கடிதங்கள்

This entry is part of 45 in the series 20030703_Issue

ஜூலை 3, 2003‘இரவுகள் எழும்பும் ஊழிக்காற்றில்

நெகிழும் சுடருக்குள் நிலைத்த கருவிழி

நடுங்கும் நிழல்களின் ஸ்பாுஸத்தில் அறைச் சுவர்கள் ‘

எழுதப்படாத பதில் கடிதம் -யூமா.வாசுகியின் இரவுகளின்

நிழற்படம் கவிதைகள் குறித்து

எச் பீர் முஹம்மது

‘கண் மறைந்த ஆனந்தத்தின்

ஒரு பகுதியை பற்றிக் கொள்ள விரும்புகின்றன.

தனியறையில் சாய்ந்த உடல் புரளும்

வியூகங்கள் தகர்ந்த பழைய விஸ்வரூபத்தின் நினைவுகளில்

சிற்றெறும்பின் தலையை விரல் நகம் துண்டாக்கியதோடு

அம்பின் முனையொன்று இலக்கை வென்றது. ‘

‘கவிதையின் புரிதல் சிக்கலாயிருக்கும் இச்சூழலில் யூமா.வாசுகியின் கவிதைகள் அதனை ஓரளவுக்கு தனித்திருக்கின்றன. ‘

(I have copied from your web page)

மேற்கோள் காட்டிய கவிதையும், அதைத் தொடர்ந்து பீர் முகம்மதுவின் ‘கவிதையின் புரிதல் சிக்கலாயிருக்கும் இச்சூழலில் வாசுகியின் கவிதைகள் அதைத் தணித்திருக்கின்றன ‘ விமர்சனமும் சிரிப்பைத் தான் வரவழைக்கின்றன. தமிழை வளர்க்கத் தேவை இத்தகைய கவிதைகளும், விமர்சனங்களும் அல்ல. சர்ரியலிசம், போட்டோ ரியலிசம் எல்லாம் இருக்கவேண்டியதுதான், ஆனால் ஓரளவுக்குத்தான். வாசகனைப் பைத்தியக்காரனாக்கும் கவி மேதாவித்தனத்தையும், விமர்சன போலித்தனத்தையும் எழுத்தாளர்கள் தவிர்க்க வேண்டும் என்பது தமிழ் நலம் நாடும் என் போன்றோரின் தாழ்மையான் வேண்டுகோள்.

ஆரோக்கிய சேவியரின் ‘ஒரு கவிதையே கவிதை கேட்கிறது ‘ என்ற வரிகள் ஏற்கனவே படித்த வரிகள் போலிருந்தன. (தப்பில்லை, ஒரே மாதிரி கவிதைகள் பலருக்குத் தோன்றுவதுண்டு). அனந்தின் ‘பழைய கோப்பை புதிய கள் ‘, கோபாலகிருஷ்ணனின் ‘ஒரு கடத்தல் கதை ‘, ‘தொலைந்தது ‘, தமிழ்மணவாளனின் ‘பரிச்சயம் ‘ (பரிச்சியம் என்பது சரியான சொல்லா ?), ராபினின் ‘பேதங்களின் பேதமை ‘, நான் ரசித்த கவிதைகள். முத்து நிலவனின் ‘ஹே ராம் ‘ கவிதைத் தொகுப்பு முன்னுரை, சிறந்த விமர்சனமாக இருந்தது.

– இனியவன் செல்வன்


அன்புள்ள ஆசிரியருக்கு,

எனதுக் கட்டுரையைப் பொருட்படுத்தி ஜெயமோகன் தெரிவித்திருக்கும் கருத்துக்கும், அதனையொட்டி திண்ணை வாசகர்களின் வாசிப்புக்கு, அமைந்த சிறப்பான நாடகத்திற்கும் நன்றி. மற்றொரு நண்பர் மு.வ., சுஜாதா வரிசையில் நாளைக்கு நான் குரும்பூர் குப்புசாமியையும் இலக்கியவாதியென அறிவிக்கலாம் என எழுதியிருக்கின்றார்.

