அரிவாள் சுத்தியலின் முடிவு : மேற்கு வங்காளத் பொருத்தமின்மை

This entry is part [part not set] of 35 in the series 20030518_Issue

செளபிக் சக்ரபர்த்தி, ஆசிரியர் ஸ்டேட்ஸ்மன் பத்திரிக்கை.


வெள்ளிவிழா கொண்டாடும்போது, பெரும்பாலும் எதிர்காலத்தைக் கணிப்பதில் சில நல்ல விஷயங்களை கண்டு சொல்ல முயற்சி செய்வோம். 2002இல் இடது முன்னணி 25 வருடங்களை ஆட்சியில் இருந்து முடித்தபோது பலர் சில நல்ல விஷயங்களைச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் கூட, அப்படிப்பட்ட வெள்ளிவிழா முடிந்து ஒரே வருடத்தில், மேற்குவங்காளம் இந்தியாவுக்கு எதுவும் பங்களிப்புத் தரவொண்ணாமல் ஆகிவிட்டதா என்று கேட்க வேண்டியிருக்கும் என்பதை யோசித்திருக்கக்கூட மாட்டார்கள்.

லெனினிய உபாயங்கள்.

இதற்கு நிறைய அரசியல் பொருளாதார காரணங்கள் இருக்கின்றன. கிராம தேர்தல்களில் வங்காளத்தில் 32 பேர்கள் மாநிலம் முழுவதும் நடந்த வன்முறையில், போல்ஷ்விக் பயங்கரவாத உபாயங்கள் காரணமாக இறந்திருக்கிறார்கள். பஞ்சாயத்துத் தேர்தல்கள் பற்றி சிபிஎம் கட்சியின் ஸ்டாலினிஸ புரிதல் மேற்கு வங்காளத்தை இன்னொரு பீகாராக ஆக்கியிருக்கிறது. பீகார், மேற்கு வங்காளம் தவிர வேறெந்த பெரும் மாநிலங்களிலும் இது போன்று எதிர்கட்சிகளை வழக்கமாக பயமுறுத்தலும், எதிர்கட்சிகளுக்கு எதிரான அரசு வன்முறையும் இல்லை. வகுப்புக்கலவரம் நடந்த குஜராத்தில் நரேந்திர மோடியின் கீழ் பஞ்சாயத்து தேர்தல்களில் எதிர்கட்சிகள் நம்பத்தகுந்த அளவுக்கு ஜெயித்திருக்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். காங்கிரஸ் தன் வெற்றியை பெருமிதமாகக் குஜராத்தில் கொண்டாடியிருக்கிறது. மோடியின் கும்பல்கள் தேர்தல் பிரச்சாரத்தை நடக்கவிடாமல் செய்ததாக யாரும் குற்றம்சாட்டவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.

ஏனெனில், பாஜக, காங்கிரஸ் இரண்டுமே தன்னுடைய மிகவும் மோசமான நடத்தையின் போதுகூட முழு லெனினிய உபாயங்களை எப்போதும் பிரயோகிக்கவில்லை. வங்காள கிராமப்புறங்களில், மற்ற மாநிலங்களில் கற்பனைசெய்து கூட பார்க்கமுடியாத அளவுக்கு, அரசியலும் அரசாங்கமும் பிரிக்கமுடியாத அளவுக்கு சென்றுவிட்டன. மார்க்ஸிஸ்ட் இயந்திரம், கட்சி வேலையை கிராம வாழ்க்கையின் பிரிக்க முடியாத அம்சமாக ஆக்கியிருக்கிறது. மற்ற மாநிலங்களைப்போன்று இந்த அரசியல்மயமாதம் வங்காளத்தில் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் நடப்பதல்ல. இதனால், எதிர்கட்சியினரின் அரசியல் வேலைகள் கிராமங்களில் கடினமானது. அல்லது ஆபத்தானது. அல்லது இரண்டுமே.

