கடிதங்கள்

This entry is part of 57 in the series 20030717_Issue

ஜூலை 17, 2003திண்ணையில் அண்மைக்காலமாக நடந்து வரும் அறிவியல் புனைகதைகள் குறித்த தகவல் பரிமாற்றங்களில் ஏனோ தெரியவில்லை மாலனது பெயர்கள் தவிர்க்கப்படுகின்றன. எண்னிக்கையில் சுஜாதாவிற்கு அடுத்தபடியாக அதிகம் அறிவியற் புனைகதைகள் எழுதியவர் என்ரு காஞ்சனா தாமோதரன் பெயரைக் குறிப்பிட்டிருந்த ஜெயமோகன், அவர் மூன்று கதைகள் எழுதியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால் நானறிந்தவரை, காஞ்சனாவிற்கு முன்னரே, நான்கைந்து அறிவியற் கதைகள் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய வித்வான் என்ற கதை மிகப் பிரபலமானது. அதைக் குறித்து சுஜாதாவே சென்னையில் நடைபெற்ற தமிழினி கூட்டத்தில் குறிப்பிட்டுப் பேசினார். அகில இந்திய வானொலியின் நாடகவிழாவில் அது நாடகமாக ஒலிபரப்பப்பட்டு, பின் அகில இந்திய அளவில் பரிசும் பெற்றது. அதை இன்னும் வாசகர்கள் நினைவில் கொண்டிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் பொதிகைத் தொலைக்காட்சியில் தொலைபேசி மூலம் பிரபலங்களுடன் உரையாடும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில், நடிகர் ஸ்ரீகாந்த்திடம் இந்த நாடகத்தை நினைவு கூர்ந்து ஒருவர் பேசினார். அப்போது ஸ்ரீகாந்தும் மாலனது பெயரைக் குறிப்பிட்டார். விதவான் தவிர மாலன், கல்கி என்ற அறிவியற் புனைகதை எழுதியுள்ளார்.. அது முதலில் கல்கியிலும் பின் திண்ணையிலும், அதன் பின் சிங்கப்பூர் தமிழ்முரசிலும் வெளியிடப்பட்டது. அந்தக் கதை இன்னும் திண்ணை தொகுப்பில் இருக்கிறது என்று நினைக்கிறேன். இவை தவிர, தேர்தலை நையாண்டி செய்து ஒரு கதை, இயந்திரங்கள் ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கதை, (எம்.ஜி.ஆர் மறைந்ததையடுத்து ஏற்பட்ட குழப்பத்தை வைத்து எழுதியிருப்பார் என்பது என் ஊகம்) இணையம் எல்லாம் வருவதற்கு முன்னரே e-booksஐ வைத்து எழுதப்பட்ட ஒரு கதை என் மாலன் ஐந்து அல்லது ஆறு அறிவியற்கதைகள் எழுதியிருக்கிறார்.அவரது அறிவியல் கதைகள் பற்றி சென்ன ஆன்லைனில் வெளியான ஒரு கட்டுரையிலும், யூனஸ்கோ கூரியரில் வெளியான கட்டுரைகளிலும் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் பெயரை திண்ணையும் ஜெயமோகனும் இருட்டடிப்புச் செய்ய முற்படுவதேன் ? ஜெயமோகன் தன் இலக்கிய மதிப்பீடுகளைச் செய்யும் போது சொந்த விருப்பு வெறுப்புக்களை முன் நிறுத்த வேண்டாம். அது திண்ணையின் பெயரையும் கெடுத்து விடும்.

திருமதி ராம சங்கரன்


ஆசிரியருக்கு,

துக்காராம் எழுதியகதை படித்தேன். கதைகூறும் முறையில் துவக்கம் முதல் புதிய போக்கு இல்லையென்றாலும் அதன் முடிவு சிறப்பாக இருந்தது. கதையின் உடல்பகுதியில் இயற்கை குறித்த ஏக்கமெல்லாம் ஒரு சம்பிரதாயமான நடை, கோணத்தில் அமைந்திருந்தன. முடிவு சிறுகதை அதிர்ச்சி என்பதற்கு மேலாக நமது இன்றைய வாழ்வில் உள்ள அன்றாட முரண்பாட்டை காட்டுவதாக இருந்தது.

இவான் இல்யிச் போக்குவரத்தின் நவீன முன்னேற்றங்கள் எப்படி மனிதனின் வாழ்விடத்துக்கும் அவனுக்குமான உறவை சீரழித்துவிட்டன என்று ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதை பற்றி பேச அவர் டெல்லி வந்தார். ஜவகர் லால நேரு பல்கலையில் யாரோ ஒரு மாணவர் ‘ மிஸ்டர் இல்யிச் அமெரிக்காவிலிருந்து நீங்கள் ஜெ விமானத்தில் தானே வந்தீர்கள் ? ‘ என்று கேட்டதாக சொல்வார்கள். அறிவியலால் உருவாக்கப்பட்ட உலகில் இருந்து கொண்டு அதைப்பற்றிய அச்சத்தை உணர்கிறோம், பங்கிடுகிறோம். காடுகள் அழிவதைப் ப்காகிதத்தில் கவிதை எழுதுகிறோம். கடிதம் எழுதும் பழக்கம் இல்லாமலாவது பற்றி மின்னஞ்சல் அனுப்புகிறோம். இணையத்தின் தீமை குறித்து சமீபத்தில் இணையத்தில் ஒரு குறிப்பு கண்டேன்.

இதை தொட்டுக்காட்ட முடிந்திருப்பதே கதையின் வெற்றி

ஜெயமோகன்


இந்த வாரம், இராம.கி. ன் தன்னேர்ச்சி, ஐந்திணைக்காட்சிகள் இரண்டும் ஓசை நயத்துடனும் கருத்துடனும் ரசிக்க வைத்த கவிதைகள். ரவி ஸ்ரீனிவாசின் இலக்கிய உலகம் என்ற ஜெயமோகனின் கட்டுரையிலும் இலக்கியம் பற்றிய கருத்துக்கள் ரசிக்கும்படி இருந்தன.

இனியவன் செல்வன்


மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

இலினாஸிஸ் பல்கலைக்கழக விலங்கு நோயுயிரியல் பேராசிரியரான ராபர்ட்டோ தொகாம்போவின் அக்ரோபேக்டாரியம் துமிபேசிஸன்ஸ் மீதான ஆராய்ச்சி குறித்து தங்கள் திண்ணை இணைய வார இதழில் அண்மையில் அறிவியல் பகுதியில் வெளியாயிருந்த கட்டுரை குறித்து:

