கடிதங்கள்

This entry is part of 28 in the series 20030504_Issue

மே மாதம், 4 ஆம் தேதி, 2003


ஆசிரியருக்கு,

சென்ற இதழில் என் கடிதம் என் வம்ச பரம்பரை பெயர்களுடன் சேர்த்து பிரசுரமாகிவிட்டது.

**

அந்த புதிய சிற்றிதழி பெயரை தமிழில் போட்டிருக்கலாமே. ஊழி தானே ? விபரீதமாக படித்து தொலைத்து திடுக்கிட்டுவிட்டேன்.

**

திண்ணை நகைச்சுவை பகுதிக்கு ஒரு உண்மைத்தகவல் . காஞ்சீபுரத்தில் ஒரு சுவரெழுத்து , ‘ புரட்சித்தலைவி அம்மா பாத்தத்தில் மட்டுமல்ல இனி பூமி முழுக்க பிரபஞ்சம் முழுக்க உன்னுடைய ஆட்சிதான்!– அடிபணியும் உண்மை விசுவாசி… ‘

சூர்யா

சென்னை


ஆசிரியருக்கு,

திண்ணையிலே அ முத்துலிங்கம் அவர்களின் பேட்டி மிகச்சிறப்பாக இருந்தது. தெளிவு , மிகையாகவோ அதிகமாக அழுத்தியோ கூறிவிடக்கூடாது என்ற வயதுக்கே உரிய நிதானம் , பல்துறை ஞானம் , சிருஷ்டி வேகம் எல்லாமே காணக்கிடைத்ததன. அழகான கேள்விகள். அவரை தூண்டி விடுபவை. நினைவுகளுக்குள் கொண்டு செல்ல முயலும் கேள்விகள் ஒருபக்கம் பிரச்சினைகளை எழுப்பும் கேள்விகள் ஒரு பக்கம் வில்லங்கமான கேள்விகளும் உண்டு. பேட்டி காணப்பட்டவரும் சரியாக எதிர்கொண்டிருக்கிறார். இலக்கிய சிருஷ்டி என்பதை ஒரு மொழிச் செயல்வினையென மாத்திரமே அ மு அவர்கள் காண்பது குறிப்பிடத்தக்கதாகும் சென்ற காலங்களில் ஈழத்திலே எங்கள் பெரிய விமரிசகர்கள் இலக்கிய சிருஷ்டி என்பதை கருத்துச்செயல்பாடெனவும் அரசியல் சமூக செயல்பாடெனவுமே கற்பித்தனர் என்பது வெளிப்படை .அதன் சமூக அரசியல் பிராந்தியத்து விளைவுகளை எண்ணிப்பார்க்கையிலே குற்றம்சொல்ல ஏலாதென்றாலும் கலையளவிலே ஈழ சிருஷ்டிகள் ஒன்றும் சொல்லிக் கொள்வது போல இல்லையென்றுதான் தோன்றுகிறது.இது அங்கிருந்து அப்பிரச்சினைகளினூடாக கிடந்து பார்க்கையில் தெரியாது. நம்மை ஒரு பிரச்சினைக்குள்ளே இழுத்துப்போடும் படைப்பை நல்ல படைப்பில்லை என்று சொல்ல மனம் ஒப்பாது. விலகி வந்து பார்க்கையிலே பல பிம்பங்களும் சின்னதாக போகின்ற அனுபவந்தான் எஞ்சுகின்றது . இலக்கியத்தை மொழியாகவும் கலையாகவும் காண்கிற ஒரு வகை இலக்கியவாதிகள்[ அப்படி கண்டாலும் அதிலே உள்ள தார்மீக கூறுதான் எழுத செய்கிறதென்பது மறுக்க முடியாதுதானே] உருவாகி வந்தால் நம்மாலும் சில நல்ல ஆக்கங்களை கொடுக்க முடியும். பிரச்சார சுமை இல்லாமல் எழுதப்பட்ட அ மு அவர்களின் கதைகள் மிக முக்கியமான கலை அனுபவங்களினை அளிக்கின்றன. வாழ்க்கையை கண்டு சிரிக்க வைக்கின்றன. [சிரிப்புதான் மிச்சம் அய்யா] ஆகவேதான் மற்ற எந்த ஈழ எழுத்தாளரைப்பார்க்கிலும் தமிழகத்திலே இவர் அடையாளமும் அங்கீகாரமும் அளிக்கப்பட்டவராக இருக்கிறார். இதேபோல சமீபமாக ஷோபா சக்தியின் நாவலுக்கும் பெரிய வரவேற்பு இங்கே உள்ளது .அதற்கும் கருத்துப் பிரச்சார மாயை இல்லாமல் அனுபவங்களை பார்த்து சிரிக்க கற்றுக் கொண்ட பக்குவம்தான் காரணம் என்று எண்ணுகிரேன். அ மு அவர்கள் பேட்டி மிக முக்கியமானது . திண்ணையை வாழ்த்துகிறேன்.

