இஸ்லாம் : அமைதியின் மார்க்கமா ? போரின் மதமா ? -3 (இறுதிப்பகுதி)

This entry is part [part not set] of 38 in the series 20030419_Issue

ஒரு விவாத கருத்தரங்கு


அபுஹாலில்: ஒரு யூதரோ அல்லது கிறிஸ்தவரோ தனது ஒவ்வொரு நாள் வாழ்க்கைக்கும் ஒரு பழைய ஏற்பாட்டு வசனத்தை தேடி ஓடுவதில்லை. அதைப்போலத்தான் ஒரு இஸ்லாமியனும். ஸ்பென்ஸர் மேற்கோள் காட்டும் குர்ரான் வசனங்கள் சில பழைய ஏற்பாடு வசனங்களை விட அதிக கொடூரத்தை கொண்டிருக்கவில்லை. அத்தகைய வசனங்கள் இன்று அவற்றின் வரலாற்று பின்புலத்தை அறிந்துகொள்ளும் ஒரே ஆர்வத்தால் மட்டுமே படிக்கப்படுகின்றன என்றாலும் ஒசாமா போன்ற வெறியர்கள் (அத்தகையவர்கள் எங்குதான் இல்லை) இத்தகைய வசனங்களை தவறாக பயன்படுத்தலாம். அதிர்ஷ்டவசமாக பின் லாடன் போன்றவர்கள் ஒரு சிறிய மதவெறிக்கூட்டத்தை தவிர பெரிய அளவில் யாரையும் கவர்ந்துவிட இயலவில்லை. அவனுக்காக பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அவன் விடுத்த கோரிக்கை கூட பெரும்பான்மை இஸ்லாமிய உலகால் புறக்கணிக்கப்பட்டது.

ஸ்பென்ஸர்: ஆசாத் …உண்மையிலேயே அதிர்ச்சிதான். முஸ்லீம்கள் குர்ரானாலும் ஹதீசாலும் தங்கள் வாழ்க்கையை நடத்தவில்லை என்பதை கேட்க எனக்கு அதிர்ச்சியாகத்தான் உள்ளது. ஆனால் எனக்கு இது ஏற்கனவே தெரியும். பெரும்பாலான முஸ்லீம்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வதால் இரத்தத்தையும் வன்முறையையும் கோரும் வசனங்களை அவர்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதனை நான் அறிவேன். ஆனால் நாம் இப்போது விவாதிப்பது இஸ்லாம் அதன் தன் இயற்கையிலேயே ஒரு சுதந்திரமான கருத்து சுதந்திரமுடைய ஜனநாயக அமைப்பிற்கு ஒவ்வாத தன்மையுடன் உள்ளதா ? என்பதுதான். நான் ‘ஆம் ‘ என நிறுவியுள்ளேன். அங்கொன்று இங்கொன்றாக பொறுக்கி எடுக்கப்பட்ட வசனங்களால் அல்ல, அதற்கு மாறாக வெகு நன்றாக பாரம்பரியச் செறிவுடன் விளக்கப்பட்ட ஒரு சித்தாந்தமாகவும் மரபாகவும் வன்முறைத்தன்மையுடைய ஜிகாத் நம்பிக்கையற்றோர் மீது விளங்குகிறது. நான் அறிவற்ற மூடனாக இருக்கலாம் ஆனால் இஸ்லாமிய உலகில் பயங்கரவாதம் வேரூன்றியுள்ள அளவு குறித்து நீங்கள் என் கண்ணில் மண் துெவும் அளவுக்கு நான் மடையனல்ல. பின் லேடன் இஸ்லாமிய உலகில் ஆதரவற்ற வெறியன் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் இந்தோனேசியாவின் ஜஃபார் உமர் தாலிப்பும் 10,000 கிறிஸ்தவர்களை கொன்று குவித்துள்ள லக்ஷர் ஜிகாத் அமைப்பும் அப்படியா ? ‘வெற்றி அல்லது புனித மரணம் வரை ஜிகாத் ‘ என அறிவிக்கும் பல்லாயிரக்கணக்கோரை கொன்ற ஹமாஸும் அப்படியா ? ஆயுதங்களும் இராசாயன போருக்கான பாதுகாப்பு கவசங்களும் கண்டெடுக்கப்பட்ட ஷூ வெடிகுண்டு பயங்கரவாதியின் மசூதியான பின்ஸ்பரி பார்க் மசூதியை நாம் எந்த கணக்கில் சேர்ப்பது ?