ராபர்ட்டோ தொகாம்போவின் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ஆர்கனெலான அஸிடோகால்ஸிஸோம் அதன் சவ்வுப்படல மேற் போர்வை அமைப்பால் முக்கிய ஆச்சரியமாகியுள்ளது. ஏனெனில் புராதன ஆதிசெல்லமைப்பு கொண்ட ப்ரோகாரியோட்களை மற்ற யூகாரியோட்களிலிருந்து பிரிப்பதில் இத்தகைய சவ்வூட்டு மேல்போர்வை அமைப்பை கொண்ட செல் ஆர்கனெல்கள் இல்லாமலிருப்பது ஒரு முக்கிய வேறுபாடாக கருதப்பட்டு வந்துள்ளது. இதனால் ‘உள்ளுறை இசைவிருப்பு ‘ (Endo symbiosis) என அறியப்படும் பரிணாம இயக்க முறையே. ஆனால் இது மட்டுமே ஒரே பரிணாம இயக்க முறையல்ல- பாலியல் தேர்வு, இயற்கை தேர்வு, உள்ளுறை இசைவிருப்பு என பல இயக்கங்கள் இணைந்ததொரு கூட்டியக்கமே பரிணாம இயக்கம் ஆகும். பலசெல் அமைப்புகள் கொண்ட நாம் நம் நேரடி புலன்களால் அறியமுடிந்த உயிருலகில் மிக முக்கிய பரிணாம இயக்க முறையாக டார்வினால் இயற்கை தேர்வு அறியப்பட்டது. லின் மர்குலிஸ் நுண்ணுயிரிகளின் செழுமையான பன்மை நிறைந்த உலகில் ‘உள்ளுறை இசைவிருப்பு ‘ இயற்கை தேர்வினைக்காட்டிலும் முக்கியமான பரிணாம இயக்க செயல்பாடாக விளங்குவதை அறிந்தார். மைட்டோகாண்டிரியா, பச்சையத்தின் க்ளோரோப்ளாஸ்ட் ஆகிய ஆர்கெனல்கள் பல செல் உயிரினங்களில் தம்மை இணைவித்து தாம் இணைந்த செல்களை ஜீவ முக்கியத்துவம் உடையதாக்கி தம்மையே ஜீவித்திருக்க வழி செய்து கொண்டதாக கருத பல சான்றுகள் உள்ளன. அவற்றுள் அதி முக்கியமானது வட்ட DNA இழை. ப்ரோகாரியோட் செல்களில் காணப்படும் வட்ட DNA இழைகள் யூகாரியோட் செல்களில் இல்லை. ஆனால் மைட்டோகாண்ட்ரியா மற்றும் க்ளோரோப்ளாஸ்ட்களில் உண்டு. இனி அக்ரோபேக்டாரியம் துமிபேசிஸன்ஸ் நுண்ணுயிரியை எடுத்துக்கொண்டால் அஸிடோகால்ஸிஸோமை பொறுத்தவரை அதன் முக்கிய இயக்கம் கால்சிய நேர்மின்அயனி குழாய் (Ca++ ion pump) செயல்முறை கொண்டதாக உள்ளது. இது செல்லில் கால்சியம் மிகுந்த அளவில் சேமித்துவைக்கப்பட ஏதுவாகிறது. எனவே இது செல்லின் கால்சிய அளவுகளை ஒழுங்கு சீர் செய்யும் பணியினை செய்வதாக இருக்கலாம். கூடவே அதிகமாக பாஸ்பேட் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு அஸிடோகால்ஸிஸோம் ஆற்றல் உற்பத்தி மற்றும் பங்கீடுகளில் பங்கு கொண்ருக்கலாம் என ஊகிக்க வைத்துள்ளது. (மைட்டோகாண்டிரியா பலசெல் உயிர்களின் செல்களில் இப்பணியையே ஆற்றுகிறது. இங்கு ஒரு சிறு வேற்று தகவல்: பாஸ்பரஸுக்கும் ஆற்றலுக்குமான உறவினை கண்டுபிடித்ததில் பாரத அறிவியலாளர் டாக்டர்.சுப்பாராவ்வின் பங்கு முக்கியமானது. அவ்வுறவினை விளக்கும் அடுத்தக் கட்டமே புகழ்பெற்ற அடினோஸின் ட்ரை பாஸ்பேட் (ATP) உயிரமைப்புகளில் ஆற்றலின் ‘மூலக்கூற்றளவு பண்டமாற்று நாணயமாக ‘ கண்டு பிடிக்கப்பட்டது.) அஸிடோகால்ஸிஸோம் கண்டுபிடிப்பு நுண்ணுயிர் வளர்ச்சியில் (உள்ளுறை இசைவிருப்பு தவிர்த்த) வேறுவித செயலியக்கங்களும் இருக்க கூடும் என்பதனை நமக்கு நினைவூட்டுகிறது. குறிப்பாக பரிணாம வளர்ச்சியில் நியூக்ளிக் அமிலத்தின் மற்றும் புரதத்தின் பரிணாம வளர்ச்சி கவனிக்கப்பட்ட அளவில் சவ்வூட்டுத்தன்மை கொண்ட மேல்போர்வை கவனிக்கப்படவில்லை. ஆனால் தொடக்க உயிரின் உருவாக்கத்தில் அதன் பங்கு அபரிமிதமானது. எனவே நியூக்ளிக் அமிலங்களற்ற ஆர்கெனல்களின் பரிணாமம் குறித்த புத்தொளி நமக்கு அஸிடோகால்ஸிஸோமின் பரிணாம பாதையை ஊகித்து,ஆராய்ந்து நிர்ணயிப்பதன் மூலம் கிட்ட கூடும். ராபர்ட்டோ தொகாம்போவின் மிகக் கவனமான வார்த்தைகளில், ‘அனைத்து ஆர்கெனல்களும் ப்ரோகாரியோட் செல்களை யூகாரியோட் செல்கள் விழுங்கியதால் உருவானவை எனும் அறிதலுக்கு எதிரானவை. ‘ முக்கியமான பதம் இதில் ‘அனைத்து ‘. அனைத்து உயிர்களிலும் வாழும் சில முக்கியமான ஆர்கெனல்களில் ‘உள்ளுறை இசைவிருப்பு ‘ இயக்க பங்கு உறுதியாக்கப்பட்ட உண்மை.

எனவே இக்கண்டு பிடிப்பு உள்ளுறை இசைவிருப்பு (Endosymbiosis) இயக்கத்தையே நிராகரித்துவிட்டது; ஆட்டம் கண்டுகொள்ள வைத்துவிட்டது;பொய்ப்பித்து விட்டது என்று கூறுவது பரபரப்பான இதழியல் உக்திதான். ‘பரிணாம இயக்கங்களில் புதியதொரு இயக்க சாத்தியகூறு இருப்பதற்கான சான்றாக ஒரு கண்டுபிடிப்பு ‘ என்கிற இடியாப்பக் குழப்பமான தலைப்பு எத்தனை பேரை ஈர்க்க கூடும் ? துரதிர்ஷ்டவசமாக பரபரப்பான இதழியல் உக்திகள் நல்ல அறிவியல் பரப்பு சாதனங்களாவதைவிட மோசமான அறிவியல் எதிர்ப்பு கருவிகளாகும் வாய்ப்புகள் அதிகம். ‘இறைவனால் படைக்கப்பட்ட நுண்ணுயிர் டார்வினின் பரிணாம வாதத்தை பொய்ப்பித்தது ‘ என்கிற படைப்புவாதிகளின் அபத்ததிற்கும் தங்கள் கட்டுரையின் பரபரப்பான தலைப்பிற்கும் தூரம் மைக்ரான்களில் இல்லாவிட்டாலும் அதிகமல்ல. நல்ல அறிவியல் பரப்புதற்கும், பரபரப்பான கவனம் ஈர்க்கும் பத்திரிகையியல் உக்திக்கும் ஏதோ ஓரிடத்தில் ஒரு சந்திப்பு புள்ளி இருக்கக் கூடும். அதை தொடுவதற்கான முயற்சி என்றென்றும் புதிதாகும் ஒன்று. உலகெமெங்கும் அறிவியல் பரப்பும் இதழ்கள் அம்முயற்சியில் என்றென்றும் ஈடுபட்டவாறே உள்ளன. அம்முயற்சியில் திண்ணையால் வெற்றி பெற முடியுமென்றே நம்புகிறேன்.

