விலங்குகளின் வாழ்வும் விளங்கும் உண்மைகளும் (வாழும் சுவடுகள் – கால்நடை வைத்தியரின் அனுபவங்கள் – நூல் அறிமுகம்)

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

பாவண்ணன்


(வாழும் சுவடுகள் – ஆசிரியர் டாக்டர் என்.எஸ்.நடேசன், மித்ர வெளியீடு. சென்னை, விலை ரூ65)

ஒவ்வொருவருடைய மனத்திலும் ஒரு படைப்பாளி உறைந்திருக்கிறான் என்று சொல்வதுண்டு. எதிர்ப்படும் ஒவ்வொரு சம்பவத்தையும் உயிர்ப்புடன் எதிர்கொள்வதும் நிதானமாகப் பல கோணங்களில் சீர்துாக்கிப் பார்ப்பதும் அந்த அனுபவத்தைப் பற்பல தளங்களுக்கும் இடம்மாற்றிப் பொருத்திப் பார்த்து அணுகுவதும் படைப்பூக்கம் மிகுந்த மனத்தின் குணங்கள். அத்தகு மனம் உடனடியாக எல்லாச் செயல்களிலும் முழுஅளவில் ஈடுபாடு கொள்கிறது. தன்னையே வழங்குகிறது. செயல் முழுமையடையும் வரை இடைவிடாமல் முயன்றவண்ணம் இருக்கிறது. செயலின் முடிவை முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. படைப்பூக்கம் மிகுந்த மனம் இருவழிப்பாதைகள் கொண்டது. வழங்குதலும் ஏற்றுக்கொள்தலும் இடைவிடாமல் நிகழ்ந்தபடி உள்ளன. எழுத்தாளர்கள் மட்டுமன்றி, படைப்பூக்கம் மிகுந்த பலர் பல்வேறு துறைகளில் இருப்பதுண்டு. பல சுயசரிதைகள் முதல் ஊர்ப்பயணங்கள் மேற்கொள்பவரகளின் பயணக்கட்டுரைகள் வரை பலவற்றை நாம் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இவர்களைப் போன்றே கல்வி, விளையாடஸ்டு, மருத்துவம், நாடகம், வேட்டையாடுதல், திரைப்படம் எனப் பல துறைசார்ந்த வல்லுநர்கள் எழுதும் அனுபவக்குறிப்புகளுக்கும் இலக்கிய நூல்களுக்கு இணையான மதிப்புண்டு. விஸ்வேஸ்வரய்யா என்னும் பொறியியல் வல்லுநர் எழுதிய ‘வேலையனுபவக் குறிப்புகள் ‘ என்னும் நூல் படிக்க மிகவும் சுவாரஸ்யம் நிறைந்ததாகும்.

கால்நடை மருத்துவரான என்.எஸ்.நடேசன் இலங்கையில் பிறந்தவர். போர்ச்சூழல் காரணமாக ஆஸ்திரேலியாவில் பணிபுரிபவர். பணிக்காலத்தில் தமக்குக் கிடைத்த அனுபவங்களை எளிய மொழியில் திறம்பட எழுதிய 25 கட்டுரைகளின் தொகுப்பை ‘வாழும் சுவடுகள் ‘ என்னும் தலைப்பில் நூலாக்கியிருக்கிறார். நூலில் குறிப்பிட்டுள்ள எல்லாச் சம்பவங்களும் அவரது மருத்துவமனையில் நடந்தவை. எல்லாம் ஆடு, நாய், பூனை, பசு போன்ற பல விலங்குகளுக்கும் மருத்துவம் பார்த்த அனுபவங்கள். ஒருவகை நிதானமும் பக்குவமும் நகைச்சுவை உணர்வும் எல்லாக் கட்டுரைகளிலும் நிறைந்திருக்கின்றன. பல தருணங்களில் தம் இலங்கை வாழ்வின் அனுபவங்களைத் தகுந்த விதத்தில் நினைவுகூர்ந்து பகிர்ந்துகொள்வது நெகிழ்வைத் தருகிறது.

