முதல் காஷ்மீர்ப் போரில் ஆங்கிலேயர் செய்த மோசடி

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

ஸ்ரீராம் சுந்தர் செளலியா


(A Review of Chandrashekhar Dasgupta ‘s War and Diplomacy in Kashmir, 1947-48 Sage Publications, New Delhi. 2002. ISBN: 0-7619-9588-9. Price: US$17.75. 239 pages)

ஆக்கிரமிப்பை தடுக்கக்கூடிய வலிமை நம்மிடம் இருக்கும்போதுதான், அப்படிப்பட்ட ஆக்கிரமிப்பு பயனளிக்காது என்பதைத் தெளிவாக்கும்போதுதான் சமாதானம் உண்மையிலேயே வந்தடையும்.

– கவர்னர் ஜெனரல் லூயிஸ் மவுண்ட்பேட்டனிடம் பிரதமர் ஜவஹர்லால் நேரு சொன்னது, டிஸம்பர் 26, 1947

இந்திய வெளியுறவு அலுவலர்களில் மிகவும் சிறந்தவராகவும், அறிவார்ந்தவராகவும் கடந்த 30 வருடப் பணியில் அறியப்பட்ட சந்திரசேகர் தாஸ்குப்தா மீண்டும் ஒருமுறை தன்னுடைய சிறப்பை ஒரு சிறந்த, விழிப்புணர்ச்சி தரும், கட்டுக்கதைகளை உடைக்கும் புத்தகத்தை எழுதி, காஷ்மீர் பிரச்னைக்கு மூலகாரணத்தை தெளிவாக முன்வைத்திருக்கிறார். இது வரை எந்த வரலாற்றாசிரியரும், இது போல, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அறிவிப்பு இல்லாமல் நடந்த முதலாம் காஷ்மீர் போரைப் பற்றி (1947-48), பிரிட்டிஷ் போர்த்தந்திரம் மற்றும், ராஜதந்திர அரசியல் கணிப்புகளை உள்ளடக்கிய பார்வையில் தெளிவாக இது போன்று எழுதவில்லை.

டெல்லி செயிண்ட் ஸ்டாபன் கல்லூரியின் பழைய மாணவர்களால் அன்புடன் சிடி என்று அழைக்கப்படும் தாஸ்குப்தா, இப்படிப்பட்ட ஒரு குறையை நிவர்த்தி செய்வதற்காக எளிமையாகவும், பல குறிப்புகளை பல இடங்களில் தெளிவாக மேற்கோள் காட்டியும் வொயிட்ஹால் (பிரிட்டிஷ் பார்லிமெண்ட் கட்டடம் – மொ பெ) மற்றும் அதனது பிரதிநிதிகள் அதிகார மையங்களில் உட்கார்ந்து கொண்டு எவ்வாறு பிரிவினை நடந்து இரண்டு சுதந்திர நாடுகள் உருவான பின்னரும் இந்த இந்திய துணைக்கண்டத்தின் மீதான தம்முடை ஆளுகையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறார்.

காஷ்மீர் பிரச்னையின் மூலக்காரணங்கள் இஇரு தரப்புகளாலும் வெவ்வேறு நிலைபாடுகளில் வெகுவாக விவாதிக்கப்பட்டாலும், விவாதத்துக்குரிய இந்த வரலாறு கட்சி சார்புடையதாகவும், சில நேரங்களில் கட்சி சாராததாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தாஸ்குப்தாவின் இந்த உழைப்புதான் முதன்முதலாக, சிக்கலான ராணுவ மற்றும் ராஜதந்திர முடிவெடுக்கும் முறைகளை நோண்டி எடுத்து இந்த 15 மாதப் போர் எவ்வாறு பிரிட்டனால் சிக்கலாக்கப்பட்டது என்பதைக் காட்டியிருக்கிறது.