உலகம் முழுவதும் பரவியிருக்கும் பயங்கரவாத அமைப்புகளான அபு நிதால், அபு சையப், அஹில் ஈ ஹதீஸ், அல் அகுசாபுனித போராளிகள் பாசறை, அல் காமா அல் இஸ்லாமியா, அல் இதிஹாத் அல் இஸ்லாமி, ஹிஸ்புல்லா, இஸ்லாமிக் ஜிகாத், ஜைஷ் ஏ முகமது, லக்ஷர் இ தொய்பா மற்றும் ஏனயவற்றை எல்லாம் எந்த கணக்கில் சேர்ப்பது ? அனைவருமே ஆதரவற்ற தனிப்பட்ட வெறியர்கள் ? அனைவருமே இஸ்லாமுக்காக உயிரை கொடுக்க இஸ்லாமை தவறாக புரிந்து கொண்டவர்களா ? என்ன சொல்லுகிறீர்கள் ?

அபுஹாலில்: நீங்கள் வரிசைப்படுத்திய அனைத்துமே பயங்கரவாத அமைப்புகளாக அமெரிக்க அரசால் அறிவிக்கப்பட்டவை.ஆனால் அமெரிக்க அரசுக்கு அரபு மற்றும் இஸ்லாமிய அமைப்புகளால் செய்யப்படும் பயங்கரவாத செயல்கள் மட்டுமே கண்காணிக்க தக்கவை போலும். பயங்கரவாதத்தை பொறுத்த வரை என்னுடைய வரைமுறை, எந்த அப்பாவியையும் கொல்வதுதான். இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளுவோமானால், இஸ்ரேல், ஹமாஸ் இரண்டுமே பயங்கரவாதத்தில் தான் ஈடுபடுகின்றன. ஆனால் ஹமாசை விட இஸ்ரேல் அதிக உயிர்களை கொன்றுள்ளது. ஆனால் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை கொல்வதற்கு யூத அடிப்படைவாத ஆதரவு இருந்த போதிலும் கூட அது யூத பயங்கரவாதம், என கருதப்படுவதில்லை. அதைப்போலவே ஐ.ஆர்.ஏ (ஐரிஷ் விடுதலை அமைப்பு) கொடூரமான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டாலும் கூட அது கத்தோலிக்க பயங்கரவாதம் என அழைக்கப்படுவதில்லை. ஏன் அவையெல்லாம் வெறும் பயங்கரவாதம் என்று மட்டுமே மதப்பூச்சு இல்லாமல் அறியப்படுகின்றன ?

ஸ்பென்ஸர்: தாராளமாக ஆசாத். தாராளமாக அதை கத்தோலிக்க பயங்கரவாதம் என அழையுங்கள். பின்னர் கத்தோலிக்க பயங்கரவாதத்திற்கு ஐ.ஆர்.ஏக்கு அப்பால் பிறிதொரு உதாரணமும் தாருங்கள். ஐ.ஆர்.ஏயைக் கூட போப் கண்டிப்பதை காண்பீர்கள். ஆனால் இஸ்லாமை பொறுத்தவரையில் இஸ்லாமின் பெயரால் வன்முறை புரியும் அமைப்புகளின் ஒரு பெரும் வரிசையையே நான் இப்போதுதான் அடுக்கினேன். ஆனால் மதத்திரிபு வாதிகள் என தங்கள் சக மதத்தவர்களால் வேட்டையாடப்படும் சூஃபி வட்டத்துக்கு அப்பால் வன்முறையை கண்டிக்கும் ஒரு குரலை உங்களால் காட்டமுடியாது. ஜிகாத் எனும் பெயரில் நடத்தப்படும் வன்முறைகளை கண்டிக்கும் ஒரு ஆதாரபூர்வமான இஸ்லாமிய இறை அறிஞரை தாங்கள் காட்டும்படி நான் உங்களிடம் கேட்டு கொண்டேன். நீங்கள் அதை மட்டும் செய்யவில்லை ஏனெனில் அது உங்களால் முடியாது. ஜிகாத் என்பது நம்பிக்கையற்றோர் மீது தொடுக்கப்படும் போர். நம்பிக்கையற்றோர் முன் ஜிகாத் மூன்று தேர்ந்தெடுப்புகளை வைக்கிறது. அவை மரணம், மதமாற்றம் அல்லது அடிபணிதல். இது முகமது நபி காலம் முதல் இஸ்லாமிய மறையியலின் பகுதியாக அவர் இம்மூன்று வாய்ப்புகளை உருவாக்கிய (ஷாஹி முஸ்லீம் 4294) காலம் முதல் உள்ளது, ஒருவேளை என்றென்றும் இனியும் தொடரலாம்.

