கைலாஷ்- மானசரோவர் யாத்திரை – சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பக்தர்கள் வழங்கும் ஒளி-ஒலிப் பேழை.

This entry is part [part not set] of 37 in the series 20030530_Issue

பாரதிராமன்.


கைலாஷ்- மானசரோவர் யாத்திரை – சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பக்தர்கள் வழங்கும் ஒளி-ஒலிப் பேழை.

(பேனசானிக் ஆண்டி ஃபங்கஸ் டிரீட்மெண்ட் நாடாவில் பதிவு செய்தது.) விலை. ரூ. 300/=

உடலையே தேவாலயமாகப் போற்றுபவர்கள் நாம். எனவே உடற் தூய்மையைக் காப்பாற்ற நீராடல், நல்லாடை, புறச்சின்னங்கள் பூணுதல் போன்றவற்றில் கவனம் செலுத்துகிறோம். தூய்மையான உடலில் தெய்வம் உறங்கவேண்டி உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருக்க விரும்புகிறோம். அதற்காக தருமவழிச் சிந்தனைகள்,பிரார்த்தனை,பிறர்பால் அன்பு ஆகியவற்றில் மனதை ஈடுபடுத்துகிறோம். ஆனால் இன்றைய இயந்திர உலகத்தில், அன்றாட உளைச்சல்களின் நடுவே இரண்டையும் ஒருசேரப் பேணுவது மிகவும் கடினமாக உள்ளதைப் பார்க்கிறோம். எனவேதான் நம் முன்னோர்கள் தலயாத்திரைகளை முக்கியப் படுத்தியிருக்கிறார்கள். தினசரி விவகாரங்களின் கடுமையிலிருந்து நம்மை விடுவித்துக்கொண்டு வேற்றுத்தலங்களுக்குச் சென்று தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டுத் திரும்புவதை ஒரு கடமையாகவே வைத்த ‘ர்கள். காசியிலிருந்து ராமேஸ்வரம் வருவதும், கன்னியாகுமரியிலிருந்து கேதார்நாத் செல்வதும் உள்ளத்தையும் உடலையும் செம்மைப் படுத்தவே என்று சொல்லாமல் சொன்னார்கள். இந்து மதம் மட்டுமல்ல, மற்ற எல்லா சமயங்களுமே யாத்திரைகளின் அவசியத்தையும் சிறப்பையும் வலியுறுத்துகின்றன.

யாத்திரைகளில் மிகக் கடினமானது சிவபிரான் உறையும் கயிலாய யாத்திரையே. சுவாமி கமலாத்மானந்தர் தலைமையில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் பக்தர்கள் இருபதுபேர் அடங்கிய குழு 14-5- ’98 அன்று சென்னையிலிருந்து கிளம்பி 24-6- ’98 அன்று மானசரோவர்-கைலாஷ் யாத்திரையை வெற்றியுடன் முடித்துத் திரும்பி வந்ததை நேரடியாகப் படம் பிடித்து எல்லோருக்கும் பயன் படும்படியாகச் செய்திருப்பது பாராட்டுக்குரியது.

அக்குழுவினரோடு பாட்னா எக்ஸ்பிரஸில் கிளம்பி நாமும் மொகல்சராயில் இறங்கி ஜீப் மூலம் காசியை அடைகிறோம். நம் பின்னணியில் எஸ்.பி.பி போன்றவர்கள் தெய்வீகப் பாடல்களை இசைத்துக் கொண்டுவருகிறார்கள். கங்கைக் கரை கேதார்நாத் கோயிலில் சுவாமிகளின் கைகளாலொரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்வித்துவிட்டு ஆராதிக்கிறோம். புழு பூச்சிகள் முதற்கொண்டு எல்லா மத, இன ஜீவராசிகளுக்கும் முக்தி தரும் காசியை வணங்கிவிட்டு நேபாளத்தலைநகர் காட்மாண்டுவுக்கு விமானப் பயணம் மேற்கொள்கிறோம். பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் பசுபதிநாதர், தட்சிணகாளி ஆகியோரை வணங்கிவிட்டு, நேபாளத்தின் அடையாளமும் பகவான் புத்தர் நேரில் தரிசித்ததுமான சுயம்புநாத் புத்தர் கோயிலையும், பின்னர் நீலகாந்த் விஷ்ணு கோயிலையும் தரிசித்துவிட்டு யாத்திரை திரிசூலை ஆற்றை படகுகள் மூலம் கடந்து சீன எல்லையான யாங்மூ வை அடைகிறது.வழியில்தான் எத்தனை அற்புதக் காட்சிகள்!

