சிங்கராஜன்

This entry is part [part not set] of 42 in the series 20030626_Issue

காஞ்சனா தாமோதரன்


ஆஃப்ரிக்கப் புல்லாங்குழல்களும் முரசும் கொட்டுமாய் அரங்கம் அதிர்கிறது. கங்கல் சிவப்பில் மஞ்சள் தீற்றல்களுடன் தகிக்கும் சூரியன் தன் காகித மடிப்புவரிகளிலிருந்து மெல்ல மெல்ல விரிந்து மேலெழும்பி மேடையை நிறைக்கிறது. ஒட்டகச்சிவிங்கிப் பொம்மைகள் நீண்ட நிழல்களாய் நடந்து வருகின்றன. மூங்கில்குச்சிப் பாவாடையணிந்து தலைமேல் சதுரப் புல்லாந்தரிசைச் சுமந்திருப்பவர்கள், பரந்த ஆஃப்ரிக்கச் சவானாப் புல்வெளியாய் மெல்ல அசைகின்றனர். ‘பாட்டாக் ‘ தீட்டிய பெரிய யானைப் பொம்மை, காட்டுமான் பொம்மைகள், வரிப்புலிப் பொம்மைகள் முதலியவற்றை இயக்கும் நடிகர்கள் அரங்கத்துப் பார்வையாளர்கள் மத்தியில் வரிசையாக நடந்து மெல்ல மேடையேறுகிறார்கள். மேடையிலும் அரங்கத்திலும் உள்ளவர்கள் எல்லாரும் தலையை நிமிர்த்தி மேலே பார்க்கிறார்கள். நெடிய பாறை மேல் நிற்கும் சிங்கராஜாவும் ராணியும் புதிய சிங்கக்குட்டியை உயர்த்திப் பிடித்துத் தம் கானகப் பிரஜைகளுக்குக் காண்பிக்கிறார்கள். மிருகப் பிரஜைகளின் ஆர்ப்பரிப்பையும் குலவைகளையும் மீறி அரங்கத்தில் கைதட்டல் அதிர்கிறது.

நியூயார்க் ப்ராட்வே நாடகமான ‘லயன் கிங் ‘கின் முதல் காட்சி இது. 1994-இல் டிஸ்னி கார்ட்டூன் திரைப்படமாக வெற்றி பெற்று மூன்றாண்டுகளுக்குப் பின் நாடக அரங்கேற்றம்.

நுணுக்கமான கார்ட்டூன் படங்களையும், அழுத்தமான குணச்சித்திரங்களையும், சிறந்த நடிகர்களின் நெளிவுசுளிவுள்ள குரல்களையும், மனதைத் தொடும் பாடல்களையும் சேர்த்து, குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்குமாய் முழுநீளத் திரைக்காவியங்களைப் படைப்பது டிஸ்னி நிறுவனத்துக்குக் கைவந்த கலை. அவர்களது சமீபத்திய படங்களில் சற்றுத் தீவிரமானது ‘லயன் கிங் ‘. கதை இதுதான்: ஒரே ஒரு காட்டிலே, ஒரே ஒரு சிங்கராஜா ‘முஃபாஸா ‘. ராஜாவுக்கு ஒரு ராணி. ராஜாவுக்கும் ராணிக்கும் ஒரு சிங்கக்குட்டி ‘ஸிம்பா ‘. சிங்கக்குட்டிக்கு ஒரு சினேகிதி ‘நளா ‘. முஃபாஸாவுக்குப் பொறாமையும் பேராசையும் பிடித்த ஒரு தம்பி ‘ஸ்கார் ‘. எல்லாரும் வேட்டையும் பாட்டும் விளையாட்டுமாய் இருக்கையில், தனக்கு அரசபதவி இல்லையே என்று ஸ்கார் பொருமுகிறது. இடம்பெயர்ந்து வேகமாக ஓடும் ‘வில்டர்பீஸ்ட் ‘ மந்தைகளின் நடுவே தந்திரமாய் ஸிம்பாவை மாட்டி விடுகிறது ஸ்கார். முஃபாஸா மகனைக் காப்பாற்றுகிறது. ஸ்கார் முஃபாஸாவைக் கொலை செய்கிறது. தானே தன் அப்பாவின் மரணத்துக்குக் காரணமென்று ஸிம்பாவை நம்ப வைத்து, அதைக் காட்டை விட்டே விரட்டி விடுகிறது. இன்னொரு காட்டில் சில மிருகங்களின் துணையுடன் வளருகிறது ஸிம்பா. தான் யாரென்பதை மறந்து போகிறது. பல வருடங்கள் கழித்துச் சினேகிதி நளாவைச் சந்தித்ததும் தன் பொறுப்புகள் நினைவுக்கு வருகின்றன. ஸ்கார் மற்றும் அடியாள் கழுதைப்புலிகளை விரட்டியடித்துத் தன் ராஜ்ஜியத்தை மீட்கிறது. சுபம்.