தங்கள் உண்மையுள்ள,

அரவிந்தன் நீலகண்டன்


ஆசிரியருக்கு,

திண்ணையில் வந்த கடிதங்களைப் பார்த்தேன். தாம் செய்யாத குற்றத்திற்கு ஜெயமோகனும் அவரது ஆசிரியர் குழுவினரும் மன்னிப்பு கேட்ட பெருந்தன்மை என்னை அதிசயிக்க வைத்துவிட்டது. சொல்புதிது ஆசிரியர் குழுவினர் படிக்காமல் புரிந்து கொள்ளாமல் வெளியிட்ட கதையை இனி வாசகர்கள் பல ஆண்டுகள் படித்து துன்புறப் போகும் கொடுமையை என்ன சொல்வது. இக்கதையை எழுதியதாக சொல்லப்படும் டாக்டர் எம். வேதசகாய குமார் ‘சொல்புதிது ‘ ஆசிரியர் குழுவில் உள்ளார் என்ற மறைக்கப்பட்ட தகவலை வாசகர் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

மேற்படி கதைப் பற்றி திண்ணையில் விவாதம் நடப்பதால் இக்கதையை பிரசுரிக்குமாறு திண்ணை ஆசிரியர் குழுவினரைக் கேட்டுக் கொள்கிறேன். பலதரப்பட்ட வாதங்களை படித்த பின்னர் இப்பிரச்சினை பற்றி சுயமான ஒரு முடிவுக்கு வர மூலப்பிரதி அவர்களுக்கு படிக்கக் கிடைப்பது மிக அவசியம்.

காலச்சுவடு பற்றி ஜெயமோகன் இங்கும் எங்கும் பேசி வரும் விஷயங்கள் ஆதாரமற்றவை. காலச்சுவடில் திண்ணை இதழைப் போலவே விவாதப் பகுதியிருந்தது. பலர் தம்முடைய கருத்துகளை முன் வைக்க விவாதிக்க இடமிருந்தது. எங்கள் அனுபவத்திற்கும் வரையறைக்கும் உட்பட்டு அந்த அந்த காலங்களில் பிரதிகளை எடிட் செய்து பிரசுரித்திருக்கிறோம். காலச்சுவடு மீது அவர் வைக்கும் இந்தக் குற்றச்சாட்டு திண்ணைக்கும் பொருந்துமா என்பதை அவர் தெரிவிக்க வேண்டும். யாரிடமிருந்தும் கேட்டு வாங்கியதில்லை. ஜெயமோகன் இந்தக் குற்றச்சாட்டிற்கான ஆதரத்தை வழங்க வேண்டும். அவர் வழங்க மாட்டார். அவரால் முடியாது. ஏனெனில் அவ்வாறு எப்போதும் நடந்ததில்லை.

காலச்சுவடின் விவாதப் பக்கங்களை (மீண்டும் திண்ணையைப் போலவே) மிக அதிகமாக – வேறு யாரைவிடவும் அதிகமாக – பயன்படுத்தியவர் ஜெயமோகன். இப்பகுதிக்கான அவருடைய பங்களிப்பை தொடர்ந்து எடிட் செய்ய வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருந்தது. அவற்றில் அந்த அளவுக்கு அவதூறுகள் இருக்கும். இதை ஒட்டி எழுந்த கசப்பு அவர் காலச்சுவடை விட்டு விலக ஒரு காரணம். காலச்சுவடு விவாதப் பக்கங்களையும் ஜெயமோகனின் திண்ணை கட்டுரைகளையும் விவாதங்களையும் படித்துப் பார்த்து வாசகர் அவருடைய குற்றச்சாட்டை பரிசீலிக்க வேண்டும்.

ஆர்.பி. ராஜநாயகம் ஜெயமோகனின் அழைப்பின் பெயரில் அவரது ஊட்டி குருகுல இலக்கிய அரங்கில் கலந்து கொண்டார். ராஜநாயகத்தை இன்று வரை நான் சந்தித்தது இல்லை. காலச்சுவடின் எந்த அரங்கிலும் அவர் கலந்து கொண்டது இல்லை. மேற்படி இலக்கிய அரங்கை பற்றிய ராஜநாயகத்தின் பதிவு காலச்சுவடுக்கு வரும்வரை அவரோடு எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. அவரை நாங்கள் அனுப்பி வைத்ததாக ஜெயமோகன் ஆதாரமின்றி அவதூறு செய்து வருகிறார். ராஜநாயகம் அவர் பெயரில் கட்டுரை எழுதினார். புனைப் பெயரில் அல்ல. கட்டுரையாக எழுதினார் புனைவாக அல்ல. அந்தக் கட்டுரைக்கு சொல்புதிது ஆசிரியரில் ஒருவரான மோகனரங்கனும் பொது நண்பரான நாஞ்சில் நாடனும் அனுப்பிய மறுப்புகளை காலச்சுவடு பிரசுரித்தது. காலச்சுவடு ஆசிரியர் குழு சார்பில் இருவரும் அடுத்த அடுத்த இதழ்களில் இதுபற்றி விளக்க அளித்தோம். ‘டூர் ‘ போனராகக் கூறி ஒளிந்து கொள்ளவில்லை. (சொல்புதிது எப்போது அச்சுக்கு போனது, ஜெயமோகன் எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை பயணம் சென்றிருந்தார் என்பதைத் தெரிவிக்க வேண்டும்.)

கோவை ஞானி, வெங்கட் சாமிநாதன், ஞானக்கூத்தன், தேவதேவன் ஆகியோரை காலச்சுவடு அவதூறு செய்ததாக ஜெயமோகன் கூறியுள்ளார். இதற்கான ஆதாரத்தை காலச்சுவடில் இருந்து எடுத்துக்காட்டுமாறு அவரைக் கேட்டுக் கொள்கிறேன். அவரால் காட்ட முடியாது. ஏனெனில் காலச்சுவடில் நாங்கள் இவர்களையோ வேறு எந்த மூத்த எழுத்தாளரையோ அவதூறு செய்தது இல்லை. ஆதாரமில்லாமல் இவ்வாறு குற்றச்சாட்டுவதே அவதூறு. மாறாக ஆதாரத்துடன் யாரையும் விமர்சிக்க எவருக்கும் உரிமையுண்டு. மூத்த எழுத்தாளர்களுக்கு குரு வணக்கம், முதல் மரியாதை எல்லாம் செலுத்தி பின்னரும் அவர்கள் வழிக்கு வராவிட்டால் ஆபாசக் கதை வெளியிடுவது ஜெயமோகனின் பாணி. காந்தியை வணங்கி சுட்டுக் கொன்ற கோட்சேயின் இயக்கத்திலிருந்து உருவானவர் ஜெயமோகன்.