பெரியதும் சிறியதுமான நீர்வீழ்ச்சிகள் குளிர்ந்த நீரை, சிவனது சிரத்திலிருந்து வீழும் கங்கையைப்போல, வாரிவழங்கிகொண்டு வழிநெடுகிலும் காணப்படுகின்றன. பாறைகளின் மீது தேனீக்கள் கூடு கட்டியிருக்கும் விந்தையும் காணக்கிடைக்கிறது.

பன்னாட்டு எல்லை என்பதால் இங்கே பாஸ்போர்ட் போன்ற சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே பயணம் தொடர அனுமதிக்கப்படும். இங்கிருந்து 12000 அடி உயரத்திலுள்ள நியாலம் நோக்கி ஜீப்புகளில் பயணப்பட்டு பிகுட்ஸோ வை அடைகிறது யாத்திரை கோஷ்டி. கோமலாங்கா மலைத்தொடர் வழியே -36முதல் -50 டிகிரி வரையிலான பனிக்காற்றின் ஊடாகப் பயணித்து பிரம்மபுத்ரா நதியைக் கடக்கிறோம். இங்கே சில வண்டிகள் ஆற்றில் சிக்கி மீண்டுவர யாத்திரை சிறிது தடைப்படுகிறது, முன்னர் திரிசூலி ஆற்றை அடையுமுன் பாதைகளில் ஏற்பட்ட பனிச்சரிவுகளால் தாமதப்பட்டதைப்போல.

பர்யாங்க் என்ற இடத்தில் மானசரோவர் தரிசனம் கிட்டுகிறது. அங்கே திபேத்தியர்களின் பிரார்த்தனைக் கொடிகள் ஏராளமாகக் கட்டப்பட்டுள்ளன. 14930 அடி உயரத்தில் மானசரோவர் கரையிலுள்ள ஹோரே யிலிருந்து 50 கி.மீ. தூரத்தில் கயிலாயம் வெள்ளிப் பனிமலையாகத் தென்படுகிறது.

மானசரோவர் கடல் போல விரிந்து கிடக்கிறது அதில் நீராடினாலே பிறவி நீங்கி முக்தி கிடைத்துவிடும் என்று பல மத நூல்களும் கூறுகின்றன. 32 கி. மீ. சுற்றளவுள்ள மானசரோவரைச் சுற்றிவருவதை பரிக்ரமா என்கிறார்கள். நடக்க முடியாதவர்கள் குதிரைமேல் ஏறிச் சுற்றுகிறார்கள்.பிரம்மாவின் மனதிலிருந்து உண்டானது என்று கருதப்படும் மானசரோவர் அருகில் உள்ள மாந்தாதா மலை விநாயகரும் முருகனும் அவதரித்த இடமாகும்.இங்கு சுவாமி கமலாத்மானந்தர் தன் குழுவினரோடு சேர்ந்து ஹோமம் ஒன்று செய்கிறார்.

முட்டை வடிவிலான மானசரோவர் ஆவுடையார் போன்றதென்றும், கைலாயம் லிங்கம் போன்றதென்றும், இரண்டும் சேர்ந்து சிவலிங்கவடிவம் என்றும் கருதப்படுகிறது. மானசரோவர் தேவி உமையின் வடிவம் என்றும் கூறப்படுவதுண்டு.

