பொருந்தாக் காமம்

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

பி.கே.சிவகுமார்


தலைப்பைப் பார்த்துவிட்டு, ஏதேதோ கற்பனை செய்தபடி இதைப் படிக்க ஆரம்பித்து முடிவில் ஏமாந்து போனால் அதற்கு நான் பொறுப்பல்ல. தனித்தமிழின்மீது ஒருசிலர் கொண்டுள்ள பிரேமையைப் ‘பொருந்தாக் காமம் ‘ என்று அழைப்பதே பொருத்தமென எனக்குத் தோன்றுகிறது. தனித்தமிழ் என்பது காலத்திற்குப் பொருந்தாதது என்பது என் கருத்து. பொருந்தாத ஒன்றின் மீது பிறக்கும் மோகத்தைப் ‘பொருந்தாக் காமம் ‘ என்று அழைக்கலாம்தானே! எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்த வேண்டும் என்கிற தனித்தமிழ் தமிழைக் கடுந்தமிழாக்குகிறது என்பதும் என் எண்ணம். தனித்தமிழ் என்றதும் ‘தமிழ் ஒரு மொழி; தனித்தமிழ் ஒரு முயற்சி; தனித்தமிழே தமிழ் மொழியல்ல ‘ என்று ஆரம்பித்த ஜெயகாந்தனின் கட்டுரை நினைவுக்கு வருகிறது. ஜெயகாந்தன் கூட உயர்வு நவிற்சியாகவும், சற்று மென்மையாகவுமே தனித்தமிழுக்கு ‘முயற்சி ‘ என்கிற பெயர் கொடுத்திருக்கிறாரோ எனத் தோன்றுகிறது. தனித்தமிழ் குறித்து படிக்க வேண்டிய இன்னொரு கட்டுரை பெருமாள் முருகனின் ‘கரித்தாள் தெரியவில்லையா தம்பீ… ‘. ‘தனித்தமிழ்ப் பற்று தற்கொலைக்குச் சமமாகும் (திராவிடன் படிக்கும் நூல்) ‘ என்னும் தலைப்பில் டாக்டர். அருட்பிரகாச ஜெயராம் அடிகளார் எழுதிய, ஆர்வமூட்டுகிற ஒரு புத்தகமும் உண்டு. தனித்தமிழ் குறித்து இவர்கள் எல்லாம் சொல்லாத ஏதோ ஒன்றைப் புதிதாய் இங்கே நான் பதிவு செய்யப் போவதில்லை. தனித்தமிழ் பொருட்டு நான் கேட்ட, எனக்கு நேர்ந்த சில சுவாரசியங்களையும், முரண்பாடுகளையும் சொல்லவே இக்கட்டுரை.

ஏழ்கடல் சுற்றிலும் இசைபோல் வாழ்கின்ற தமிழர்கள் எல்லாம் வாழ்வில் அடிக்கடி காண நேருகிற காட்சி, தனித்தமிழை மட்டுமே சிலர் தமிழ் என்றும், தமிழ்ப்பற்று என்றும் நிறுவ முயற்சித்துக் கொண்டிருப்பதுதான். தமிழ்நாட்டிலேயே செல்லாக் காசாகிப் போன இத்தகைய சித்தாந்தங்களுக்கு, அவ்வப்போது இங்கெ உயிரூட்டுகிற முயற்சிகள் நடப்பதை நீங்கள் அறீந்திருப்பீர்கள். அப்படி முயல்வோர் காலச்சுழியில் சிக்கி அவர்கள் கடைந்தெடுத்த தனித்தமிழ் வார்த்தைகளுடன் காணாமல் போவதும் சாசுவதமாய் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கிறது. தமிழ்ப்பற்று என்று சொல்பவர்களிடம் எல்லாம் நான் கிண்டலாக, வள்ளுவர் ‘பற்றுக பற்று விடற்கு ‘ என்று சொல்லியிருக்கிறார் என்றும் முன்னர் சொல்வதுண்டு.

பலவருடங்களுக்கு முன்பு இப்படித்தான் – டான் ஏஜ் பருவம். என்னுடைய நண்பர் ஒருவர் தனித்தமிழிலே ஈடுபாடுடையவர். அவருக்கும் எனக்கும் இதுகுறித்து விவாதங்கள் நடந்திருக்கின்றன. ஆனாலும், அவர் தனித்தமிழிலேதான் பேசுவார். ஒருநாள் மாலை நண்பர்கள் எல்லாம் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘சரி, கொட்டைவடிநீர் சாப்பிட போகலாம் ‘ என்றார். உடன் இருந்த நண்பர் ஒருவர் திகைத்துப் போய் ‘என்ன சொல்கிறீர்கள் ‘ என்று கேட்டார். ‘காப்பி சாப்பிட போகலாம் என்று சொன்னேன் ‘ என்று விளக்கம் கொடுத்தார் நண்பர். (காப்பிக்கு குளம்பி என்கிற குழப்பம் எல்லாம் வராத மஹா குழப்பக் காலமது.) கொட்டைவடிநீர் என்கிற சொல், காப்பியைவிட விந்துவிற்குப் பொருத்தமாக இருக்கிறது. அதான் முதலில் திகைத்து விட்டேன் ‘ என்றார் திகைத்து நின்ற நண்பர். தனித்தமிழ் நண்பரின் முகம்போன போக்கைப் பார்க்க வேண்டுமே! சமீபத்தில் இப்படித்தான் ‘செல்வி ‘ என்கிற சொல்லிருக்கத் ‘திருவாட்டி ‘ என்கிற தனித்தமிழ்ச் சொல் பயன்படுத்தப்பட்டது பார்த்து சிரித்திருக்கிறேன்.