காலச்சுவடு இதுவரை குஜராத் வன்முறை, கலைஞர் கைது, ராணி மேரி கல்லூரி விவகாரம், ஈராக் போர் என பல விஷயங்களுக்கு எழுத்தாளர்கள் கையெழுத்தை திரட்டி அவை தினமணி, தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமலர் போன்ற நாளேடுகளில் வெளிவந்துள்ளன. இது இலக்கியப் பிரச்சனை என்பதால் அறிக்கை திண்ணைக்கு அனுப்பப்பட்டது.

காலச்சுவடு பெற்ற கையெழுத்துகள் இரு கூட்டங்களில் பெறப்பட்டவை என்பது பொய். மேற்படி அறிக்கை காலச்சுவடு 48இல் வெளியாகியுள்ளது. இதில் பிரபஞ்சன், ஆர். ராஜகோபால், அழகிய சிங்கர், களந்தை பீர் முகமது, ந. முருகேச பாண்டியன், கனிமொழி, ராஜ்கெளதமன், தோப்பில் முகமது மீரான், மாலதி மைத்ரி, யூமா வாசுகி, க. பஞ்சாங்கம், உமா மகேஸ்வரி, மாலன் போன்றோர் எந்தக் கூட்டத்தில் இந்த அறிக்கைக்கு கையெழுத்திட்டார்கள் என்பதை ஜெயமோகன் விளக்க வேண்டும். மேலும் அறிக்கையில் கையெழுத்து பெறுவது ஒரு பகிரங்க நடவடிக்கை. அதை எழுத்தாளர்கள் குழுமும் அரங்களில் செய்வதில் என்ன தவறு ?

தன்னை விமர்சித்த எழுத்தாளர்கள் பற்றி ஜெயமோகன் எழுதியிருக்கும் அவதூறுகளுக்கு ஒரு கலைக் களஞ்சியமே வெளியிட முடியும். ஜெயமோகன் மறுத்தால் பல உதாரணங்களை நான் திண்ணைக்கு அனுப்பி வைக்கிறேன்.

ஆர்.பி. ராஜநாயகம் விஷயம் தொடர்பாக ஜெயமோகன் திண்ணையில் செய்த ஒரு மோசடியை நான் அப்போதே திண்ணை ஆசிரியர்கள் கவனத்துக்கு கொண்டு வந்தேன். இதைப் பற்றி இங்கு குறிப்பிடுவது ஜெயமோகன் மூத்த எழுத்தாளர்கள் மீது கொண்டுள்ள ‘மரியாதையை ‘ தெளிவுபடுத்தும்.

ஆர்.பி. ராஜநாயகம் பதிவுக்கு எதிர்வினையாக நாஞ்சில் நாடன் காலச்சுவடுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். ஜெயமோகன் அதன் நகலை நாஞ்சில் நாடனிடமிருந்து பெற்று திண்ணைக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார். அதில் நாஞ்சில் நாடனின் அனுமதியின்றி ஜெயமோகன் பல சொற்கனை நீக்கியும் பல இடங்களில் தன் கருத்துகளை சேர்த்தும் அனுப்பியுள்ளார். நாஞ்சில் நாடனின் கையெழுத்துப் பிரதி என்னிடம் உள்ளது. திண்ணைக்கு அதன் புகைப்பட நகலை என்னால் அனுப்பி வைக்கமுடியும். இந்த அத்துமீறல் மூலம் ஜெயமோகன் நாஞ்சில் நாடனை அவமதித்துள்ளார், திண்ணை ஆசிரியர்களை ஏமாற்றியுள்ளார், வாசகர்களை மோசடி செய்துள்ளார். என்னுடைய இந்தக் குற்றச்சாட்டை ஆதரத்துடன் மறுக்கும்படி ஜெயமோகனை கேட்டுக்கொள்கிறேன்.

புதுமைப்பித்தன் பதிப்புப் பணியை அவதூறு செய்து எம். வேதசகாயகுமார் எழுதிய கட்டுரையை வெளியிட்ட சொல்புதிது, இப்பணியின் ஆலோசகர் குழு உறுப்பினர் ராஜமார்த்தாண்டன் எழுதிய மிக நிதானமான மறுப்பை வெளியிட மறுத்தது. இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள ஆதாரங்களை உறுதிப்படுத்தி ஆசிரியர் குழு சார்பில் வெளியிடப்பட்ட குறிப்பு சொல்புதிது ஆசிரியர்களின்-அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதால் – கவனத்திற்கு கொண்டு வரப்படாமல் ஜெயமோகனால் சேர்க்கப்பட்டது. இதையும் ஆதாரத்துடன் மறுக்கும்படி அவரைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஜெயமோகன் சுந்தர ராமசாமி பற்றி சொல்புதிதில் எழுதிய பல அவதூறுகளுக்கு சுந்தர ராமசாமி எழுதிய வாசகர் கடிதத்தை – வெளியிடுவதாக வாக்களித்து ஜெயமோகன் அவருக்கு மின்னஞ்சல் அனுப்பிய பின்னரும் – வெளியிடவில்லை.

இவையெல்லாம் பாசிச நாகரீகம். இந்த நாகரீகத்தில் காலச்சுவடுக்கு இடமில்லை. எப்போதும் காலச்சுவடு விவாதப் பக்கங்களில் மறுப்பிற்கும் மாற்றுக் கருத்திற்கும் இடமிருக்கும்.

அவதூறுகளைப் பொழிவதும் எதிர்கொள்ளும்போது புனைப்பெயர்களில் மறைந்து கல்லடிப்பதும் ஜெயமோகனின் பாணி. புதுமைப்பித்தன் பிரச்சனையில் சொல்புதிதின் நிலைபாடு பற்றி ஒரு நேரடி விவாதத்திற்கு வருமாறு ஜெயமோகனுக்கு காலச்சுவடில் சவால் விட்டிருந்தேன். ஜெயமோகனால் அதை எதிர்கொள்ள இயலவில்லை. இதன் விளைவே நாச்சார் மட விவகாரம் சிறுகதை.

சொல்புதிதின் முன்னாள் ஆசிரியர் குழு உறுப்பினர் திருமதி எஸ். அருமொழி நங்கை (ஜெயமோகனின் மனைவி) சொல்புதிதில் ‘என்ன ஆனது இந்த எழுத்தாளர்களுக்கு ? ‘ என்ற கட்டுரையை எழுதியுள்ளார். இதைப் படித்துப் பார்த்து சொல்புதிதுக்கு எழுத்தாளர்கள் மேல் இருக்கும் மரியாதையை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து ஒரு வாக்கியம்: ‘வீட்டுக்கு வரும் பெரும்பாலான எழுத்தாளர்கள் அலுப்பூட்டக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ‘ (சொல்புதிது 11, பக். 7).

