பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 6

This entry is part of 34 in the series 20030607_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


குஹாவும்,காட்கிலும் Ecology and Equity in India என்ற நூலையும் எழுதியுள்ளனர்.இவர்கள் எழுதிய இந்த இரண்டு நூல்களும் இந்தியாவின் சூழல் வரலாறு,வளர்ச்சி குறித்து ஒரு ஒட்டுமொத்தமான புரிதலைத் தருகின்றன.

இக்கட்டுரையின் அடுத்த பகுதியில் அதனைப் பற்றி எழுதுகிறேன்.

மலேசிய பிரதமர் மஹாத்தியார் பின் முகமதிற்கு கடிதம் எழுதிய ஒரு பள்ளிச்சிறுவன் தான் மழைக்காடுகளில் உள்ள விலங்குகளை, தான் பெரியவனான பிறகு ஆய்வு செய்ய விரும்புவதாகவும், ஆனால் அவை அழிக்கப்பட்டால் காடுகளும் இரா, பல லட்சக்கணக்கான விலங்குகளும் இரா , ஒரு தனி நபர், மரத்தொழில் அதிபர் இன்னொரு மில்லியன் பவுண்டுகள் அல்லது அதிகமாக பெற இவ்வாறு செய்வது நியாயமா என்று எழுதினான். அதற்கு பதில் அளித்த அவர் பிரிட்டனின் ஊரக பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றி விட்டு காடுகள் வளர்க்கலாம், அவற்றை கரடிகள்,ஒநாய்கள் கொண்டு நிரப்பலாம் என்றும், உன்னை இவ்வாறு எழுதவைத்த பெரியவர்கள் ஆணவம் கொள்ள வேண்டாம், ஒரு நாட்டை எப்படி சிறப்பாக நிர்வகிப்பது என்பது அவர்களுக்கு மட்டும் தெரியும் என எண்ண வேண்டாம் என்று குறிப்பிட்டார்.

இதில் பிரச்சினையை பள்ளி சிறுவன் அணுகிய விததிற்கும்,பிரதமர் அணுகிய விததிற்கும் உள்ள முரண் வெளிப்படை.அவர் நாங்கள் காடுகளை அழிக்க வேண்டாம் என்று நீங்கள், அதாவது, வளர்ச்சியுற்ற நாடுகள் விரும்பினால் எங்களுக்கு ஏற்படும் வருமான இழப்பிற்கு நஷ்டஈடு தர வேண்டும் என்றார். மேலும் பேனான் பழங்குடி மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்கவேண்டும் என்பது எங்கள் கொள்கை, அவர்கள் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கவும், மானுடவியலாளர்கள் ஆய்வு செய்யவும் பயன்படவேண்டியதில்லை. என்றார்.மேலும் ஆஸ்திரேலிய அரசு அந்நாட்டு பழங்குடியினரிடம் நிலங்களை ஒப்படைக்கும் போது, நாங்களும் பேனான் பழங்குடி இனத்தவரிடம் காடுகளை திருப்பிக்கொடுப்போம் என்றார்.

இங்கு பிரச்சினையை தங்கள் கோணத்தில் மட்டும் இரு தரப்பினரும் பார்க்கும் போது இன்னொரு தரப்பின் நியாயம் பற்றி அக்கரை கொள்ளப்படுவதில்லை. மழைக்காடுகள் மனிதகுலத்தின் பொக்கிஷம் என்பது நிராகரிக்கபட்டு வளர்ச்சியுற்ற – வளர்ச்சியடையும் நாடுகளின் அரசியலுக்கான இன்னொரு பிரச்சினையாக மாற்றப்படுகிறது. மலேசிய பிரதமர் எடுத்த நிலைப்பாடினை ஒத்த நிலைபாட்டினை இந்தியாவில் பலர் முன்வைக்கின்றனர்.பழங்குடியினர் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும், முன்னேற்றம் என்பது அவர்களை எட்ட வேண்டுமெனில் அவர்கள் வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட வேண்டும் என்ற வாதமும் புதிதல்ல.

எனவே திட்டங்கள் வெறும் செலவு-பயன் கணக்கீட்டின் அடிப்படையில் நியாப்படுத்தப்படுகின்றன. ஆனால் இதில் உள்ள பல சிக்கல்கள் விவாதிக்கப்படுவதில்லை. உதாரணமாக பல பெரிய அணைக்கட்டுத் திட்டங்களில் மறு வாழ்வு/புனர் நிர்மாணம் குறித்து ஒரு முழுமையான மதிப்பீடு இல்லை. எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்படும், அவர்களுக்கான மாற்று நிலம், நஷ்ட ஈடு போன்றவை குறைவாக மதிப்பிடப்படுகின்றன.அது போல் மூழ்கும்/அழியும் காடுகள், நிலப்பகுதியின் மதிப்பு என்ன என்பது கணக்கில் கொள்ளப்படுவதில்லை (அ) மிக குறைவாக மதிப்பிடப்படுகிறது. இதன் மூலம் திட்டம் பொருளாதார ரீதியாக ஏற்கத் தக்கது என்று ‘நிறுவப்படுகிறது ‘. இந்தியாவில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டப்பின் செய்யப்பட்ட ஆய்வுகள் ஆரம்ப கட்டத்தில் முன்வைக்கப்பட்ட அனுமானங்கள் தவறு என்பது மட்டுமின்றி, செலவிற்கு ஏற்ப பலன்கள் இல்லை என்பதை காட்டியுள்ளன. ஆனால் இன்றும் பெரியத் திட்டங்கள் வளர்ச்சி என்ற ஒரே காரணத்திற்காக நியாப்படுத்தபடுகின்றன.

இந்த சிக்கல் இந்திய அரசு முதலீடு செய்யும் திட்டங்களில் மட்டுமல்ல, உலக வங்கி, வெளிநாட்டு அமைப்புகள் முதலீடு செய்யும் திட்டங்களிலும் உள்ளன. இதற்கு காரணம் வெறும் பொருளாதர கண்ணோட்டம் மட்டுமல்ல, வளர்ச்சி-முன்னேற்றம் குறித்த பார்வையுமாகும். உதாரணமாக கால்நடை மேய்க்கும் நாடோடிகள் திட்டங்களால் பாதிக்கப்படுவது குறித்து யாரும் கவலை கொள்வதில்லை. ஆனால் இந்தியாவில் இப்படி பல சமூகங்கள் இப்படி பாதிக்கபடுவது தொடர்ந்து நிகழும் அவலம்.

சான்றுகள்

Michael R.Dove Academic Relations of Production and CBA, Economic and Political Weekly May 26, 2001 ( www.epw.org.in)

Michael R.Dove Local Dimensions of ‘Global ‘ Environmental Debates : Six Case Studies in A.Kalland, G.Person (Eds) Environmental Movements in Asia, Curzon Press, 1998

Minoti Chakravarti-Kaul Dam a River Why Damn a People – Alpjan Jan-March 2002 (on marginilised pastrolists in Siwalik and Himalayan regions of Punjab and Himachal Pradesh)

Dimitris Stevis, Whose Ecological Justice Strategies Vol 13 No 1 2000 ல் எழுதுகிறார்

‘Problems and solutions are intimately related and it is often the case that problems are framed in ways that fit already adopted solutions.(For instance, economistic cost-benefit accounting leads us into economistic visions of nature). Thus problems/solutions are subject to the same framing processes while their temporal sequence is not as clear-cut ‘

தொடரும்

ravisrinivas@rediffmail.com

Series Navigation