sivam kantharaja


திண்ணையில் பவளமணி பிரகாசம் அவர்கள் குதிகால் வலி பற்றியும் அதன் நிவாரணம் குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொண்ட கட்டுரை மிகவும் பயனுள்ளது . நான் கடந்த ஒரு வருடமாக அவதிப்பட்டு இதே ரீதியில் எருக்கு இலை ,சுடுநீீர் ஒத்தடம் கொட்டன்சுக்காதி தைலம் , அக்குபங்சர் செருப்பு எல்லாவற்றையும் வலம் வந்து பின்னர் எடையை குறைத்து ஒரளவு இதிலிருந்து மீண்டேன் . அப்படியும் பூர்ண குணம் ஆகவில்லை . இக்கட்டுரை படித்தவுடன் அந்த எளிய பயிற்சிகளை¢ செய்ய ஆசை வந்துள்ளது. வலி பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ஆசிரியையின் பிறருக்கு உதவும் மனோபாவமும் பரிவும் நெகிழ வைத்தது.

எஸ்.அருண்மொழிநங்கை


அன்புள்ள ஆசிரியருக்கு,

பவளமணி பிரகாசம் அவர்கள் குறிப்பு மிக எளிய வகையில் குதிகால் வலியைக் குணப்படுத்தியது பற்றி எழுதியது நம் பெண்களுக்கு மிகவும் பயனளிக்கும். உடலை சரியான நிலையில் இருத்தி வைத்திருப்பதே – right posture- இது போல் பல உபாதைகளிலிருந்து காத்துக் கொள்ளும் வழி என்று சொல்வதுண்டு. நம் பெண்கள் மணிக்கணக்கில் நிற்பதும், உட்காரும்போதும், கால்கள் தரையில் பாவாமல் நாற்காலியில் உட்கார்வதும் கால்வலியை ஏற்படுத்தும்.

என் நண்பர் ஒருவர் மூக்கடைப்பால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தார். மூக்குக்குள் சொட்டு மருந்தை மணிக்கொரு முறை இட வேண்டும். அந்தக் கசப்பு மருந்து வாய் , கண்ணென்று வழியும். பணச் செலவும் அவஸ்தையும். எங்கே போனாலும் ஞாபகமாகச் சொட்டு மருந்தை எடுத்துச் செல்ல வேண்டும். அவருக்கு ன்னொரு நண்பர் தந்த யோசனை இது. தினமும் காலையில் ஒரு மூக்கில் வெதுவெதுப்பான தண்ணீரை விட்டு இன்னொரு மூக்கு வழியாக அதை எடுக்க வேண்டும். யோகாசனப் பயிற்சியில் இதுவும் ஒன்று என்று எண்ணுகிறேன். அந்த நண்பருக்கு இரண்டு வாரத்தில் மூக்குச்சொட்டு மருந்து பயன்படுத்த அவசியமே இல்லாமல் போய் விட்டது.

என் நண்பரின் மகன் சின்ன வயதிலிருந்து தொண்டையில் புண்போல வந்து , அந்தப் புண்ணினால் கடும் சுரம் வருவதுண்டு. டான்சில் அறுவை சிகிச்சை பண்ண வேண்டும் என்று சில மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தைகளுக்கான மருத்துவர் ஒருவர், தினமும் உப்புத் தண்ணீரைக் கொண்டு தொண்டையில் படும்படி அண்ணாந்து கொப்பளித்து வருமாறு ஆலோசனை வழங்கினார். காலையும் மாலையும் இதைப் பின்பற்றி கொப்புளித்த அந்தப் பையனுக்கு தொண்டை வலியும் , கடும் சுரமும் அதன் பின்பு வரவே இல்லை.