கண்ணன், காலச்சுவடு ஆசிரியர்


மேற்கண்ட கடிதத்துக்கு திண்ணைக்குழு குறிப்பு:

1. ஒரு வரி நீக்கப்பட்டுள்ளது

2. நாஞ்சில் நாடன் கடிதம் திண்ணையில் வெளியானவுடனேயே, காலச்சுவடிற்கும் இஇந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது,, இரண்டு கடிதங்களுக்கும் உள்ள வித்தியாசம் இவை பற்றி கண்ணன் திண்ணைக்கு எழுதியிருந்தார். காலச்சுவடில் கடிதம் வெளிவந்தவுடன் கண்ணனின் கடிதத்தை வெளியிடுவது பற்றி முடிவு செய்ய எண்ணினோம். காலச்சுவடில் கடிதம் வெளியான பிறகு, நாஞ்சில் நாடனுக்கு இந்தக் கடிதங்களை ஒப்பிட்டு ஏதும் சொல்வதாய் இருந்தால் சொல்லக் கூடும், அது தான் முறை என்பதால் , கண்ணனின் கடிதம் வெளியிடப் படவில்லை. இரண்டு ஏடுகளுக்கு கடிதங்களை அனுப்பும் போது சிறு மாறுதல்களைச் செய்வதோ, செய்ய அனுமதிப்பதோ ஆசிரியரின் உரிமை. நாஞ்சில் நாடன் இது பற்றி ஏதும் இதுவரை கருத்துக் கூறவில்லை. நாஞ்சில் நாடன் போன்ற மதிப்புக்குரிய எழுத்தாளரின் கடிதத்தில் அவர் அனுமதியின்றி திருத்தங்களை எவரும் செய்யமாட்டார்கள்.

3. இரண்டாவது நாச்சார் மடம் கதை திண்ணையில் பிரசுரம் செய்வதற்கில்லை.

திண்ணை குழு


வேதசகாயகுமாரின் கவனத்திற்கு

அரவிந்தன்

‘திண்ணை’யில் வேதசகாயகுமாரின் கடிதத்தைப் பார்த்ததும் பனிரெண்டு வயதுச் சிறுவன் ஒருவன் தனது பை, டிபன் பாக்ஸ், சைக்கிள் ஆகியவற்றை யாரிடமோ பறிகொடுத்துவிட்டு கண்ணைக் கசக்கிக்கொண்டு நடுத்தெருவில் நிற்பதுபோன்ற காட்சி என் கண்முன் தோன்றியது. ஆனாலும் இந்த சுந்தர ராமசாமி ரொம்ப மோசம். அவர் பாட்டுக்கும் மதிப்பீடுகளின் வீழ்ச்சி அது இது என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். வே.ச.கு. போன்ற வெள்ளந்தியான ஆத்மாக்கள் அதை எக்குத்தப்பாகப் புரிந்துகொண்டு கண்ட இடத்திலும் பயன்படுத்தி அடி வாங்கி நடுத்தெருவில் நிற்பார்கள். இனிமேல் சு.ரா. மதிப்பீடுகளின் வீழ்ச்சி பற்றிப் பேசினால் அவர் கொட்டை எழுத்தில் இப்படி ஒரு குறிப்பையும் சேர்த்துவிடுவதுதான் பொருத்தமாக இருக்கும்:

“நான் முன்வைக்கும் கருத்துகள் என் அனுபவத்தின் அடிப்படையில், என் சிந்தனையில், என் பார்வையில் உருவான கருத்துகள். என் எழுத்துகளைப் படிப்பவர்களின் பரிசீலனைக்காக இவற்றை முன்வைக்கிறேன். மருத்துவர் தரும் மருந்துச்சீட்டுபோல இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்”.

***

1993இல் பாம்பன் விளையில் சுந்தர ராமசாமி ஒழுங்கு செய்த ஒரு கூட்டத்தில்தான் வே.ச.குவை நான் முதன்முதலில் சந்தித்தேன். அதன் பிறகு சில முறை சு.ராவின் வீட்டில் அவரை சந்தித்திருக்கிறேன். எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் ஓர் ஆளுமையாகத்தான் அவர் என் மனத்தில் உருக்கொண்டிருக்கிறார். பாம்பன் விளையில் விவாதங்கள் கூர்மைபெற்று ஒரு குவிமையத்தை நோக்கி வரும்போதெல்லாம் அதைக் கலைத்துபோடும் அரும்பணியை வே.ச.கு. ஒரு தார்மீகக் கடமைபோல ஆற்றிவந்தார். ஜெயமோகன் உள்பட பல நண்பர்களும் வே.ச.குவின் பங்களிப்பு குறித்து என்னிடம் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள்.

‘நாச்சார் மட விவகாரங்கள்’ சிறுகதையை நான்தான் எழுதினேன் என்கிறார் வே.ச.கு. தனது கூற்றுக்கு வலுசேர்க்க, இதற்கு முன்பும் கதைகள் எழுதியிருக்கிறேன் என்று அறிவிக்கிறார். இனிமேலும் எழுதுவேன் என்று மிரட்டுகிறார். அவர் கூறவது பொய் என்று கூற நான் விரும்பவில்லை. ஆனால் இந்தக் கதையில் – அதன் சகல கீழ்மைகளையும் தாண்டி – வெளிப்பட்டிருக்கும் புனைவு அம்சத்தை அவரால் சாதித்திருக்க முடியும் என்பதற்கான எந்த அடையாளமும் இதுவரை வெளிப்பட்டதில்லை. இதற்கு முன்பும் கதைகளை எழுதியிருக்கிறேன் என்று அடக்கமாகச் கூறிக்கொள்ளும் வே.ச.கு. அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்று கோருகிறேன். சுத்த சுயம் பிரகாச ஆராய்ச்சியாளரான அவருக்கு ஆதாரங்களைத் திரட்டித் தருவது சுலபமான காரியம்தானே.

***

இந்தக் கதை மதிப்பீடுகளின் வீழ்ச்சி பற்றிய கதை என்று அவர் கூறிக்கொள்வது குரூரமான ஜோக். சரோஜாதேவி புத்தகங்களில் கடைசி வரிகள் ‘எந்தத் தப்புத்தண்டாவுக்கும் போகக்கூடாது என்பதை உணர்ந்தேன்’ என்ற ரீதியில் முடியும். அந்த வரிகளோடு மட்டுமே இந்த வரிகளை இணைத்துப்பார்க்க முடியும். தமிழ்ச் சூழலில் மதிப்பீடுகளின் வீழ்ச்சி புதிய எல்லைகளைத் தொட்டிருப்பதன் ஆகப் பொருத்தமான அடையாளமாக நிற்கும் இந்தக் கதைக்கு வே.ச.கு. கொடுக்கும் இந்தப் பின்குறிப்பு அதை சரோஜாதேவி நூல்களின் வரிசையில் சேர்க்கப் பரிபூரண தகுதியுடையதாக ஆக்கியிருக்கிறது. இதற்காக வே.ச.குவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது என் கடமை.

***

நா.ம.வி. கதையின் கீழ்மையை மறைக்க சு.ராவின் கவிதைகளைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார் வே.ச.கு. இவ்வளவு எளிதாக நியாயப்படுத்தக்கூடிய கதையாக நா.ம.வி. இருந்திருந்தால் முதலில் தனிப்பட்ட முறையிலும் பிறகு பகிரங்கமாகவும் ஜெயமோகனும் சதக்கத்துல்லாவும் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்பதை வே.ச.கு. யோசித்துப் பார்க்க வேண்டும். அந்தக் கதையில் பிழையேதும் இல்லை என்று அவர் உண்மையிலேயே கருதினால் அவர் ஜெயமோகனும் சதக்கத்துல்லாவும் தெரிவித்த மன்னிப்பைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.

