என்ன ஆனது இந்த எழுத்தாளர்களுக்கு ?

This entry is part [part not set] of 38 in the series 20030419_Issue

எஸ் அருண்மொழிநங்கை


ஒரு எளிமையான வாசகி என்ற நிலையில் தற்கால தமிழிலக்கியத்தினை பார்க்கும்போது சலிப்பும் சிலசமயம் எரிச்சலும் உண்டாகிறது. இலக்கியம் வாசிக்க ஆரம்பித்த ஆரம்ப காலத்தில் இலக்கிய வாதிகள் எல்லாரும் இலட்சியவாதிகள், அறிவார்ந்த செயல்பாடு கொண்டவர்கள் என்று எண்ணினேன். தொடர்ந்த பழக்கம் மூலம் இந்த பிம்பம் கலைந்தது. வீட்டுக்கு வரும் பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் அலுப்பூட்ட்க் கூடியவர்களாக இருக்கிறார்கள். அதேசமயம் வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் ஆர்வம் ஊட்டுகிறார்கள் .

ஏனென்றால் தனித்தன்மையும் திறமையும் உடைய எழுத்தாளர்கள் குறைவு .இந்த விஷயம் பிற அனைவரையும்விட அவர்களுக்கே மிகவும் தெரியும். ஆகவே அவர்கள் தன்னம்பிக்கை குறைவானவர்களாகவும் அந்த விஷயத்தை மறைப்பதற்காக வேஷம் போடுபவர்களாகவும் இருக்கிறார்கள். வியாபாரிகளைப்போல அந்த வேஷத்தை சரிவர போடவும் இவர்களுக்கு தெரிவதில்லை ஆகவே அசட்டுத்தனம் வெளியே தெரிகிறது,.

எழுத்தாளர்களின் தன்னம்பிக்கைக் குறைவு எப்படி வெளித்தெரிகிறது ? எழுத்திலே மிக வெளிப்படையாக புதுமைகள் செய்ய முயற்சிகள் செய்வது அது என்று எனக்கு படுகிறது. தன்னுடை சுய இயல்பும் தான் எழுதப்போகும் விஷயமும் ஒருவருடைய நடையையும் இயல்பையும் தீர்மானிக்கலாம். ஆனால் தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் மேலைநாட்டு எழுத்துக்களைப் பார்த்துத்தான் புதிய முறைகளை எடுத்துக் கொள்கிறார்கள்.சிற்றிதழ்களில்வரும் பெரும்பாலான மொழிபெயர்ப்புக்கதைகள் மேலைநாடுகளில்ரசிக்கப்பட்ட சிறந்த கதைகள் அல்ல. புதிய உத்தி உள்ள சராசரி கதைகள் மட்டும்தான் .அவற்றைப்பார்த்து இங்குள்ளவர்கள் எழுதுவதனால் தமிழ் சிற்றிதழ்களில் மனதை தொடும் கதைகளை படிக்க முடியாமலாகிவிட்டிருக்கிறது.

புதிய உத்தி புதியநடை முதலியவற்றினை அதேபோல எழுதும் வேறு எழுத்தாளர்களோ விமரிசகர்களோ பாராட்டலாம். வசகர்களைப் பொறுத்தவரை எழுத்து தனது வாழ்க்கையை எப்படி விளக்குகிறது என்பதுதான்முக்கியம். தமிழ் இலக்கிய எழுத்து என்று சொல்லப்படுவற்றில் அப்படி நமது மனதை பாதிப்பவை மிகவும் குறைவே. பெரும்பாலான எழுத்துக்களை புதிதாக இருக்கிறது என்றுதான் நாம் கவனிக்கிறொம்.

இதற்குக் காரணம் பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப்பற்றிய அக்கறையோ வேறு அறிவுத்துறைகளில் ஆர்வமோ கிடையாது என்பதுதான். இலக்கிய உத்தி , இலக்கிய வம்பு இரண்டும்தான் இங்கே மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது. உலகில் உள்ள சிறந்த எழுத்தாளர்களுக்கு அரசியல்சித்தாந்தம் , தத்துவம், அறவியல்[ எதிக்ஸ்] போன்ற பிற துறைகளில் பரந்துபட்ட வாசிப்பும் ஆர்வமும் உள்ளது. இலக்கியவாதிகளுக்கு வரலாற்றில் ஆர்வம் இல்லமலிருக்கவே கூடாது. நான் படித்தது தொழில்நுட்பக் கல்வியான வேளாண்மை அறிவியல்.அதில்க்கூட தத்துவம் அறவியல் ஆகிய இரண்டும் அவசியம் தேவை என்று ஆசிரியர்கள் கூறுவார்கள். தமிழ் இலக்கியவாதிகளுக்கு தமிழ்நாட்டின் பிரச்சினைகளைப்பற்றிய ஆர்வமோ அறிவோ இல்லை .இலக்கிய இதழ்கள் என்று சொல்லப்படும் இதழ்களில்கூட உத்தி வம்பு என்ற இரு அம்சங்களே காணப்படுகின்றன.

