கடிதங்கள்

This entry is part of 42 in the series 20030615_Issue

ஜூன் 15, 2003


***

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

சென்ற வாரத் திண்ணையில் பெண் சிசுக்களைக் கொல்லும் பாதிப் பாபத்தை மட்டும் காட்டிப் ‘பெண்களை நம்பாதே ‘ என்னும் ஒரு புதுக் கவிதையைச் சாத்தூர் நண்பர் மீ. வசந்த் எழுதி யிருந்தார்! அவர் எழுத மறந்த மீதிப் பாபத்தைக் காட்ட முதலில் ஒரு கடிதமாக எழுத எண்ணினேன். பிறகு கவிதைக்குப் பதில் கவிதையாக இருப்பது ஒப்பாகும் என்று ‘சிசு வதைப் படலம் ‘ என்னும் தலைப்பில் எனது கவிதை ஒன்றை திண்ணைக்கு இவ்வாரம் அனுப்பியுள்ளேன்.

சி. ஜெயபாரதன், கனடா

***

அன்புள்ள ஆசிரியருக்கு,

காஞ்சனா தாமோதரன் எழுதிய ‘சந்திப்பு ‘ கட்டுரையை திண்ணையில் படித்தேன். திருமதி காஞ்சனாவினால் சிக்கலான விஷயங்களை தெளிவாகச் சொல்ல முடிகிறது. போன மாதம் தினமணியில் போருக்குப் பின் என்றொரு இராக் போரை பற்றிய அவர் எழுதிய கட்டுரையும் படித்தேன். அறிவுடன் மனித அன்பையும் சேர்த்து எழுதி சிந்திக்கச் செய்கிறார். காஞ்சனா தாமோதரன் எழுத்தில் ஒரு அமைதி இருக்கிறது. நன்றி வணக்கம்.

K.Mohan

Madurai, Tamil Nadu

***

சென்ற இதழில் `பெண்களை நம்பாதே ‘ என்ற தலைப்பில் ஒரு `கவிதை ‘யை பார்தேன். கவிதை என்ற பெயரில் எந்த கோராமையை வேண்டுமானாலும் வெளுயிடுங்கள், இன்னும் இந்துத்வமாய், பார்பனியம் என்று பலர் நினைக்கும் எந்த கட்டுரையை வேண்டுமானாலும் வெளுயிடுங்கள். இவ்வளவு கேவலமாய் பெண்கள் குறித்து பேசும் அசிங்கத்தை எப்படி வெளுயிடுகிறீர்கள் என்று புரியவில்லை. எதை எதையோ தர்மற்ரதாகவும், பிரசுரிக்க தகாததாகவும் சொன்ன சான்றோர்கள் இதற்க்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டார்கள் என்று தெரியும். செருப்பால் அடித்து கண்டித்திருக்க வேண்டிய இந்த நபருக்கு குறைந்த பட்ச கண்டனம் கூட வரவில்லையெனில் தமிழ் சூழல், பார்டம்பரியம், கலாச்சாரம், வாழ்க்கைமுறை இன்ன பிற அத்தனையும் எத்தனை கேடுகெட்டது என்று புரிந்து கொள்ளலாம். (இதில் சின்ன சின்ன கருப்பன்களுக்கு எத்த்தை பெருமையோ ?)

ரோஸாவசந்த்.

***

ஆசிரியருக்கு,

குடும்பம் என்பதை புனிதப்பசுவாக கருதவேண்டியதில்லை.இலக்குகள் போன்ற கட்டுரைகள் உணர்வுரீதியாகவே பிரச்சினைகளை அணுகுகின்றன, பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற மரபை மீண்டும் வலியுறுத்துகின்றன. பெண்ணியவாதிகள் எழுதியுள்ள நூல்கள், குடும்பம்-சமூகம் குறித்த ஆய்வுகள் இது குறித்து வேறு சில பார்வைகளை முன்வைக்கின்றன.இது குறித்து பின்னர் எழுதுகிறேன்.மேலும் குடும்பம் என்பது சமூக,பொருளாதார மாற்றங்களுக்கு அப்பாற்பட்டது அல்ல, எத்தகைய மாற்றங்கள் தேவை, நாம் முன்னிறுத்தும் மதிப்பீடுகள் என்ன என்பதும் முக்கியம்.

K.ரவி ஸ்ரீநிவாஸ்

***

Series Navigation