ஜெயமோகனின் கட்டுரையே எனது எதிர்வினை களம். இதில் என்குற்றமேதுமில்லை. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் எவருமில்லை உண்மை. ஆனால் தமிழ்ப் படைப்புலகத்தை பொறுத்தவரை நடு நிலையில் இருக்கிறதா ? என்பதுதான் நான் எழுப்பிய கேள்வி.

சமகால பிரெஞ்சு மற்றும் ஆங்கில எழுத்துக்களின் நேரடி வாசகன் நான். இங்கே அடுத்தப் படைப்பாளியைப் பற்றிய அவதூறான பிராசாரங்களில் நேரத்தைச் செலவிடும் படைப்பாளிகள் இல்லை. தமிழில்தான் புகழேந்தியின் வெண்பா சவலையென்றும், பாரதியின் கவிதை வசனமென்றும் கூட்டம் சேர்க்கின்ற ஆர்வம். இந்தியாவின் இதரபகுதிகளில் என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது. அது எனக்கு அவசியமுமல்ல. நான் ஒரு தமிழன், சாதாரண வாசகன் என்ற முறையிலேயே என் கருத்தினை வைத்தேன்.

தமிழ்ப் படைப்பாளிகளுக்கு ஓர் அன்பு வேண்டுகோள். உலகின் எந்தப் படைப்புலகத்திற்கும் தமிழுலகம் சளைத்ததல்ல. மனவருத்தமொழிந்து எழுந்து வாருங்கள். தமிழால் முடியும் எனபதனைத் தங்கள் எழுத்தில் தெரிவியுங்கள். ஞானபீடமென்ன பரம பீடத்தையும் உங்களால் அடைய முடியும்.

நான்

நாளையும் பீஷ்மனாய் வாழ்வதைக்காட்டிலும்

இன்றைய யயாதியாய் இறந்துபோகிறேன்.

-நாகரத்தினம் கிருஷ்ணா


ஆசிரியருக்கு,

டாம் ஹேடன் கட்டுரையை பொருத்தமான சமயத்தில் வெளியிட்டுள்ளீர்கள்.நன்று.இத்தகைய கட்டுரைகளை வெளியிடும் போது தேவையான அடிக்குறிப்புகள் தருவது விரும்பத்தக்கது. உதாரணமாக முன்னெச்சரிக்ககை கோட்பாடு (precautionary principle) குறித்து ஒரு குறிப்பினையும் வெளியிடலாம். biosafety protocol குறித்தும் குறிப்பு வெளிய்ட்டிருக்கலாம், அது குழப்பம் தரும் வகையில் கட்டுரையில் தரப்பட்டுள்ளது. மரபணு மாற்றப்பட்ட உணவும் உலக வர்த்தகமும் என்ற முக்கியமான பொருள் பற்றி ஒரு சிறு கட்டுரையில் அதன் அனைத்து அம்சங்களையும் விவாதிக்கமுடியாது. இது உலக வர்த்தக விதிகளை எப்படி அமுல் செய்வது என்பது குறித்த சர்ச்சையும் கூட. Technical Barriers to Trade, Agreement on Sanitary,Phytosanitary Measures ஆகிய இரண்டும் எப்படி அமுல் செய்யப்பட வேண்டும்,விளக்கப்பட வேண்டும் என்பதுடன்,முன்னெச்சரிக்ககை கோட்பாடு ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்ற கேள்வியும் எழுகிறது.இவற்றின் ஒரு சில அம்சங்களை (ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள) இரண்டு கட்டுரைகளில் விவாதித்துள்ளேன். இது இறையாண்மை குறித்த சர்ச்சையும் கூட.வர்த்தக விதிமுறைகளை ஒருநிலைப்படுத்துவது என்ற பெயரில் நாடுகள் தங்கள் உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியுமா என்பதும் ஒரு முக்கியமான கேள்வி.