ஆகவேதான் வேறு எந்த மொழியையும்விட அதிகமாக இங்கே உள்ளே ஒன்றுமில்லாத உத்திமட்டுமே உடைய எழுத்து காணப்படுகிறது. தன்னம்பிக்கையே இல்லாத இளம் எழுத்தாளார்கள் பிறர் எல்லாரும் எதை எழுதுகிறார்களோ அதையே எழுத முற்படுகிறார்கள். வண்ணதாசன் நாஞ்சில்நாடன் முதலியோர் படைப்புகளில் காணப்படும் வாழ்க்கைமீதான கவனிப்போ கலைரீதியான விமரிசனமோ கோணங்கி பா வெங்கடேசன் போன்றவர்களின் எழுத்திலே இல்லை.மொழியை வைத்து களைப்படையசெய்கிறார்கள் இவர்கள்.

தன்னம்பிக்கைக் குறைவின் இன்னொரு அடையாளம் எழுத்துக்கு வெளியே ஒரு இமேஜை கட்டி எழுப்ப முயற்சி செய்வது . இலக்கியக் கூட்டங்களில் இதற்கான முயற்சிகளைப் பார்ப்பது வேடிக்கையாக இருக்கும். வெளிநாட்டுப் பெயர்களை உதிர்ப்பது பழைய ஃபேஷன். இப்போதெல்லாம் குடித்துவிட்டு வந்து பெரிய கலகக் காரர்கள் போல நடிப்பதுதான் புதுமை. மனைவி குழந்தைகளை தவிக்கவிட்டு குடிப்பதிலும் பிரச்சினை வந்தால் பதுங்கிக் கொள்வதிலும் அப்படி என்ன கலகம் இருக்கிறது ? படிக்கத் தேவையில்லை எது எளிதாக இருக்கிறதோ அதைச் செய்கிறோம் என்ற வசதி.

இப்போது இந்தக் கலகத்துக்கும் குமுதம் விகடன் வழியாக விளம்பரம் தேடிக் கொள்ளும் போக்கும் உருவாகியுள்ளது. விளம்பரத்துக்காகவே கலகம் செய்வதாக இது மாறிவருகிறது. சென்ைனையில் சிலர் ஒரு கவிதை வெளியீட்டு விழாவை ஓடும் ரயிலில் இருந்து கூவத்தில் விட்டெறிந்து நிகழ்த்தினார்கள் என்று குமுதத்தில் செய்தி வந்தது. இலக்கியம் வணிகமயமாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இதைச் செய்தார்களாம். ஆனால் குமுதம் இதழில் வேலைபார்க்கும் நண்பரை வரவழைத்து அவர் குமுதத்தில் இதைப்பற்றி எழுதும்படி கவனம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே ஓர் இலக்கியக் கூட்டத்தை சிலர் ரயிலிலேயே நடத்தியபோதும் இதைத்தான் செய்தார்கள்.

இது மலிவான விளம்பர உத்தி மட்டும்தான் என்பது இச்செய்தியை படிப்பவர்களுக்கு உடனே தெரிந்துவிடும். பத்துபேர் ரயிலில் ஒரு புத்தகத்தை பற்றி பேசினாலோ குடித்துவிட்டு அதைத் தூக்கி கூவத்தில் வீசினாலோ என்ன நடக்கப் போகிறது ? அதை குமுதத்தில் வெளியிடச் செய்வதில்தான் சூட்சுமம் உள்ளது என்பது சம்பந்தப்பட்டவ்ர்களுக்கு ந்னறாக தெரிந்திருக்கிறது.

