மனத்தின் ஆழத்திலிருந்து ஒரு குரல் ( தமிழ் நாடகச் சூழல் – ஒரு பார்வை – வெளி ரங்கராஜனுடைய நூல் அறிமுகம்)

This entry is part [part not set] of 32 in the series 20030710_Issue

பாவண்ணன்


(தமிழ் நாடகச் சூழல் – ஒரு பார்வை – வெளி ரங்கராஜன். வெளியீடு: தி பார்க்கர், 293, அகமது வணிக வளாகம், இரண்டாவது தளம், இராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை – 14. விலை. ரூ80 )

ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூரில் நடந்த ஒரு யட்சகான நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் கிளம்பிக்கொண்டிருந்தேன். எதிர்பாராத விதமாக அப்போது என்னைப் பார்க்க வந்த நண்பரையும் என்னோடு அழைத்துச் சென்றேன். பார்வையாளர்களால் நிறைந்து வழிந்த அரங்கில் எங்களுக்கு எப்படியோ நுழைவுச்சீட்டுகள் கிடைத்தன. ஆனால் அரங்குக்குள் இடமில்லை. அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் சீட்டுகள் விற்கப்பட்டுவிட்டன. பார்வையளார்களின் வற்புறுத்தலாலும் அவர்களிடையே ஏற்பட்ட சச்சரவை நிறுத்துவற்காகவும் மடக்கு நாற்காலிகள் கொண்டுவரப்பட்டு போடப்பட்டன. மூன்றுமணிநேர நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபிறகும் நண்பர் பெருந்திரளான கூட்டத்தைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தார். இந்தப் பார்வையாளர்கள்தாம் கன்னட நாடகச் சூழலின் பலம் என்று சொன்னேன். குறைந்தபட்சமாக 300 பார்வையாளர்கள் என்கிற உத்தரவாதம் எந்தக் கன்னட நாடகத்துக்கும் உண்டு. இதற்கு நேர்மாறாக, இப்படிப்பட்ட பார்வையாளர்கள் உருவாகவில்லை என்பதுதான் தமிழ்நாடக உலகின் பலவீனம் என்பது என் கணிப்பு. பல தமிழ் நாடகங்களை வெறும் இருபது பேர்களுக்கு நடுவில் உட்கார்ந்து பார்த்த அனுபவம் எனக்குண்டு. பார்வையாளர்கள் உருவாகாத சூழலிலும் படைப்பாளிகள் தொடர்ந்து உருவாகி வந்திருக்கிறார்கள் என்பது ஆறுதலான விஷயம். முப்பதாண்டுகளுக்கும் மேலாக இந்த நிகழ்வுகளைக் கவனித்து வரும் நண்பர் ரங்கராஜன் ஒரு பார்வையாளன் என்கிற நிலையிலிருந்து தம் அனுபவங்களையும் ஆதங்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் முன்வைத்த பல கட்டுரைகளின் தொகுப்பை இப்போது முதன்முதலாக நூலாக்கியிருக்கிறார். இதே விஷயங்களைப் பார்த்துவரும் சகபார்வையாளர்கள் என்கிற நிலையில் பலரும் தத்தம் மனஉணர்வுகளை ஒருமுகப்படுத்தித் தொகுத்துப் பார்க்கவும் பரிசீலித்துக்கொள்ளவும் இந்த நூல் வழிவகுக்கக்கூடும்.

இந்த நூல் மூன்று பகுதிகளாக உள்ளது. முதல் பகுதியில் நாடகச்சூழல் பற்றிய வெவ்வேறு தலைப்புகளைக் கொண்ட 12 கட்டுரைகள் நிறைந்துள்ளன. இரண்டாம் பகுதியில் கடந்த கால் நூற்றாண்டில் நடைபெற்ற முக்கிய 16 நாடக முயற்சிகள் வழங்கிய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் கட்டுரைகளும் பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற வெவ்வேறு மூன்று நாடக விழாக்களில் பங்கெடுத்துக்கொண்ட அனுபவங்களை முன்வைக்கும் கட்டுரைகளும் அடங்கியுள்ளன. மூன்றாம் பகுதியில் சில நாடகப்பிரதிகளுக்கான மதிப்புரைகள் அடங்கியுள்ளன.

