சில குறிப்புகள் 14 ஜூன் 2003 (சண்டியர்-இண்டெக்ஸ் ஆன் சென்சார்ஷிப்-நேர்,சமூக அறிவியல்-பல்கலைக் கழகங்கள், அறிவுசார் சொத்துரிமை )

This entry is part [part not set] of 42 in the series 20030615_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


***

சண்டியர் படபிடிப்பு நடைபெறுவது சந்தேகம் என்ற நிலை உருவாகியுள்ளது. டாக்டர் கிருஷ்ணசாமி கூறும் காரணங்கள் சரியல்ல. இது சாதி பிரச்சினையாக மாற்றப்பட்டுவிட்டது. நாளை தலித் இலக்கிய அடிப்படையில் யாராவது திரைப்படம் உருவாக்க நினைத்தால் இதே காரணங்களுக்காக வேறு சிலர் ஆட்சேபிக்கக்கூடும். சர்ச்சைக்குரிய கதை என்று காவல் துறையும் தொடர்ந்து பாதுகாப்பு தர மறுக்கலாம்.

மேலும் திரைப்படத்தில் வன்முறை என்றால் தேசபக்த-தீவிரவாத எதிர்ப்பு படங்களைத்தான் அவர் முதலில் எதிர்க்க வேண்டும்.அதே போல் நந்தா,ஸ்ரீ,ரெட் போன்ற படங்கள் வெளியான போதும் ஆட்சேபம் தெரிவித்திருக்க வேண்டும். கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. திரைப்படம் வெளியாகும் முன் இப்படம் குறித்த ஆட்சேபங்ககளை தணிக்கைக்குழு முன் தெரிவிக்கலாம்.தேவை எனில் நீதிமன்றத்தினை படம் வெளியான பின் நாடலாம். எனவே படப்பிடிப்பிற்கு ஆட்சேபம் தெரிவிப்பது சரியல்ல.

காற்றுக்கென்ன வேலி பல எதிர்ப்புகளைத் தாண்டி வெளிவந்தது. அதற்கு எதிராக கூறப்பட்ட காரணங்கள் அற்பமானவை. துள்ளுவதோ இளமை, சாமி போன்ற படங்கள் எதிர்ப்பின்றி வெற்றிகரமாக ஒடுவது நாம் அறிந்ததே.இத்தகைய ‘சர்ச்சைக்கு அப்பாற்ப்பட்ட ‘ படங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வெளியாகும் நிலை நல்லதா என்பதை அவர் யோசிக்க வேண்டும். கருத்து சுதந்திரம் குறித்து அக்கரை இருந்தால் அவர் படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை கைவிட வேண்டும். கமலஹாசனின் படங்கள் மீதான விமர்சனம் என்பது வேறு, அவரது கருத்து சுதந்திரத்தினை ஆதரிப்பது என்பது வேறு.

தேவர் மகன் குறித்து எத்தனை கட்டுரைகள் தமிழில் ஆய்வுபூர்வமாக எழுதப்பட்டுள்ளன என்று தெரியவில்லை. குணா குறித்து ஒரு முக்கியமான கட்டுரை பெங்களூரிலிருந்து வெளியாகும் Deep Focus ல் வெளியானது. ஹே ராம் குறித்து ஒரு கட்டுரை , ரவி வாசுதேவன் எழுதியது Economic & Political Weekly ல் வெளியானது.சுந்தர் காளியும்,நானும் கூட்டாக எழுதி, அஷிஸ் நந்தி பதிப்பித்த The Secret Politics of Our Desires ல் வெளியான கட்டுரையில் தேவர் மகன் குறித்தும் பேசப்பட்டுள்ளது. வெங்கடேஷ் சக்ரவர்த்தி போன்ற சினிமாத்துறை அறிஞர்களிடம் அவர் ஆலோசனை கோரலாம். திரைப்படம், ஜாதி, வன்முறை குறித்து விவாதம் தேவை.

***

Index On Censorship கருத்து சுதந்திரம் குறித்து தனிக்கவனம் செலுத்தும் இதழ். சமீபத்தில் வெளியான இதழ் மக்கள் இடம்பெயர்தல் குறித்து பல கட்டுரைகளை தாங்கி வெளிவந்துள்ளது. ஆப்பிரிக்காவில் இடி அமீன் கொண்டுவந்த கொள்கைமாற்றத்தினால் வெளியேர வேண்டிய நிலை ஏற்பட்ட போது பல ஆசியர்கள், குறிப்பாக இந்திய வம்சாவழியினர் இங்கிலாந்தில் குடியேறினர். அவர்கள் ஒரு சிறு நகரை எப்படி பொருளாதார ரீதியில் வளர உதவினர் என்பது குறித்து ஒரு கட்டுரை உள்ளது.

மேலும் நாடுகள் அகதிகள், குடியேற்றம் குறித்து உள்ள சர்வதேச உடன்படிக்கைகளில் எவற்றை ஒப்புக் கொண்டுள்ளன என்று ஒரு பட்டியல் உள்ளது.Index தடை செய்யப்பட்ட /சர்ச்சைக்குரிய இலக்கிய படைப்புகளை பற்றி தொடர்ந்து அக்கரை காட்டுவதுடன், மொழிபெயர்ப்புகளையும் வெளியிடுகிறது. படிக்க கிடைத்தால் படிக்க வேண்டிய இதழ் இது.