காஷ்மீர்ப் பிரசினையின்போது பிரிட்டிஷ் லீலை

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சுதந்திரத்துக்குப்பின்னர், சூழ்நிலை காரணமாக பிரிட்டனின் ஆட்கள் ‘முக்கியமான இடங்களில் ‘ பிரிட்டனின் எதிர்கால நலன்களை பாதுகாக்கவும், தூக்கி நிறுத்தவும் பதவி வகித்தனர். முதலாவது ஆள், இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகவும் இந்தியாவின் அரசாங்கத் தலைவராகவும் இருந்த பிரிட்டன் கப்பல்படையின் லார்ட் லூயி மவுண்ட்பேட்டன். அவரது ரத்த சம்பந்தமான உறவுகளுக்காகவும், ‘ஹிஸ் மெஜஸ்டி, கிங் ஆஃப் இங்கிலாந்து ‘க்கும் விசுவாசத்துக்காகவும், அவர் இந்தியாவில் என்ன வேலைகளை, எப்படி செய்யவேண்டும் என்ற கட்டளைகளையும் அறிவுரைகளையும் நேரடியாக கிளமண்ட் அட்லீயிடமிருந்தும், பாதுகாப்பு அமைச்சர் அலெக்ஸாண்டர் ஆல்பர்ட்டிடமிருந்தும், டெல்லியிலும் கராச்சியிலும் இருக்கும் இங்கிலாந்தின் ஹை கமிஷனர்களிடமிருந்தும், காமன்வெல்த் செயலாளரான நோயல் பேக்கரிடமிருந்தும் பெற்றார். மவுண்ட்பேட்டனின் செயலாளராக இருந்த இஸ்மே அவர்களின் வார்த்தைகளிலேயே, இந்தியாவும் பாகிஸ்தானும் பிரச்னையில் மாட்டும் எந்த விஷயமாக இருந்தாலும், ‘ஹிஸ் மெஜஸ்டி த கிங் என்ன சொல்கிறாரோ அதன் படியே நடக்க வேண்டும் ‘.

இரண்டாவது, பீல்ட் மார்ஷல் அசின்லெக் (Auchinleck) பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் சுப்ரீம் கமாண்டராக ஆகஸ்ட் 15, 1947க்கு அப்புறமும் இருந்தார். இவர் தொடர்ந்து, இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் கமாண்டர் இன் சீஃப் ஆக இருந்த ராப் லோக்கார்ட் மற்றும் ராய் பச்சர், விமானப் படைத் தலைவராக இருந்த தாமஸ் எல்ம்ஹெர்ஸ்ட் இன்னும் இதர ஜெனரல்களுடன் தொடர்பு கொண்டு காரியங்களைச் செய்து கொண்டிருந்தார். பிரிட்டனின் ராஜதந்திர மற்றும் போர்தந்திர குறிக்கோள்களுக்கு இவர்களின் துருப்புச் சீட்டு முக்கியத்துவம் , இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இடையே எதேனும் பிரச்னை வந்தால் என்ன செய்யவேண்டும் என்று காமன்வெல்த அஃபைர்ஸ் கமிட்டி கூறியதை பார்த்தாலே தெரியும். ‘பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம், காமன்வெல்த் செயலாளருடன் பேசி கலந்தாலோசித்துத்தான் சுப்ரீம் கமாண்டர்களுக்கு கட்டளைகளை அனுப்ப வேண்டும் ‘ (பக்கம் 33). காஷ்மீர் போர் காலம் முழுக்க, நேருவும் பட்டேலும், பல சமயங்களில் பிரிட்டிஷ் கமாண்டர்கள் தாங்கள் சொல்வதை விட லண்டன் சொல்வதையே செய்கிறார்கள் என்று கடுங்கோபம் அடைந்தார்கள்.

ஒரு மூன்றாம் நாட்டின் குடிமகன்கள் போரிடும் இரண்டு ராணுவங்களில் தலைமைப்பொறுப்பில் இருந்து கொண்டு, அதே நாட்டின் தலைமைப் பொறுப்பில் அதே நாட்டு குடிமகன்கள் உட்கார்ந்து கொண்டு நடந்த இந்த காஷ்மீர் போர் (1947-48) நவீன போர்வரலாற்றிலேயே வேறெங்கும் கிடையாது. இருப்பினும், இந்தப் போர் மூன்றாம் உலக நாடுகளுக்கு இடையே நடக்கும் போரில் பெரும் உலக சக்திகள் ‘மட்டுப்படுத்தும் ‘, ‘சரி செய்யும் ‘ பாணிக்கு எடுத்துக்காட்டாக ஆகிவிட்டது. தன்னுடைய ராணுவத்தின் மீது முழு கட்டுப்பாடு இல்லாத இந்தியாவும், ஓரளவுக்கு பாகிஸ்தானும், இந்தப் போர் எவ்விதம் முடிவு பெறும் என்பதையோ எவ்விதம் நடக்கும் என்பதையோ தீர்மானிக்கச் சக்தி அற்றவர்களாக இருந்தார்கள்.