நம் நகரத்திய வீடுகள் பலவற்றில் காற்றோட்டமே இல்லை. இது போன்ற வீடுகளில் வசிப்பவர்களுக்கு இறுகிய காற்றையே சுவாசித்து , மூச்சிழுப்புகள் ஆSதுமா போன்ற வியாதிகள் வருகின்றன. மும்பையில் இதற்காக கதவுகளில் மேலும் கீழும் ஓரடி அகலத்தில் ஓட்டை போட்டு வைத்தால் , காற்று உள்ளே வரவும் , வெளியேறவும் வழி உண்டு அதனால் மூச்சு உபாதைகள் குறையும் என்று ஒரு பத்திரிகையில் படித்தேன்.

எதெற்கெடுத்தாலும் மருத்துவரிடம் போவது என்ற வழக்கத்திற்குப் பதிலாக இது போன்ற எளிய வழிகளைப் பிரபலப் படுத்த வேண்டும்.

இளமுருகு.


ஆசிரியருக்கு ,

திலகபாமா அவர்கள் நடத்திய சொல் புதிது விமரிசனக்கூட்டம் பற்றிய பதிவுகள் கண்டேன். நேர்மையான விமரிசனம்தான். ஒரு சிற்றிதழ் இளம்/ அறிமுக படைப்பாளிகளை போடாமலிருக்க முடியாது என்பது என் கொள்கை. வருவதில் சிறந்ததையே அப்போது தேர்வு செய்யமுடியும். சொல் பல புதிய படைப்பாளிகளை அறிமுகம் செய்துள்ளது

**

கடந்த இதழில் பல விஷயங்கள் கனமாக இருந்தன. அ முத்துலிங்கம் அவர்களது பேட்டி , அனேகமாக முதல் பேட்டி, முக்கியமானதென்றே எண்ணுகிறேன்.

ஜெயமோகன்


மஞ்சுளா நவநீதன் கட்டுரையில் பல தகவல் பிழைகள், குழப்பங்கள். (உ-ம்) பாண்டியன் ஹிந்துவில் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாக முகுந்த் பத்மனாபன், ரவிக்குமார் எழுதிய கட்டுரைகளை கணக்கில் கொள்ளவில்லை.தலித்-திராவிட-இடதுசாரி அறிவுஜீவிகள் பட்டியலில் அவர்கள் பெயரகள் இல்லையா.அது தவிர அஸ்கர் அலி இந்ஜீயர் பற்றி ஒரு குழப்பம் இருககிறது.அவர் ஒரு சீர்திருத்தவாதி, அதன் காரணமாக தொடர்ந்து அச்சுறுத்தல்களை சந்திப்பவர், அவரை கொல்ல முயற்சி செய்யப்பட்டது.நான் அறிந்த வரையில் அவரது நிலைபாடுகள் மஞ்சுளா குறிப்பிடும் கான்சா அயிலய்யா போன்றார் நிலைபாடுகளிலிருந்து மாறுபட்டவை.அஸ்கர் அலி இந்ஜீயர் மத நல்லிணக்கவாதி, இந்து மதத்தை வெறுமனே திட்டும் உள்நோக்கம் அற்றவர்.இந்துவில் யார் யார் எழுதுகிறார்கள்,என்ன கருத்துக்களை முன்வைககிறாரகள் என்பது தெரியாமல் எழுதுவது சரியல்ல.இந்துவில் அன்றெ பெத்யில்,டிபன்கர் குப்தா,லதா மணி,பானு ப்ரதாப் மேத்தா போன்றாரும் எழுதுகிறார்கள்.லதா மணியின் மதம்,ஆன்மிகம்,வாழ்க்கை குறித்த பார்வைகள் மிகவும் வித்தியாசமானவை..Ethnic Studies பற்றி இப்படி அபத்தமாக எழுதி இருப்பது அவர் ஏதோ அவசரகதியில் எதையும் சரிபார்க்காமல் எழுதியிருக்கிறார் என்று கருத இடமளிக்கிறது.ஒட்டுமொத்ததில் கட்டுரை பலவீனமாக உள்ளது.இதன் விளைவு அவர் சில கருத்துக்களை முன் வைத்தாலும் அவை அடிபட்டுப்போகின்றன. அவர் ‘விடலை ‘ விகடனையும் ஒழுங்காக வாசிப்பதில்லை, .இந்துவையும் தொடர்ந்து வாசிப்பதில்லை என்றே கருதுகிறேன்.இந்து எத்தனை முறை இந்தியாவின் சாதனைகளை பாராட்டி கட்டுரைகள்/தலையங்ககள் வெளியிட்டுள்ளது என்பது அதனை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரியும். பல ஆண்டுகள் அது அணுசக்தி துறைப் பற்றி (அ) இந்தியாவின் அணுமின் திட்டங்கள் பற்றி எந்த விமர்சன கட்டுரையும் வெளியிடவில்லை.1980 களில் இறுதியில்/1990களில் இந்த போக்கு மாறியது.இந்திய அணுக்கொள்கையின் விமர்சகர் ஒருவர், தான் இந்து தன் கட்டுரையை வெளியிடாவிட்டால் Press Council of India வில் புகார் கொடுப்பதாக கூறியபின் தான் தன் கட்டுரை வெளியானது என்று என்னிடம் ஒரு முறை கூறினார்.மஞ்சுளா நவநீதன் Economic&Politcal Weekly, Seminar,outlook போன்றவற்றை படிக்கிறாரா என்று தெரியவில்லை.தலித்-திராவிட-இடதுசாரி அறிவுஜீவிகள் பட்டியலை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