‘கலப்பு உறவுகள் ‘ என்றொரு கட்டுரையில் கலப்புமணத்தில் பிறந்த சகோதரர்கள் இருவர் இடம்பெறுகிறார்கள். கலப்பு பற்றிய மேன்ாமயான எண்ணம் அவர்களிடம் குடிகொண்டுள்ளது. தம் ஆசையின் உந்துதலால் வீட்டில் உள்ள சிறிய வளர்ப்புப் பசுவை மிகவும் வலிமை மிகுந்த மாற்றுஇனக் காளையின் மூலம் கருவுறச் செய்து விடுகிறார்கள். கன்றை ஈன்றெடுக்க முடியாத நிலையில் அவஸ்தைப்படுகிறது பசு. சிக்கலான நிலையில் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிற பசுவுக்குப் பிரசவம் பார்த்தபிறகுதான் இக்கதையை அவர்கள் மூலம் தெரிந்துகொள்கிறார் மருத்துவர். பசுவுக்கும் தம்மைப்போலவே ஒரு வாழட்க்கையை அமைத்துத் தர விரும்பும் மனித விருப்பத்தின் ரகசியம் அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

‘இதயம் பேசுகிறது ‘ கட்டுரையில் ரைசன் என்னும் நாயை வளர்க்கும் ஜெனி என்கிற இளம்பெண் இடம்பெறுகிறாள். ஒரு சிக்கலான கட்டத்தில் அவளைச் சில முரடர்கள் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தபோது அவர்களைத் தாக்கி விரட்டியடித்த இதயவலிமையைக் கொண்டது அந்த நாய். அது இரண்டு நாட்களாகச் சரியாகச் சாப்பிடவில்லை என்கிற விஷயத்தோடு மருத்துவரைக் காணவருகிறார் ஜெனி. சோதித்துப் பார்க்கும் மருத்துவர் நாயின் இதயம் வீங்கியிருக்கும் விஷயத்தைச் சொல்கிறார். அந்த விஷயத்தைத் தாங்கிக்கொள்ளவே ஜெனியால் முடியவில்லை. அதே சமயத்தில் நெஞ்சறையின் முக்கால்வாசிப் பகுதியை இதயம் பெருத்து அடைத்துக்கொள்ள எந்த மருத்துவமும் பயனற்ற நிலையில் அந்நாய் படும் அவஸ்தைகளையும் காண அவளால் இயலவில்லை. இறுதியில் ஊசேமுலம் அதன் அவஸ்தைகளிலிருந்து உயிரைப் பிரியவைக்கச் சம்மதிக்கிறாள். இச்சித்தரிப்பு ஒரு சிறுகதையைப்போல கச்சிதமாக இருக்கிறது.

மற்றொரு கட்டுரையில் ஒரு நாய்க்குச் செய்த மருத்துவத்துக்கு ஒருவர் வழங்கிய காசோலை வங்கியிலிருந்து திரும்பிவந்து விடுகிறது. காசோலையைக் கொடுத்த நபருக்குத் தகவலைத் தெரிவிக்க முயற்சி செய்தபோது இரு நாள்களுக்கு முன்னர் அவர் மாரடைப்பால் காலமான செய்தியே கிடைக்கிறது. திரும்பி வந்த காசோலைக்கு ஒரு படைப்பில் இடம்பெறும் தகுதி அமைகிறது.

இரண்டாம் உலகப் போரில் போர்க்கைதிகளாக ஜப்பானியர்களால் சித்திரவதைகளுக்கு ஆளான ஜேம்ஸ் சகோதரர்களைப்பற்றிய குறிப்பொன்று ஒரு கட்டுரையில் இடம்பெறுகிறது. அவர்கள் இருவருமே சித்திரவதைகளின் காரணமாக ஆண்மையை இழந்தவர்கள். இதனால் திருமணவாழ்வை மேற்கொள்ளாதவர்கள். ஒரு மாட்டுப்பண்ணை அமைத்து காலத்தைக் கழிக்கிறார்கள். பண்ணையில் ஒரு குறிப்பிட்ட பசுவுக்குப் பிரசவவேதனை. டாக்டர் வருகிறார். தலை திரும்பிய நிலையில் கன்றால் வெளியே வர இயலவில்லை. அறுவை சிகிச்சை நடக்கிறது. பசு பிழைத்துவிடுகிறது. கன்று இறக்கிறது. மனித சித்திரவதைகளின் கொடுமைகளைப் போர்க்காலத்தில் தாங்கிக்கொண்ட சகோதரர்களால் வாய்பேசாத விலங்கின் அவஸ்தைகளைக் காண முடியவில்லை. ‘பிரசவ வேளையில் அந்தநாள் ஞாபகம் ‘ கட்டுரை நூலில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