இன்னொரு நண்பரை அமெரிக்கா வந்தபின் தான் தெரியும். தனித்தமிழில் டாக்டர் பட்டம் கொடுக்கலாம் என்கிற அளவுக்குப் ‘புலமை ‘ பெற்றவர். பெயர்ச்சொற்களைக் கூடத் தமிழ்ப்படுத்துவதில், கிரந்த எழுத்துக்கள் தவிர்த்து எழுதுவதில் எல்லாம் அவர் பெருஞ்சித்திரனார் வகை என்று சொல்லலாம். நியூ ஜெர்ஸியை ‘நியூ செர்ஸி ‘ என்று எழுதுவார். பூஜ்யத்தைச் சூன்யம் என்று அழைப்பார். ‘முன்னோர் ஒழியப் பின்னோர் பலரினுள் நன்னூலார் தமக்கு எந்நூலாரும் இணையோ ‘ என்னும் புகழ்நிலைக்க எழுதப்பட்ட இலக்கண நூலான நன்னூலில், அது எழுதப்பட்ட பதிமூன்றாம் நூற்றாண்டு காலத்திலேயே, வடமொழி (கிரந்த) எழுத்துக்கள் தமிழின் அங்கமாகக் கருதப்பட்டதும், அவற்றிற்கு புணர்ச்சி விதிகள் இருந்ததும் நண்பருக்குத் தெரியாது போலும். தெரிந்தால் ஒன்று நன்னூல் தமிழ் நூல் அல்ல என்று சொல்லக்கூடும். இல்லையென்றால், அவற்றையெல்லாம் ஆரியரின் இடைச்செருகல் என்று புலம்பக் கூடும். ‘இயன்றவரை தமிழில் பேசவேண்டும் ‘ என்று மஹாகவி பாரதி சொன்னதைப் படித்தபின், நானும் அவருடன் இயன்ற அளவு தமிழிலேயே பேசுவது வாடிக்கை. ஒருநாள் அவரைத் தொலைபேசியில் அழைத்தேன். இந்த நண்பருடன் உரையாடும்போது மட்டும், நான் சற்று முனைப்புடன் தமிழ் பேசுகிறேனா (தனித்தமிழ் அல்ல) என்று கவனம் கொள்வது வழக்கம். அவர் மனைவி தொலைபேசியை எடுத்தார். ‘நான் நியூஜெர்ஸியிலிருந்து சிவகுமார் பேசுகிறேன். (நண்பரின் பெயரைச் சொல்லி) அவருடன் பேச இயலுமா ? ‘ என்று கேட்டேன். வந்தது பதில் உடனேயே. ‘Please Hold On. I will call him. (நண்பரின் பெயர் சொல்லி அழைத்து) Call for you from Sivakumar. ‘ நண்பர் தன் மனைவியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களுள் தனித்தமிழைக் கைவிடுவதும் ஒன்று என்று நான் நினைத்துக் கொண்டேன்.

தமிழையும் தனித்தமிழையும் ஒரு கோஷமாக முன்வைத்து ஆட்சிக்கு வந்த திராவிடத் தலைவர்களே, பின்னாளில் தெளிவு பெற்றோ, ‘காலத்தின் கட்டாயத்தாலோ ‘, தனித்தமிழைக் கைவிட்டுவிட்டார்கள் என்பதைத் தனித்தமிழ்வாதிகள் வசதியாக மறந்து போகிறார்கள். ‘பழகிப் போய்விட்ட சில சொற்களை மிகச் சிரமப்பட்டு மாற்றிக் கொண்டிருக்கத் தேவையில்லை. அதற்காக பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்வது தேவையற்ற ஒன்று என நான் வாதிடவும் இல்லை. கட்டுமரம் என்ற சொல்லை, ஆங்கிலத்தில் ‘கட்டமரான் ‘ என எடுத்துக் கொள்ளவில்லையா ? அதுபோல காபி என்பது பிறமொழிச் சொல்லாக இருப்பினும் அதனை அப்படியே ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. ‘காபி ‘ போன்ற சில சொற்களுக்கு விதிவிலக்கு தரலாம். தனித்தமிழ் என்பது, கோர்ட் நீதிமன்றம் ஆகலாம்! ஜட்ஜ் நடுவராகலாம். ஜட்ஜ்மெண்ட் தீர்ப்பு ஆகலாம். அதற்காக தீர்ப்பு எழுதப் பயன்படுத்தும் பேனா ‘மூடியிட்ட எழுதுகோல் ‘ ஆகத் தேவையில்லை – இதுவே என் கருத்து. ‘ – சொன்னவர் தமிழின்பால் ஆழ்ந்த ஈடுபாடுடைய திரு.மு.கருணாநிதி.