அபுஹாலில்: ஜிகாத் அழைப்பினை முஸ்லீம்கள் புறக்கணித்த உதாரணங்களையே நான் தருகிறேன். 1991 இல் சதாம் அமெரிக்காவின் மீது ஜிகாத் அறிவித்த போது இஸ்லாமிய மத அறிஞர்களும் பொதுமக்களும் அதனை புறக்கணித்தனர். பின் லாடனும் அவனது சக வெறியர்களும் அமெரிக்கா மீது வாரத்திற்கொரு முறை ஜிகாத் அறிவித்த போதிலும், அந்த ஜிகாத் அழைப்புகள் புறக்கணிக்கப் படுகின்றன. மிக முக்கியமான இஸ்லாமிய அறிஞர்கள், முஃப்திகள், காஜிகள் மற்றும் அரபுலக எழுத்தாளர்கள் செப்டம்பர் 11 க்கு பின் வெளியிட்ட அறிக்கை அல் குட்ஸ் மற்றும் அல் அராபி பத்திரிகைகளில் வெளியாயிற்று. வழக்கம் போல் அமெரிக்க ஊடகங்கள் அவற்றை புறக்கணித்தன. இந்த அறிக்கையில் பின்லாடன் இஸ்லாமிய உலகின் முன்வைத்த ஜிகாத்திற்கான சமய ரீதியிலான வாதங்கள் மறுக்கப்பட்டிருந்தன.

புனிதப் போருக்கான கிறிஸ்தவ ஆதரவினை பொறுத்தவரையில் பில்லி கிரஹாமை எடுத்துக்கொள்ளலாம். அவர் ஒரு யூத வெறுப்பாளர் என்பது நிக்சனின்

வெள்ளை மாளிகை ஒலி நாடாபதிவுகள் மூலம் தெளிவாகியுள்ளது. முஸ்லீம் வெறுப்பினை ஏற்றுக்கொள்ளும் இபின் வராக் யூத வெறுப்புக்காகவாவது பில்லி கிரஹாமை கண்டிக்கலாம். பில்லி கிரஹாமால் ஆசிர்வதிக்கப்படாத ஒரு அமெரிக்க போர் கூட கிடையாது. இப்போதும் கூட 63% அமெரிக்க மக்கள் ஈராக் போரினை ஆதரிக்கின்றனர். இஸ்ரேலில் ‘அரேபியர்களுக்கு சாவு ‘ என்பது அங்குள்ள அரசியலில் முக்கிய பாடலாகவே மாறிவிட்டது.

ஸ்பென்ஸர்: ஆசாத் மீண்டும் நீங்கள் நாம் விவாதிக்கும் விஷயத்தை பற்றி பேச மறுத்தால் எப்படி ? நான் உங்களை இஸ்லாமியர்கள் ஒரு குறிப்பிட்ட ஜிகாத் அழைப்பினை புறக்கணித்தது குறித்தல்ல கேட்டது. அவர்கள் பின் லாடனின் ஜிகாத் அழைப்பினை அவன் ஒரு ஜிகாத் அழைப்பினை விடுக்கும் மத அதிகாரமற்றவன் என நினைத்து புறக்கணித்திருக்கலாம் அல்லது ஜிகாத்திற்கான சந்தர்ப்பம் இது அல்ல என நினைத்து அதனை புறக்கணித்திருக்கலாம். எனவே அவர்கள் ஒசாமாவின் ஜிகாத் அழைப்பினை புறக்கணித்தார்கள் என்பது நான் கேட்ட ஆதாரத்தை அளிக்கவில்லை. வன்முறையான ஜிகாத் எனும் தத்துவத்தை மறுப்பது என்பதே நான் கேட்டது. இஸ்லாமின் வன்முறை மரபினை அவர்கள் துகெ¢கி எறிந்துவிட்டார்களா இல்லையா என்பதே நான் கேட்டது. முகமது நபி கட்டளையிட்டது படி நம்பிக்கையற்றோரினை மதமாற்றுதல் அல்லது

