என்னுடைய சாராம்சவாதமும், ஸ்ரீநிவாஸ் அவர்களது மறுவாசிப்பும்

This entry is part [part not set] of 37 in the series 20030530_Issue

சின்னக்கருப்பன்


என்னுடைய எழுத்து சாராம்சவாதம் (essentialism) என்று தலைப்பிட்டுவிட்டு, அது குப்பை என்று ஒதுக்கிவிட்டால் எனக்கொன்றும் நஷ்டமில்லை. உண்மையில் ரவி ஸ்ரீநிவாஸ் குறிப்பிடும் புத்தகங்களில் சிலவற்றைத்தவிர மற்றவற்றை நான் படிக்கவில்லை. படிக்காதது எனக்கு நஷ்டம் என்ற கருத்தும் எனக்கில்லை.

மேற்குலகில் கிரிஸ்தவம் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த சில நூற்றாண்டுகளுக்குள்ளாகவே அங்கு இருக்கும் பெரும்பான்மைக் காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. மீதக்காடுகள் தொழில்முன்னேற்றம் ஏற்பட்டவுடன் அழிக்கப்பட்டன. ஐரோப்பாவில் இயற்கை காடுகளும் இல்லை. வன விலங்குகளும் இல்லை. உலகத்து கண்டங்களிலேயே இயற்கை காடுகளும், காட்டு விலங்குகளும் இல்லாத ஒரே கண்டம் ஐரோப்பாதான். அமெரிக்காவின் காடுகளையும் இயற்கை நிலங்களையும் காப்பாற்றியதற்கு இந்திய சிந்தனைத்தாக்கம் பெரும் காரணம் என்று சொன்னால், ரவி ஸ்ரீநிவாஸ் என்னை அடிக்க வரலாம். தோரோ வால்டன் குளத்துக்குப் போகும்போது எடுத்துச் சென்ற புத்தகம் என்ன என்று படித்துப்பாருங்கள். தமிழில் இந்த புத்தகம் இல்லை அந்தப் புத்தகம் இல்லை என்று சொல்வது வேண்டுமானால், புத்தகங்களையே வாழ்க்கையாக கொண்ட அறிவுஜீவிகளுக்கு ஒரு வாதமாக இருக்கலாம். வாழ்க்கையையே புத்தகமாகக் கொண்ட தமிழ் மக்களுக்கு அப்படிப்பட்ட புத்தகங்கள் இல்லாதது ஒரு குறை என்று இதுவரை இல்லை. நகர்மயமாகும் இந்தியாவில் ஒருவேளை புத்தகத்தின் தேவை இன்று வந்திருக்கலாம். ஆனால், பாரம்பரிய சிந்தனையையும், பாரம்பரிய அறிவையும் எழுதி வைப்பது என்பது இந்துத்வ செயல்பாடாக பார்த்தால், என்ன செய்யமுடியும். பாரம்பரியச் சிந்தனை என்று ஒன்று இருக்கிறது என்று எழுதினாலே , என்னை எஸ்ஸென்ஸியலிஸ்ட் என்று வைகிறார்.

ஆனால், நூறு கோடி மக்கள் இருக்கும் இந்தியாவில், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சிவிலைசேஷனாக வாழ்ந்துவரும் இந்தியாவில் இன்னமும் காடுகள் இருக்கின்றன. இன்னும் வன விலங்குகள் இருக்கின்றன. மகாபாரதத்தில் புலிகளை கொல்வது பற்றிய குறிப்பை தேடிப்பிடித்து கொடுப்பது இருக்கட்டும். இந்தியாவில் புலிகளை தேடித்தேடி அழித்தது யார் ? காலனியாதிக்கத்தின் போது இங்கிலாந்து கனவான்கள் காக்கி உடை அணிந்து கொன்ற புலிகளின் மீது கால்வைத்து போஸ் கொடுப்பதற்காகத்தானே அத்தனை புலிகளும் அழிக்கப்பட்டன ?

அமெரிக்காவில் வாழும் என் நண்பர் எனக்கு எழுதிய கடிதத்தில், அவரது தாயார் செய்த சிலவற்றை குறிப்பிட்டிருந்தார். சீன உணவு விடுதியிலிருந்து உணவு வாங்கிக்கொண்டு வந்த பிளாஸ்டிக் டப்பாவை சுத்தம் செய்து வைத்தாராம். அதனை அதெல்லாம் சுத்தம் செய்யக்கூடாது தூக்கி எறி என்று மகன் சொன்னதற்கு தாயார் திட்டினாராம். மீந்த உணவை குப்பைக்கூடையில் கொட்டியதற்கு ஒரு திட்டு. சுத்தமாகச் சாப்பிடு இல்லையென்றால் மீந்ததை நாய் காக்காவுக்குப் போடு, இப்படி குப்பையில் போட்டு வீணடிக்காதே என்று சொன்னாராம். காலையில் எழுந்ததும் வீட்டுக்கு வெளியே மாவுக்கோலம் போட்டிருக்கிறார், மகன் திட்டியிருக்கிறார். (டேய் எறும்புங்க சாப்பிடும்டா, இங்க எறும்பே கிடையாதும்மா). இவர் ரவி ஸ்ரீநிவாஸ் குறிப்பிட்ட புத்தகங்களைப் படித்துத்தான் இந்த அறிவைப் பெற்றாரா அல்லது பாரம்பரியம் தொட்டு வந்த கருத்துக்களா ? இல்லை நவகால நாகரிகத்துக்கு உதவாத கிராமத்து பட்டிக்காட்டுத்தனமா ? கிரிஸ்தவ போதனையை மறுவாசிப்பு செய்த புத்தகங்களை படித்து பெற்ற அறிவா ?