எனக்குச் சொல்லப்பட்ட இன்னொரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது. ‘தனித்தமிழ் இல்லாவிட்டால், மெல்லத்தமிழ் இனிச் சாகும் ‘ என்று மெய்வருந்திய தனித்தமிழ்ப்பற்றாளர்கள் சிலர், அரசாங்கம் தமிழை எல்லா இடங்களிலும் கட்டாயமாக்க வேண்டும் என்று ஊர்வலம் போக நினைத்தார்கள். உடனே, தமிழில் உள்ள எழுத்தாளர்களையெல்லாம் துணைக்கு அழைப்பது என்றும் முடிவு செய்தார்கள்.ஜெயகாந்தனிடம் போய், ‘தமிழைக் காப்பாற்ற ஊர்வலம் போகிறோம். தாங்களும் கலந்து கொள்ள வேண்டும் ‘ என்றார்கள். அவர் சிரித்தபடியே சொன்னாராம். ‘Dont worry, Tamil will live forever ‘ என்று. இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் சாகாது நீடித்து நாளும் வளர்கிற தமிழை, எத்தனையோ நாகரீகங்களை, கலாச்சாரங்களை, மொழிகளை, ஆதிக்கங்களைச் சந்தித்து, அவற்றை உள்வாங்கி, அவற்றுக்கு மேலாக எழுந்து நிற்கிற தமிழை, ஊர்வலம் போவதன் மூலமும், தனித்தமிழ் மூலமுமே காக்க முடியும் என்பது எவ்வளவு பேதைமை!

இன்னொரு நண்பர். இங்கே ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார். தமிழ்மீது ஆர்வமும் தனித்தமிழ் மீது பித்தும் உண்டு அவருக்கு. தமிழிலே மின்னச்சு செய்ய பலவகையான எழுத்துருக்கள் இருப்பதைப் பற்றி பெருமையுடன் பேசிக் கொண்டிருந்தோம். என்னைப் போன்ற தமிழ் தட்டச்சு தெரியாதவர்களுக்குப் ‘phonetic typing ‘ எவ்வளவு சுலபம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னார்: ‘Phonetic Typing தமிழ் அல்ல. ‘ Phonetic Typing என்கிற வார்த்தைக்கு அவர் பயன்படுத்திய தனித்தமிழ்ச் சொல் எனக்கு மறந்து விட்டது. எனவே, தனித்தமிழ் ஆர்வலர்கள் என்னை மன்னிப்பார்களாக. நான் சொன்னேன் – ‘ஏன் இல்லை, க் + இ = கி என்று எப்படி உயிர்மெய் எழுத்து பிறக்கிறதோ அப்படி எழுத்துக்களை தட்டச்சு செய்வது எவ்வளவு சுலபம் தெரியுமா ? ‘. அவர் சொன்னார். ‘Phonetic Typing தமிழ் மரபல்ல. தமிழ் மரபு தட்டச்சு (Typewriter) முறையில் தட்டச்சு செய்வதுதான். ‘ ‘அப்படியானால் தமிழ் மரபின் படி நாம் கம்ப்யூட்டர் எல்லாம் பயன்படுத்தாமல், ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொண்டிருக்க வேண்டும் ‘ என்று எனக்குச் சொல்லத் தோன்றியது. சொல்லி என்ன பிரயோசனம் என்று நினைத்துச் சும்மா இருந்து விட்டேன்.

வெளிநாடுகளில் வாழ்கிற தமிழர்கள், தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று விரும்புவதும், அதற்காக அவர்களைத் தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்புவதும் நமக்கு இங்கே வாடிக்கையான, அவசியமான ஒன்று. தனித்தமிழையே தமிழ் என்று குழந்தைகளை பயமுறுத்தி, குழந்தைகளுக்குத் தமிழ்பால் பயமும் அவநம்பிக்கையும் ஏற்படச் செய்கிற அனுபவங்களிலிருந்து தமிழ்ப் பள்ளிக்குச் செல்கிற தம் குழந்தைகளைக் காப்பது பெற்றோரின் கடமையாகும். ஏனென்றால், தனித்தமிழ் மட்டுமே தமிழ் அல்ல, தமிழ் மரபல்ல, தமிழ்ப் பற்று அல்ல, தமிழன் என்பதற்கான அடையாளமும் அல்ல.

‘எனக்கும் தமிழ்தான் மூச்சு; ஆனால் அதைப் பிறர்மேல் விட மாட்டேன் ‘ என்கிற ஞானக்கூத்தனின் வரிகளைத் தமிழின் முதல்பாடமாக்கி, வெளிநாடுகளில் வாழும் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ் சொல்லித் தர ஆரம்பிக்கலாம்.

***

pksivakumar@att.net

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்