கொல்லுதல் அல்லது ஒடுக்குதல் என்பதே இஸ்லாமின் பணிநோக்கம் என்பதனை அவர்கள் மறுதலித்து விட்டார்களா என்பதே என் கேள்வி. அவ்வாறு செய்த ஒரு முஸ்லீம் மதத்தலைவரை நீங்கள் இன்னமும் எனக்கு கூற முடியவில்லை என்பதே உண்மை.

நீங்கள் ஏன் கூறவில்லை எனில் உங்களால் முடியாது. ஒருவேளை வன்முறையான ஜிகாத் கோட்பாட்டை தர்க்க ரீதியில் காப்பாற்ற முயலுவோர் இருக்கலாம். ஆனால் ஒடுக்கப்படும்

சூஃபி வட்டத்துக்கு வெளியே குர்ரான் மற்றும் ஹதீஸில் அது நன்கு வேரூன்றி நிற்பதை காண்பீர்கள். அதைப்போலவே பில்லி கிரஹமை எடுத்துக்கொண்டாலும் கிறிஸ்தவத்தின் எந்த கோட்பாடும் ஒரு போரினை ஆசிர்வதிப்பதைஅல்லது நம்பிக்கையற்றோர் மீதானதோர் போரை இன்றியமையாததாக்கவில்லை. கிறிஸ்தவத்தில் அத்தகையதோர் கோட்பாடு ஒல்லை; இஸ்லாமில் உண்டு. நீங்கள் மிகச்சரியாக மிகத்தீவிரமாக சுட்டிக்காட்டியபடி கடவுள் கருணையால் பெரும்பான்மை முஸ்லீம்கள் இக்கோட்பாட்டினை முக்கிய ஒன்றாக எடுத்துக்கொள்ளவில்லை.

அயலுஷெ¢: இஸ்லாமின் ஒரே நோக்கம் முஸ்லீமல்லாதவர்களை கொல்லுவது அல்லது மதமாற்றுவதுதான் என்கிற ரீதியில் இஸ்லாமை காட்டுவது மட்டுமே ஸ்பென்ஸரின் நோக்கம். இது அவரது திருத்தமுடியாத மடத்தனத்தை அல்லது இன்னமும் வருத்தம் தரக்கூடிய இஸ்லாமீதான வெறுப்பச்சத்தை காட்டுகிறது. இதற்கு அவர் பயன்படுத்தும் செயல்முறை குர்ரானை தவறாக இடம் மாற்றி மேற்கோள் காட்டுவதுதான்.

இஸ்லாம் முஸ்லீம் அல்லாதவர்களுடன் கொள்ளும் உறவு பின்வரும் குர்ரான் வசனங்களால் விளக்கப்படுகிறது. ‘மத விஷயத்தில் கட்டாயத்துக்கு இடமில்லை ‘ (2:256)

‘உங்கள் நம்பிக்கையின் பேரில் உங்கள் மீது போரிடாதவர்கள் உங்கள் வீடுகளை அபகரிக்காதவர்களிடம் நீங்கள் அன்புடனும் நியாயத்துடனும் நடந்து கொள்வதனை இறைவன் தடைபடுத்தவில்லை.ஏனெனில் இறைவன் நியாயத்துடன் நடப்பவர்களிடம் பிரியமுடையவனாயிருக்கிறான். ‘ (60:8)