பலவருடங்களுக்குமுன்பு ஒருமுறை சில மரபுக் கவிஞர்கள் மிதக்கும் கவியரங்கம் என்று சொல்லி படகிலிருந்து கவிதை வாசித்து அதை செய்தியாக்கினார்கள். அதே உத்திதான் இவையும். சினிமா நடிகர்களை ஏன் கவிதை வெளியிட அழைக்கிறார்கள் ?பிரபல இதழ்களில் செய்திவரும் என்றுதானே ?இங்கும் அதே உள்நோக்கம்தான் உள்ளது. பிரபல இதழ்கள் எழுத்தாளர்களை குடிகாரர்கள் மடையர்கள் வம்பு பேசுபவர்கள் என்று சித்தரிக்க விரும்புபவை. அதை அறிந்துகொண்டு அதன்படியே ‘போஸ் ‘ கொடுக்கிறார்கள் இந்த எழுத்தாளர்கள்.

என்ன ஆயிற்று இவர்களுக்கு ? எழுத்தின்மீதே நம்பிக்கையை இழந்துவிட்டார்களா ? அது வாசகனைப் பாதிக்க முடியும் என்ற எண்ணமே இவர்களுக்கு இல்லையா ? இந்த மலிவான விளம்பரத்தால் என்ன பிரயோசனம் ? வருத்தமாகவும் வெட்கமாகவும் உள்ளது .தங்கள் எழுத்தை வாசகர்கள் கவனிக்கும்படிச் செய்யும் உரிமை எழுத்தாளர்களுக்கு உண்டு. அதற்காக பிரபல இதழ்களில்ன் விருப்பத்துக்கு ஏற்ப தங்களை கோமாளிகளாக ஆக்கவேண்டுமா என்ன ?

இதேபோக்கு தொடர்ந்தால் நாளை ஒரு கவிஞர் துணியில்லாமல் நின்று கவிதை வாசிப்பார். தலைகீழாக நின்று கவிதைநூஉல் வெளியிடுவார்கள். கழுதைமேல் கரும்புள்ளி குத்தி ஊர்வலம் போவார்கள். குமுதமும் ஆனந்த விகடனும் இதையெல்லாம் ஊக்குவிக்கும்.ஏற்கனவே சினிமாவின் நகைச்சுவை நடிகர்களை வைத்து இதையெல்லாம் செய்துவந்தார்கள் . இனிமேல் எழுத்தாளர்கள் செய்வார்கள்போலபடுகிறது.

எவ்வளவுதான் அந்தரங்கமானதாக இருந்தாலும் இலக்கியம் சமூக அக்கறையிலிருந்தும் அதிலிருந்து உருவாகும் ஆற்றாமையிலிருந்தும்தான் உருவாகும்.சமூகத்தையும் அதன் செயல்பாடுகளையுமறிந்து கொள்வதற்கான கடும் உழைப்பும் கருணையும் தனிமையும் அதற்கு அவசியம். கூட்டம்சேர்த்து ரகளைசெய்பவர்கள் ஒருபோதும் ஒரு நல்ல படைப்பை எழுதமுடியாது. எழுத்தாளனுக்கு தேவை தன்னம்பிக்கை .அப்போதுதான் ‘நான் பெரிய எழுத்தாளன் .என் ஆழ்மனம் நினைப்பதுதான் சரி யார் என்ன சொன்னாலும் நான் என் இஷ்டப்படித்தான் எழுதுவேன் ‘ என்று எண்ணத்தொன்றும் .ஃபாஷனுக்கு ஒப்ப ஓடாமலிருக்க முடியும்.

வாசகியாக விண்ணப்பிக்கிறேன்.தயவுசெய்து பாவனைச் எய்யாதீர்கள் ஸ்டண்ட் அடிக்காதீர்கள் . உழைத்து தியானித்து ஆத்மார்த்தமாக எழுதுங்கள் .

## அடிக்குறிப்பு

============

இக்கட்டுரை அச்சு ஆகும்போது ஆனந்த விகடனில் [9.02.03] பாரில் நடந்த பிரமிள் விமரிசனக் கூட்டம் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது .வண்ணப்படம் , விகடன் நிருபரின் வர்ணனை எல்லாம் உண்டு . ‘ஆம்லேட்டா தோசையா ? ‘என்ற தலைப்பு வேறு.

[இக்கட்டுரை ஏப்ரல் மாத ‘சொல் புதிது ‘ இதழில் வெளிவந்தது ]

Series Navigation

எஸ் அருண்மொழிநங்கை

எஸ் அருண்மொழிநங்கை