ஈராக் போர்- நான்ஜிங் படுகொலை (சீனா)

This entry is part [part not set] of 38 in the series 20030419_Issue

ஸ்ரீதா


ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா. உருவத்தை பார்ப்பவன் மனிதனடா,அதில் உள்ளத்தை பார்ப்பவன் இறைவனடா.உண்மை தான்.மனிதர்களின் சமுதாயத்தில் இப்போதுள்ள அந்தஸ்து மாத்திரம் பார்கிறோமே தவிர , அது நல்வழியில் வந்ததா, தீய வழியல் வந்ததா என்றெல்லாம் பார்ப்பதில்லை.பல நடிகைகளை திரையில் பார்த்து, கோயில் கூட கட்ட தயாராக இருக்கிறோமே தவிர, திரைக்குப் பின்னால் , அந்த வாய்ப்பைப் பெற , அவர்கள் என்ன செய்திருந்தாலும் நாம் கவலைப்படுவதில்லை.இதைப் போலவே நாடுகளைப் பற்றிய நமது கண்ணோடமும். பணக்கார நாடுகளை,கண்மூடித் தனமாக,நடிகைகளை ஆராதிப்பது போல், ஆராதிக்கிறோம். அவர்களின் பணம்,மக்களின் இரத்தத்தில்,வியர்வையில் நனைத்து எடுத்திருந்தாலும் கவலையில்லை. பணக்கார நாடுகள், நமக்கு எவ்வளவோ நன்மைகள் செய்யும் என்று நம்பினால், அதுவும் பெரிய மீன் சின்ன மீனை விழுங்கிய கதையாக இருக்கிறது. சரித்திரம் சொல்கிறது,பேராசைக்காரர்களிடம் அதிகாரமிருந்தால், அது குரங்கு கையில் உள்ள பூ மாலை போல் சிதைக்கப் படுமென்று. அதாவது இப்போது புஷ்ஷிடம் உள்ள அதிகாரம் போல.போருக்கு உண்மையான காரணம் ஆயில் என்றாலும்,சொல்வதென்னவோ மனித உரிமையும்,சுதந்திரமும்,பேரழிவு ஆயுதமும் தான்.ஆனால் இதுவரை, பேரழிவு ஆயுதங்களை புஷ் பயன்படுத்தியதாகத் தெரிகிறதே தவிர,சதாம் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை.கனடா அமைச்சர் கூட புஷ்ஷை STATESMAN இல்லையென்று சொன்னார்.கேக்கிறவன் கேனயணாக இருந்தா,எருமை கூட ஏரோப்ளான் ஓட்டுமாம்.புஷ் இப்போது ஓட்டுகிரார்.முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு,அமெரிக்க மக்களிலிருந்து,அனைத்துலக மக்களும்,அமெரிக்க செனட்டர்கள்,கம்யுனிஸ்டுகளிலிருந்து பிஜேபி வரை,அனைவரின் கருத்துக்களும்,எதிர்ப்புகளும்,செவிடன் காதில் ஊதின சங்காயிருச்சு.தூங்குகிறவனை எழுப்ப முடியும்,தூங்குவதாக நடிப்பவனை எழுப்ப முடியுமா ?