பிரிட்டனின் இரண்டு கட்டளைகளும், சாய்வினால் ஏற்பட்ட அழிவும்

இந்திய பாகிஸ்தான் போரின் மையத்தில் இருந்தவை, பிரிட்டனின் இரண்டு ஆர்வங்கள். அவை மவுண்ட்பேட்டன் மற்றும் இதர ராணுவத் தலைவர்கள் மூலம் நடத்தி வைக்கப்பட்டன. முதலாவது காமன்வெல்த் நாடுகளுக்குள் ஒற்றுமையும், காமன்வெல்த் நாடுகளுக்குள் போர் வருவதை தடுக்க வேண்டும் என்பதும். 1945இல் தன்னுடைய ‘மாபெரும் சாம்ராஜ்யம், பாதியாக ‘ குறைந்துவிட்ட நிலையில், இந்தியாவையும் பாகிஸ்தானையும் தன்னுடைய கைக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற விருப்பமும், அதன் மூலம் கிடைக்கும் பெரும் கெளரவமும் பொருளாதார மற்றும் அரசியல் அந்தஸ்தும் லண்டனின் தொலைநோக்குக் கொள்கையாக இருந்தது. இப்படிப்பட்ட விருப்பம் இருக்கும்போது, இந்தியா அல்லது பாகிஸ்தானின் சார்பாக ஒரு நிலையை மேற்கொள்வதில் இருக்கும் ஆபத்தை பிரிட்டன் உணர்ந்தே இருந்தது. இதன் அடிப்படையில் இந்தியா பாகிஸ்தான் நாடுகளின் பக்கம் இருக்கும் நியாயமோ அல்லது சட்டப்பூர்வமோ தேவையற்றது. சூலை 1947இல், வொயிட்ஹால் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளுக்கு ‘ஸ்டான் டவுன் ‘ கட்டளையை பிறப்பித்தது. இதன் படி, இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டால், ‘எந்த சூழ்நிலையின் கீழும், பிரிட்டிஷ் ஆபீஸர்கள் எதிரெதிர் முனைகளில் இருக்கக்கூடாது ‘ (பக்கம் 19) என்று கட்டளையிட்டது. எனவே, மூளும் போரைத் தடுப்பதுதான் பிரிட்டனின் முக்கிய நோக்கமே ஒழிய, இரண்டு தேசங்களில் எந்தப் பக்கத்தில் சரியான நியாயம் இருக்கிறது என்பதல்ல.

இந்த ‘ஸ்டாண்ட் டவுன் ‘ – அதாவது கண்டுகொள்ளாமல் அடக்கிவாசிக்கும் இந்தக் கோட்பாடு – கட்டளை சார்புகளற்ற நிலைப்பாடு அல்ல. நிச்சயமாக நல்ல கட்சிசாரா நிலைப்பாடும் (benevolent neutrality) அல்ல. 1946-47ஆம் வருடங்களில் புவிஅரசியல் நிலைமையை மறுபார்வை பார்க்கும் பிரிட்டனின் திட்டமிடுபவர்களுக்கு ‘நம்முடைய போர்த்தந்திரங்களின் படி, முக்கியமான இடம் பாகிஸ்தானே ‘ (பக்கம் 17). இந்தியாவுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒரு நம்பிக்கைக்குரிய விஷயமாக அன்று இருந்தாலும், பாகிஸ்தானைவிட முக்கியமானதாக இல்லை. ‘முக்கியமாக வடமேற்கு பிராந்தியம் ‘ (ஆஃப்கானிஸ்தான் பகுதி. மொ.கு) வடமேற்கில் இருக்கும் பாகிஸ்தானின் ராணுவ தளங்களும், இதன் விமான தளங்களும், காமன்வெல்த் பாதுகாப்புக்கு இன்றியமையாதவை என்று திட்டமிட்டார்கள். மேலும், ‘பாகிஸ்தானை நம்மோடு வைத்துக்கொள்வது, மத்தியக்கிழக்கிலும், வடக்கு ஆப்பிரிக்காவிலும் நமக்கு வெகுவாக உதவும் ‘ என்று கணக்கிட்டார்கள். வழக்கமான வகுப்புவாத சிந்தனையின் அடிப்படையில், பாகிஸ்தானை ஒதுக்குவது, ‘முஸல்மான் நாடுகள் ‘ அனைத்துடனும் பிரிட்டனின் உறவை பாழ்படுத்தும் என்று திட்டமிட்டார்கள். இந்த அடிப்படையே காஷ்மீர்ப் பிரச்னை ஐக்கிய நாடுகள் சபைக்கு வந்தபோது இந்தியாவுக்கு மரண அடியைக் கொண்டுவந்தது. ‘பாகிஸ்தான் போர்தந்திர முறையில் இந்திய துணைக்கண்டத்திலேயே மிகவும் முக்கியமான பிரதேசம். நம்முடைய அனைத்து விருப்பங்களும் பாகிஸ்தானை வைத்து மட்டுமே நிறைவேற்றிக்கொள்ளலாம் ‘ (பக்கம் 17) என்று மவுண்ட்பேட்டனும், இந்திய துணைக்கண்டத்தில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளும் உணர்ந்திருந்தார்கள். ஆகவே, இந்தியாவா பாகிஸ்தானா என்ற கேள்வி வரும்போது யாரை வருத்தமடைய வைக்கலாம் என்பதைத் தெளிவாகவே உணர்ந்திருந்தார்கள்.