1998 பஞ்சாயத்து தேர்தல்களில் பாஜக-திரினாமுல் கூட்டணிக்கு காங்கிரஸ் தொண்டர்கள் ஓரளவுக்கு ஆதரவு அளித்தார்கள். இதனால், 42 சதவீத ஓட்டுக்களை இந்தக் கூட்டணி பெற்றது. இந்த முறை சிபிஎம் எந்தவிதமான தோல்வியையும் சந்திக்க தயாராக இல்லை. அதனால், 30 சதவீத பஞ்சாயத்து தொகுதிகளில் மார்க்ஸிஸ்ட் கட்சி தவிர எதிர்க்கட்சி வேட்பாளர்களே அனுமதிக்கப்படவில்லை. மமதா பானர்ஜியிடம் குறைகள் இல்லாமலில்லை. ஆனால், மேற்கு வங்காளம் தவிர வேறெந்த மாநிலத்திலாவது அவர் போட்டியிட்டிருந்தால், அவர் ஜெயிக்க ஒரு வாய்ப்பு இருந்திருக்கும். ஏனெனில் அவர் தேர்தலில் போட்டியிட நியாயமான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும்.

இந்த தனிப்பட்ட நிலைமை வங்காளத்தின் தேர்தல் சூழலை இந்தியாவின் வேறெந்த மாநிலங்களைப் போலின்றி நியாயமற்றதாக மாற்றிவிட்டது. பாஜகவும் காங்கிரசும் இந்தியாவின் இயற்கையான ஆளும் கட்சிகள். தேசிய அளவிலும் மாநில அளவிலும். பெரும்பாலான பிராந்திய மற்றும் அரைகுறை தேசியக் கட்சிகள் இந்த இரண்டு கட்சிகளுடன் நேராகவோ மறைமுகமாகவோ கூட்டு வைத்திருக்கின்றன. தடி சுற்றும், தெருப்பொறுக்கிகள் மயமாக்கப்பட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் (லல்லு பிரசாத் யாதவ், பீகார்) கூட காங்கிரஸின் ஒரு அரைகுறைக் கூட்டாளி. காங்கிரஸால் லல்லுபிரசாத் யாதவை உதாசீனம் செய்யமுடியாது.

அச்சுறுத்தும் தனிமை

ஆனால், காங்கிரசும் பாஜகவும் தைரியமாக சிபிஎம் கட்சியையும் மேற்கு வங்காளத்தையும் அடுத்த பொதுத்தேர்தலில் உதாசீனம் செய்யலாம். அடுத்த லோக்சபா தேர்தலில், 2004இல், மேற்கு வங்காளத்தில் தேர்தல் நடக்கவில்லை என்றால், புள்ளிவிவரப்படி ஒருவேளை வித்தியாசமாக இருக்கலாம். ஆனால், முடிவு வித்தியாசமாக இருக்காது. காங்கிரஸ் தலைமை தாங்கும் ஒரு கூட்டணியோ அல்லது பாஜகவின் தேசிய ஜனநாயக முன்னணியோ இந்தியா முழுமையில் வெற்றிபெறலாம் அல்லது தோல்வியுறலாம் – மேற்குவங்காளத்தில் போட்டியிடாமலேயே. மேற்குவங்காளத்தில் சிபிஎம் மற்றும் அதன் கூட்டணியின் இதர உதிரிக்கட்சிகள் பெரும் வெற்றி பெறலாம். இது எந்த பெரிய மாநிலத்துக்கும் பொருந்தாது. ஏன் கேரளாவுக்குக் கூட பொருந்தாது. இங்கு சிபிஎம் வலிமையுடன் இருந்தாலும், காங்கிரசும் சமமான வலிமை உடையதாக இருக்கிறது. காஷ்மீர் அப்படி ஒரு தனிமையை அடையவில்லை. பிடிபி காங்கிரஸ் கூட்டணியிலும், அப்துல்லா கட்சி பாஜகவின் கூட்டணியிலும் இருக்கிறது.

தேசிய அரசியலின் பெரும்பான்மை வழிப்போக்குகள் மேற்குவங்காளத்தின் எல்லையோடு நின்றுவிடுகின்றன. இது மையநீரோட்ட இந்தியாவுக்கும் மேற்குவங்காளத்துக்கும் இடையே பெரும் இடைவெளியை உருவாக்கியிருக்கிறது. மேற்குவங்காளத்தின் அரசியல்வாதிகள் டெல்லியில் வினோத ஜந்துக்கள் போலப் பார்க்கப்படுகின்றார்கள். காங்கிரஸ் மையத்தில் ஆட்சி அமைத்தாலும் இது மாறப்போவதில்லை. ஏனெனில், இன்று அமுக்கி வாசிக்கப்படும் காங்கிரஸ்-மார்க்ஸிஸ்ட் விரோதம் இன்னும் கூர்மையடையும்.