ரவி ஸ்ரீநிவாஸ் அவர்கள் மார்க்ஸியத்துக்கும் கிரிஸ்தவத்துக்கும் வால் பிடிக்கட்டும். எனக்குப் பிரச்னை இல்லை. மார்க்ஸியத்தை இப்படி மறுவாசிப்பு செய்து இவர் எழுதிவிட்டார். கிரிஸ்தவத்தை மறுவாசிப்பு செய்து இன்னார் இப்படி எழுதிவிட்டார் என்றும் இருக்கட்டும். புத்தகங்களையும் விவாதக்களன்களையும் விட்டு சற்றே வெளியே நடைமுறைக்கு வாருங்கள். யூஸ் அண்ட் த்ரோ கலாச்சாரம் அல்லவா இன்று கிரிஸ்தவ அமெரிக்கக் கலாச்சாரமாக உலகெங்கும் பரப்பப்பட்டு வருகிறது. கிரிஸ்தவ மிஷனரிகள் அல்லவா பழங்குடியினர் கலாச்சார அழிப்பில் முன்னணியில் நின்று , பசிபிக் தீவு கலாச்சாரங்களிலிருந்து, தாய்லாந்து பழங்குடியினர் கலாச்சாரத்திலிருந்து, தென்னமெரிக்க பழங்குடியினர் கலாச்சார அழிவுவரை செய்து கொண்டு இருக்கிறார்கள். (கூடவே பழங்குடியினர் படுகொலையும்.. ரவி ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு வேண்டுமென்றால், மேற்கோள்களையும் புத்தகங்களையும் குறிப்புக்களையும் தருகிறேன்)

மேற்கே இப்படித்தான். மேற்கு மாறாது என்ற கருதுகோள் என்னிடம் இல்லை. மேற்கு இந்துமதத்தின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு இந்துக்களாக மாறும்போது அதற்கும் விடிவுகாலம் உண்டு.

இன்றைய சூழல்வாதத்தின் சிந்தனை புது யுகம் என்று அழைக்கப்படும் – New age – கீழைச் சிந்தனையின் தாக்கத்திலிருந்து எழுந்தது. ஆனால் எல்லா விதத்திலும் காலாவதியாகிப் போன மார்ஸிய சிந்தனையை, எப்படியாவது தொடர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்ற பிரமையை உருவாக்கி நிலைப்படுத்த எண்ணிய அறிவு ஜீவிகள் சூழலியல் சிந்தனையாளர்களையும் இடதுசாரி என்று அழைக்க முற்பட்டனர். இதற்கு ஆதரவாக அங்கங்கே சில மேற்கோள்களை உதிர்த்து – இல்லாததை இட்டுக் கட்டி, இருப்பது போல் பிரமையை ஏற்படுத்துவதற்கு மறு பெயரான மறு வாசிப்புச் செய்து – கீழைச் சிந்தனை மரபின் தாக்கத்தை ஒப்புக்கொள்ளாமல் செய்திருக்கும் நகாசு வேலைதான் இந்த மெத்தப்படித்தவர்களின் புத்தகங்கள் என்றால் மிகையில்லை. மறு வாசிப்புக்கு என்ன அவசியம் வந்தது ? புதிய சிந்தனையே புதிய தேவைகளுக்கு ஏற்ப எழும் புதிய வரவு என்று சொல்வதில் என்ன தயக்கம் ? யூதக் கிறுஸ்தவ மரபில் இல்லாதது இல்லை என்று ஸ்தாபிக்கும் அவசியம் எப்படி எதனால் வந்தது ? அதற்கு ஏன் ரவி சீனிவாஸ் போன்றவர்கள் சப்பைக் கட்டு கட்டி, இந்து பாரம்பரியத்தை நிராகரிக்க வேண்டும் ?

கிருஸ்துவக் கோயில்களின் அமைப்பையும், இந்துக் கோயில்களின் அமைப்பையும் பார்த்தாலே இருவேறு மரபின் வித்தியாசங்கள் தெள்ளத் தெளிவாகத் தெரியும் போது மறு வாசிப்பினால் என்ன நிறுவப் போகிறோம் ?

***

karuppanchinna@yahoo.com

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்