சரித்திரத்தை திரும்பிப் பார்க்கும் போது, மூலப் பொருள்களுக்காக (RAW MATERIALS) ஜப்பான் சீனா மீது போர் தொடுத்ததை எண்ணிப் பார்க்கிறேன்.அதிலும்,நான்ஜிங் படுகொலை,அந்த நினைவகத்தை கண்ணால் பார்த்தேன். இதயம் முழுக்க சொல்லவொண்ணா வேதனையும்,சூன்யமும் சூழ்ந்து கொண்டது.புத்தர் பிணி,மூப்பு,சாக்காடு இவைகளைப் பார்த்து அரச வாழ்க்கையைத் துறந்தார்.ஆனால் அவர் நான்ஜிங் படுகொலையைப் பார்த்திருந்தார் என்றால்,ஒரு சமயம் அவர் கூட கைகளில் ஆயுதம் ஏந்தி போராடி இருக்கலாம். ஆமாம் அவ்வளவு கொடுமையானது இந்தப் படுகொலை.சரித்திரத்தில் CONVENTIONAL WEAPONS பயன் படுத்தி செய்யப்பட்ட எல்லா படுகொலைகளையும் விட நான்ஜிங் படுகொலை பயங்கரமானது.ஆறே வாரத்தில் மூன்று லட்சம் மக்களுக்கு மேல் படுகொலை செய்யப்பட்டனர்.வேறெங்கும் இது போல் நடந்ததிலை. நமது இந்தியாவில்,ஜுலியன்வாலாபாக் படுகொலை கூட, ஆங்கிலேயர்களால் சட்டம்,ஒழுங்கைக் காக்க செய்யப்பட்டது என்றார்கள்.ஈராக்கில் குண்டு மழை பொழியும், குண்டு மழை மன்னன் புஷ் கூட, மனித உரிமை,சுதந்திரத்தைக் காக்க குண்டு மழை பொழிந்ததாகக் கூறுகிறர்.சிலுவைப் போர் என்று இவர் சொல்வதைக் கேட்கும் போது,நாளை இவர், ஏசு பெருமான் இவரிடம் ஈராக்கில் நீ குண்டு போடு, உனக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று சொன்னார், என்று சொன்னாலும் ஆச்சரியப்ப்டுவதற்கு ஒன்றுமில்லை.புஷ்ஷிற்கும்,அவரது CORPORATE கூட்டத்திற்கும், பூலகிலேயே சொர்க்கத்தை அனுபவிக்க வேண்டும் என்ற பண வெறி, பலிகிடாவானதோ ஈராக்கும்,அமெரிக்க மக்களும்,உலகமும் தான். புஷ்ஷை சொல்லியும் குற்றமில்லை.நாம் மருந்துக்கடை வைத்திருந்தால் மருந்து விற்க தானே பார்போம்.மற்றவர்களுக்கு மழை பெய்து,சளி,ஜுரம் வந்து SEASON சரியில்லை என்று சொன்னால் நமக்கு நல்ல SEASON என்று சொல்வோம்.அது போலத்தான் புஷ்ஷின் ஆயில்,ஆயுதக் கடைக்கும்.புஷ்,துணை ஜனாதிபதி, கேபினெட் மெம்பர்கள்,இராணுவ ஆலோசனைக் குழு என்று அனைவரும் ஆயில்,ஆயுதக்கம்பெனிகளில் சம்மந்தப்பட்டவர்களாகவும்,சிலர் இன்றும் பங்குதாரார்களாக இருக்கிறார்கள்.வியாபாரிகள் வியாபாரம் செய்வது இயற்கை தான்.ஆனால் அதற்காக ஈராக் போரை வேண்டுமென்றே உருவாக்கி, உயிர்களை,பொருள்களை,தாய்,தந்தை,மகன்,மகள்,மனைவி,கணவன்,குழந்தை இவர்களின் அன்பான உறவுகளை அழித்து,அந்த சாம்பலின் மேல்,பணக்கோட்டையைக் கட்டுவது,வியாபாரமாகாது.இது GENOCIDE ஆகும்.இது இன்று தொடங்கப்பட்டதல்ல,அமெரிக்க பொருதாராளத்தடை, லச்சக்கணக்காண ஈராக்கிய குழந்தைகளுக்கு,உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்காமல் செய்ததால், அவர்களை வாழ வழியில்லாமல் செய்ததால், இறந்தனர். அதே அமெரிக்க அரசாங்கம் ஈராக்கிய மக்களை வாழ வைக்கப் போகிறதாம்.ஆடு பலி வாங்கும் பூசாரியை நம்புவதைப் போலத்தான்,இப்போதைய அமெரிக்காவை நம்புவதும்.இன்றைய அமெரிக்கா பின் லேடனுக்கு,முன் லேடனாகவும்,சதாம் கொலைகாரன் என்று சொன்னால்,ஈராக் நாட்டு லட்சக் கணக்காண இளந் தளிர்களுக்கு , உயிர் காக்கும் மருந்துகள் கூட, பொருளாதரத் தடையால்,கிடைக்க விடாமல் செய்து, அவர்களை கருக்கி, வெள்ளை மாளிகையை கருப்பு மாளிகையாக்கிய புஷ்ஷும் அவரது அரசாங்கமும்,சதாமின் தாத்தா ஆவார்கள்.

