தியானிக்க மூன்று குரங்கு ‘கதைகள் ‘ ?

This entry is part [part not set] of 34 in the series 20030607_Issue

(தொகுப்பு: மண்ணாந்தை)


1967 இல் நான் உளவியல் பட்டதாரி ஆனதும் கார்டனர்களின் மொழி ஆய்வு பரிசோதனைகளில் இணைய விண்ணப்பித்திருந்தேன். ஆனால் நேர்முகத்தேர்வு நன்றாக போகவில்லை. எனக்கு அந்த பணி கிடைப்பது நடக்காது என்று தெரிந்து விட்டது.பேசாமல் ஊருக்கு போய் பிளம்பர் வேலையை செய்யவேண்டியது தான். எனவே குறைந்த பட்சம் கார்டனர்களின் பரிசோதனை சாலையாவது பார்க்கலாம் என கேட்ட போது அவர்களின் வீட்டின் பின்பகுதியை காட்டினர். ஐந்தாயிரம் சதுர அடி கொண்ட அந்த தோட்டத்தில் ஒரு சிறிய வீட்டுத்தன்மை கொண்ட வேன் இருந்தது . அங்கு அனைவருமே மிக மெதுவாகவே பேசினர். சிம்பன்ஸிகளுக்கு மனிதர்களால் ஒலியால் பேசமுடியும் என தெரியாமலிருக்கவே இந்த ஏற்பாடு. பரிசோதனையின் ஒரு பகுதி இது. அந்த இடத்தை நெருங்கிய போது இருவர் ஒரு குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். நான் குழந்தை என்றுதான் நினைத்தேன் ஆனால் அது ஒரு சிம்பன்ஸி- வாஷோ. வாஷோ எங்களை பார்த்ததும் எங்களை நோக்கி ஓடி வந்தாள். எங்களை நெருங்கியதும் யாரும் எதிர்பார்க்காத ஒன்று நடைபெற்றது. அவள் ஆலன் கார்டனரிடம் செல்லவில்லை. மாறாக பாய்ந்து என்னை அரவணைத்துக் கொண்டாள். அவள் கைகள் என் கழுத்தையும் அவள் கால்கள் என் இடுப்பையும் பற்றியிருந்தன. நானும் மெதுவாக ஒரு ஆட்டின் மந்தத்தனத்துடன் அவளை மெதுவாக அரவணைத்தேன். உண்மையில், என் கனவுகள் எல்லாம் நேர்முகத்தேர்வால் உடைபட்டு கிடந்த அச்சமயத்தில் உலகில் வேறெதையும் விட அந்த அரவணைப்பு எனக்கு தேவையாயிருந்தது.

அன்று வாஷோ ஏன் என்னை அரவணைத்தாள் என்று இன்னமும் அறியேன். ஆனால் அவளுடன் பின்னர் நான் செலவழித்த ஆண்டுகளில் அவளுக்கு மற்றவர்களின் உள்ளுணர்ச்சிகளை புரிந்து கொண்டு ஆறுதல் அளிப்பதில் இருக்கும் அசாதாரண புலனறிவை நான் பல முறை கண்டுள்ளேன். ஆனாலும் முன்பின் அறியாத ஒருவரின் கரங்களுக்கு அவள் தாவுவதை நான் பின் என்றும் காணவில்லை. சில நாட்களுக்கு பின்

ஆலன் கார்டனரிடமிருந்து ஆய்வக உதவியாளராக நேரும்படி அழைப்பு வந்த போது உண்மையில் என்னை தேர்ந்தெடுத்தது யார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இரண்டு வயது சிம்பன்ஸி பெண்குழந்தை ஒன்றின் புண்ணியத்தில் நான் பிளம்பராகாமல் ஒரு உளவியலாளராக போகிறேன்.

(ரோஜர் பாட்ஸின் ‘ Next of kin ‘ எனும் நூலிலிருந்து)