ஜெய்தி மானசரோவர் என்ற இடத்தில் மூதாதையர்களை வழிபடுவது விசேஷமாகும். 15000 அடிக்குமேல் உயரமுள்ள அந்த இடத்தில் பறவைகளைப் பார்த்தது அதிசயமூட்டுகிறது. ஒரு வேளை பித்ருக்கள்தான் தமக்களிக்கப்படும் கடன்களை ஏற்றுக்கொண்டு நம்மை ஆசீர்வதிக்க வந்திருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ராட்சஸ்தாலி (ராவணன் ஏரி), வென்னீர் ஊற்றுகள் பொங்கும் சூகொம்பா புத்தர் கோயிலைத் தரிசித்துவிட்டு, மானசரோவரின் ஒரு பகுதியான கங்காசூ வில் மாயாதேவியின் அருளையும் வேண்டிப்பெற்று, கைலாயத்தின் வாயிலுக்கு இட்டுச்செல்லும் 17000 அடி உயரத்திலிருக்கும் தார்ச்சன்என்ற ஊரை அடைகிறோம். இங்கிருந்து கைலாயத்தின் மிக நெருங்கிய இடமான அஷ்டபத் என்ற இடத்துக்கு வருகிறோம். இங்குதான் முதல் ஜைன தீர்த்தங்கரரான ரிஷபதேவர் முக்தி பெற்றார். அஷ்டபத் போகும் வழியிலுள்ள பல குகைகளில் பெளத்தத் துறவிகள் பலர் இன்றும் தவமிருந்து வருவதாக அறிகிறோம்.

அஷ்டபத் திலிருந்து கைலாயமலையின் முன்னே, சிவலிங்கத்தின் எதிரே நந்தி இருப்பதைப் போல, நந்திமலை அமைந்திருப்பதைப் பார்க்கிறோம். தீர்த்தபுரி என்ற இடத்தில் புத்த கோயிலைத் தரிசித்துவிட்டு தேவர்களின் பள்ளத்தாக்கு (Valley of Gods) என்றழைக்கப்படும் அழகு கொழிக்கும் இடத்திலிருந்து மேகம் சூழ்ந்த கைலாய மலையின் தரிசனம் புல்லரிக்கவைக்கின்றது. மனித சரீரம் தேவ சரீரமாக மாறும் இடம் தேவர்கள் பள்ளத்தாக்கு என்பர். அது உண்மைதான். தீர்த்தபுரியில் பஸ்மாசுரன் சம்பந்தப்பட்ட இடங்களைப் பார்த்துவிட்டு சுவாமிகள் ஹோமம் ஒன்றைச்செய்கிறார். பின்னர் கைலாயப் பிரதட்சிணம் தொடங்குகிறது. யமத்வார் வழியாக நடந்து, அதிசய நீர்வீழ்ச்சிகளைக் கடந்து, பரிக்ரமத்தை முடிக்க மூன்று நாட்களாகிறது. கைலாயம் சிதம்பரம் நடராஜர் கோயிலை நினைவூட்டு வதாக உள்ளது; அல்ல,இப்படிச் சொல்வதே -பாருத்தமாகும்: சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரம் கைலாயக் கிரியை நிகர்க்கும் வண்ணம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மேற்கு முக, வடக்கு முக லிங்க தரிசனங்களை முடித்துக்கொண்டு திரபுக் என்ற இடத்தை குழு அடைகிறது. இங்கு மீண்டும் ஹோமம் ஒன்று வளர்க்கப்படுகிறது. இரண்டு நாட்கள் இங்கே தங்கி சிவஸ்தல் என்ற இடத்தையும் தரிசிக்கிறது யாத்திரை கோஷ்டி. இதுதான் ராவணன் கைலாய மலையைத் தூக்க முயன்ற இடம் என்று கூறுகிறார்கள்.இவ்விடத்தில் திபேத்தியர்கள் தங்களிடமுள்ள பழைய பொருட்களை விட்டுச் செல்வது வழக்கம். மேலும் வக்ர வாராஹி தெய்வம் இங்குள்ளதாகவும் அவர்கள் நம்புகிறார்கள். டோல்மாபாஸ், பார்வதி தேவியாகவே கருதி வழிபடப்படும் தாராதேவிபீடம், மிக அதிக உயரத்தில் உள்ளதான பச்சைவண்ண நீர் கொண்ட கெளரிகுண்டம், ஹயக்ரீவமலை ஆகியவைகளைத் தரிசித்துவிட்டு இரண்டாம் நாள் முடிவில் ஜூதுல்புக் (Zutrulpuk) போய்ச் சேர்கிறோம். அங்கிருந்து பரிக்ரமா தொடர்ந்து மீண்டும் தார்ச்சனை வந்தடைகிறோம். திபேத்திய பிரார்த்தனைக் கொடிகள் நம்மை வரவேற்கின்றன. வழியெங்கும் திபேத்தியர்கள், இளைஞர்கள் முதல் வயோதிகர்கள்வரை, சீரான பாதைகளற்று கற்கள் நிறைந்த தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து எழுந்து தொழுது, மீண்டும் சாஷ்டாங்கமாக விழுந்தெழுந்து தொழுதே பரிக்ரமாவை முடிக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு 27 நாட்கள் ஆகிறதாம். அவர்களின் நம்பிக்கையும், ஈடுபாடும், ஆற்றலும் நம்மை வியக்க வைக்கின்றன. அவர்களுடைய நம்பிக்கைக்குச் சற்றும் குறைந்ததல்ல நம் நம்பிக்கையும். என்றாலும் அவர்களுடைய கடும் பிரார்த்தனை முறைகளை நம்மால் உடலளவில் தாங்கிகொள்ள முடியாதென்பதும் உண்மை.