1937 டிசம்பர் 13, ஜப்பானியப் படைகள் நான்ஜிங் நகருக்குள் நுழைந்தது.எமலோகமே நுழைந்தது என்று சொன்னாலும் மிகை அல்ல. நான்ஜிங் நகரம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரம். ஆறு அரச வம்சத்தினர் ஆண்ட செழுமையான நகரம். அதை ஆறே வாரத்தில் நரகமாக்கிய பெருமை ஜப்பானியர்களையே சாரும். மூன்று லட்சம் மக்களுக்கு மேல் கொல்லப்பட்ட்னர். இருபதாயிரம் பெண்கள் கற்பழிக்கப்பட்டதாகப் புகார் செய்தனர்.பலர் COMFORT WOMEN ஆக சிதைக்கப்பட்டனர்.ஆயிரக்கணக்காண பெண்கள் கற்பழிக்கப்பட்டு,கொல்லப்பட்டனர்.இந்த கொடுமைகளை அறியாத ஜப்பானிய மக்கள்,ஜப்பானிய படைகள் நான்ஜிங் நகருக்குள் முன்னேறியதை , டோக்கியோ நகரமெங்கும் கொண்டாடினர்.வெட்கப்படவேண்டியதை வெட்கமின்றி கொண்டாடினர். அப்போதைய ஜப்பானிய மக்களின் அறியாமையை விட,இப்போதய அமெரிக்கர்களின் அறியாமை தேவலை.என்ன தான்,அமெரிக்க டி.வி,பத்திரிக்கைகள் முயலுக்கு மூன்று கால், என்று சத்தியம் செய்தாலும்,நம்பாத தெளிவான,நல்ல,மனித நேயத்தை நம்பும் அமெரிக்க மக்கள் பலர் இருகிறர்கள்.அவர்கள் ஈராக் போருக்கு எதிர்ப்பும் தெரிவிக்கிறார்கள்.போர் எதிர்ப்பு தெரிவித்ததற்காக சிலர் சிறையிலும் தள்ளப்படுகிறர்கள்.போர் எதிர்ப்பு தெரிவித்ததற்காக சிறையில் தள்ளும் ஒரே நாடு, ஜனநாயக அமெரிக்கா தான்.என்ன ஜனநாயகமோ!பத்திரிக்கை சுதந்திரமோ! அந்த ஆண்டவணுக்கே வெளிச்சம்.