ஜுனகாத் முன்னோட்டம்

இந்த சாய்வுக்கு முன்னோடி செப்டம்பர் 1947இல் ஜ்உனகாத் பிரதேச பிரச்னை வந்தபோதே தெரிந்தது. பக்கத்து மாங்க்ரோல் காடுகளிலிருந்து நவாபின் தனிப்பட்ட ராணுவத்தை அழிக்க எந்தவிதமான ‘பெரும் அளவு செயல்பாடுகளையும் ‘ நடத்த இந்திய ராணுவத்துக்கு வலிமை இல்லை என்று நேருவிடமும் பட்டேலிடமும், பிரிட்டிஷார் தவறாக வற்புறுத்த முயன்றார்கள். உடனே பட்டேல், மவுண்ட்பேட்டனிடம், ‘மூத்த பிரிட்டிஷ் ஆபீஸர்கள் அவுசின்லெக் அவர்களிடமிருந்துதான் கட்டளைகளை பெறுகிறார்களே தவிர இந்திய அரசாங்கத்திடமிருந்து அல்ல ‘ என்று திருப்பி பதில் கொடுத்தார். (பக்கம் 26). கவர்னர் ஜெனரல் உடனே ஒரு பாதுகாப்பு கவுன்ஸிலை உருவாக்கி அதன் தலைவராக நேருவை நியமிக்காமல் தன்னைத்தானே நியமித்துக்கொண்டு இறுதியில் ஜுனகாத் பிரதேசம் இந்தியாவுடன் இணைய அனுமதி அளித்தார். அப்போதும்கூட ‘ஜ்உனகாத் பிரதேசத்தை ஆக்கிரமித்ததற்காக ஐக்கிய நாடுகள் சபையில் மனு கொடுக்கலாம் ‘ என்று அறிவுரை கொடுத்துக்கொண்டேதான் செய்தார். காஷ்மீர் பிரச்னை என்பது வேறொரு பிரச்னை. அதில் நேரடியாக பாகிஸ்தானுக்கு ஆர்வம் இருந்தது. தன்னுடைய பெரும் போர்த்தந்திர செஸ்போர்டிலிருந்து பாகிஸ்தானை இழந்துவிடக்கூடிய ஆபத்தை தவிர்க்க பிரிட்டன் விரும்பியது.

போரில் இந்தியாவின் கைகளைக் கட்டிப் போட்டது

பாகிஸ்தானிய ‘பழங்குடியினர் ‘ அக்டோபர் 1947இல் காஷ்மீரை ஆக்கிரமிப்பதற்கு முன்பே, ஜெனரல் லோக்கார்ட் அவர்களுக்கு, ராவல்பிண்டி (பாகிஸ்தான்)யிஇல் இருக்கும் பாகிஸ்தான் ராணுவ ஜெனரலிடமிருந்து ஆக்கிரமிப்புக்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்றன என்ற செய்தி ரகசியமாக கொடுக்கப்பட்டிருந்தது. இந்திய கமாண்டர் இன் சீஃப் இந்த முக்கிய விஷயத்தை மற்ற இரண்டு பிரிட்டிஷ் ராணுவ தளபதிகளுடன் பகிர்ந்து கொண்டார். ஆனால் இந்திய அரசாங்கத்துக்குச் சொல்லவில்லை. ( நேரு இந்த மோசடியை டிஸம்பரில்தான் கண்டறிந்தார். உடனே லோக்கார்ட்டை பதவி நீக்கம் செய்தார்). ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் சட்டப்பூர்வமாக இணைந்ததும் இந்திய ராணுவம் அங்கு சென்று ஆக்கிரமித்ததன் பின்னரும், லோக்கார்ட்டும், மவுண்ட்பேட்டனும் திரைமறைவாக இந்திய பாகிஸ்தான் யுத்தம் நடக்கக்கூடாதவாறு, உண்மையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் வராத போர்வீரர்கள் (Pakistani irregulars) என்று சொல்லப்பட்டவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தாமல் இருக்க தீவிரமாக வேலை செய்தார்கள்.

