமான இலைகளின் கீழ் மோந்துகொண்டு திரிந்தது. அப்ஸராவின் 13வது மாதம். திடாரென்று தானாக ஒருவர் உதவியும் இன்றி நாலு அடிகள் வைத்து நடந்தாள். அன்றுதான் அப்ஸரா உத்தியோகபூர்வமாக தளர் நடைப் பருவம் அடைந்ததாக ஏற்கப்பட்டாள்.

அடுத்தவாரம் என் மகளும், கணவனும் அவளை toddler வகுப்பில் சேர்க்க தீர்மானித்தார்கள். அதற்கான பல ஆயத்தங்கள் நடந்தன. உடை, பால், கட்டி உணவு, தொப்பி, சப்பாத்து, மேல் உடை, தண்ணீரில் நடக்கக்கூடிய சப்பாத்து ( பூட்ஸ் அல்ல) போன்றவை அடக்கம்.

ஒரு நாள் காலை இருவரும் அப்ஸராவை வெளிக்கிடுத்தி, காரின் பின் சீட்டில், முன் பார்க்கும் குழந்தை இருக்கையில் இருத்தி கட்டிக்கொண்டு சென்றார்கள். நானும் பின் இருக்கையில் அப்ஸராவுக்கு பக்கத்தில் உட்கார்ந்து போனேன். என் தொழில் ஒரு பார்வையாளனுடையது மட்டுமே என்று டேகேர் வருவதற்கிடையில் நாலு தரம் திருப்பி திருப்பி என் மகளால் நினைவூட்டப்பட்டேன்.

அங்கே அப்ஸராவின் வகுப்பில் இரண்டு காப்பாளினிகள். அப்ஸராவையும் சேர்த்து வகுப்பில் ஐந்து குழந்தைகள். அவர்களுக்கு அளவான மேசைகள், கதிரைகள், சாப்பாட்டு மேசைகள், படுக்கைகள், சிறு வீடுகள், பொம்மைகள், புத்தகங்கள் என்று எல்லாமே தயாராக இருந்தன. ஆனால் அப்ஸரா இன்னும் தயாராக இல்லை. காப்பாளினிகளிடம் அவளுக்கு ஒருவித பயமும் இல்லை. ஆனால் இது யார் இப்படி அசிங்கமாக நாப்பி கட்டியபடி தள்ளாடி நடப்பவர்கள். அவளுக்கு பயமாகி விட்டது. தாயை கட்டிப் பிடித்து முதலில் சிணுங்கினாள். பிறகு மெல்ல மெல்ல அழுகையை உயர்த்தி இறுதியில் இனிமேல் இல்லை என்பதுபோல கழுத்தைக் கட்டிக்கொண்டு வீரிட்டாள். குறட்டினால் கிளப்புவதுபோல ஒவ்வொரு விரலையும் பிரித்தெடுத்து தாயையும், பிளையையும் வேறு வேறாக்க வேண்டி வந்தது.

என் மகள் சிறிது நேரம் அவளுடன் சேர்ந்து விளையாடினாள். அவளுக்கு பராக்கு காட்டிவிட்டு மெதுவாக நழுவுவதுதான் எண்ணம். அப்ஸராவுக்கு புரியவில்லை. எதற்காக இந்த அபத்தமான ஏற்பாடு. வீடு நல்லாய்த் தானே இருக்கிறது. இங்கே ஏன் வந்து இருக்கிறார்கள். கண்களில் மிரட்சியுடன் சுற்றுமுற்றும் ஆராய்ந்தாள். ஏதோ சரியில்லை என்பது அவளுக்கு விளங்கிவிட்டது. அந்தப் பெற்றோர்கள் அவள் கண்கள் திரும்பிய ஒரு கணத்தில் மறைந்துவிட்டார்கள்.

இது நடந்தது காலை ஏழு மணிக்கு.

அப்ஸரா தொடர்ந்து இரண்டு மணி நேரம் கதறினாள். அந்தக் களைப்பில் அயர்ந்து நித்திரையானாள். பிறகு எழும்பியதும் தனக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத முகங்களைக் கண்டு மீண்டும் அழுதாள். தளர் நடையில் நகர்ந்து தேடி தன் மேலங்கியை எடுத்து டாச்சரிடம் நீட்டினாள். அதை அணிந்து அவளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அந்த சின்ன விஷயம் இந்தப் பெரிய டாச்சருக்கு தெரியவில்லை.

எனக்கு காப்பகத்தில் இருந்து தொலைபேசி வந்தபோது மணி 11.00. நான் புறப்பட்டேன்.

கடவு எண்ணை சரியாகப் பதிந்து உள்ளே நுழைந்தேன். கதவுக்கு வெளியே நின்று கண்ணாடி வழியே மெள்ள எட்டிப்பார்த்தேன். எல்லோரும் ஒதுக்கிவிட்ட ஒரு மூலையில், அநாதரவான தன் நிலையில் என்ன செய்யலாம் என்று தன் சின்ன மூளையில் யோசித்தபடி அப்ஸரா நின்றாள். என் நெஞ்சில் ஓங்கி அறைந்ததுபோல இருந்தது. திடாரென்று அவள் கண்கள் மின்னின. மறைந்து நின்ற என் முகத்தில் கால்வாசிக்கும் குறைவாகத்தான் தெரிந்திருக்கும். எப்படியோ பார்த்துவிட்டாள். வீல் என்று கத்தினாள். நான் பதை பதைத்து உள்ளே ஓடினேன். தூக்கி நெஞ்சோடு அணைத்தேன். ‘நான் வந்திட்டன், நான் வந்திட்டன் ‘ என்று ஆயிரம் முறை சொன்னேன். அவள் விம்மி விம்மி அழுதாள். அது ஏன் ? சிரிக்க அல்லவா வேண்டும். எனக்கு புரியவில்லை.

காரில் பின் சீட்டில் போட்டு கட்டினேன். மெள்ள மெள்ள அன்பான வார்த்தைகளை மிருதுவாகச் சொன்னபடி காரைக் கிளப்பினேன். எவ்வளவு ஆற்றியும் ஆறாத துக்கமாக அழுகை பீரிட்டுக் கொண்டே வந்தது. கண்ணீர் கொட்டியது. அந்த சின்ன மூளைக்குள் ஏதோ ஆழமான குழப்பம் நடந்து கொண்டிருந்தது.

கார் வேகம் பிடிக்க பிடிக்க அழுகை ஓயத் தொடங்கியது. இருந்தாலும் நடுங்கும் அவள் சொண்டுகளுக்குள் இருந்து பல சொற்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியே வந்தன. ‘கொடுமை ‘ , ‘துரோகம் ‘ போன்ற வார்த்தைகள். இன்னும் பல புதிய வார்த்தைகளும் இருந்திருக்கலாம். நான்தான் இவ்வளவு பெரிய உடம்பை வைத்துக்கொண்டு, இவ்வளவு பெரிய மூளையை வைத்துக்கொண்டு, இன்னும் அவளுடைய பாஷையை கற்றுத் தேறவில்லையே.

முற்றும்

***

amuttu@rogers.com

Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்