சீன மக்கள் இந்த அளவு படு கொலை செய்யப்படுவதற்கு, என்ன தவறு தான் செய்தார்கள் ? அவர்கள் செய்த தவறே,உலகிலேயே மூன்றாவது பெரிய நாடாகவும்,பூமிக்கடியில் பல செல்வங்கள் உள்ள நாட்டில் பிறந்தது தான்.ஜப்பானியர்கள் சீனாவிலிருந்து சென்றவர்களென்றும்,சீன மொழி, உணவு உண்ண பயன்படுத்தும் குச்சி, மற்றும் பலவற்றை சீனர்களிடமிருந்து காப்பியடித்து,தங்களுக்கு தகுந்த மாதிரி மாற்றிக் கொண்டார்களென சொல்லப்படுகிறது.நான்ஜிங்கில் கொல்லப்பட்ட உடல்களை, அடக்கம் கூட செய்யாமல்,சில இடங்களில் 2 மாதம் வரை,சுகாதாரக் கேட்டின் அபாயம் சொல்ல வேண்டியதில்லை.தொண்டு நிறுவனங்களும், சில நபர்களும் தான் கூட்ட்ம்,கூட்டமாக அடக்கம் செய்தார்கள். குலை நடுங்கும் கொடூரத்தைச் செய்த ஜப்பானியர்களுக்கு என்ன நாட்டுப் பற்றோ தெரியவில்லை.சாமி, இந்த மாதிரியான நாட்டு பற்றும்,சுதந்திரமும்,மனித நேயமும் , வேண்டவே வேண்டாம்.நம்மை யாரவது இந்த மாதிரி உபயோகிக்க முயற்சி செய்தால்,புறக்கணிப்போம், ஓடியே விடுவோம்.

நான்ஜிங் படு கொலையிலிருந்து உலகம் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை.இப்போது இராக் போர். நாளையும் ஹிட்லர்,புஷ் போன்ற பேராசை மனிதர்கள் பிறக்கலாம்.காட்டுச் சட்டத்திற்கு, சுதந்திரம்,மனித நேயம்,நாட்டுச் சட்டம் என்று முலாம் பூசி ,உலகத்தை குரங்கு கையில் உள்ள பூ மாலையாக சிதைக்கலாம்.மக்கள் இவர்களின் மாய ஜாலா வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் சுயநலம்,கொடூரத்தை உணர்ந்து,அவர்களை ஒதுக்கினால்,நாளைய நமது சந்ததியர்களுக்கு இந்த உலகம் அமைதிப் பூங்காவாக மாறும்.இல்லையேல் பாலைவனமாக,முற் புதர்களாக மாறும். எனக்கொன்று புரியவில்லை.ஒரு சில நபர்கள்,ஒரு சில நாடுகள், இவர்கள் தான் உலகத்தைப் படைத்தவர்களைப் போலவும்,இவர்கள் மாத்திரமே உலகத்தை அனுபவிக்க உரிமையுள்ளவர்கள் போலவும் நினைத்து, செயல்பட்டு,மக்களை வறுத்து எடுக்கிறார்கள்.பாதிக்கப்பட்ட மக்களே,இவர்களின் பகட்டுக்கு பின்னால்,நமக்காகவே வாழும் அப்பா,அம்மா,குடும்பம் எல்லாவற்றையும் விட்டு விட்டு, பகட்டான அரசியல் வாதிகள்,ஆன்மீக வாதிகள்,நடிகர்கள், நடிகைகள் பின்னால் சென்று,வாழ்க்கையைத் தொலைப்பது,அழகான, கொத்தான மலர்கள் கையில் இருக்க,காகிதப் பூக்களுக்கு அலைவதைப் போலல்லவா இருக்கிறது.