அரவிந்தன் நீலகண்டன எழுதிய கட்டுரைக்கு ‘எவ்விதத்திலும் தொடர்புடையவரும் அல்ல ‘ என்றால் ஞானி பெயர் அதில் ஏன் இடம் பெற

வேண்டும்,அதுவும் அத்தகைய பொருளில்.

கே.ரவி ஸ்ரீநிவாஸ்


மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

இந்த தேவையற்ற சர்ச்சை தொடரில் இதுவே எனது இறுதி உள்ளீடு. அதாவது திரு.ஞாநி எழுதுவதை தடுக்க நாக்பூர் அல்லது நாகர்கோவில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் உருவாக்கப்பட்ட அதி பயங்கர பாசிஸ்ட் சதியின் கடைசி கட்டம். (சதி உருவாக்கப் பட்டது நாகர்கோவிலா அல்லது நாக்பூரிலா என்பதனை ‘தாம்ப்சன் & தாம்சன் ‘ குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என நம்புகிறேன்) பாரத குடியரசுத் தலைவர் கலாம் அவர்கள் குறித்து. ஒருவர் ஒரு சமயத்தை சார்ந்தவர் என்பதாலேயே அவர் ஒரு குறிப்பிட்ட உடையைத்தான் அணிய வேண்டும் என்றும் அவர் காஞ்சி பீடாதிபதிக்கு நண்பராக (சீடராக அல்ல என்பது முக்கியமான விஷயம்) இருப்பதாலேயே அவர் பிராம்மணராக ஆசைபடுபவர் என்பதெல்லாம், ஒற்றைப் பரிமாண மனச் சித்திரங்களுக்கு அப்பால் எழ முடியாதவர்களுக்கு இயல்பான எண்ணங்கள். எனது இஸ்லாமிய நண்பர்களிடமிருந்து நான் இஸ்லாம் குறித்து அறிந்த அளவில் ஒரு இஸ்லாமியனின் வாழ்வு அனைத்து சமயத்தினரும் அவரிடம் மரியாதையும் அதன் மூலம் இஸ்லாமிய மார்க்கத்தின் மீது மரியாதையும் அன்பும் கொள்ளத்தக்க அளவில் இருக்கவேண்டும். இப்பார்வையில் குர்ரானின் மீது பெரும் மதிப்பை உருவாக்குபவையாக மிகப்பெரிய அளவில் ஹிந்து இளைஞர்களை சென்றடைந்திருக்கும் இரு நூல்கள் ‘அக்னி சிறகுகள் ‘ மற்றும் ‘எழுச்சி தீபங்கள் ‘. இதிலெல்லாம் எங்கே பிராம்மணனாகும் விழைவு கலாமிடம் தெரிகிறது ?