திரு.ரிக் ஸ்வேப் தன் குடும்பத்துடன் வருடத்தில் ஒருமுறை டெட்ராயிடின் விலங்கியல் பூங்காவை காண வருவார். ஒருநாள் அவர் சிம்பன்ஸிகளை அவற்றின் பெரு வெளி அடைப்பின் அப்புறத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த போது இரண்டு வளர்ந்த ஆண் சிம்பன்ஸிகள் சண்டையிட ஆரம்பித்தனர். ஜோஜோ எனும் சிம்பன்ஸி புதிதாக அங்கு கொண்டுவரப்பட்ட மற்றொரு வலிமையான சிம்பன்ஸியால் தாக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டான். அதனையடுத்து அச்சம் கொண்ட ஜோஜோ அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியில் ஏறி அதனை சுற்றி வெட்டப்படிருந்த அகழி போன்ற அமைப்பிலுள்ள நீரினுள் விழுந்தான்.சிம்பன்ஸிகளுக்கு பொதுவாக நீந்த முடியாதென்பதால் அவன் விரைவில் மூழ்க ஆரம்பித்தான். ஆழமான அந்த நீர் நிலைக்குள் அவன் மூழ்கி இறக்கப்போவதை அங்கு வந்திருந்தவர்கள் அனைவருமே மிகுந்த அச்ச வேதனையுடன் பார்க்கலாயினர். அச்சமயத்தில் ரிக் தடுப்பை, அங்கு கூடியிருந்தவர்களின் ஆபத்து குறித்த கூச்சலையும் மீறி நீரில் குதித்தார். சிம்பன்ஸியையும் தூக்கி கொண்டு கரையேறினார். தடுப்புச்சுவருக்கு அப்பால் ஜோஜோவை அப்படியே தாங்கியபடி இருந்தார். ஏனெனில் விட்டுவிட்டால் அவன் மீண்டும் நீரில் விழுந்துவிடும் அபாயம் உண்டென்பதால். ஜோஜோ சில தள்ளாடும் அடிகளை எடுத்து வைத்து நிலத்தில் மயங்கி விழுந்த பின்னர்தான் அவர் திரும்பி வந்தார்.விலங்கியல் பூங்கா இயக்குநர் பின்னர் ரிக்கிடம் கேட்டார், ‘நீங்கள் நிச்சயமாக ஒரு அரிய வீர செயலை செய்துள்ளீர்கள். ஆனால் அது எவ்வளவு ஆபத்தானது. அச்செயலை செய்ய உங்களை செய்ய தூண்டியது எது ? ‘ ரிக் கூறினார், ‘ நான் அவன் கண்களை பார்த்த போது ஒரு மானுட கண்களை பார்ப்பதாக உணர்ந்தேன். என்னைக் காப்பாற்ற மாட்டாயா எனும் குரல் அவற்றில் ஒலிப்பதை நான் உணர்ந்தேன். ‘ ரிக் தன் உயிரை பணயம் வைத்து ஒரு சிம்பன்ஸியின் உயிரை காப்பாற்றினார். மனிதனல்லா ஒரு உயிர் மனிதன் உணர்ந்து கொள்ளும் ஒரு செய்தியை அனுப்பியதை அவர் புரிந்து கொண்டதன் விளைவு அவரது தந்நலமற்ற செயல். நாம் அனைவரும் இணைந்து செய்ய வேண்டிய ஒரு விஷயம் இது.

(ஜேன் குடால், ‘சிம்பன்ஸிகளிடமிருந்து படித்தல்: மனிதர்கள் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு செய்தி ‘, அமெரிக்க அறிவியல் பரப்புதல் அமைப்பின் ‘Science Magazine ‘ னின் ‘அறிவியலும் சமூகமும் ‘ கட்டுரை தொகுப்புக்களிலிருந்து.)

விலங்குகளை அடிமைப்படுத்தவும், துடிக்க துடிக்க ஆராய்ச்சிக்கு உட்படுத்தவும், விதையறுக்கவும் விரும்பும் மனிதர்களுக்கு ஒரு நியாயம் கற்பித்தல் தேவைபடுகிறது. அவர்கள் விலங்குகள் வலியை உணர்வதில்லை என தங்களுக்கு தாங்களே நியாயம் கற்பித்துக் கொள்கின்றனர்.மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே மிகத் தெளிவான எல்லை கோடு அவசியம். அப்போதுதான் எவ்வித மன உறுத்தலும் இன்றி நாம் மற்ற விலங்குகளை உண்ணவும் உடுக்கவும் முடியும். மனிதர்கள் மட்டுமே துன்பம் அனுபவிக்கிறார்கள் என்பது ஒரு பொய். மற்ற விலங்குகள் நாம் நினைப்பதைக் காட்டிலும் நம்மை ஒத்தவை.