முடிவில் சீனா ஜப்பானை போரில் வென்றது.ஜப்பானியர்கள் போர் குற்றங்கள் புரிந்ததற்காக , நேச நாடுகள் பங்கேற்ற நீதி மன்றத்தில்,மரண தண்டணை வரை, தண்டணை கொடுக்கப்பட்டது.நான்ஜிங் நினவகத்தில்,இறந்தவர்களின் எலும்புகளுடன்,துப்பாக்கி குண்டுகளும், மேலும் கத்தி,துப்பாக்கி போன்றவற்றை உபயோகித்ததற்கான எலும்புகளின் மீது அடயாளங்களும் பார்க்கும் போது, நெஞ்சு பதை பதைத்து,மூச்சு முட்டுகிறது.நான் இந்தக் கொடூரங்களைக் காண சகிக்காமல்,எவ்வளவு சீக்கிரம் நினைவகத்திலிருந்து வெளியேற முடியுமோ,அவ்வளவு சீக்கிரம் வெளியேறினேன்.மீண்டும் நான்ஜிங் நினைவகத்தை பார்த்து,தாங்கும் சக்தி மனதிற்கில்லை.அங்கே எழுதியுள்ள வாசகம்,மீண்டும் சீனாவில் இது போன்ற கொடுரங்கள் நிகழாமலிருக்க,சீனாவை வலிமையுள்ள நாடாக மாற்ற வேண்டும் என்பது தான்.இது சீனாவிற்கு மட்டுமல்ல,எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்.சீனா மிகப் பெரிய அவமானங்களிலிருந்த்து பாடம் கற்றுக் கொண்டு, வலிமையான நடாக மாறியுள்ளது.மிகப் பெரிய அவமானங்களை சந்திக்கும் நாடுகள், சுய மரியாதையுடன்,நாட்டுப் பற்றுடன்,மனித நேயத்துடன்,பணக்கார நாடுகளின் பின் செல்லாமல்,தமது நாட்டிற்கு தகுந்தவாறு பாதை வகுத்துச் சென்றால், வலிமையுள்ள நாடாக மாறலாம் என்பதற்கு சீனா உதாரணமாகும்.

சீனாவில் மிகையான கலாச்சார புரட்சியால்( EXCESSIVE CULTURAL REVOLUTION) மக்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள்,வாழ்க்கைத் தரம்,பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னேற்றமில்லை.பின்னர் சோஷலிஷ மார்க்கெட் பொருளாதாரத்தில் தான், மக்கள் வாழ்க்கைத் தரமும்,பொருளாதாரமும் முன்னேறியது.இன்று உலகிலேயே பொருளாதாரத்தில் இரண்டாவது இடத்தையும், விரைவில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளும் நிலையில் உள்ளது.உலகில் பொருள்கள் உற்பத்தியில் நான்காவது இடத்தையும் , உலக வர்த்தகத்தில் 10% ஐயும் பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் VETO POWER உள்ள ஐந்து நாடுகளில் சீனாவும் ஒன்று.மனித உரிமையும், சுதந்திரமும், மத சுதந்திரமும் பல நாடுகளை விட இங்கு அதிகம். ஆப்கனிஸ்தானில் புத்தர் சிலை இடிக்கப் படும் போது, சீனாவில் கட்டப் படுகிறது.அயோத்தி பிரச்சனையும்,குஜராத்தும்,அமெரிக்காவில் cult என்று சொல்லப் படுகிற மத வெறிக் கும்பலும் இங்கு இல்லை. குற்றங்களும், பொருளாதார குற்றங்களும் அதிகரித்துள்ளது.இவை பொருளாதார வளர்ச்சியை,மக்கள் தொகை இவற்றைக் கணக்கிலெடுத்தால்,குறைவென்றலும்,இதுவும் நல்லதற்கல்ல.குற்றம் செய்து பிடிபட்டால் இங்கு தப்பிக்க முடியாது.நம்ம ஊர் மாதிரி போலீஸ் பிடித்துக் கொண்டு போகும் போது,கூலிங் கிளாஸ் போட்டு, கையசைத்து,பிக்னிக் மாதிரி உள்ளே போய்,வெளியே வருவது,இங்கு நடக்காது.உலகிலேயே முதலாவது மக்கள் தொகை கொண்ட நாடு, மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை எளிமைப் படுத்தியதைப் பார்க்கும் போது,ஆச்சரியமாக இருக்கிறது.ஒன்று புரியவில்லை,பணக்கார நாடு என்று சொல்லப் படுகிற அமெரிக்காவில்,ஏன் இன்னும் 35 மில்லியன் அமெரிக்கர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கிறர்கள் என்று!அமெரிக்கர்கள் பிச்சை எடுத்தாலும் சரி, ஆங்கிலத்தில் பேசி பிச்சை எடுத்தால்,அவன் நமது டாட்டா,பிர்லாவை விட உயர்ந்தவன் என்று நினைக்கும் சுய மரியாதையில்லா,தாழ்வு மனப்பான்ையுள்ள மக்களால் தான்,நாடு அடிமையாகிறது.சீனா இன்று உலக நாடுகளுடன் சரி சமமாய் அமர்ந்து பேசலாம்.ஆனை எறும்பை மிதித்து, வீரத்தை நிரூபிப்பது போல,அமெரிக்கா ஈராக்கிடம் வீரத்தைக் காட்டும் கதை எல்லாம்,கனவிலும் சீனாவிடம் நடக்காது.இரண்டு நாடுகளிடம் உள்ள அனு ஆயுதங்களை உப்யோகித்தால்,இரண்டு நாடுகளும் வரை படத்தில் இருக்காது என்பதே உண்மை.பயணங்கள் நமக்கு சத்தியத்தை சொல்லித்தரும் ஆசான் என்பது மிகையல்ல.நான் கண்ணால் பார்த்த சீனா சொர்க்கமும் அல்ல,நரகமும் அல்ல,சமுக,அரசியல்,பொருளாதார ஸ்திரத்தன்மையுள்ள நாடு என்பதே உண்மை.