‘வரலாற்றுப் பார்வையில் தமிழ்நாடகம் ‘ என்னும் கட்டுரையில் நுண்கலைகளைப்பற்றிய நம் அலட்சிய மனப்பான்மையைப்பற்றிக் குறிப்பிடுகிறார் ரங்கராஜன். இந்த அலட்சியத்தால்தான் நாம் நம் நாடகங்களுக்குரிய பார்வையாளர்களையும் இழந்தோம். பங்கேற்பாளர்களையும் இழந்தோம் என்று தோன்றுகிறது. காட்சிரூப வடிவிலான அமைதியை ஏற்படுத்த வேண்டியவர்களின் உழைப்பு செலுத்தப்படாத நிலையில் உருவான இடைவெளியில் புலன்களை உலுக்கும் உரையாடல்கள் வீற்றிருக்கத் தொடங்கின. பார்க்காத பயிர் பாழாவதைப்போல பங்கெடுப்பாளர்கள் இல்லாத அலட்சியத்தால் அரங்கம் கைநழுவிப்போனது. உரையாடல்களின் ஈர்ப்பால் முன்னகர்ந்து சென்ற பார்வையாளர்கள் நகர்ந்து நகர்ந்து இன்று சின்னத்திரை முன்னாலும் பெரிய திரை முன்னாலும் நகர்ந்து போய்விட்டார்கள். இவர்களை மீண்டும் நாம் நாடகங்களுக்கான பார்வையாளர்களாக மாற்றுவது எப்படி என்பது மிகப்பெரிய சவால். ஆயினும் இது சாத்தியமே என்று நிறுவுவதற்குச் சிறுகதைத் துறையை எடுத்துக்காட்டிச் சொல்கிறார் ரங்கராஜன். வணிகத் தேவைக்கான கதைகளின் பெருக்கத்துக்கு நடுவிலும் இலக்கியத் தகுதி மிகுந்த சிறுகதைகளில் தொடர்ந்து நாம் சிந்தனை செலுத்திச் சாதனை படைத்திருப்பதைப்போல நாடகத்துறையிலும் தொடர்ந்து சிந்தனை செலுத்தினால் வெற்றி சாத்தியப்படும் என்று நம்பிக்கையுடன் குறிப்பிடுகிறார்.

‘நவீன நாடகக் கருத்தாக்கங்களும் சில பிரச்சனைகளும் ‘ என்கிற கட்டுரையில் நாடகக் குழுக்களுக்கிடையே இருக்கவேண்டிய பரஸ்பர மரியாதை, நம்பிக்கை, கெளரவம் ஆகியவற்றைப்பற்றிப் பேசுகிறார். கூட்டுச் செயல்பாடான நாடகத்துறையைத் தனிமனிதர்களின் அகங்காரம் நிமிரவிடாமல் வைத்துவிடுவதை ஆதங்கத்துடன் குறிப்பிடுகிறார். பொதுப்பார்வையாளர்கள் இல்லாத சூழலில் பிற குழுக்களுக்காக ஒரு குழு நாடகம் நடத்துவதைப்போல ஒவ்வொரு நாடக நிகழ்ச்சியும் தோன்றுவதாகச் சொல்லித் தன் வருத்தத்தைப் பதிவுசெய்கிறார். தமிழ் நாடகங்களில் சோதனை முயற்சிகள் என்னும் கட்டுரையில் விடாமுயற்சியுடன் நவீன நாடகங்களை மேடையேற்றிக்கொண்டிருப்பவர்களை அறிமுகப்படுத்துகிறார். திராவிட இயக்க நாடகங்கள் பற்றிய கட்டுரையில் சமூகச் சீர்திருத்தத்தை நோக்கமாகக் கொண்ட திராவிட இயக்கப் படைப்பாளிகள் நாடகத் தளத்தில் நிகழ்த்திய செயல்பாடுகளையும் குறிப்பிடுகிறார் ரங்கராஜன். சமூக விமர்சனம் திராவிட இயக்கத்தின் நாடகங்களின் அடிப்படையாக இருந்தது. இந்த விமர்சனங்களை இந்த இயக்கத்தினர் உரையாடல்களாக நிகழ்த்தினார்கள் என்பது கவனிக்க வேண்டிய ஓரம்சம். இதற்கான எடுத்துக்காட்டுகளை அண்ணாவின் நாடகத்திலிருந்து வழங்கவும் செய்கிறார் ரங்கராஜன்.

