நாம் நாமாக

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

றஞ்சினி


தயவுசெய்து நாம் காதல் செய்வோம்

என் உதடுகள் இரண்டும்

உன் உதடுகளை முத்தமிடட்டும்

அடிவானம் கரைந்து மறையும் வரை

நாம் திருப்தியுறாதவர்களாக

எமக்காக இந்த உலகம் விரியட்டும்

நீ

என்னிடத்தில் இரூக்கும்போது ஆணாக இராதே

என்னை நீயாக மாற்ற முயலாதே

நான் நானாகவும் நீ நீயாகவும் இரூப்போம் .

எமக்கு இப்போ பலம்பற்றிய பிரச்சனை வேண்டாம்

நான் பெண்

ஆணின் பார்வையில்

வெற்றிடங்களும் ஒட்டைகளும் நிறைந்தவள்

நீ

உன் ஆண் புத்திஜீவிதத்தால்

என்னை நிரப்பி ஒட்டி சீர்செய்ய நினைக்காதே

பின் எமது உதடுகள் ஒட்டாதது

எமது காதல் இன்பம் பெறாது

தயவு செய்து காதல் செய்வோம்

நாம் நாமாக இரூந்து

shanranjini@yahoo.com

Series Navigation

றஞ்சினி

றஞ்சினி

நாம் நாமாக…

This entry is part [part not set] of 37 in the series 20030619_Issue

கோமதி நடராஜன்


[சின்ன விஷயமாகத்தான் இருக்கும் ஆனால் அது நம்மைப் படுத்தும் பாடு இருக்கிறதே,அது எழுதி முடியாது.ஆனாலும் எழுதியிருக்கிறேன் படியுங்களேன்]

அப்பா எத்தனையோ சொல்லியிருக்கிறார்.எத்தனையோ திறமைகளைத் தன்னுள் வளர்த்திருக்கிறார்.ஆனால் யாரையும் அருகில் அழைத்து உட்கார வைத்துக் கற்றுத் தந்ததில்லை.அப்பாவுக்கு வைரத்தின் தரம்பார்க்கத்தெரியும்.ஷேர்மார்க் கெட்டின் சூட்சுமம் அத்துப்படி,சட்ட நுணுக்கங்கள் விரல் நுனியில்,என்று வாழ்ந்தவர்.இத்திறமைகள் அத்தனையும், உலகத்தில் அத்தனை அப்பாக்களுக்கும் இருக்கும் ,என்று குழந்தைகளும்,தன் குழந்தைகளுக்குத் தான் சொல்லித்தரவேண்டியதில்லை, எல்லாமே தானாக வந்துவிடும் என்று அப்பாவும் தப்புக் கணக்குப் போட்டதில் ,அப்பாவின் பெயரைச் சொல்லி ஜொலிக்க யாருக்குமே தகுதி இல்லாமல் போய் விட்டது. .

அப்பாவைப் பார்க்க,காலையில் ஏழு மணியிலிருந்து பதினோரு மணி வரை ஆட்கள் வந்து போய்க்கொண்டிருப்பர்.அதில் கைகட்டிக் கீழ்தழ்வாரத்தில் நின்று பேசிச் சென்றவர்கள்,அப்பா அமர்ந்திருக்கும் நாற்காலியிக்கு அருகில் கீழே அமர்ந்து கேட்டுச் சென்றவர்கள்,சமமாக நாற்காலியில் உட்கார்ந்து உரையாடிச் சென்றவர் என்று தரம் வாரியாக வந்த அவர்களெல்லாம், எத்தனையோ கற்றுச் சென்றிருக்க வேண்டும்.எல்லோருக்கும் நிறையவே சொல்லித் தந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.இல்லையென்றால் அவர் முன்னிலையில் கை கட்டி நின்றவர்களெல்லாம் இன்று காரில் போய்க் கொண்டிருக்க முடியுமா ?அவர் சொல்லி, காற்றில் கலந்து,நான் காது கொடுக்காமல் தானாக,உள்ளே விழுந்த விஷயம் ஒன்று உண்டென்றால் அது ,அவர் அடிக்கடி சொல்லிவந்த

‘யார் எப்படி இருந்தாலும் நாம் நாமாக இருக்கணும் ‘என்ற வசனம்தான்.கடைபிடிக்க முடியாத விஷயம் அது என்பதை உணரக்கூட முடியாத பிஞ்சு மனதில் அப்படியே என் பசுமரத்தாணியாக பதிந்து அசைக்க முடியாமல் இறங்கி , மனதில் ஆழமாக புதைந்துவிட்டிருந்தது.ஐயோ! அதை நான் இத்தனை ஆண்டுகளாக மனதில் இருத்திக் கடை பிடித்து வந்ததில் நான் நானாகவே இல்லாமல் போய் விட்டேன்.

நேற்று வரை என்னை அலைக்கழித்து வந்து கொண்டிருந்த அந்த கனமான அறிவுரையை இன்று வேரோடு கிள்ளி எறிந்து விட்டேன்.

யார் எப்படி இருந்தாலும் நாம் நாமாக இருப்பது என்பது,கேட்பதற்கு வேண்டுமென்றால் நன்றாக இருக்கும்,நடை முறையில் அது எத்தனை அசாத்தியமானது என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.இதை உணர்ந்து கை விடுவதற்கு எனக்கு இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.யார் எப்படி இருந்தாலும் நாம் நாமாக இருக்க வேண்டும் என்ற நீதியைக் காற்றில் பறக்க விட்டு நிம்மதியாக இருக்கிறேன்

நீங்கள் புத்தராக இருந்து புலி உங்களைத் தாக்க வரும் பொழுது,நீங்கள் புத்தராகவே புன்னகை பூத்து நின்றால்,நீங்கள் இருந்த இடம் புல் முளைத்துப் போகும்.புலி தாக்கினால் நாமும் புலியாக வேண்டும்.அதுதான் புத்திசாலித்தனம்.