வேதசகாய குமாரின் கடிதம் கதையின் மூலம் என்ன என்பதை தெளிவாக்குகிறது.ஆனால் ஜெயமோகன்,சொல் புதிது வெளீயீட்டாளர் வேறுவிதமாக விளக்கம் கொடுத்து திண்ணைக்கு கடிதம் எழுதியுள்ளனர், நல்ல வேடிக்கை.வசந்தி தேவி பல ஆண்டுகள் அரசுக்கல்லூரிகளில் பாடம் கற்பித்துள்ளார், முதல்வராக பணியாற்றியுள்ளார். பெண்கள் உரிமைகள், ஆசிரியர் சங்கம் என வகுப்பறைக்கு அப்பாலும் அவரது பணி தொடர்நதுள்ளது.இடதுசாரி/முற்போக்கு வட்டாரங்களில் இதனால் பரவலாக மதிக்கப்படுபவர்.இரு முறை பல்கலைக் கழக துணைவேந்தராக இருந்தவர்.சமூகப்பிரச்சினைகளில் தொடர்ந்து அக்கரை காட்டுபவர்.எனவே அவர் பெரிய கல்வியாளரா, இவர்களுடன் ஒப்பிடுகையில் என்ற ரீதியில் எழுதுவது சரியல்ல. அந்த நூலை முன்வைத்து வேதசகாய குமார் இக்கேள்வியை எழுப்பியிருக்கலாம்.அதில் உள்ள கருத்துகள் மீதான தன் விமர்சனம் மூலம் சுந்தர ராமசாமி, வசந்தி தேவி ஆகியோரின் அறிவை,புரிதலை கேள்விக்குட்படுத்தியிருக்கலாம்.கல்வித்துறையில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ள அவரது எதிர்வினை அப்படி இருந்திருக்க வேண்டும். மேலும் சுந்தர ராமசாமயின்ி எந்த கருத்துக்களை நம்பி அவர் ‘கடுமையாக மோதி பலர்வெறுப்பையும் கோபத்தையும் சம்பாதித்தவன் ‘ என்று தன்னைப் பற்றி எழுதியுள்ளார் என்பது தெரியவில்லை. இது (முன்னாள்) குருவிற்கும் -(முன்னாள்) சீடருக்கும் உள்ள பிரச்சினை. ஆந்தை யார்,நாய் யார் என்ற தரத்தில் ‘இலக்கிய ‘ விவாதம் நடைபெறுகிறது. சொல் புதிது சார்பில் சொல்லப்படும் கருத்துக்கள் அபத்ததின் உச்சகட்டம்.உ-ம் ‘ஒரு கதை மீதான வாசிப்புகள் பல. அதற்கு அதன் ஆசிரியர் கூட பொறுப்பு ஏற்க முடியாது . பிரசுரிக்கும் இதழ் அதை பொறுப்பேற்பது சாத்தியமேயல்ல. ‘

சிறுகதையை வெளியிட்டதற்காக சொல் புதிதை எதிர்த்து பிரச்சாரம் செய்யப்படுவது உண்மையெனில் அது சரியானதல்ல.கருத்துச்சுதந்திரம் என்பது சில சமயங்களில் தவறாக பயன்படுத்தப்படலாம், அதற்காக தங்களுக்கு ஒவ்வாத பிறரது எழுத்தினை தீவிரவாதம் என்று முத்திரை குத்துவது, ஒரு இதழுக்கு கிடைக்கும் விளம்பரங்களை தடுக்க முயல்வது போன்றவை தவிர்க்கப்பட வேண்டியவை. சுயமாக யோசிப்பது என்பது தான் எழுதும் விஷயம் குறித்த அடிப்படையே தெரியாமல் எழுதுவது அல்லது தனக்கு தோன்றியதையெல்லாம் எழுதுவது என்று ஜெயமோகன் நினைத்தால் அதற்கு நான் என்ன செய்ய. முற்போக்கு எழுத்தை கேலிக்குரியதாக ஆக்க முத்துநிலவன் முன்னுரையும், அவர் மேற்கோள் காட்டியுள்ள சில கவிதை வரிகளும் போதும்.ஒளவையார் குறித்து இன்குலாப் ஒரு நாடகம் எழுதியுள்ளதும், அது அரங்கேறப்பட்டதும் கூடவா அவருக்கு தெரியாது.