காட்சிரூப வடிவிலான அமைதியை ஏற்படுத்த வேண்டிய நாடக மேடை என்கிற கருத்தாக்கத்தை இந்த இடத்தில் நினைத்துக்கொள்வது நல்லது. சமூக விமர்சனம் என்பது எல்லாத் துறைகளிலும் நிகழ்த்தப்பட வேண்டிய ஒரு கடமை என்பதில் ஐயமே இல்லை. நாடகத்துறை மட்டும் அதிலிருந்து விலகிவிட முடியாது. ஆனால் அந்த விமர்சனம் மேலான வெளியீட்டு முறைகளின் அடிப்படையில் அமையவேண்டும் என்பது முக்கியமான அம்சம். சாதனை புரிந்ததாக ரங்கராஜன் குறிப்பிடும் தமிழ்ச்சிறுகதைத் துறையில் மேலான வெளியீட்டு முறையிலான சமூக விமர்சனங்களே நுட்பமாக நிறைந்திருந்தன. மேலான வெளியீட்டு முறை என்பது அந்தந்த ஊடகத்துக்கும் உரிய விசேஷ வெளிப்பாடு முறையைக் குறிக்கும். நாடகங்களைப் பொறுத்தவரையில் காட்சேருப வடிவிலான அமைதியை ஏற்படுத்தும் வெளிப்பாட்டு முறையே மிகச்சிறந்த வெளிப்பாட்டு முறையாகும். ஆனால் இந்த மேலான வெளிப்பாட்டு நிலையிலிருந்து விலகி உரையாடல்கள் வழியாக மட்டுமே அந்த விமர்சனம் அமைந்துபோனதால் நாடகம் முடிந்த நிலையில் காட்சிப் படிமங்களை மனத்தில் சுமந்து திரும்ப வேண்டிய பார்வையாளர்கள் உரையாடல் வரிகளை மனப்பாடம் செய்து சுமந்து சென்றார்கள். காட்சிப் படிமங்களைச் சுமந்த நெஞ்சம் தத்தம் வலிமைக்கேற்ப விமர்சன வார்த்தைகளைச் சொந்தமாக வெளிப்படுத்தும் திறனைச் செயல்படுத்தும். ஆனால் இச் சாத்தியப்பாட்டுக்கான வழியை அடைத்துவிட்டு உரையாடல்களைச் சுமந்துசெல்லும் கூட்டத்தினராக பார்வையாளர்களை மாற்றியதால் அவர்கள் தத்தம் சொந்த விமர்சன வரிகளை உருவாக்கிச் சொல்வதற்கு மாறாக நாடக ஆசிரியர்களின் வசன வரிகளை ஒப்பிக்கத் தொடங்கினார்கள். பார்வையாளர்கள் வரிகளை ஒப்பிப்பவர்களாக முதலில் மாறினார்கள், அப்புறம், வரிகளின் மீது உருவான ஈடுபாட்டால் அப்பார்வையாளர்கள் நாடக ஆசிரியர்களைப் பின்பற்றிச் செல்பவர்களாக மாறிவிட்டார்கள். பார்வையாளர்களை வசீகரித்த ஓர் அரங்கமே பார்வையாளர்களை அழைத்துச் சென்றுவிட்டது.

வேதம், புராணம், பக்தி என்கிற கலாச்சார அம்சங்களுக்கு மாற்றாக, எளிமை, மனிதாபிமானம், சமத்துவம் கொண்ட மக்கள் கலாச்சாரத்துக்கு ஆதாரமாக இருந்த என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா ஆகியோரின் நாடக முயற்சிகளும் தொடர்ந்து உருவாகாதது திராவிட இயக்கத்தின் குறைபாடு என்று குறிப்பிடுகிறார் ரங்கராஜன். என்.எஸ்.கே.யும் எம்.ஆர்.ராதாவும் திராவிட இயக்க நாடகக் கலைஞர்களென்றாலும் திராவிட இயக்க மேடைகளில் இவர்களது நாடகங்கள் நடந்தன என்றாலும் திராவிட இயக்கம் உருவாக்கிய நாடகப் பார்வையாளர்களைப் பொறுத்த வரையிலும் நாடக இயக்க மையத்தில் ச்முக விமர்சனங்களைக் கோபமான உரையாடல்களால் வடித்த அண்ணாவும் கருணாநிதியும்தான் வீற்றிருந்தார்களே தவிர, விளிம்புகளில் இயங்கிய என்.எஸ்.கேவோ அல்லது எம்.ஆர்.ராதாவோ அல்ல. திராவிட இயக்கம் தலைதுாக்கி நிமிர்ந்திருந்த காலத்திலேயே விளிம்புகளில் இயங்கிய இக்கலைஞர்கள் மையத்தை நோக்கிச் செல்லவே இல்லை. அப்படிப்பட்ட நிலையில் இயக்கமே ஓய்ந்துவிட்ட சூழலில் காலத்தைத்தாண்டித் தொடர்கிற கண்ணிகளாக அவர்களது செயல்பாடுகள் அமையாமல் போனதை எண்ணி வருத்தப்படுவதில் அர்த்தமே இல்லை.

நாடகங்களைப்பற்றியும் பிரதிகளைப்பற்றியுமான ரங்கராஜனுடைய பதிவு மிக நல்ல அனுபவத்தைக் கொடுக்கக் கூடியதாகும். ஒரு நாடகக் காட்சியை அவர் உள்வாங்கிக்கொள்ளும் விதமும் அக்காட்சியின் வழியே கற்பனை எல்லைகளை விரித்துக் கொள்கிற விதமும் மனமுவக்கும் வகையில் உள்ளது. புதிய பார்வையாளர்களுக்கு ஒரு பயிற்சியாக அமைந்துள்ளது என்றும் சொல்லலாம். உயர்ந்த தரத்தில் உள்வாங்கிக்கொள்ளும் ரங்கராஜனுடைய இந்த ரசனை மனம்தான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடகத்துறையில் தொடர்ந்து நிறுத்தி வைத்திருக்கிறது. தம் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் ஆதங்கங்களையும் முன்வைத்திருக்கிற அவர் குரலைச் செவிமடுப்பது எதிர்காலத்தில் சிறந்த பார்வையாளர்களை உருவாக்கத் துணைசெய்யும் .

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்