பிரசவத்துக்காக ஒரு நள்ளிரவில் வந்து அனுமதிக்கப்படும் பூனை சிலமாதங்களுக்குப் பிறகு அதேபோல நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறிப்போய்விடும் சம்பவம் மனிதர்களின் வாழ்வைப்போலவே உள்ளது. தகவல் பரிமாற்றத்தில் நேர்ந்துவிடும் தவறினால் நாயின் விதைக்குப் பத்தாயிரம் டாலர்கள் நஷ்டஈடு கேட்டு வழக்குமன்றத்தை அணுகுபவரின் குறிப்பு மனிதமன இச்சையின் எல்லையின்மையைக் காட்டுகிறது. குறித்தநாள் தாண்டியும் பிரசவிக்காத நாய்க்குச் சுகப்பிரசவம் நிகழவேண்டுமே என்று பதற்றத்தோடு நள்ளிரவு வேளைகளில் மருத்துவமனைக்கு வரும் விலைமகளைப்பற்றிய சித்திரம் நெகிழ்ச்சியூட்டக்கூடியது.

ஆஸ்திரேலியாவில் விலங்குகள் பராமரிப்பு பற்றிய பல விஷயங்கள் இந்த நுால்வழியாக நக்கு அறியக் கிடைக்கின்றன. விலங்குகள் வீட்டைவிட்டுக் காணாமல் போனால் சுவரொட்டிகள் மூலம் விளம்பரம் தந்து தேடுகிறார்கள். அடையாளமின்றியும் பராமரிப்பின்றியும் தெருவில் அலையும் விலங்குகள் மீது பரிதாபம் கொள்பவர்கள் உடனடியாக அவற்றை அருகிலுள்ள பவுண்டுகளிலோ அல்லது மருத்துவமனைகளிலோ சேர்த்துவிட்டுச் செல்கிறார்கள். உரியவர்கள் உரிய காலத்தில் வந்து எடுத்துச் செல்லாத போது விருப்பப்பட்டு வருகிறவர்களுக்குக் கொடுத்துவிடுகிறார்கள். தவறான மருத்துவத்தால் விலங்குகளுக்கு ஏற்படுகிற பாதபேபுக்கு நஷ்டஈடு கேட்டு வழக்குமன்றம் செல்லலாம். விலங்குகளின் ரத்தம் சேமிக்கப்பட்டு மற்ற விலங்குகளுக்கு ரத்ததானம் செய்யப்படுகிறது. புல்வெட்டும் இயந்திரங்களுக்குப் பதிலாகப் பண்ணைகளில் ஆடுகளைத் தின்னவைப்பது அபராதத்துக்குரியதாகும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மனிதர்களுக்கும் கிட்டாத பல உரிமைகளும் பாதுகாப்புகளும் ஆஸ்திரேலியாவில் விலங்குகளுக்கு இருக்கின்றன. உயிரின் மகத்துவத்தை உணர்ந்த நாட்டில் ஆணென்றும் பெண்ணென்றும் விலங்கென்றும் மனிதனென்றும் பேதங்கள் இல்லை. நம் மண்ணிலும் ஏன் இப்படி அமையவில்லை என்கிற கனவை இந்த நூலின் கட்டுரைக் குறிப்புகள் எழ வைக்கின்றன.

நூலின் முன்னுரையில் எஸ்.பொ. ‘நாலுகால் சுவடுகள் ‘ என்று இந்த நுாலைக் குறிப்பிடுகிறார். ஆனால் புத்தகம் ‘வாழும் சுவடுகள் ‘ என்ற தலைப்பில் உள்ளது. சற்றே கவனமாக இருந்திருப்பின் இப்பிழையைத் தவிர்த்திருக்கலாம். டாக்டர் என்.எஸ்.நடேசனுடைய இனிய தமிழ்நடை நூலுக்கு வலிமை சேர்க்கிறது.

***

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்