இலக்கியப் பிரதிகளுக்குள் இருக்கும் மனிதர்கள் அல்லது உருவகங்கள் அந்தப் பிரதிக்கு வெளியே இருக்கும் மனிதர்களை ஏதோ ஒரு வகையில் பிரதிபலிப்பவைதாம். பெளதீக உலகில் நடப்பவை அல்லது நடக்கக் கூடியவை என்ற எல்லைக்குள்தான் புனைவுலகம் இயங்குகிறது. மிகு யதார்த்தம், மாய யதார்த்தம் முதலான வெளிப்பாடுகள் கூட பெளதீக உலகின் பல்வேறு சாத்தியங்களின் நீட்சிதான். ஆழ அகலம் காண முடியாத மனிதப் பிரக்ஞையின் புதிரான பயணத்தின் வீச்சுக்கு அப்பாற்பட்ட எந்த சாத்தியமும் புனைவின் வழி வெளிப்பட முடியாது. மனிதப் பிரக்ஞையோ பெளதீக உலகுடன் மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டது. இந்நிலையில், எழுதப்பட்ட பிரதியில் உருப்பெற்ற அனைத்து அம்சங்களையும், மனிதப் பிரக்ஞையை உள்ளடக்கிய பிரம்மாண்டமான வாழ்வின் நிழல்கள் என்று சொல்லலாம். இதன் அடிப்படையில் புனைவில் வெளிப்படும் சகல மாந்தர்களுக்கும் உருவகங்களுக்கும் இணையான, நெருக்கமான மனிதர்களை வெளி உலகில் அடையாளம் காணலாம். எனவே புற உலக அடையாளங்கள் படைப்பில் வெளிப்படுவது என்பது முற்றிலும் இயல்பானதுதான். சு.ரா. எழுதிய நாய்களையும் ஆந்தைகளையும் வெளி உலகில் தேடுவது என்பது இதன் அடிப்படையில்தான் சாத்தியமாகிறது. இதே ரீதியில் பல பிரதிகளைக் கட்டுடைத்துக்கொண்டே போகலாம். ஜெயமோகன் காலச்சுவடின் ஆரம்ப இதழ் ஒன்றில் எருமை மாட்டை வைத்து ஒரு கவிதை எழுதியிருந்தார். தமிழக அரசியல்வாதி ஒருவரைப் பற்றிய சித்திரமாக அதைப் பார்க்க முடியும் என்று அவர் என்னிடம் அப்போது கூறினார். மனுஷ்ய புத்திரனின் ‘அரசி’ கவிதை, எஸ். ராமகிருஷ்ணனின் ‘ராமசாமிகளின் வம்ச சரித்திரம்’ என்ற சிறுகதை, சுராவின் ‘ஜே. ஜே. சில குறிப்புகள்’, நீல. பத்மநாபனின் ‘தேரோடும் வீதியிலே’, சாரு நிவேதிதாவின் ‘ஜீரே டிகிரி’ என்று பல உதாரணங்களை இந்த வகையில் அடுக்கிப் பார்க்கலாம். புற உலகை அழுத்தமாக நினைவுபடுத்தும் இத்தனை பிரதிகளுக்கு மத்தில் ‘தேரோடும் வீதியிலே’ நாவல் மட்டும் சில எழுத்தாளர்களின் கண்டனத்திற்கு உள்ளானது ஏன் என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும். வரலாறு காணாத அளவில் நா.ம.வி. சிறுகதை கண்டனத்திற்கு உள்ளாகி மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது ஏன் என்பதையும் யோசித்துப்பார்க்க வேண்டும்.

பொது வாழ்வில் ஈடுபட்டுவரும் ஆளுமைகளை நாய்களாக, குரங்குகளாக, கோமாளிகளாகச் சித்தரிப்பது கார்ட்டூன் என்கிற கலைத்துறையில் அன்றாடம் நடந்துவருவதுதான். உலகப் பெரும் தலைவர்கள் உள்பட யாரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. நாயாக ஒரு கார்ட்டூனில் உருவகப்படுத்தப்படும் ஒரு தலைவர் என்னை நாய் என்று சொல்லிவிட்டார்கள் என்று வருத்தப்பட்டுக்கொள்வதில்லை. இலக்கியப் பிரதிகளிலும் நாய், மாடு முதலான உருவகங்களை வைத்து தனிநபர்கள் சித்தரிக்கவும் விமர்சிக்கவும்படுவது சகஜம்தான். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்ற தொடர் மாட்டைக் குறிப்பதல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். இத்தகைய பின்னணியில் நா.ம.வி. கதை மட்டும் சகல தரப்பினராலும் கண்டிக்கப்படுவதும் (நான் அறிந்தவரை இந்தக் கதையைப் படித்த அனைவரும் இது ஒரு கீழ்த்தரமான பிரதி என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒப்புக்கொண்டவர்களில் காலச்சுவடுடன் தங்களை முற்றாகத் துண்டித்துக்கொண்டவர்களும் அடக்கம்) அதைப் பிரசுரித்தவர்கள் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதும் ஏன் நடக்கின்றன என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும். இலக்கியப் பிரதியினூடே முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கான நாகரிக எல்லைகள் அனைத்தையும் நாமவி மீறியிருப்பதுதான் இதற்குக் காரணம் என்பது ஆராய்ச்சி தேவைப்படாத வெளிப்படையான உண்மை. தன்னிகரற்ற ஆராய்ச்சியாளரும இலக்கிய விமர்சகரும் மதிப்பீடுகளின் வீழ்ச்சி பற்றி யார் கண்ணிலும் படாத கதைகளை எழுதியவருமான வே.ச.குவுக்கு இது புரியாமல்போனது ஆச்சரியம்தான்.

(நிஜ மனிதர்களை நினைவுபடுத்தும் கதைகளின் வரிசையில் நாமவி கதையை ஏன் சேர்க்க முடியாது என்பதையும் இது ஏன் ஆகக் கீழ்த்தரமான கதையாகக் கருதப்படுகிறது என்பதையும் இதற்கு மேல் விளக்க நான் விரும்பவில்லை. அப்படிச் செய்ய வேண்டுமென்றால் அதற்கு, நாமவி கதையைக் கட்டுடைக்க வேண்டும். அப்படிச் செய்தால் அது ஏற்கனவே புண்பட்டிருப்பவர்களை மேலும் கேவலப்படுத்தி மேலதிகமாகப் புண்படுத்தும் செயலாக முடியும் என்பதால் அந்த முயற்சியில் நான் ஈடுபட விரும்பவில்லை. மேலும், இக்கதையின் எதிர்மறையான விளைவுகளுக்காக ஜெயமோகனும் சதக்கத்துல்லாவும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுவிட்ட நிலையில் இக்கதையில் அப்படி என்னதான் பிரச்சினை என்று வே.ச.கு. அவர்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அல்லது மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு அந்த ஆபாசக் கதையை மீண்டும் ஒருமுறை படித்துப்பார்க்கலாம்.)

பின்குறிப்புகளாகச் சில கேள்விகள்:

1. சுராவின் கருத்துக்களை நம்பி மோசம்போனேன் என்று சிறு குழந்தை போல அழும் வே.ச.கு., கல்வித்துறையில் அவர் என்ன செய்தார், அதன் விளைவாக என்னதான் நடந்தது என்பதை பகிரங்கப்படுத்த முன்வருவாரா ?