யாத்திரையின் ஆரம்பத்திலும் மானசரோவர் கரையில் ஹோரேயிலும் கைலாஷ்- மானசரோவர் பற்றிய சுவாமி கமலாத்மானந்தரின் விளக்கங்களை நாம் இங்கே நினைவு படுத்திக்கொள்ளலாம். சைவத் திருமுறைகள் எல்லாம் கைலாயத்தைப் பற்றிப் பேசினாலும் அவை நைமிசாரண்யத்தில் சூதமுனிவர் சொன்னதாகவே கூறப்படுகின்றன. பெரிய புராணம் மட்டுமே உபமன்யு முனிவரால் கைலாயத்திலேயே சொல்லப்படுகின்றது. அதன் ஆரம்பமும் முடிவுமே கைலாயந்தான். சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான்பெருமாள் நாயனார்,அவ்வையார், நாவுக்கரசர், வரகுணபாண்டியன் போன்ற சிவனடியார்கள் கைலாய தரிசனம் செய்த வரலாற்றை சுவாமிகள் மிக விளக்கமாகக்கூறுகிறார். காரைக்கால் அம்மையார் பற்றியும் கூறியிருக்கலாம்! கைலாய தரிசனம் இந்து, பெளத்தம்,ஜைனம் ஆகிய மூன்று மதத்தினருக்குமே புனிதமானது. மேருமலையின் ஸ்தூல வடிவமே கைலாயம். யஜுர் வேதத்தின் மத்தியில் உள்ளது ஸ்ரீ சக்ரம்.ஸ்ரீ சக்ரத்தின் மத்தியில் உள்ளது ஓம் நமசிவாய மந்திரம். மெய்ப்பொருளும் வேதங்களின் சாரமுமான அந்நாமத்துக்குரியவனின் வடிவமே கைலாயம். கைலாயத்துக்கு வெளியில்தான் அவனுக்குக் கோயில்கள். கைலாயத்தில் அவனே கோயிலாக இருக்கிறான். கைலாயமே கோயில், கைலாயமே சிவன்.