கதை மாறவில்லை என்றாலும், அது திரையிலிருந்து மேடைக்குப் போக ஏன் மூன்று ஆண்டுகள் ஆகியுள்ளன என்பது நாடகத்தைப் பார்க்கும் போது புரிகிறது. குழந்தைக் கதை, பல்கலாச்சார இசை, பன்மொழிப் பாட்டு, ஆட்டம், பொம்மலாட்டம், நிழலாட்டம், நகைச்சுவை, தொழில்நுட்பம் எல்லாமாய்க் கலந்து வித்தியாசமான உருவெடுத்திருக்கிறது நாடகம்.

பாத்திர வேடங்களிலும் மேடைப் பின்னணியிலும் நேரடி யதார்த்தம் கிடையாது. ஒரு வகையான ‘மினிமலிஸ்டிக் இம்ப்ரெஷனிஸம் ‘( ? ?) தெரிகிறது. நாங்கள் பாதியை மட்டுமே சித்தரிக்கிறோம், அறிவுள்ள பார்வையாளர்களாகிய நீங்களே மிச்சத்தை இட்டு நிரப்பிக் கொள்ளுங்கள் என்கிறது மாதிரி.

மிருக முகமூடி வேடத்தில் ஒளிந்திருக்கும் நடிகர்கள் இங்கில்லை. முகமும் உணர்வும் தெளிவாகத் தெரியும்படி பொம்மை முகங்களை நடிகர்கள் அணிகிறார்கள். சில நடிகர்கள் இன்னும் சில படிகள் மேலே போய், முழுமையான பொம்மலாட்டமே செய்து பேசி நடிக்கிறார்கள்–கம்பிகள் இருப்பதும் இழுபடுவதும் நமக்குத் துல்லியமாகத் தெரியும், ஒளிக்கும் முயற்சியே இல்லை. இரு முக்கியப் பாத்திரங்கள் இத்தகைய முழு பொம்மலாட்டம் வழியேதான் இயங்குகின்றன. தலைமேல் பொருத்திய சிங்கப்பொம்மை முகங்களும் கூரான வேட்டைக் கண்களும் நகங்களும் நளினமான உடலசைவுகளும் காற்றிலாடும் மஞ்சள்-காவி உடைகளுமாய்ப் பெண்சிங்கங்கள் வேட்டையாடும் நடனக் காட்சியை இன்னோர் உதாரணமாய்ச் சொல்லலாம். பொம்மைகளைத் தாங்கி இயக்கி மிருக-மனிதராகப் பேசி நடித்து ஆடுவதன் சிரமம் முழுதாய்ப் புரியா விட்டாலும், அது பாராட்டப்பட வேண்டியது என்பது புரிகிறது. மிருகங்களுக்கு மனித உணர்வுகளையும் குரல்களையும் கொடுத்து, அவற்றையே உணவுச் சங்கிலித் தலைமையாக மதிக்கும் ஒரு கார்ட்டூன் திரைப்படம் இப்படி மட்டும்தான் மேடையேற முடியுமென்று நம்மை உறுதியாக நம்ப வைத்துவிடுகிறது நாடகம்.