2. ‘ஒரிஜினல் ஆந்தை’ பற்றி இப்போது எழுதும் வே.ச.கு., சுராவைத் தனது குருவாக வரித்திருந்த 30 ஆண்டுகளில் இந்த ஆந்தை பற்றி வாய் திறக்காமல் இருந்தது ஏன் ? குருநாதரின் ‘குற்றம்’ அப்போது கண்ணில்படவில்லையா ? அல்லது பக்தி விசுவாசம் கையைக் கட்டிப்போட்டு விட்டதா ? இவரைப் பதிப்பாசிரியராகக் கொள்ளாமல் புதுமைப்பித்தன் செம்பதிப்பைக் காலச்சுவடு கொண்டு வந்தபிறகு பீறிட்டெழும் தார்மீக ஆவேசங்களுக்கும் உண்மையான தார்மீக உணர்வுகளுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் ?

3. பு.பி. செம்பதிப்பு தொடர்பாகத் திண்ணை ஆசிரியர் குழு எழுப்பிய கேள்விகளுக்கான பதில்களைக் கண்ணன் முன்வைத்திருந்தார். அதில் அவர் வே.ச.குவுக்கும் சொல்புதிதுக்கும் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு இன்றுவரை யாரும் பதில் சொல்லவில்லை. பதில் சொல்ல முடியாத கையறு நிலைதான் வன்மமாக வெளிப்படுகிறது என்று நான் எடுத்துக்கொள்வதில் மதிப்பீடுகளின் பிதாமகர் வே.ச.குவுக்கு ஏதேனும் ஆட்சேபணை உண்டா ?

அரவிந்தன்


உண்மைக்கும் பொய்க்குமான இடைவெளி

சொல்புதிது ஆசிரியர் ஆர்.எம். சதக்கத்துல்லா அவர்களுக்கு,

வணக்கம்.

திண்ணையில் தங்களின் மன்னிப்புக் கடிதம் கண்டேன்.

அந்தக் கடிதத்தில் சில தவறான தகவல்களும் கூடவே உள்ளது.

‘நாச்சர் மட விவகாரங்கள் ‘ கதையை ‘கறுப்பு வெள்ளை ‘ ஜெராக்ஸ் பிரதி மட்டுமே எடுத்து பல எழுத்தாளர்கள் வாசகர்களுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு அதிகபட்சம் ஆன செலவு (தபால் தலையும் சேர்ந்தே) 980 – 75 பைசா மட்டும்தான். கலர் ஜெராக்ஸ் + தங்க லேமினேஷன் செய்து அந்தக் கதையை அனுப்பியிருந்தால் மட்டுமே பெரும் பொருள் செலவு ஆகியிருக்கும். அப்படி ஏதும் செய்யவில்லை. உங்கள் விளம்பரதாரர்கள், உங்கள்பால் நல்லெண்ணம் கொண்டவர்கள் யார் என்ற பட்டியல் எங்களிடம் இல்லை. அதை எங்களுக்கு அனுப்பி வைத்தால் அவர்களுக்கு உங்கள் மன்னிப்புக் கடிதத்தையும் சேர்த்து அனுப்புவோம். ‘சொல்புதிது ‘ இஸ்லாமியத் தீவிரவாத இதழ் என்ற பிரச்சாரமும் எந்தெந்த வழிமுறைகளில் (Poster, Bit Notice, mike Anouncement. Adverisment) காலச்சுவடால் செய்யப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டினால் நல்லது.

ஜெயமோகனைப் பதில் சொல்ல முடியாத அளவிற்குத் கொண்டுபோனது குமுதம்தானே தவிர காலச்சுவடுஅல்ல. கண்ணன் பெயரைக் கூடக் குறிப்பிட மறுக்கும் குமுதத்திடம் இந்தவிஷயத்தைக் கொண்டுபோக முற்சித்தோம் என்று சொல்வது ஆச்சர்யமளிக்கிறது.

12 சொல்புதிது இதழ்களுக்கும் நீங்களே பொறுப்பேற்றுப் பேசியிருப்பதில் மகிழ்ச்சி.. ஏனெனில், 11 இதழ்கள் வரை பொறுப்பில் இருந்த பலரின் பெயரை 12வது இதழில் பார்க்கமுடியவில்லை. தனது இந்துத்துவா முத்திரையை அழிக்க தங்களையும் பிற நண்பர்களையும் ஜெயமோகன் பயன்படுத்துவது உங்களுக்குத் தெரியாததல்ல. உங்களையும் மீறி இப்படி பொய்யை எழுதச்சொல்பவர்களின் வரலாறை முழுமையாகத் தெரிந்துகொண்டுதான் செயல்படுகிறீர்களா என்பது உங்களை நன்கு அறிந்த எனக்கு சந்தேகமாகத்தான் இருக்கிறது.

மிருந்த அன்புடன்

பெ. அய்யனார்


நாச்சார்மடமும் சக்கைப்புளிக்கறியும்

இது 1952 களின் துவக்கத்தில் நடந்த உண்மைச் சம்பவம். நாகர்கோவில் வடிவீஸ்வரத்திலே கோலம்மை ஆச்சி என்று ஒரு பெண்மணி இருந்தாள். என்ன காரணத்தாலோ அவளுக்கு ‘சக்கைப்புளிக்கறி ‘ என்று பெயர் கிட்டியிருந்தது. [பலாக்காய் புளிக்குழம்பு ] .அவளை சிலர் அப்படிக்கூப்பிட்டு தொந்தரவு செய்தார்கள். ஒருமுறை இரு விடலைப்பையன்கள் அப்படிக் கூப்பிட்டு தொந்தரவு செய்தபோது அவள் போய் அன்று நாகர்கோவில் பாரில் பெரிய கிரிமினல் லாயராக இருந்த முத்துக்கறுப்ப பிள்ளையிடம் சொன்னாள். அவர் போலீஸில் பிராது கொடுக்கச்செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வித்து கோர்ட்டுக்குக் கொண்டு சென்றார் . வழக்கை விசாரித்த நீதிபதி இனிமேல் கோலம்மையை சக்கைப்புளிக்கறி என்று யாரும் சொல்லக்கூடாது என்று உத்தரவு போட்டு குற்றவாளிகளுக்கு கோர்ட் கலையும்வரை காவல் தண்டனை விதித்தார். பையன்கள் நீதிமன்ற முகப்பில் நிற்கச்செய்யப்பட்டனர். அதைக் கண்காணிக்க கோலம்மையும் நின்றாள். போகிறவர்களும் வருகிறவர்களும் ‘என்ன விஷயம் ‘ என்று கேட்க ‘சக்கைப்புளிக்கறி ‘ விஷயத்தை கூடியிருந்தவர்கள் சொல்ல பெருங்கூட்டம் கூடிவிட்டது. சக்கைபுளிக்கறி என்பதன் அர்த்தம் பற்றிய ஆராய்ச்சிகள் பலகோணங்களில் நடந்தன.