ஆனால் இன்று வலிமையற்ற நாடுகள் தான் அதிகம்.ஒவ்வொரு நாட்டிற்கும், அதற்கென்று நம்பிக்கைகள், வாழ்க்கை முறை ,உணவுப் பழக்கங்கள் உள்ளது.அங்கு செல்வம் இருக்கும் போது, அதைக் கொள்ளை அடிக்க, அவரது நம்பிக்கைகள்,வாழ்க்கை முறை எல்லாம் கீழானது,சுதந்திரமற்றது என்று காரணம் சொல்லி,படை வலிமையால் அந்த நாடுகளை அழித்து,செல்வத்தை கைப்பற்ற இப்போது அமெரிக்கா நினைப்பது போல், பேராசைக்காரர்கள் மறுபடியும் நினைக்கலாம்.சரித்திரத்தில் இன்று முளைத்த நாடுகள்,மரமாயுள்ள நாடுகளிடமிருந்து அந்த நாடுகளின் அனுபவங்கள்,பண்பு,கலாச்சாரம் கற்பதை விட்டு விட்டு, அவர்களுக்கு சொல்லித் தர முயல்வது, பேராசியருக்கு, எல்கேஜி படிக்கும் மாணவன் பாடம் சொல்லி கொடுத்து , மதிப்பெண் போடுவதைப் போல இருக்கிறது.நான்ஜிங் படுகொலையிலிருந்து,இரண்டாம் உலகப்போரிலிருந்து உலகம் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை.பிரச்சனைகளின் கிளைகளை மாத்திரம் முறித்து, வளர விட்டு,பின்னர் முறித்து , இனி இந்த அரை வேக்காடான வேலையே வேண்டாம்.பிரச்சனைகளின் ஆணி வேரைப் பிடுங்குவோம்.இயற்கையாகவே எந்த நாடும்,மக்களும், மற்ற நாடு, மக்களை விட உயர்ந்தவர்கள் அல்ல.அவ்வாறு நினைப்பது மாயை.இன்று ஒருவன் கண்டுபிடிப்பது, நாளை மற்றொருவனால் கண்டுபிடிக்கப்படும்.சிறிது காலம் பிடிக்கும், அவ்வளவு தான்.சரித்திரத்தில் எந்த நாடும், எப்போதும் வலிமையாகவோ, வளமையாகவோ இருந்ததில்லை.18 ஆம் நூற்றண்டில் இந்தியாவும்,சீனாவும் உலக வர்த்தகத்தில் 40% தக்க வைத்திருந்தது.இப்போதய நிலை தான் என்ன ?

