ஒவ்வாத மனிதர் [எழுத்தாளர் கோபிகிருஷ்ணனுக்கு அஞ்சலி ]

This entry is part [part not set] of 35 in the series 20030518_Issue

ஜெயமோகன்


எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் 10.05.03 அன்று சென்னையில் மரணமடைந்தார் . ஐம்பத்துமூன்று வயதானவர். ஏற்கனவே பலவகையான உடல்நலப்பிரச்சினைகளினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இறுதிநாட்களில் நண்பர்களின் சிறு உதவிகளால் வாழ நேர்ந்தது.

கோபிகிருஷ்ணன் எனக்கு எழுத்தாளராக அறிமுகமானது பதினாறு வருடங்களுக்குமுன்பு அவரது ‘ஒவ்வாத உணர்வுகள் ‘ என்ற சிறுகதை தொகுப்பு வெளிவந்தபோது .அப்போது அவர் க்ரியா ராமகிருஷ்ணனிடம் டைப்பிஸ்டாக வேலைபார்த்துவந்தார் . அவரை முன்னரே தெரியும் என்றாலும் அவர் சிறுகதை எழுதுவார் என்பது அப்போதுதான் தெரியவந்ததாகவும் அவருக்கு ஒரு பாராட்டுக்கடிதம் எழுதியதாகவும் சுந்தர ராமசாமி சொன்னார். ஒவ்வாத உணர்வுகள் நூலையும் தந்தார்.

ஒவ்வாத உணர்வுகள் அப்போதைய ரசனைக்கு மிக புதியதாக இருந்தது. கதை என ஏதுமில்லை . ஒட்டாத மனப்போக்குள்ள ஒருவன் அலுப்புடனும் சலிப்புடனும் தன்னைச்சுற்றி நிகழும் வாழ்க்கையை பார்க்கும் கோணம் அதில் இருந்தது. அதை இலக்கிய படைப்பாக ஆக்கியது அதன் அங்கதம் தான் . நகுலனின் நாவல்களையும் ஆதவனின் உலகத்தையும் கலந்து உரூவாக்கிய ஓர் தளமாக அது பட்டது.

பிற்பாடு கோபிகிருஷ்ணன் எழுதிய ஆக்கங்களில் பல்வேறுவகை மனநிலை பிறழ்வின் சித்திரங்களை அளிக்கும் ‘உள்ளேயிருந்து சில குரல்கள் ‘ தவிர எல்லா படைப்புகளும் இப்படி தன்னுடைய ஒவ்வாமையை அங்கதமாக வெளிப்படுத்துபவையாகவே இருந்தன. ‘மொழி அதிர்ச்சி ‘ ‘தூயோன் ‘ போன்ற சில அற்புதமான நகைச்சுவைக் கதைகளை அவர் எழுதியுள்ளார். எளிமையான நடையில் , ஒவ்வொரு வரியிலும் ஆசிரியரின் குரல் கேட்க, எழுதும் பாணி அவருடையது.

கோபிகிருஷ்ணனின் அங்கதம் அபூர்வமானதுதான், காரணம் அப்படி சிரிப்பதற்குரிய வாழ்க்கை அவருக்கு அமையவில்லை. அவர் உளவியல் பயின்றவர்.நல்ல ஆங்கில ஞானம் கொண்டவர். பல தளங்களில் அவர் பிரகாசித்திருக்கமுடியும். ஆனால் உரிய தருணங்களில் அவருக்கு போதிய ஏன் குறைந்தபட்ச வருமானம் கிடைக்கும் வேலை அமையவில்லை. வாழ்க்கையின் அடித்தளங்களை மிகவும் கண்டவர். தீர யோசிக்காமல் மதம் மாறி செய்துகொண்ட முதல் திருமணம் பல்வேறு விரும்பத்தகாத பிரச்சினைகளுக்கு பிறகு முறிவு அடைந்தது. மொத்த விளைவாக அவரே ஒரு மனநோயாளி என்ற நிலையை அடைந்தார். அதன் சிகிழ்ச்சைக்காக அவர் பயன்படுத்திய மாத்திரைகளே அவரை மரணம் நோக்கி கொண்டு சென்றன என்றால் அது மிகையல்ல. இந்தியாவில் மனநல சிகிழ்ச்சை என்ற பேரில் மனிதர்களை நிரந்தரமான நரம்பு மாத்திரைகளுக்கு அடிமையாக்கும் செயல்தான் நடைபெற்று வருகிறது.

சி மோகன் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் வேலைபார்த்தபோது கோபிகிருஷ்ணன் சில மொழிபெயர்ப்பு வேலைகளுக்காக வந்திருந்தார்.அப்போதுதான் அவரை நேரில்பார்த்தது. அதற்கு முன் அவரது கதைகள் பற்றி கடிதங்கள் எழுதி பதில் பெற்றிருக்கிறேன். அச்சில் சில குறிப்புகளும் அவரைப்பற்றி எழுதியிருக்கிறேன். நேரில் முதலில் சந்தித்தபோது உற்சாகமான சந்திப்பாக அமையவில்லை. அவருக்கு மனிதர்களுடன் பழக தடை இருந்தது. மேலும் மாத்திரைகளின் பின்விளைவாக அவர் சில சொற்றொடர்களைப் பேசியதுமே குரல் தழுதழுக்க ஆரம்பித்துவிடும். தலையும் உடலும் நடுங்கும். இருவரும் சேர்ந்து டா சாப்பிட்டு பிரிந்தோம்.