பின்னணிகளும் வித்தியாசமானவை. பல வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கும் மற்றொரு ப்ராட்வே இசைநாடகமான ‘ஃபான்டம் ஆஃப் தி ஆப்பரா ‘வில், தொங்கும் சரவிளக்கு கீழே விழுந்து நொறுங்குவதாய் ஒரு காட்சி. நாடக அரங்கில் நம் தலைகளுக்கு மேலே தொங்கும் அந்தப் பெரும் ‘க்ரிஸ்டல் ‘ சரவிளக்கு, கண்ணுக்குத் தெரியாத கம்பியில் நழுவிச் சென்று, மேடையில் பெருத்த ஓசையுடன் விழுந்து தூசிப்படலம் கிளப்பும். இப்படிப்பட்ட தத்ரூபமான காட்சியமைப்பை வெற்றியாக நினைக்கும் ப்ராட்வே தொழில்நுட்பங்களுக்கு இடையில், ‘லயன் கிங் ‘கின் காட்சியமைப்புகள் வித்தியாசமானவையே. பரந்து விரிந்து அடர்ந்து கிடக்கும் ஆஃப்ரிக்கச் சமவெளியையும் கானகங்களையும் எவ்வளவு ‘தத்ரூபமாக ‘த்தான் நியூயார்க்கில் மேடையேற்ற முடியும் ? எதிர்த்திசையில் இயங்குகிறார் இயக்குநர் ஜூலி டேமோர். வெண்புட்டாக்களுடன் நெளியும் வெளிர்நீலப் பட்டுச்சேலை நுரைக்கும் காட்டாறாகிறது. கங்கல் சிவப்பில் மஞ்சள் தீற்றல்களுள்ள காகித வட்டம் சூரியனாகிறது. மூங்கில்குச்சிப் பாவாடையணிந்து தலைமேல் புல்லாந்தரிசுச் சதுரம் சுமந்து மெல்ல அசைபவர்கள் பரந்த ஆஃப்ரிக்கச் சவானாப் புல்வெளியாய் மாறுகின்றனர். கண்ணைப் பறிக்கும் வண்ண உடைகளணிந்து இலை தழைகளைச் சூடியவர்கள் அடர்ந்த காடுகளாகின்றனர். இங்கு இயற்கைக்கும் வெளிப்படையான மொழியும் பாடலும் ஆடலுமுண்டு.

மேற்சொன்ன பின்னணிச் சித்தரிப்பில் தயாரிப்பு வசதியோடு கதையின் அடிப்படைத் தத்துவமும் சேர்ந்தே இயங்குகிறது. இயற்கை/ உயிர் என்பது ஒரு பெரும் வட்டம், எல்லாவற்றுக்கும் அதில் இடமுண்டு, எல்லாமே முக்கியமானவை என்று ‘circle of life.. ‘ பாடலில், குட்டி ஸிம்பாவுக்குச் சொல்லித் தருகிறது முஃபாஸா. கதை ஸிம்பாவின் தனிப்பட்ட வளர்ச்சி பற்றியது என்றாலும், இன்னொரு பார்வையில், அது இயற்கையில் பிறப்பும் இறப்பும் மறுபிறப்பும் நிகழ்வது பற்றியது; இயற்கையின் ‘வட்டத்தில் ‘ எல்லா உயிர்களும் தத்தம் இடத்தையும் பாதையையும் உணர்ந்து ஒருசேர இயங்குவது பற்றியது. இயற்கையின் எல்லா வடிவங்களுக்கும் குரலும் ஆட்டமும் பாட்டமும் இருப்பதில்தான் எவ்வளவு உற்சாகம்! நாடகம் பார்க்கையில் இந்த உற்சாகமே மேலோங்கி நின்றதாய் ஞாபகம்.

திரைப்படத்தை விட நாடகத்தின் இசை விரிவானது. எல்ட்டன் ஜானும் டிம் ரைஸும் சேர்ந்து அமைத்த ஐந்து திரைப்பாடல்களுடன் இன்னும் மூன்று பாடல்கள். கூடவே, எம். லீபோ, ஸிடி லெ லோக்கா என்ற ஆஃப்ரிக்க இசைக்கலைஞர்களின் ஆஃப்ரிக்க வாய்மொழிப்பாடல்கள் மற்றும் ‘கோரல் ‘ இசை ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஆஃப்ரிக்க இசையும் ஒலிகளும் நாடகத்துக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றன. மேற்கத்திய இசையும் ஆஃப்ரிக்க இசையும் இணையும் போது கிடைக்கும் இசையின் வண்ணமே வேறு. காகிதத்தில் எழுதி ஒழுங்குபடுத்தி வாசிக்கப்படும் மேற்கத்திய இசையை விட, கேள்வி வழியே சொல்லப்படும் இந்த ஆஃப்ரிக்க இசை மனதுக்கு நெருங்கியதாய், உடல் அணுக்களுடன் அடிப்படைத் தொடர்புள்ளதாய்த் தெரிகிறது. (செவிவழிப் படிக்கும் இசை வடிவங்களுடன் வளர்ந்ததால் வரும் பாரபட்சப் பார்வையோ இது ?)