அன்று தினமலர் நாளிதழ் திருவனந்தபுரத்திலிருந்து வந்துகொண்டிருந்தது. நாகர்கோவிலுக்கு தலைமைநிருபர் சி பி .இளங்கோ என்பவர் .இவர் ஒரு சுதந்திரப்போராட்ட தியாகி . வ உ சியுடன் கூட ஜெயிலில் இருந்தவர். நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். [இவரது வேடிக்கைக் கதைகள் நிறைய உண்டு ] செய்தி சேகரிக்க கோர்ட்டுக்கு வந்த அவர் சம்பவத்தைக் கேட்டு அப்படியே ரிப்போர்ட் செய்தார் . மறு நாள் தினமலரில் பெரிய செய்தி . ‘ வடிவீஸ்வரம் கோலம்மையை இனிமேல் யாரும் ‘சக்கைப்புளிக்கறி ‘ என்று சொல்லக்கூடாது , மஜிஸ்ட்ரேட் உத்தரவு!! ‘ அச்சம்பவம் அதி பயங்கரமாக பிரபலமாகி விட்டது. கோட்டாறு வட்சேரி எல்லா பக்கமிருந்து ஆட்கள் திரண்டுபோய் சக்கைப்புளிக்கறி ஆச்சியை வேடிக்கை பார்த்தார்கள் . அந்தத் தெருவே சக்கைப்புளிக்கறித்தெரு என்று சொல்லப்பட்டது . வெளியே தலைக்காட்டமுடியாத கோலம்மை ஊரைவிட்டு கிளம்பி ராஜபாளையம் பக்கமாக போய் குடியேறிவிட்டாள். அதன் பிறகும் அந்த தெருவுக்கு அப்பெயர் நீடித்தது . பிறகுதான் ஒரு தனித்தமிழ் பெயர்வந்தது. நாகர்கோவில் கோர்ட் வட்டாரத்தில் இக்கதை மிகப் பிரபலம். மானநஷ்ட வழக்கு வரும்போது

‘சக்கைப்புளிக்கறிக்கேஸ் ‘ என்பார்கள்.

நான் எழுதிய ‘ நாச்சார்மடம் ‘ உண்மையில் மிக எளிமையான ஒரு கதை. அதில்பெரிதாக வசை ஏதும் இல்லை. அதன் தொடக்கம் என்னவாக இருந்தாலும் கடைசியில் நான் உத்தேசித்தது ராமர்கோவில் விஷயமும் வாஜ்பாயும்தான். அதை 25000 ரூபாய் செலவில் காலச்சுவடு தங்களைப்பற்றிய கதையாக மாற்றிக் கொண்ட வேடிக்கையை பார்த்தால் கோலம்மை ஆச்சிகள் இன்றும் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. இல்லை முத்துக்கறுப்ப பிள்ளை வக்கீல்போல வேறு யாராவதுலெளள்ளே புகுந்து விளையாடிவிட்டார்களா என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.

ஏறத்தாழ 1500 அச்சிட்ட கடிதங்கள் காலச்சுவடு சார்பில் கதையின் பிரதியுடன் தமிழ்நாடு முழுக்க அனுப்பப்பட்டுள்ளன. அதற்கு எதிர்வினையாக அனுப்பப்பட்ட கடிதங்களில் சில என் கவனத்துக்கும் வந்தன. அவற்றில் சுந்தரராமசாமி எழுதிய வசைக்கவிதைகள் கதைகள் ஆகியவை தோண்டி எடுக்கப்பட்டு பேசப்படுகின்றன. புதிய காற்று பத்திரிகையில் சுந்தர ராமசாமி எழுதிய தனிநபர் வசைகளின் ஒரு பட்டியல்தரப்பட்டுள்ளது . திண்ணையில் ஒரு கட்டுரை கண்டேன். அது இங்கே ஜெராக்ஸ் நகல்களாக உலவுகிறது. காலச்சுவடு அளித்த கோரிக்கைமனுவுக்கு பதிலாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் சுந்தர ராமசாமி நிகழ்த்திய கீழ்த்தரமான தனிநபர் தாக்குதல்களை பட்டியலிட்டு எழுதி காலச்சுவடுக்கு அனுப்பி அது பிரசுரிக்க மறுத்த கடிதத்தின் நகலும் எங்கும் கிடைக்கிறது. புளியமரத்தின் கதையில் வரும் இசக்கி உண்மையில் நாகர்கோவிலில் உள்ள பி எஸ் மணி என்ற சிறு பத்திரிகையாளர்தான் என்ற செய்தியும், இது அக்காலத்தில்பெரிய பிரச்சினையாகி அடிதடி விளிம்புவரை போய் சக்கைபுளிக்கறி பயத்தால் கைவிடப்பட்டது என்பதும் எனக்கே இப்போதுதான் தெரிந்தது. பல கவிதைகள் யாரை நோக்கி யாரால் எழுதப்பட்டன என்பதெல்லாம் வெட்ட வெளிச்சமாகின்றன.

அதைவிட முக்கியமான விஷயம் எல்லாருமே ‘நாச்சார்மடம் ‘ என்று சாதாரணமாக சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் என்பது தான். உண்மையில் எனக்கே வருத்தமாக இருக்கிறது. நான் இதை கண்டிப்பாக உத்தேசிக்கவில்லை. காலச்சுவடு பிரசுரித்த அறிக்கையில் கையெழுத்திட்ட ஒரு எழுத்தாளரே ஒரு கூட்டத்தில் ‘நாச்சார் மட விமரிசனமுறை ‘ என்று சொன்னதாக கேள்விப்பட்டேன். நாகர்கோவிலில் நடந்த ஓர் இலக்கியக் கூட்டத்தில்பல பேச்சாளர்கள் சாதாரணமாக ‘நாச்சார்மடங்களின் பார்வை ‘ என்றெல்லாம் பேசுவதைக் கேட்டேன். மனித மனநிலையைவைத்து பார்த்தால் இந்த விவகாரமே சீக்கிரம் மறக்கப்பட்டுவிடும். கதையும் நிற்காது . நாச்சார்மடம் என்ற பேர் மட்டும் சுந்தர ராமசாமியுடன் நிரந்தரமாக ஒட்டிக் கொண்டுவிடும். கொஞ்ச நாள் கழிந்ததும் கோபம் , கிண்டல் ஏதும் இல்லாமல் சாதாரணமாக அப்படி சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். எழுதி சம்பாதித்த பேரைவிட இந்தபெயர் நிரந்தரமாக நின்றுவிடும்.

சுந்தர ராமசாமி மீது எனக்கு எவ்வளவு மனத்தாங்கல் இருந்தாலும் அவரது அழகியல்பார்வைதான் என் பார்வையும். அவரது ஸ்கூலே இப்படி அபத்தமாக நாச்சார் மடம் என்று சொல்லப்படுவது என்னையும் அவமானப்படுத்துவதற்கு சமம்தான். ஆனால் நான் இதில் ஒன்றும் செய்யவில்லை. அப்பெயரை குமுதம் மூலமும், பல ஆயிரம் கடிதங்கள் மூலமும், காலச்சுவடுதான் பிரச்சாரம் செய்தது. அவர்கள் குழுவில் உள்ள யாரோ வேண்டுமென்றே விளையாடிவிட்டார்கள். அல்லது கொஞ்சம் கூட முதிர்ச்சியே இல்லாமல் நடந்துகொண்டார்கள் . இந்த ரத்தத்திலே எனக்கு பங்கில்லை என்று மட்டும் சொல்லி ஒதுங்கிக் கொள்கிறேன்.

எம். வேதசகாயகுமார்


Series Navigation