இத்தகு புனித யாத்திரையை தாங்கள் தரிசித்த இடங்களையும், அனுபவித்த காட்சிகளையும், பரவசப்படுத்திய பிரார்த்தனைத் தலங்களையும் கூடவே அழைத்துச் சென்று காட்டுவதுபோல (வீடியோ) ஒளி- ஒலிக் காட்சிகள் மூலம் நமக்கும் யாத்திரையில் பங்கு பெற்ற உணர்ச்சியை அளித்ததற்கு சுவாமி கமலாத்மானந்தரின் தலைமையிலான ஸ்ரீ ராமகிருஷ்ணமடத்தின் பக்தர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.இமையமலைப் பொய்கையில் மூழ்கி திருவையாறில் எழுந்து திருநாவுக்கரசர் கண்ட கைலாய தரிசனத்தை நினைவூட்டுவதாக அமைந்துள்ளன இவ்வீடியோக் காட்சிகள். அந்த அளவுக்கு மெய் சிலிர்க்கவைப்பனவாகவும், உள்ளத்தை உருக்குவனவாகவும், பக்தி ஊற்றைச் சுரக்கச் செய்வனவாகவும், இறை உணர்வைத் தூண்டுவனவாகவும் அமைந்திருக்கின்றன இக்காட்சிகள். தாம் பெற்ற இன்பம் தம் சூழமும் பெறும் வண்ணம் வீடியோ சாதனங்களை உடன் எடுத்துச் சென்று காட்சிகளைப் படம் பிடித்து, ஆங்காங்கே நின்று விளக்க உரைகளும் தந்து, இக்கடினமான யாத்திரையை மேற்கொள்ள முடியாதவர்களுக்கும் பயன் கிடைக்குமாறு செய்ய உழைத்தவர்களை எப்படிப் பாராட்டுவது ? அவர்களது தொண்டு காலம் கடந்து நிற்கும்.

சுமார் இரண்டரை மணி நேரம் ஓடுகின்ற நாடாவின் இறுதிப் பகுதியில் சில காட்சிகள் சுருக்கமாக மீண்டும் இணைக்கப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக, அல்லது கூடுதலாக, யாத்திரைக்கான ஏற்பாடுகள் செய்வது எப்படி,வழியில் ஏற்படக்கூடிய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் விதம், செலவுக்குத் தேவைபடும் பணம், எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கைகள், மற்றும் பெண்கள் உட்பட யாத்ரீகர்கள் அறியவேண்டிய விஷயங்கள், செளகரியாசெளகரியங்கள் பற்றி விவரித்திருக்கலாம். கைலாயத்தின் மேற்கு, வடக்கு முகங்களைப் பற்றி ப் பேசப்படுகிறதே தவிர மற்ற முக தரிசனங்களைப் பற்றித் தகவல் இல்லை. சில விடியற்காலைக் காட்சிகள் மங்கலாக இருப்பது தவிர்க்க முடியாதது என்றாலும் மானசரோவரிலிருந்து சூரிய உதய, அஸ்தமனக் காட்சிகளையும், அச்சமயங்களிலான கைலாயத்தின் நிறப்பொலிவின் மாற்றங்களையும் படம் பிடித்துக் காட்டியிருக்கலாம். புறக் காட்சிகளோடுகூட பல நிகழ்ச்சிகளின்போது நம் யாத்ரீகரகளின் கலந்து கொள்ளலையும் (உ-ம் மானசரோவர் நீராடல், ஜெய்தி சடங்குகள், பரிக்ரமா) படமெடுத்திருக்கலாம். அவர்களுடைய சுவாரஸ்யமான சிறப்பு அனுபவங்களையும் இணைத்திருக்கலாம்.

மேலும் கைலாய யாத்திரை எல்லா மொழியினர்க்கும் உற்றதே என்பதால் இவ்வீடியோவை மற்ற இந்திய மொழிகளிலும் பதிவு செய்து வழங்கலாம்.

தேவையற்ற பல ஒளி-ஒலிப் பேழைகளுக்காகச் செலவழிப்பதில் ஒரு சிறிய பகுதியை கைலாஷ்-மானசரோவர் யாத்திரை ஒளி-ஒலிப் பேழைக்காக ஒதுக்குவது குடும்பம் முழுவதற்கும் மகிழ்வூட்டுவதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

–பாரதிராமன்.

————————————————————-

Series Navigation

பாரதிராமன்.

பாரதிராமன்.