மஹாராஜாவின் படைகளுக்கு உடனே தளவாடங்கள் அனுப்ப பட்டேல் கொடுத்த கட்டளை ‘கமாண்டர் இன் சீஃப் அவர்களாலும், பீல்ட் மார்ஷல் அசின்லெக் அவர்களாலும் உதாசீனம் செய்யப்பட்டது ‘ (பக்கம் 42). மவுண்ட்பேட்டன், தனிப்பட்ட முறையில் ஜின்னா அவர்களை பழங்குடியினரின் ஆக்கிரமிப்புக்கு நேரடியாக உதவுவதற்காக கண்டித்தாலும், வெளிப்படையாக இந்திய அரசாங்கத்துக்கு அறிவுரை சொல்லும்போது, இரண்டு புறமும் சாராத ஒரு சார்பற்ற நாட்டுக்கு தளவாடங்களை அனுப்புவது மாபெரும் தவறு என்றும், பாகிஸ்தானும் அதே போல செய்யலாம் என்றும், அது முழுமையான போரை உருவாக்கிவிடும் என்றும் கூறினார். நேருவும் பட்டேலும், ஏற்கெனவே ஒருமாதிரி போர்நிலவரம் இருக்கிறது என்றும், இந்திய ராணுவத்தை அங்கு விமானம் மூலம் கொண்டு சென்று வெறித்தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த பட்டாணிகளிடமிருந்து ஸ்ரீநகரைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கோரினார்கள். முப்படை தளபதிகள் விமானம் மூலம் அங்கு கொண்டு செல்வது ‘பெரும் ஆபத்தானது ‘ என்று கூறினாலும், நேரு ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார். நவம்பரில் ஜம்மு-பூஞ்ச்-மிர்புர் பகுதியில் பிரச்னை மோசமானதும், நேரு ராணுவம் உடனே அனுப்பப்பட வேண்டும் என்று கோரினார். ஆனால் மெளண்ட் பேட்டனும், லோக்கார்டும் இந்திய ராணுவம் தயாராய் இல்லை என்று சாக்குப் போக்கு சொல்லிக் கொண்டிருந்தனர். ஆக்கிரமிப்பாளர்களை அழிக்கத் தான் வேண்டும் என்று நேருவின் கோரிக்கையை பிரிட்டிஷார் மாற்றி, ‘ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவது ‘ என்று ஆணையிட்டார்கள்.

பாகிஸ்தான் இப்படி ஆக்கிரமித்தவர்களைத் திரும்புமாறு எந்த உத்தரவும் பிறப்பிக்காத சூழ்நிலையில், ஆக்கிரமிப்பாளர்கள் காஷ்மீரில் பண்ணிய அட்டூழியங்களின் நிரூபணங்கள் பெற்று, இந்திய நாடாளுமன்றம் உடனடியாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முயன்றது. விமானப் படையை அனுப்புதல், மேற்கு பாகிஸ்தான் மீது பதிலடித் தாக்குதல், ஆக்கிரமிப்பாளர்கள் பாகிஸ்தானிலிருந்து பயணமாகும் வழிகளைத் தாக்குதல் போன்றவை இந்த நடவடிக்கைகள். கலவரமுற்ற மெளண்ட்பேட்டன் இது பற்றி கவலை கொண்டிருப்பதாகவும், பாகிஸ்தானின் இனக்குழுவினர் தாக்குதல் நிச்சயம் தீவிரமான எதிர் நடவடிக்கைப் போர் எடுக்கத் தகுதியானது தான் என்றும் தெரிவித்தார். நேரு இதை நம்பி, பிரிட்டிஷார் தாக்குதல் நடத்துவார்கள் என்று நம்பினார். ‘இது தான் பெரும் தவறாயிற்று. கவர்னர் ஜெனரல் மெளண்ட்பேட்டன் பாராளிமன்ற மந்திரிசபையின் சிபாரிசுகளை முழுக்கப் புறக்கணித்தார். ‘( பக் 101) . ஜெனரல் புச்சர் எல்லை தாண்டி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தாமல் பார்த்துக் கொண்டார். 1948-ல் திடாரென்று எண்ணெய் தருவதில் பிரிட்டன் வெட்டுக் கொண்டுவந்தது. காஷ்மீர்ப் போரை இந்து மிகவும் பாதித்தது.