சிபிஎம் இதெல்லாம் முக்கியமில்லை என்று வாதிடலாம். மேற்குவங்காளம், அரசியல்ரீதியில் ‘முற்போக்கானது ‘ என்றும், ‘ஜாதி மற்றும் வகுப்புவாத வைரஸ் தொற்றியிருக்கும் ‘ இதர இந்தியாவுக்கு ஒரு பாடம் என்றும் வாதிடலாம். ஏனோ, ‘ஜாதி ‘ மற்றும் ‘வகுப்புவாத ‘ அரசியலைப் பின்பற்றுபவர்கள் தங்களது எதிர்கட்சியினருக்கும், தங்களது விமர்சகர்களுக்கும் நியாயமான தேர்தல் போட்டிகளை அனுமதிக்கிறார்கள். மேற்குவங்காளத்தின் ‘முற்போக்கான ‘ அரசியல், எதிர்க்கட்சி வேலைகளுக்கு எந்த இடமும் கொடுக்காமலிருப்பது, இந்தியாவின் பொருளாதார நவீனப்படுத்தலின் பகுதியாக இருந்திருந்தால் அவ்வளவு முக்கியமான விஷயமாக உறுத்தாமல் இருக்கக் கூடும்.

ஆனால் அங்கும், சிபிஎம் கட்சி ஒரு திகிலான விஷயமாக, மேற்குவங்காளத்தை தனிமைப்படுத்திவிட்டது. பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து காங்கிரசும் பாஜகவும் ஒரு சமரசம் மேற்கொண்டிருபப்து போன்று சிபிஎம் ஏதும் செய்யவில்லை. வியாபாரத்துக்கும் தொழில்வளர்ச்சிக்கும் எவ்வளவு பாதுகாப்பானது இந்த மேற்கு வங்காளம் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால், மேற்குவங்காளம் ஒரு வன்முறை மிகுந்த தொழிற்சங்கத்தின் சொர்க்கபூமி என்பது மட்டும் எல்லோருக்கும் தெரிகிறது.

பொருளாதாரங்கள் தொழிற்துறையையும் சேவைத்துறையையும் கொண்டு தான் பொருளாதாரம் நவீனமுறமுடியும். கல்கத்தாவையும் அதனைச் சுற்றி உள்ள பிராந்தியங்களிலும் எந்தவிதமான தொழில்முன்னேற்றமும் இல்லை. பெரும் கம்பெனிகள் கல்கத்தாவை விட்டு ஓடுவது தினசரி செய்தியாக ஆகிவருகிறது. மேற்குவங்காளத்தின் சராசரி நபர் மின்சக்தி உபயோகம் என்பது குஜராத்தின் சராசரி மின்சக்தி உபயோகத்தில் நாலில் ஒரு பங்கு என்பது யாருக்கும் தெரியாத ஆனால் அதிர்ச்சி அடைய வைக்கக்கூடிய உண்மை. மேற்குவங்காளத்தின் சராசரி மின்சக்தி உபயோகம் தமிழ்நாட்டின் சராசரி நபர் மின்சக்தி உபயோகத்தில் பாதிக்கும் குறைவு. தொழிற்துறை வேலைகளுக்கு நம்பத்தகுந்த ஒரு அடையாள எண் இந்த சக்தி உபயோகம். மற்ற மாநிலங்களுக்கும் மேற்குவங்காளத்துக்கும் இடையே எவ்விதமான பெரும் இடைவெளி இருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது.

தேசிய நெடுஞ்சாலை போடுவதில் மிகவும் மோசமான வேலை பிரச்னைகள் மேற்குவங்காளத்தில் இருக்கும் நெடுஞ்சாலைகளிலேயே இருக்கின்றன. டெல்லியில் ஒரு மேம்பாலம் ஆறுமாதம் தாமதமானால், பத்திரிக்கையாளர்கள் மோசமாக மந்திரிகளையும் அதிகாரிகளையும் குறைகூறி பல பத்திகள் எழுதுகிறார்கள். மேற்குவங்காளத்தில் ஒரு மேம்பாலம் ஆறுமாதம் மட்டுமே தாமதமானால், அரசாங்கமும் பத்திரிக்கைகளும் மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.