நடனங்களும் பல்வேறு கலாச்சாரப் பின்னணிகளிலிருந்து வருபவை. ஆஃப்ரிக்கப் பழங்குடி நடனங்கள், கர்ரிபியன் நடனங்கள், பாலே நடனம், அமெரிக்க ‘ஹிப்ஹாப் ‘, மற்றும் ‘சார்ல்ஸ்டன் ‘ என்று பல நடனங்களும் ‘தூய ‘ வடிவிலும் கதம்பமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ( ‘சார்ல்ஸ்டன் ‘ நடனம் ‘ஜாஸ் ‘ இசையுடன் சேர்ந்து அமெரிக்கக் கறுப்பினக் கலைஞர்களால் வளர்க்கப்பட்டு பிரபலப்படுத்தப்பட்ட வடிவம்; இதன் வேர்கள் மேற்கு ஆஃப்ரிக்காவில் புதைந்திருக்கக் கூடும் என்கிறார் அமெரிக்க இசைவடிவங்களின் சரித்திரம் கொஞ்சம் தெரிந்த எங்கள் நண்பர்.) உடைகள் நடனங்களுக்கு ஏற்றாற்போல் வேறுபட்டாலும், ஆஃப்ரிக்க நிலப்பகுதிக்கு உரிய பல அடையாளங்களைத் தக்க வைத்துக் கொள்கின்றன. வண்ணங்களின் ஆனந்தச் சுழற்சி!

இசையிலும் மொழியிலும் உடையிலும் நடனங்களிலும் பல கலாச்சாரங்களின் பாதிப்பிருப்பினும், நகைச்சுவை மட்டும் முழுக்க முழுக்க அமெரிக்கப் பாணிதான். (stand-up comedy style.) சிரிப்புக்குக் குறைவே இல்லை.

வியக்க வைக்கும் தொழில்நுட்பத் தந்திரங்களும் இல்லாமலில்லை. நளாவைப் பார்த்த பின் தான் யாரென்று நினைத்துக் கலங்கும் ஸிம்பாவிடம் முஃபாஸாவின் ஆவி தோன்றி, ‘நீ என் மகன்; உண்மையான அரசன்; மறக்காதே, ‘ என்று சொல்லும் காட்சி. முஃபாஸாவின் முப்பரிமாண முகம் மட்டும் அந்தரத்தில் மிதக்க வேண்டும். பேசுவது போல் வாய் அசைய வேண்டும். கண்களும் முகத்தின் தசைகளும் அசைய வேண்டும். அதே நேரத்தில், ஆவி என்பதால் வானமும் நட்சத்திரங்களும் அதனூடே தெரிய வேண்டும். மேடையில் இவ்வளவும் சாத்தியமாயிற்று. ‘ஹோலோக்ராம் ‘ தொழில்நுட்பம் இவ்வளவு முன்னேறியிருக்கிறதா, ப்ராட்வே அதைப் பயன்படுத்துகிறதா என்று (சிறிதும் ஞானமின்றி) நினைத்துக் கொண்டேன். பிறகே விபரம் தெரிந்தது. மேடை முழுதையும் இருளாக்கி, பல ஒளிப்புள்ளிகள் ஒன்றின் மேலொன்று விழும்படிச் செய்து, அவற்றை மெல்ல நகர்த்துவதன் மூலம் இந்தக் காட்சி சாத்தியமாயிற்றாம். தொழில்நுட்பம் இருக்கட்டும். பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தையும் ஸிம்பாவின் ஆழ்மனவெளியையும் ஒரே சமயத்தில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியதே அந்தக் காட்சியின் வெற்றி.