பிற்பாடு கோபிகிருஷ்ணனிடம் சில தடவை உரையாடியிருக்கிறேன். அவர் ஓர் உளவியலாளராக இருந்ததே அவரது பிரச்சினை என்று சொல்லியிருக்கிறேன். பக்தி பாசம் போன்ற எளிீய நம்பிக்கைகள் மூலம் தீரக்கூடிய மனச்சிக்கல்களை அவர் உளவியல் புதிர்களாக மாற்றி பிறகு நோயாக ஆக்கி மாத்திரைகளைக் கொண்டு சிகிழ்ச்சை செய்ய முனைந்து அம்மாத்திரைகளின் அடிமையானார். அவர் எம் வி வெங்கட் ராமின் ‘காதுகள் ‘ நாவலுக்கு ஒரு மதிப்புரைக் கடிதம் எழுதினார். அதில் எம் வி வி ‘கேட்ட ‘ முருகனின் குரல் எல்லாமே மனநோயின் அம்சங்கள் ,அவற்றை சிகிழ்ச்சைமூலம் சரிப்படுத்தமுடியும் என எழுதினார். அவருக்கு நான் எழுதிய கடிதத்தில் முருகனாக மனநோயை மாற்றிக் கொண்டது எம் வி வி யின் வெற்றி , இல்லையேல் நமது மருத்துவர்கள் அவரை முருகனடிமையாவதற்கு பதில் மாத்திரையடிமை ஆக மாற்றிவிட்டிருப்பார்கள் என்றேன். பல வருடங்களுக்கு பிறகு அதை நினைவுகூர்ந்த கோபிகிருஷ்ணன் நான் சொன்னது சரிதான் என்றும் ,தனக்கு ஒரு முருகன் கிடைக்கவில்லை என்பதே தன் பிரச்சினை என்றும் சொன்னார்.

கடைசியாக அவரை தமிழினி அலுவலகத்தில் வைத்து பார்த்தேன். அப்போதும் அவர் மாத்திரைகள் தனக்களித்து வரும் சிக்கல்களைப்பற்றியே பேசினார் .முக்கியமாக தூக்கமின்மை. ஆகவே பகலில் எதையுமே கவனமாக செய்ய முடியாத நிலை. தொடர்ந்து தன் கட்டுப்பாடின்றி பெருகி ஓடும் அர்த்தமற்ற உதிரிச் சிந்தனைகள். பேசும்போதே தழுதழுத்து கண்ணீரை துடைத்தார். நரம்பு சிக்கல்களை தவிர்த்தால்கூட அவருக்கு பல ஆளுமை சிக்கல்கள் இருந்தன. தனக்கு பிடிக்காத எதனுடனும் அவரால் சமரசமே செய்துகொள்ள முடியவில்லை. ஒரு வகை தாழ்வுமனப்பான்மையும் அவரிடமிருந்தது .தன் ஆங்கில அறிவைக் கொண்டு வேலைபார்த்த இடங்களில் உள்ள மேலதிகாரிகளை சற்று மட்டம் தட்டுவார் என்று அவரே சொல்லியிருக்கிறார் . அவரது தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்பதை எங்கு போனாலும் வாழவும் சாகவும் விடாத சம்பளம் அளிக்கப்படுவதை அவர் எழுதியுள்ளார். சில சேவை நிறுவங்களில் வேலை பார்த்தார். அங்கே நிகழும் அப்பட்டமான சுரண்டல்களை அவரால் ஏற்க முடியவில்லை .நக்கீரன் உள்ளிட்ட இதழ்களில் பிழை திருத்தும் பணி செய்தார். அவரால் உட்கார்ந்து வேலைசெய்ய முடியவில்லை.

கோபி கிருஷ்ணனின் சுயவரலாற்றுப் பேட்டி ஒன்று மழை முதல் இதழில் யூமா வாசுகியால் எடுக்கப்பட்டுள்ளது . அதை வைத்து பார்த்தால் அவரது சிறுகதைகள் அனைத்துமே சுயசரிதைத் துளிகள் என்று சொல்ல முடியும். அவரது ஆரம்பகால ஆக்கங்கள் முறையாக நூலாகவில்லை. பிற்கால ஆக்கங்கள் அவரது நண்பரான தமிழினி வசந்தகுமாரால் அழகிய நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. ‘இடாகினிப்பேய்களும்…. ‘ ‘தூயோன் ‘ ‘மானுட வாழ்வு தரும் ஆனந்தம் ‘ முதலியவை முக்கிய ஆக்கங்கள். நண்பருக்கு அஞ்சலி.

jeyamohanb@rediffmail.com

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்