ஒருவன் ஏமாற்றினால் நாமும் ஏமாற்றவேண்டும்.இறைவனைத்தான் ஏமாற்றக் கூடாது,எத்தர்களை ஏமாற்றலாம். பெரியவர்கள் சொல்லிச் சென்றார்கள் என்று கண்மூடித்தனமாக எல்லாவற்றையும் கடைபிடித்து வந்தால்,காரியம் நடக்காது.

நாம் நாமாக இருந்து பார்த்ததில்,நான் கண்ட பலன்,நான் பார்த்துப் பிறந்த வளர்ந்த நண்டு நசுக்குகள் எல்லாம் தலையில் ஏறி ஆடுகின்றன,தகுதி இல்லாதவர்கள் எல்லாம் தலைகால் புரியாமல் குதிக்கின்றனர்.

அடுத்தவரை மதிக்க வேண்டும் என்பது மறுக்க முடியாத ஒன்று,அதற்காக நம் மதிப்பு குறையும் வண்ணம் குனிந்து விடக் கூடாது.அடுத்தவர் மனதைப் புண் படுத்தக் கூடாது,என்ற எண்ணம் இருக்க வேண்டியதுதான்,அதற்காக,நம்மை நோகடிப்பவர்களின் முகம் வாடிவிடுமே என்று புன்னகையுடன் பொறுத்துப் போய்,நம்மை வடிகட்டிய முட்டாள் என்று ஆயுளுக்கும்காட்டி கொண்டிருக்கக் கூடாது.

சிரித்தமுகம் வேண்டும்தான் அதற்காக இளிச்சவாயனாகி விடாதீர்கள்.

அனுசரித்துப் போக வேண்டும்தான்,அதற்காக அது அடுத்தவர்களுக்கே ஆதாயமாகிக் கொண்டே போகிறதென்றால்,அதற்கு நீங்கள் தரும் விலை கொஞ்சம் அதிகம்தான்.கொடுத்த பணத்துக்கு நீங்கள் வாங்கும் பொருள் பொருத்தமாய் இருக்கிறதா என்பதில் கணக்குப் பார்க்கும் நாம் ,விலை மதிக்க முடியாத அனுசரணை,சகிப்புத் தன்மை இதற்கெல்லாம் தகுந்த பலனை நாம் அடைந்தோமா என்று யோசிக்க வேண்டாமா ?

‘சகிப்புத்தன்மை ‘என்ற வார்த்தையிலேயே கஷ்டம் என்பது ஸ்பஷ்டமாகத் தொனிக்கிறது இல்லையா ?கடவுள் தரும் சோதனையைச் சகிக்கிக்க வேண்டும்,மனிதன் தரும் வேதனையை வெட்டி எறிய வேண்டும்.

இன்னல் தர ஒருவன் அதைச் சகித்துக் கொள்ள ஒருவன் என்று இறைவன் படைக்கவில்லை.எல்லோருக்கும் எல்லாவற்றையும் தந்திருக்கிறான் ,சிலர் சாமர்த்தியமாக அதைக் கையாளுகிறார்கள் சிலர் அசடுகளாய் கோட்டை விட்டுவிடுகிறார்கள்.

நடைமுறைக்கு ஒத்துவராத எந்த விஷயத்தையும் விடாப் பிடியாக பிடித்துக் கொண்டு நம் வாழ்க்கையை வீணாகக் கூடாது என்ற முடிவுக்கு வந்த பிறகு மனதில் அமைதி குடி ஏறி விட்டது.

அப்பா சொன்னதை ,அது என்னிடம் சொல்லப் படவில்லையென்றாலும் இத்தனை நாளாக அதை வேத வாக்கியமாக எடுத்து ,மனதில் பாறாங்கல்லாக கனத்து தொண்டையில் பந்தாக உருண்டு உருண்டு வேதனையைத் தந்து கொண்டிருந்தது. அவர் கொள்கையை,உதறி விட்ட பின் உலகமே என் சுண்டு விரலில் சுழல்கிறது.

இப்பொழுதெல்லாம்,யார் எப்படி இருந்தாலும் நானும் அவர்களாகவே இருக்கக் கற்றுக் கொண்டேன்.நான் எடுத்த முடிவை அப்பாவும் வழிமொழிவார் என்று நம்புகிறேன். நீங்களும் அர்த்தமற்ற சில கோட்பாடுகளை விடாப்பிடியாக மனதில் இருத்தி அல்லல் படாமல்,எதையும் பட்டும் படாமலும் கொண்டு போகப் பழகிக் கொள்ளுங்கள்.அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்,அது அடுத்தவர் வேதனையில் அமையக் கூடாது என்பதில் மட்டுமே கவனமாக இருந்தால் போதும் .அந்த ஒரு சிந்தனையில் மட்டும் நாம் நாமாக இருந்தால் போதும்.

எல்லோரும் இன்புற்றிருக்கத்தான் இறைவன் வாழ்க்கையைத்தருகிறான்.தகுதியற்றவர்களுக்கு அர்த்தமில்லாமல் அர்ப்பணிக்க அல்ல.

கோமதி நடராஜன்

komal@ambalam.com

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்