மெளண்ட்பேட்டனின் பிரதம உதவியாளர் இஸ்மேயும், இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் ஹை கமிஷனர் ஷோன்-ம், லண்டனுக்கு அனுப்பிய அறிக்கையில் பாகிஸ்தான் இந்த படையெடுப்பில் குற்றவாளி ன்றும் காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதில் பாகிஸ்தான் அரசு ஈடுபட்டுள்ளது ‘ (பக் 58) தெரிவித்தனர். ஆனால் ஆட்லி பாகிஸ்தானையும், ‘ இஸ்லாமிய உலகையும் ‘ விரோதித்துக் கொள்ள விரும்பவில்லை. காஷ்மீரில் ஒரு ‘நியாயமான ‘ தீர்வு அடைந்த பின்னர் கராச்சி தன்னுடைய ஆக்கிரமிப்பாளர்களிடம் கேட்டுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். நோயல் பேக்கர் இந்த பாகிஸ்தான் ஆதரவு நிலைபாட்டைத் தான் காமன்வெல்த் உறவு அலுவலகத்திலும், பின்பு 1948-ல் ஐ நா பாதுகாப்பு அவையிலும் தெரிவித்தார்.

ஐ நாவில் பிரிட்டிஷாரின் துரோகம்.

இதே சமயத்தில், பாலஸ்தீன் பிரிவினையினால், பிரிட்டன் மீதும், அமெரிக்கா மீதும் அராபியக் கோபம் திரும்பியது. லண்டனின் வெளியுறவு அமைச்சகம் தீர்மானித்தது : ‘ காஷ்மீர் பற்றிய பிரிட்டிஷ் கொள்கை முஸ்லீம்களுக்கு எதிரானது என்ற தோற்றத்தை ஏற்படுத்தலாம் அதனால் அரபுக் கோபம் அதிகரிக்கலாம். ‘ (பக் 111) அனுன் பெவின் ஐ நாவில் எடுத்த பாகிஸ்தான் ஆதரவுக் கொள்கை , நோயல் பேக்கரின் கொள்கையுடன் ஒத்துப் போயிற்று. காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது பற்றிக் கண்டுகொள்ளவில்லை. பாகிஸ்தானின் ஆதரவில் நடந்த படையெடுப்பு கண்டு கொள்ளப்படவில்லை. ‘பெவினும், நோயல் பேக்கரும் பாகிஸ்தான் ஒப்புக் கொள்ளுமா என்பதாகத் தான் இருந்தது. சட்ட பூர்வமான நிலையோ, இந்தியாவின் சரியான பார்வையோ கண்டுகொள்ளப் படவில்லை. ‘ (பக் 114)

பிரிட்டனின் தோழர்களான அமெரிக்கா, கனடா, ஃபிரான்ஸ் பாகிஸ்தானின் நிலையை ஆதரிக்கும்படி பிரிட்டிஷ் செய்தது. அமெரிக்க உள்நாட்டு அமைச்சர் ஜார்ஜ் மார்ஷல் ‘ இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்தது சட்ட பூர்வமானதே ‘ என்று தெரிவித்திருந்தார்.(பக் 121). ஆனால் அமெரிக்கா , ரஷ்யா முன்னால் தாம் இணைந்திருப்பதாய்க் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தயக்கத்துடன் பிரிட்டனின் நிலைபாட்டை ஆதரித்தது. இந்தியாவில் இருந்த அமெரிக்கத் தூதுவர் க்ரேடி வெளிப்படையாகவே சொன்னார். ‘ பிரிட்டிஷ் பிரதிநிதிகள் அழுத்தம் தந்திராவிட்டால் இந்தியாவிற்குச் சாதகமாய்த் தான் அமெரிக்கா பேசியிருக்கும். ‘ மெளண்ட்பேட்டனே இது பற்றிக் கூறினார்.: ‘ சார்பற்ற தன்மையோ நியாய உணர்வோ இல்லாமல், அதிகார அரசியல் தான் ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் செயல்பட்டது. ‘ (பக் 123) ஆட்லியே நோயல் பேக்கர் செய்கையைப் பற்றிக் கூறினார் : ‘ எல்லா சலுகைகளும் இந்தியாவிடம் தான் கோரப் படுகின்றன. ஆனால் பாகிஸ்தான் எதுவுமே விட்டுத் தரவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராகத் தான் புகார் தரப்பட்டது , ஆனால் இந்தியாவின் மூது தவறு இருப்பது போல நடவடிக்கைகள் உள்ளன. ‘ (பக் 129). இதில் தீவிரமாய் ஈடுபட்ட எல்லோரும் எதிர்பாராமல், ஆக்கிரமித்தவர்கள் ‘சுதந்திர காஷ்மீர் ‘-இலிருந்து வெளியேற வேண்டும் என்றும் ,பாகிஸ்தான் உடனே இது பற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் இயற்றப்பட்டது. இதன் பின்பு நேரு ஒப்புக் கொண்டபடி ‘வாக்கெடுப்பு ‘ நடக்க வேண்டும் என்று கோரியது. பிரசினைகள் கொஞ்சம் கொஞ்சமாய் தணியவேண்டும் என்றும் 1948-ன் ஐ நா கமிஷன் கோரியது.