ஆழமான உணர்வுகளையும் தொடுகிறது நாடகம். முகத்தின் நீண்ட வடுவினால் அழகற்றவனாய் உணர்ந்து, அரசாளும் உரிமையுமற்ற ஸ்கார் ஒரு கலவையான தாழ்வு மனப்பான்மையும் எதிரியை வீழ்த்தும் அதீத நம்பிக்கையும் கொண்டிருப்பதும், இந்த எதிர்மறை உணர்வுகளே ஸ்காரின் தொடர்ச்சியான இயக்கத்துக்குக் காரணமாவதும், ஒரு வகையில் அதன் மேல் பரிதாபத்தையும் ஏற்படுத்துகின்றன (இறுதியில் ஸ்கார் நிலைக்காது என்பதும் தெரிந்ததால்). தந்தையைக் கொன்று விட்டோமென்ற குற்ற உணர்வில் அழுந்தி, அதை மறப்பதற்காக ‘ஹக்கூனா மட்டாடா ‘ (கவலைகள் இல்லை) என்று நண்பர்களுடன் பாடித் திரிந்து தன் அடையாளத்தையே இழந்து, தான் யாரென்று புரிந்த பின்னும் திரும்பிப் போகத் தன்னம்பிக்கையின்றித் தத்தளிக்கும் ஸிம்பாவை ஒரு சாதாரணச் சிங்கக்குட்டியாகப் பார்க்க முடியவில்லை. தான் வாழும் உலகம் பற்றிய துல்லியமான புரிதலும் ஒவ்வோர் உயிரும் மதிக்கப்பட வேண்டுமென்ற உறுதியான நம்பிக்கையுமுள்ள இலட்சியவாத முஃபாஸா, சகோதரனின் வன்முறைக்குப் பலியாவதில் ஒரு சோகமான யதார்த்தம் இருக்கிறது.

நாடகம் முடிந்து நடிகர்கள் அனைவரும் மேடையில் நின்று வணக்கம் தெரிவிக்கும் நேரம். பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டித் திரை வீழ்ந்த பின்னும் கூடத் கைதட்டல் ஓயவில்லை. மீண்டும் மீண்டும் திரையை உயர்த்திப் பல முறை நடிகர்கள் பார்வையாளர்களின் பாராட்டுகளை ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. தினந்தோறும் அதே வரிகளைச் சொல்ல வேண்டிய நாடக நடிகர்களுக்கு அவர்கள் வேலை சலிக்காதோ என்று நான் வியந்ததுண்டு; நாடக முடிவில் நேருக்கு நேராக ரசிகர்களின் பாராட்டுதலை உணர முடிவதே அவர்களுக்கான பரிசு போலும். எத்தனை பேருக்கு அவர்கள் வேலைநாளின் இறுதியில் இப்படிக் கைதட்டல் கிடைக்கிறது ? J

அரங்கத்தை விட்டு வெளியேறியதும் பிற நாடக அரங்கங்களிலிருந்து வெளியேறும் பார்வையாளர்களுடன் கலக்கும் திருவிழா நெரிசல். நாங்களும் நண்பர்களும் பேசிக் கொண்டே தங்கியிருந்த நண்பர்கள் வீடு நோக்கி நடந்தோம். ஒரு நல்ல கலைவடிவத்தை அனுபவித்த பின் வரும் நிறைவு. நியூயார்க் குளிர்காற்றையும் மீறி ஆஃப்ரிக்க சவானாவின் மிச்சங்கள் இன்னும் உள்ளே உயிர்த்திருந்தன. நண்பர்கள் ‘லயன் கிங் ‘ நாடகத்தின் புதுமை அம்சங்கள் பற்றி வியந்து பேசப் பேச, அதன் இசையும் வண்ணங்களும் பொம்மைமுகங்களும் அவற்றின் பின்னுள்ள நடிகர்களும் நினைவில் வந்து போனார்கள். கூடவே, என்றோ எங்கோ திறந்த நட்சத்திர வானத்தின் கீழ் பார்த்திருந்த சில எளிமையான பொம்மைமுகங்களும் மனிதமுகங்களும் துடியான வண்ணங்களும் இசையும் பாட்டுகளும் ஆட்டங்களும் சிறு சிறு நினைவுக் கீற்றுகளாய். ஒரு சின்னப் பாட்டைக் காதினுள் ஓதியது காற்று:

சிறகை விரித்தால் மயிலாட்டம்

சேர்ந்து குதித்தால் ஒயிலாட்டம்

சீறிப் பாய்ந்தால் புலியாட்டம்

திரையில் மறைந்தால் நிழலாட்டம்

ப்ராட்வே மேடையில் அன்று பார்த்தது நாடகமா அதன் முன்னோடியான கூத்தா ?

(2002 குறிப்புகளிலிருந்து.)

Kanchanat@aol.com

Series Navigation

காஞ்சனா தாமோதரன்

காஞ்சனா தாமோதரன்