ஒரு கூண்டில் மகக்கூ குரங்கு அடைக்கப்பட்டிருக்கிறது. அதனோடு ஒட்டி மற்றொரு கூண்டில் இந்த குரங்குடன் இரத்த சம்பந்தம் அற்ற மற்றொரு மகக்கூ குரங்கு அடைக்கப்பட்டிருக்கிறது.இதனால் அதை பார்க்க முடியும், அதனால் இதை பார்க்க முடியாது என்கிற மாதிரியான கண்ணாடி தடுப்பு. இந்த குரங்கு ஒரு விசையை இழுத்தால்தான் அதற்கு உணவு கிடைக்கும்.ஆனால் அந்த விசை இழுக்கப்பட்டவுடன் அந்த மற்றொரு குரங்கு மின் அதிர்வு ஏற்பட்டு வலியால் துடிக்கும். தன்னோடு இரத்த சம்பந்தமில்லாத மற்ற குரங்கினை வலியால் துடிக்க வைக்கும் விசையினை இழுக்காவிட்டால் இந்த குரங்குக்கு உணவு கிடைக்காது. இந்த பரிசோதனை நடத்தப்பட்ட போது குரங்குகள் (87%) மின்விசையினை இழுத்து மற்றொருஉயிரை துன்புறுத்துவதை காட்டிலும் தங்கள் உணவினை துறந்தன. ஒரு குரங்கு விசையினை இழுக்காமல் இரு வாரங்கள் வரை பட்டினி கிடந்தது. இந்த பரிசோதனையை வடிவமைத்த அறிவியலாளர்களுடன் ஒப்பிடுகையில் அடுத்த உயிரை துன்புறுத்துவதற்கு பதில் பட்டினியாக இருப்பதை தேர்ந்தெடுத்த குரங்குகளின் மதிப்பீடுகள் மேன்மையானவை என்பதை மறுக்க முடியாது.இந்த குரங்குகள் எந்த ஞாயிறு வகுப்புக்கும் போய் பத்துக்கட்டளைகளை கற்கவில்லை….மகக்கூ குரங்கு அறிவியலாளர்கள் இவ்வாறு ஒரு பரிசோதனையை வடிவமைத்து மானுடர்கள் மீது நடத்தினால் மானுட இனம் எந்த அளவு தேறும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் மானுட வரலாற்றில் பிறருக்காக தம்மை தியாகம் செய்தவர்களை நாம் பெரிதும் நம் நினைவில் போற்றுகிறோம். ஆனால் அத்தகைய ஒவ்வொரு தியாகிக்கும், மிகப் பல மானுடர்கள் பிறர் துயர் போக்க சுண்டு விரலை கூட தூக்கவில்லை என்பதும் ஒரு உண்மை.

(கார்ல்சாகன் மற்றும் ஆன் தூரியன் எழுதிய ‘Shadows of Forgotten Ancestors ‘ எனும் நூலிலிருந்து)

[குழந்தை சிம்பன்ஸிகளை பிடிப்பது மிகவும் எளிது என்கிறார்கள். மரங்களில் தன் அன்னையரினை பற்றிய படி இவை இருக்கும். வேட்டையாடுவோர் மரங்களின் உயரங்களில் இருக்கும் அன்னை சிம்பன்ஸியை சுடுவர். சுடப்பட்டு கீழே விழும் அன்னை, அந்த வலியிலும் தன்னை ஒரு சுற்று சுற்றி தன் முதுகு தரையில் படும்படி வீழ்வாள். இவ்விதத்தில் குழந்தை சிம்பன்ஸி கீழே தரையில் மோதி உயிர் இழப்பதை அவள் தடுத்து அதற்கு பதிலாக குண்டடி வேதனையுடன், தரையில் வேகத்துடன் மோதி தன் முதுகு தண்டு உடையும் வேதனையையும் வாங்கிக் கொண்டு இறக்கிறாள். சிம்பன்ஸி குழந்தைக்கு எதுவும் ஆகாது. ஆனால் அநாதையாகிவிட்ட அக்குழந்தை விரைவில் அமெரிக்க மருத்துவ பரிசோதனை சாலை எதிலாவது ஆராய்ச்சியின் பேரில் சித்திரவதை பட்டு அலறிச் சாகும். ‘அனைத்து உயிர்களும் நமக்காகவே ஆண்டவனால் படைக்கப்பட்டவை. அவற்றின் வாழ்வுக்கும் சாவுக்கும் மேல் அதிகாரம், ஆண்டவனால் நமக்கு அளிக்கப்பட்டது ‘ எனும் சித்தாந்த வழி வந்த வாழ்க்கை முறையை முன்னேற்றம் என நினைக்கும் நாகரிக மானுடர்கள் அல்லவா நாம். ‘அனைத்து உயிர்களும் இன்புற்றிருக்க ‘ என தன் தினசரி பிரார்த்தனையை கூறும் பிற்போக்குத்தனத்திலிருந்தும்

பிரபஞ்சமெங்கும் ஜீவத்துடிப்புடன் விளங்கும் உண்மைகளை யானையாகவும், குரங்காகவும், பசுவாகவும் உணர்ந்து வணக்கும் பகுத்தறிவற்ற காட்டுமிராண்டி கலாச்சாரத்திலிருந்தும், விலகி, பொறாமை பிடித்த தந்தை இறைவனின் பிம்பமாக படைக்கப்பட்டதாக (அல்லது விலங்குகளால் தொடமுடியாத வரலாற்று முரண்பாட்டியங்கு விசைகளால் உருவாக்கப்பட்டதாக) நம்மை நாமே கருதும் நமக்கு அற்ப விலங்குத்தாயின் தியாகம் …மன்னிக்கவும்..instinct பற்றி கவலைப்படுவதே அற்பமான விஷயமல்லவா!]

infidel_hindu@rediffmail.com

Series Navigation

மண்ணாந்தை

மண்ணாந்தை