ஆனால் மார்க்சிய ஞா ‘ந ‘ திருஷ்டியில் (காமாலை பார்வையில் என்றால் ‘கல்லெறிடா! அவதூறா பேசுறான். ‘ என தோழர்கள் தேவையில்லாமல் உயர் இரத்த அழுத்தம் அடையக்கூடும்.) கலாமின் மேன்மை கூட சாதீய அடையாளங்களாக்கப்பட்ட சிலவற்றால் மட்டுமே அறிந்து கொள்ளப்பட்டு கொச்சையாக்கப்படுவதில் என்ன வியப்பு ? கைலி உடுக்காமல் வேட்டி உடுத்தால் ‘கால் முஸ்லீம் முக்கால் ஹிந்து ‘. அப்போது பிரெஞ்ச் தாடி வைத்த நபரெல்லாம் முக்கால் பிரெஞ்சா ? முழு பிரெஞ்சா ? முரண்பாட்டியங்கியலின் கிரக நிலைகள் என்ன சொல்கின்றன என்று குத்து மதிப்பாகவேனும் யாரவது ஞா ‘ந ‘ மகா சன்னிதானங்கள் சொல்ல வேணும்.) குரங்குகள் குறித்து திரு.ஞாநி ‘ஆதிவாசிகள் அவர்களுக்கு முன்பாக குரங்குகள் ‘ என்று கூறவில்லை. மாறாக ‘அநேகமாக ஆதிவாசிகளாகத்தான் அல்லது குரங்குகளாகத்தான் இருக்க முடியும். ‘ என்பதுதான் அவர் வார்த்தைகள். ‘அந்த இடத்தில் இருந்தது இராமனின் குடும்பத்தினர்களாகத்தான் அல்லது நாய்கள்களாகத்தான் இருக்க வேண்டும் ‘ என்று கூறுவதற்கும் ‘அந்த இடத்தில் இருந்தது இராமனின் குடும்பத்தினர் அதற்கு முன்னர் நாய்கள் ‘ என்று கூறுவதற்கும் சாதாரண தமிழில் நிச்சயமாக பொருள் வித்தியாசம் உண்டு அல்லது மார்க்சிய ஞா ‘ந ‘ பரிபாஷையில் அத்தகைய பொருட்பேதம் கிடையாதென்றால் அது இந்த ஹிந்த்துத்வ முழுமூட பாசிஸ்ட்டுக்கு புரியமுடியவில்லை ஐயா! மேலும் மதிப்பிற்குரிய கட்சி கார்டு இடதுசாரிகள் மற்றும் கட்சி கார்டில்லாத இடதுசாரி ஆதரவு ஞான/ந மகா சன்னிதானங்களுக்கிடையே ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கும் கூர்த்த மதியும் இந்த பாசிஸ்ட் மரமண்டை வாய்க்கப்பெறவில்லை.(நான் குமுதம் வாசகன் இல்லை பாருங்கள்) ஆனால் ஒன்று. எனக்கு வனவாசி கலாச்சாரத்தை நகர கலாச்சாரத்திற்கு கீழானதாக பார்க்கும் போக்கு அல்லது தத்துவத் தேவை கிடையாது. ஞாநி என்கிற தனிமனிதர் குறித்து எனக்கு தெரியாது. ஆனால் (மார்க்சிய கற்பனையில், ஐயோ போச்சு, மன்னிக்கவும், மார்க்சிய ஞான திருஷ்டியில், தோன்றும் ஆதிப்பொதுவுடமை ஈடன் தோட்டத்திலிருந்து மனிதன் தனிஉடமை எனும் பாவ கனி தின்று வெளியேறிய பின்,…ஆமாம், அதில் ஏவாளின் பங்கு என்ன ஞாநி ? இப்படிக்கேட்பதும் அவதூறென்றால்…சரி கேட்கவேயில்லை விடுங்கள்.) இனக்குழு மதிப்பீடுகளை காட்டிலும் நில உடைமை சமூக மதிப்பீடுகளும் அதனைக்காட்டிலும் தொழில்யுக மதிப்பீடுகளும் மேலானவை என்பது சித்தாந்த தேவை அல்லவா ? (இதுதானே திபெத்திய பெளத்த கலாச்சார துடைத்தெடுப்புக்கு சித்தாந்த நியாயமாக செயல்பட்டது, ரஷிய வைதிக தேவாலயங்கள் பல