சீனா 10,000 கிமீற்கும் நீளமான பெருஞ் சுவற்றைக் கட்டியது, எதிரி படைகளிலிருந்து நாட்டைக் காப்பாற்ற.இன்று அது கடுகளவு கூட நாட்டை காப்பாற்றாது எனபது உண்மை.சின்ன காம்பவுண்ட் சுவர் கட்டவே ஆயிரக்கணக்கில் செலவாகிறது என்றால்,அவ்வளவு நீளமானதுவும்,போர் வீரர்கள் படைக் கருவிகளுடன் மேல் நின்று போர் புரிய கட்டப்பட்டிருக்கும் பெருஞ்சுவருக்கு எவ்வளவு பொருட் செலவு,காலச் செலவு, மனித சக்தி விரயம், கஷ்டங்கள், அப்போது நாடுகள் ஒன்று கூடி பேசி, இதை உணர்ந்திருந்தால், மக்களனைவரும் போர் இல்லாமல், அமைதியாக செழுமையாக வாழ்ந்திருக்கலாம்.இன்றும் அதே நிலை தான்.புஷ் NMD( NATIONAL MISSILE DEFENCE) தேவை என்று சொல்லி செலவிடுகிறர், வாழ்வின் இயற்கையை உணராமலே.இந்த NMD க்கும் மற்ற ஆயுங்களின் கதி தான்.நிரந்தர தீர்வு கையில் இருக்கும் போது, அதை விட்டு விட்டு அலைவது,சாப்பிடக் கையில் வெண்ணை இருக்கும் போது,சாப்பிடாமல், சாப்பிட சுண்ணாம்பிற்காக அலைவதைப் போல இருக்கிறது.பேரழிவு ஆயுதங்கள் ஆராய்ச்சி இந்த நிமிடமே நிறுத்தப் படட்டும்.பிறகு பேரழிவு ஆயுதங்கள் கொஞ்சம், கொஞ்சமாக அழிக்கப் படட்டும்.அதே சமயத்தில் நாடுகளுக்கான பிரச்சனைகளை, மனம் திறந்த பேச்சு வார்த்தைகளின் மூலம் தீர்க்கப்படட்டும்.இராணுவத்திற்காக செலவிடும் , மக்களைக் கொல்வதற்காகப் பயன்படும் செலவை, மக்கள் வாழ்வதற்காக செலவு செய்தால்,உலக மக்கள் அனைவரும் பசியில்லாமல், பள்ளிக்கூடங்களுக்கு சென்று, வீடுகளில் வாழ்ந்து,சுகாதாரத்தோடு, அடிப்படைக் கவலைகள் மறைந்து, குற்றங்கள் குறைந்து,சுதந்திரத்தோடு, மனித நேயத்தோடு,மகிழ்ச்சியாக,சண்டை சச்சரவு இன்றி, அமைதியாக வாழ முடியும். அமைதியைக் குலைக்கும் எந்த செயல்களையும் நாம் புரிந்து கொண்டு ஒதுக்க வேண்டும். பாதி உலகம் வென்ற அலெக்சாண்டர் கூட, பரலோகம் செல்லும் போது,பரதேசியாய் , கைகளில் ஒன்றும் எடுத்துச் செல்லவில்லை.ஏன், ஹிட்லர்,புஷ் போன்ற பேராசைக் காரர்களுக்கு இதுவும் கூட தெரியவில்லை! நாம் அனைவரும் இயற்கையின், கடவுளின் குழந்தைகளே.ஈராக் போர்,நான்ஜிங் படுகொலை போன்ற கொடுமைகள், மறுபடியும் நிகழாமலிருக்க, கடவுளின் வழி, இயற்கையின் வழி, அந்த அன்பு வழியில் நடப்போம்.

sridhasridha@yahoo.com

Series Navigation

ஸ்ரீதா

ஸ்ரீதா