சேவைத்துறை தொழில் துறை பரவலாகாத இடங்களில் கூட வளர முடியும். மற்ற மாநகரங்களைவிட கல்கத்தாவின் குழந்தைகளே கணினி என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்பம் கல்கத்தாவில் இல்லை என்பது உண்மை. இது பற்றி கவலைப்படாவிட்டாலும், வேறு எந்த சேவைத்துறை வங்காளத்தில் வேரூன்றியிருக்கிறது ? எதுவுமே இல்லை.

அரசியல் பங்களிப்பும் இல்லை

கல்கத்தாவின் சேவைத்தொழில் பகுதிதான் நகரத்தின் பொருளாதாரத்தின் அடிப்படை. இந்த அடிப்படை ஏழைகள் வேலைசெய்யும் ஸ்வெட்ஷாப் எனப்படும் அடிமைமாதிரி வேலைவாங்கும் இடங்களும், தெருக்களில் இருக்கும் சிறுதொழில்களுமே. இந்த கணக்குக்குள் வராத பொருளாதாரமே, இந்திய நகரங்களிலேயே மிகக்குறைந்த காசு செலவாகும் இடமாக கல்கத்தாவை வைத்திருக்கிறது. இது பொருளாதார ரீதியில் இந்தியாவின் மிக ஏழையான நகரமாகவும் இது கல்கத்தாவை வைத்திருக்கிறது. மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், டூரிஸம், நிதி ஆகியவைகளில் எதிர்காலத்தில் கல்கத்தா முன்னேறலாம். ஆனால் இன்று கல்கத்தா இந்த தொழில்நுட்பங்களில் எங்கிருக்கிறது ? வங்கி யூனியன்கள் தேசமுழுமைக்கும் ஒரு வேலைநிறுத்தத்தை அறிவித்தால், கல்கத்தாவில் மட்டுமே ஏடிஎம் கூட வேலை செய்யாது என்பது திகிலடைய வைக்கும் விஷயமல்லவா ?

ஆகவே, வியாபார தொழில் கட்டுமானத்தில் இந்திய நகரங்களில் முதல் பத்து இடங்களில் கூட கல்கத்தா வரவில்லை என்பது ஆச்சரியமான விஷயம் அல்ல. மேற்கு வங்காளம் இந்தியாவுக்குத் தருவதற்கு பொருளாதார ரீதியில் ஏதும் இல்லை. புதிய தொழில்நுட்பமோ ஏதும் தொழில்துறையோ எதுவுமே வருவதில்லை கல்கத்தாவிற்கு. இங்கு எந்த புதியவிஷயமும் உருவாக்கப்படுவதில்லை, எல்லா புதிய விஷயங்களும் உதாசீனம் செய்யப்படுகின்றன. கூட்டு தேர்தல்முறை ஜனநாயகத்தில் (federal electoral democracy) மத்திய அரசாங்கத்தில் பிரதிநிதிகளை (எம்பி) கொண்டு மத்திய அரசாங்கத்தில் செல்வாக்கை உபயோகப்படுத்துவதும், தேசிய பொருளாதார நோக்கங்களையும் மாநில பொருளாதார நோக்கங்களை சரியான திசையில் அமைப்பதுமே முக்கியமானது. இரண்டு வழிகளிலும் மேற்கு வங்காளம் விளிம்புநிலை மானிலமாக மாறிவருகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், எல்லா பந்த்-களும் வெற்றிகரமாகும் ஒரே இடம் கல்கத்தாதான். சிபிஎம் அதனை ஒரு பாராட்டாகவே எடுத்துக்கொள்ளும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

***

ஸ்டேட்ஸ்மன், மே 13ஆம் தேதி.

Series Navigation

செளபிக் சக்ரபர்த்தி, ஆசிரியர் ஸ்டேட்ஸ்மன் பத்திரிக்கை.

செளபிக் சக்ரபர்த்தி, ஆசிரியர் ஸ்டேட்ஸ்மன் பத்திரிக்கை.