அழிக்கப்படவும் துணை போயிற்று) பின் இந்த எல்லா சமூகங்களிலும் பாலில் நெய் போல ‘மறைய நின்றுள ‘ முரண்பாட்டியங்கியல் இயங்கிக்கொண்டிருப்பதை அடையாளம் காண்பது தவிர வரலாற்றுக்கு வேறென்ன வேலை ? ஆனால் எனக்கு இந்த தேவை எல்லாம் கிடையாது . காமம் செப்பாது கண்டது மொழியும் சுதந்திரம் எனக்கு உண்டு. ஏனெனில் என் கருத்துலகை (அப்படி ஒன்று இருப்பதாக எனக்கு ஒரு நினைப்பு) உருவாக்கியது ஏங்கல்ஸ் அல்லவே சிம்பன்ஸிகளின் கட்டைவிரல் அசைவுகளால் சித்தாந்த அஸ்திவாரங்கள் உடைபடுவதற்கு. திரு. ஞாநி குரங்குகளிடம் மன்னிப்பு கேட்பதும் சரியானதே. பரிணாம அறிவியலை சித்தாந்தத்திற்கு ஏற்ப வளைக்க முயன்ற ஒரு கூட்டத்தின் பிரதிநியாக அவர் இப்போதே குரங்கினங்கள் ஒவ்வொன்றிடமாக மன்னிப்பு கேட்க ஆரம்பித்தால் விரைவில் சிம்பன்ஸிவரை வந்துவிடலாம். அப்புறம் என் மூதாதையரும் சரி வேறெந்த மனிதருடைய மூதாதையரும் சரி குரங்குகள் அல்ல. குரங்குகளுக்கும் மானுட இனத்திற்குமான பொது மூதாதையர் என்பதும் நாமும் குரங்குடனான ‘பிரைமேட்கள் ‘ என்பதும் பரிணாம அறிவியல் பாலபாடமாய் கூறும் உண்மைகள். ஒருவேளை லைசென்கோ கால சோவியத் நூல்கள் மூலம் தான் தாங்கள் அறிவியல் பயின்றீர்களா தோழர் என்று நான் கேட்டால் இந்த கடிதம் அவதூறு கடிதமாக மாறிவிடும். எப்படியோ வழக்கம் போலவே பாசிச சதி ஒன்றை கண்டுபிடித்து தோலுரித்து காட்டி இடதுசாரி மரபொழுக்கத்தை காப்பாற்றியிருக்கிறார் திரு.ஞாநி. தோழருக்கு வாழ்த்துக்கள், அதுவும் அசல் அக்மார்க் புரட்சிகர ‘லால் சலாம் ‘ வாழ்த்துக்கள். மேலும் ஒரு விஷயம். திரு.ஸ்ரீநிவாஸ் எந்த சாதியைச் சார்ந்தவர், அது அவரது உண்மைப் பெயரா அல்லது புனைப்பெயரா என எதுவுமே நானறியேன்.ஆனால் ஏதோ ஒரு கூட்டத்தினருக்கு மட்டுமே ஒரு சில விஷயங்களை பேச தகுதி இருப்பது போலவும் அல்லது சில விஷயங்கள் ‘peer-reviewed journal ‘கள் தவிர வேறு எங்கு உச்சரிக்க பட்டாலும் வேறெவரால் உச்சரிக்கப்பட்டாலும் அந்த விஷயங்களின் புனிதம் அழிந்து போய்விடும் அல்லது வட்டத்துக்கு வெளியே உள்ளவர்களால் அறிந்து கொள்ளவே முடியாது என்பது போலவும், (பாப்பரின் பெயரை செமினார்களுக்கு வெளியே கேட்பவர்களது காதில் ஈயத்தை காச்சி ஊற்ற வேண்டும் என்பது மட்டும் அவர் சொல்லவில்லை அவ்வளவுதான்) மேலும் சில இடதுசாரி அதிதேவதைகளை விமர்சித்தாலே அது தெய்வநிந்தனை என அறிந்து கொள்வதுமாக ஒரு மார்க்சிய சித்தாந்த பெரும் அர்ச்சகராக அல்லது மகா சன்னிதானமாகும் தன்மையுடன் திகழ்பவர் என்பதை குறிக்கவே அந்த ‘அவாள் ‘.

எஸ். அரவிந்தன் நீலகண்டன்


Series Navigation