K.ரவி ஸ்ரீநிவாஸ்


ஆசிரியருக்கு,

நண்பர் இந்தியாவில் இரா முருகனின் குறிப்பு கண்டேன். [எந்த ஊரில் இருக்கிறார் இப்போது ? ] சுஜாதாவுக்கு பின் தமிழில் அறிவியல் சிறுகதை எழுதியவர்களில் அதிகமாக எழுதியவர் காஞ்சனா தாமோதரன், மூன்று கதைகள். கட்டுரையில் அவரைப்பற்றி இரு பத்தி இருந்தது . கட்டுரையின் ஒருமை சிதறுவதனால் எடுத்துவிட்டேன். அடுத்தபடியாக அதிகம் எழுதியவர் முருகன்தான் – இருகதைகள். தொடர்ச்சி என அவரை குறிப்பிட அதுவே போதுமானது என்று பட்டது.

**

சென்ற இதழில் பாகிஸ்தானிய மனித உரிமைபோராட்டங்களைப்பற்றிய இருகட்டுரைகளும் நன்றாக இருந்தன.

ஜெயமோகன்


To the editor

The drama Vadakkumukam is a masterpiece in ever level .I am reading thinnai for the past two years and in my knowledge this is the best creative work you had ever published .It is fully poetic and dramatic. I can not say the exact words .But I honestly feel thaykeeping the poetic elevation throughout a long drama is really an achievement

KitrivasSubramanyan

Mylapore


26-ஜூன் இதழில் வெளிவந்த ஜெயமோகனின் ‘வடக்கு முகம் ‘ நாடகம் வித்தியாசமாக இருந்தது. இதிகாச, புராண நிகழ்வுகள், கதை மாந்தர்கள், குறியீடுகளை புதிய, நாத்திகக் கலப்பு இல்லாத நவீனத்துவ கண்ணோட்டத்துடன் அணுகும் படைப்புக்கள் தமிழ் இலக்கியச் சூழலில் மிக மிகக் குறைவு. அதிலும் பெரும்பாலான இத்தகைய படைப்புக்கள் சமூக சமுதாய முரண்பாடுகளின் தோற்றம் மற்றும் தொடக்கத்தை இதிகாச புராணங்களில் தேடிப்பிடிப்பவையாகவே இருக்கும்.

ஆனால் ஜெயமோகனின் இந்த நாடகமோ முழுக்க முழுக்க ஆழ்மனத் தேடல் மற்றும் தத்துவ விசாரங்களை முன்னிறுத்துகிறது.. அதுவும் மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட பீஷ்ம பிதாமகரின் பாத்திரப் படைப்பையும் மகத்தான பண்புகளையுமே கேள்விக் குறியாக்கி ! நாடகத்தின் வரி வடிவம் நீண்ட தத்துவ வியாக்கியானங்களுக்கு (discourse) உகந்ததாக இல்லாததே இந்தப் படைப்பின் வலிமை – சிறு சிறு மெய்ஞானத் தீற்றல்களை நாடகம் முழுவதும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது போல விரவி வர} 16.0 mark insert 16.9 mark anchor 16.9 text { இது உதவியிருக்கிறது..

மரணத்தை மையக் கருத்தாக்கி, பிரபஞ்சத்தின் மாய இயற்கை தரும் மயக்கத்தின் விளைவுகளை பீஷ்மரின் உள்ளுணர்வு தன் இறுதிக் காலத்தில் அசைபோடுவதாகக் காட்டியிருப்பது ஆழ்ந்த தத்துவ சிந்தனை. இது போன்ற ‘புதிய ‘ இதிகாசத் தேடல்கள் தொடரட்டும்..

– ஜடாயு

Series Navigation