புச்சர்-க்ரேசி ஒப்பந்தம்

பேக்கர் திட்டப்படி இந்த சூழ்நிலை ஒரு நிலைக்கு வரவேண்டும் என்றால் பாகிஸ்தானின் படைவீரர்கள் ஜம்மு காஷ்மீரில் இருக்க வேண்டும் என்றார். ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் இது தோல்வி பெற்றது. இந்தத் திட்டத்திற்கு இன்னொருவர் ஆதரவும் கிடைத்தது. அவர்: ஜெனரல் ராய் புச்சர் – லோக்கர்டிற்குப் பின்னர் இந்தியப் படைக்குத் தலைவர் ஆனார். இஅவரும், பாகிஸ்தானின் படைத் தலைவர் டக்ளஸ் க்ரேசியும் 1948 மார்ச்சில் அதிரகசியக் கூட்டம் ஒன்று நடத்தினர். ஒரு விதமான சமாதான உடன்படிக்கை – பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் ஒப்புதலுடன்- ஏற்றுக் கொள்ளப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதிகளின் மீது படையெடுப்பதில்லை என்றும், பூஞ்ச், ராஜெளரி பகுதிகளிலிருந்து இந்தியப் படைகளை திரும்பப் பெற்றுக் கொள்வது என்றும் தீர்மானிக்கப் பட்டது. ‘அவரவர் இருக்கும் இடத்திலேயே படைகள் இருக்க வேண்டும், உரி பகுதியில் பாகிஸ்தான் படைகள் இருக்கலாம் என்றும் இவர்கள் தீர்மானித்தனர். ‘(பக் 139) இது அறிந்த நேருவும் படேலும், இதை வலிமையாக நிராகரித்தனர். ஜம்மு காஷ்மீர்லிருந்து ஆக்கிரமிப்பாளர்களை விரட்டுவது என்பது தான் நோக்கம் என்பதை தெளிவுபடுத்தினர்.

புச்சர்-க்ரேசி ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப் படவில்லை. ஆனால் பாகிஸ்தான் தன்னிச்சையாக மே மாதம் படைகளை ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்கு அனுப்பியது. இது புச்சருக்கு முன்னமே தெரியும். ஆனால் வசதியாக நேருவிடமிருந்து கடைசி நிமிடம் வரை மறைக்கப்பட்டது. நோயல் பேக்கர்இ இந்த அத்துமீறலைப் பெரிது படுத்தவில்லை. க்ரேசியின் ஆணையின் பேரில் பிரிட்டிஷ் வீரர்களும் பாகிஸ்தான் படையுடன் சேர்ந்து ஆக்கிரமித்தனர். பிரிட்டிஷ் நலன்களைப் பாதுகாக்க இது அவசியம் என்றார் அவர் . ‘ பாகிஸ்தான் காமன்வெல்த்தை விட்டு வெளியேறக் கூடும். பிரிட்டன் மீது முஸ்லிம்கள் கொண்டுள்ள அதிருப்தி அதிகமாகலாம். ‘(பக் 160).

ஒரு ‘மிக ரகசியக் ‘ கூட்டணி

செப்டம்பர் 1948-ல் இந்தியா மீர்புர் நோக்கிப் படையெடுப்பது நிச்ச்யமானவுடன், பாகிஸ்தான் தன் படையின் துணைத் தலைவரை பிரிட்டனுக்கு மிக ரகசியமாக அனுப்பி பிரிட்டனுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த முனைந்தது. ஆட்லி லியாகத்தின் தூதுவரை வரவேற்றார். ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தைகள் பிரிட்டனின் பாகிஸ்தான் ஆதரவுக் கொள்கையை தீவிரப்படுத்த உதவியது. (பக் 170). மேற்கு நாடுகளுடன் பாகிஸ்தான் கொள்ள முயன்ற நட்பைப் பாராட்டும் விதமாக

ராணுவ உதவி மட்டுமின்றி பாகிஸ்தான் கேட்டுக் கொண்ட ‘பாதுகாப்பு ஒப்பந்தத்தினால் ‘ , காஷ்மீர்ப் பிரசினையை , இந்தியா ஆக்கிரமிப்பாளர்களை விரட்டும் முன்பாகவே ஐ நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு நோயல் பேக்கர் கொண்டு செல்வார் என்று உறுதி அளித்தது பிரிட்டன். நவம்பரில் பிரிட்டன், பாதுகாப்பு கவுன்சிலில் ‘நிபந்தனையற்ற போர் நிறுத்தம் ‘ என்ற தீர்மானத்திற்கு ஆதரவு திரட்ட முயன்றது. அமெரிக்கா இதை நிராகரித்து, பழைய தீர்மானங்களுடன் ஒத்துப் போகவில்ல இது என்று தெரிவித்தது. ஜான் ஃபாஸ்டர் டல்லஸ் ‘பிரிட்டன் இப்படி பாகிஸ்தானுஇக்கு முழு ஆதரவு தருவது நடுநிலைக்கு உதவாது ‘(பக் 195) என்றார். நேருவிற்கு இமுடிவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தை ஒப்புக் கொள்வது தவிர வேறு வழியில்லை. காரணம் புச்சர் இந்தியப் படைகள் தயார் நிலையில் இல்லை, உறுதியற்றவை என்று மந்திரிசபையை நம்பச் செய்துவிட்டார்.