மேலும் முக்கியமாக இஸ்லாமின் சமயப்பொறுமையின் வரலாறே இதற்கு அத்தாட்சியாக உள்ளது. இஸ்லாமின் நோக்கம் முஸ்லீமல்லாதவர்களை கொல்லுவது அல்லது மதமாற்றுவதுதான் எனில் 700 ஆண்டுகள் முஸ்லீம் ஆட்சியின் பின் ஏன் இந்தியா இன்னமும் 80% ஹிந்துக்களை கொண்டு விளங்குகிறது ?ஏன் ஸ்பெயினின் முஸ்லீம் ஆட்சிக்காலம் ‘யூதர்களின் பொற்காலம் ‘ என வரலாற்றாசிரியர்களால் வழங்கப்படுகிறது ? ஏன் கிழக்கத்திய கிறிஸ்தவர்கள் தங்கள் முஸ்லீம் சகோதரர்களுடம் இணைந்து சிலுவைப்போர் படையெடுப்பாளர்களை எதிர்த்தனர் ? எவ்வாறு 1400 முஸ்லீம் அரசாட்சிக்கு பின்னும் இஸ்லாமிய உலகில் பல மில்லியன் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்களுடன் அமைதியாக வாழ்கின்றனர் ? ஐரோப்பிய காலனியவாதிகளால் சில பத்தாண்டுகளில் அமெரிக்க பூர்விகவாசிகளை பூண்டோடு கொல்லமுடிந்தது.ஆனால் இஸ்லாமின் நோக்கம் முஸ்லீமல்லாதவர்களை கொல்லுவது அல்லது மதமாற்றுவதுதான் எனில் 1400 ஆண்டுகளில் அது எத்தனை சுலபமாக முடிந்திருக்கும் ? இதன் விடை இஸ்லாமின் நோக்கம் மக்களை கொடுமைகளிலிருந்து விடுவித்து, இறைவனால் கொடுக்கப்பட்ட உரிமையான தங்கள் விருப்பப்படும் சமயத்தை பின்பற்றி இனம், மதம் , மொழி மற்றும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு அப்பால் மானுடன் எனும் முறையில் சுயமரியாதையுடன் வாழ வைப்பதே ஆகும்.

ஸ்பென்ஸர், இதுதான் பெரும்பாலான முஸ்லீம்கள் அறிந்து பின்பற்றும் இஸ்லாம்.

ஸ்பென்ஸர்: ‘இடம் மாற்றி மேற்கோள் காட்டுவதுதான் ‘ உங்களால் வைக்க முடிந்த மிகப்பெரிய வாதமா ? இதோ சில இடம் மாறா வாதங்கள் உங்களுக்காக.

வரலாறு முழுவதும் முஸ்லீம்கள் வன்முறையான ஜிகாத்தினை முஸ்லீம் சமுதாயத்தின் பொறுப்பாகவே கொள்கின்றனர். அதனை அவர்கள் பின்வரும்விதத்தில் விளக்குகின்றனர்.

சுரா 9:29 கூறுகிறது, ‘அல்லாவை , இறுதி தீர்ப்பு நாட்களை நம்பாதவர்கள் , அல்லாவால் விலக்கப்பட்டவற்றை விலக்காதவர்கள், அல்லா மீதும் அவர் துதெர் மீதும் நம்பிக்கை

கொள்ளாதவர்கள், உண்மையான சமயத்தின் மீது நம்பிக்கை வைக்காதவர்கள் அவர்கள் நுலெின் மக்களாக (கிறிஸ்தவர்களும் யூதர்களும்) இருந்தாலும் அவர்கள் ஜிஸியா வரியை

தானாகவே பணிவை ஏற்று கொடுக்க வேண்டும். தாங்கள் வெல்லப்பட்டதை அவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். ‘