ஆசியா,ஆப்பிரிக்காவில் கருத்து சுதந்திரம் இல்லை, ஐரோப்பா, அமெரிக்காவில் அந்நிலை இல்லை என்ற நிலைப்பாட்டினை இவ்விதழ் முன் வைப்பதில்லை.மாறாக மிக சிறப்பான விமர்சனங்கள் வெளியாகின்றன.இந்த ஒரு அம்சத்திற்காகவே இதைப் படிக்கலாம்.

***

நேர் இரண்டாவது இதழ் வெளிவந்துள்ளது. முதல் இதழ் படித்தேன். படிகள், பரிமாணம், பிரக்ஞை வரிசையில் இதை சேர்க்கலாம். மொழிபெயர்ப்புகள் நன்றாக இருந்தன. இரண்டாம் இதழில் கட்டுரைகள் தேர்வு சிறப்பாக உள்ளது.இதழ் 2 எனக்கு படிக்க கிடைக்கவில்லை. Seminar, Economic & Political Weekly, Little Magazine போன்றவற்றிலிருந்து மொழிபெயர்க்க பல கட்டுரைகள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட விஷயத்தினை விவாதிக்கும் SEMINAR போன்று ஒரு சிற்றிதழ் தமிழில் தேவை, அது இணைய இதழாகக் கூட இருக்கலாம்.

உதாரணமாக தமிழ் இலக்கியமும், பின் நவீனத்துவமும் என்ற தலைப்பில் ஒரு விவாத தொடக்க கட்டுரை, 4 (அ) 5 கட்டுரைகள், நூல் மதிப்புரைகள், தெரிவு செய்யப்பட்ட நூற்/கட்டுரைப் பட்டியல் ஆகியவை ஒரு இதழில் இடம் பெறலாம். சமூக அறிவியல் கட்டுரைகள், புத்தக விமர்சனங்களுக்கு ஒரு இணைய இதழ் தமிழில் தேவை.கட்டுரைகள் தவிர, தமிழில் குறிப்பும் ஆங்கில கட்டுரைக்கு இணைப்பும் (link) தர முடியும்.இதன் மூலம் வாசகர்களுக்கு பல கட்டுரைகளை அவை வெளியான சில வாரங்கள்/மாதங்களுக்குள் அறிமுகம் செய்வது சாத்தியம்.

***

பல்கலைக்கழகங்கள்,அறிவுசார் சொத்துரிமைகள் (intellectual property rights) குறித்து ஒரு விரிவான ஆய்வு நூல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அமெரிக்கா,ஐரோப்பா,ஆஸ்திரேலியா,கனடாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் இது குறித்து எத்தகைய கொள்கைகளை பின்பற்றுகின்றன, ஆய்வாளர்கள்/பேராசியர்களின் உரிமைகள் என்ன உட்பட பலவற்றை இது விளக்குகிறது. பாடகுறிப்புகள்/உரைகளின் பதிப்புரிமை(copyright) யார் வசம் உள்ளது.இணையம்,தொலைக் கல்வி மூலம் பல்கலைக்கழகங்கள் கல்வி தரும் போது அதன் உள்ளடக்கம் மீது ஆசிரியர்கள் பதிப்புரிமை பெறமுடியுமா அல்லது அது பல்கலைக்கழகங்கள் வசம் உள்ளதா – இப்படி பல கேள்விகளுக்கு இதில் பதில்கள்/கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 20/30 ஆண்டுகளில் பல்கலைக்கழகங்கள் அறிவுசார் சொத்துரிமைகள் குறித்து கவனம் செலுத்துகின்றன.பல பல்கலைக்கழகங்கள் இதற்கென தனிப்பிரிவுகளை நிறுவியுள்ளன.சிக்கல் என்னவென்றால் இதனால் பல்கலைக்கழகங்கள் செய்யும் ஆய்வுகள் முடிவினை வெளியிடுவது உட்பட பலவற்றை அறிவுசார் சொத்துரிமைகள் குறித்த கொள்கைகள் தீர்மானிக்கினறன.பல பல்கலைகழகங்கள் ஆசிரியர்களை மதிப்பிட அவர்கள் ஆய்வினால் பெறப்பட்ட உரிமங்கள்(patents) போன்றவையும் கணக்கில் கொள்ளப்படுகின்றன.1999 ல் அமெரிக்கா,கனாடாவில் உள்ள பல்கலைக்கழகங்கள்,மருத்துவமனைகள்,ஆய்வுஅமைப்புகள் $ 862 மில்லியன் தொகையயை ராயல்டியாக பெற்றன.பல்கலைக்கழகங்கள் உயர்கல்விக் கூடங்களாக மட்டும் செயல்படும் நிலை மாறிவிட்டது.இது வெறும் பணம் சார்ந்த விஷயம் அல்ல, மாறாக பல பரிமாணங்கள் கொண்டது.

***

ravisrinivas@rediffmail.com

Series Navigation