முடிவுரை

பிரிட்டிஷ் சமீபத்தில் வெளியிட்ட ரகசிய ஆவணங்களிலிருந்து பல விஷயங்களைத் தோண்டி எடுத்துள்ளார் தாஸ்குப்தா. ஒயிட் ஹால் எப்படி துரோகம் செய்தது என்பது பட்டவர்த்தனமாகியுள்ளது. பிரிட்டிஷ் நடுநிலையானவர்கள் என்ற பொய்யும் அம்பலமாகியுள்ளது. கரியப்பா சொன்னார்: ‘ நான் இரண்டு எதிரிகளை எதிர்த்திப் போரிட வேண்டியுள்ளது. ராய் புச்சர் தலைமையிலான தலைமைப் பீடம், மெசர்வி தலைமயிலான பாகிஸ்தான் ராணுவம். ‘ (பக் 137) இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் ஹை கமிஷனர் இந்திய விமானப் படையின் பிரிட்டிஷ் தலைவரை ‘ முட்டாள் தனமான, தேவையற்ற , தூண்டுகிற மாதிரியான ‘ காரியம்(பக் 209) என்று கண்டிக்க முடியும் என்றால் எப்படி நடுநிலைமை வரும் ? இந்தத் தகவல்களின் அடிப்ப்டையில் காஷ்மீரில் நிகழ்ந்த போர், மற்றும் பேச்சு வார்த்தைகளைப் பார்த்தால், பிரிட்டன் தன்னுடைய நலனுக்காக, இந்தியா பாகிஸ்தானில் இஇருந்த தம்முடைய ஆட்கள் மூலமாக தகவலைத் திரித்து, சட்டத்தை முறித்து, விளையாடியிருக்காவிட்டால் காஷ்மீரின் வரலாறே மாறியிருக்கும். அதே போல் அமெரிக்கா தன் தோழனான பிரிட்டனின் கையில் இதை விட்டிராமல், ஈடுபாடு காட்டியிருந்தாலும் வரலாறு வேறு விதமாய் ஆகியிருக்கும்.

கூடவே, தாஸ்குப்தாவின் ஆய்வு மூலமாக நேரு பாகிஸ்தான் பற்றி மென்மையாய் இருந்தார், தயங்கினார், விட்டுக் கொடுத்தார் என்பதும் தவறு என்று நிரூபணம் ஆகிறது. காஷ்மீர் பற்றி முழுமையாய் அறிந்த ஒரு ‘யதார்த்தவாதி ‘யாக அவர் தோற்றம் கொள்கிறார். (தன்னை யதார்த்தவாதி என்று அழைப்பதை நேரு விரும்பாவிடினும்.) இப்போது நேருவின் கொள்கைகள் கனவுலகில் இஇருந்த லட்சியவாதியின் நடைமுறைக்கு ஒவ்வாத கொள்கைகள் என்று குற்றம் சாட்டுவது இப்போது ஃபாஷனாகி விட்டது. தாஸ்குப்தா 1947-48-ல் இந்திய செய்த தவறுகளின் பின்னணியில் வெளி சக்திகளின் துரோகம் எப்படி நேருவை இருட்டில் வைத்திருந்தது என்பது பற்றியும் பல நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறார்.

கொள்கைகளின் இன்றைய பொஇருத்தப் பாடு பற்றிய விவாதங்களிலும் இப்போது ‘மூன்றாவது நபர் தலையீடு ‘ பற்றி ஆதரவாய்ப் பேசுபவர்கள் இதைப்படிக்க வேண்டும். வரலாற்றில் மூன்றாவது நபர்கள் எப்படி தம்முடைய சுயநலத்தால், காஷ்மீர்ப் பிரசினயைக் குழப்பினார்கள் என்பதை அறிந்து கொள்ள இந்தப் புத்தகம் உதவும்.

***

Series Navigation

ஸ்ரீராம் சுந்தர் செளலியா

ஸ்ரீராம் சுந்தர் செளலியா