இதுவே மூன்று தேர்வு முறை. மதமாற்றம், மரணம் அல்லது பணிவு. இது சுரா அத் த்வாபா வெளிப்பாடென்னும் இறுதி வெளிப்பாடாகும். எனவே இஸ்லாமிய முறையான முன்கூறியதை தாண்டிச்செல்லுதல் (நாக்ஷ்) எனும் மரபின் படி இந்த சுராவின் வெளிச்சத்திலேயே நீங்கள் மேற்கோள் காட்டியவை அறியப்பட வேண்டும். இந்த அறிதல் முறை நான் உண்டாக்கி கூறவில்லை. இஸ்லாமிய பெரும் மறை அறிஞர்களான இபின் காதிர், இபின் ஜுசாயி, தஃப்சிர் அல் ஜலயன் மேலும் பல குர்ரான் அறிஞர்கள் இதனை கூறுகின்றனர், முகமதுவின் இந்த முத்தேர்வு முறை மிகத்தெளிவாக ஹாதித் ஷாகி முஸ்லீம் (4294) இல் வலியுறுத்தப்படுகிறது. நீங்கள் ‘முஸ்லீமல்லாதவர்களை கொல்லுவது அல்லது மதமாற்றுவது ‘ என கூறுகையில் மூன்றாவது வாய்ப்பான (இஸ்லாமிய ஆதிக்கத்திற்கு) பணிதலை விட்டுவிடுகிறீர்கள். அதுவே உங்களுக்கு பதில் அளிக்கிறது. ஹிந்துக்கள் போன்ற பெரும் மக்களுடன் மோதுகையில் முஸ்லீம்கள் வரலாற்றில் இந்த போக்கினை மேற்கொண்டுள்ளனர். இந்தியாவில் முஸ்லீம்களின் வரலாறு தொடர்ந்து ஹிந்துக்களை அடக்கி அவமானப்படுத்தியதேயாகும். அதன் விளைவாகவே இன்றும் அங்கு இரு சமுதாய மக்களுக்கிடையே பதட்டங்கள் நிலவி வருகின்றன. இஸ்லாமிய உலகில் வாழும் யூதர்களும் கிறிஸ்தவர்களும் பணிவின் சுவையினை தெரிந்தவர்கள்தான்.

அயுலோஷ் உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும் ஷரியாவின் படி( முகமதுவின் மூன்றுவாய்ப்பு நியதிக்கு இணங்க) யூதர்களும் கிறிஸ்தவர்களும்வைஸ்லாமிய உலகில் முஸ்லீம்களுக்கு இணையாக சட்டப்படி சமமாக நடத்தப்பட முடியாது. அயுலோஷ் இஸ்லாமிய சட்டத்தின் இனவாதத்தன்மையில் யூதர்களும் கிறிஸ்தவர்களும் திமிகளாக

அவமானத்துடன் நடத்தப்படுவது குறித்தும் அவ்வாறு நடத்தப்பட ஒப்புக்கொள்ளாவிட்டால் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலையிருப்பதையும் விளக்குகிறீர்களா ? யூதர்களும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமிய சட்டப்படியான ஒரு சமுதாயத்தில் முஸ்லீம்களுக்கு சமமாக நடத்தப்பட இஸ்லாமிய சட்டத்தில் இடமில்லை.

இஸ்லாமின் நோக்கம் ‘மக்களை அடக்குமுறையிலிருந்து விடுவிப்பதானால் ‘ ஏன் ஆசியா மைனரிலோ அல்லது வட ஆப்பிரிக்காவிலோ கிறிஸ்தவ மக்களை காண இயலவில்லை. ஓ அவர்கள் துடைத்தெறியப்பட்டுவிட்டனர். ஏன் இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தங்கள் மூதாதையரின் இல்லங்களை விட்டுவிட்டு விரைகின்றனர் ? இஸ்லாமிய கொடுமைகளிலிருந்து விடுபட. ஆனால் நீங்கள் ‘பெரும்பாலான முஸ்லீம்கள் இதை எல்லாம் மறுக்கின்றனர் ‘ என கூறுவதை நான் ஏற்கிறேன். ஆனால் ஒரு இஸ்லாமிய மதகுருவாவது திமித்துவத்தையும் வன்முறை ஜிகாத் கோட்பாட்டையும் மறுக்கட்டும். அவற்றின் பெயரால் நடத்தப்பட்ட அட்டூழியங்களுக்கு மன்னிப்பு கேட்கட்டும். அயுலோஷ் உண்மையான பிரச்சனையை பேசலாம். என்னை மடையன் என்று கூறுவது வாதமல்ல.

அயலுஷெ¢: ஆம் ஸ்பென்ஸர். வரலாற்றுப் பின்புலம் மிக முக்கியமானதுதான். இஸ்லாமிய வரலாற்றினை அறிந்தவர்கள் வெளிப்பாட்டின் பின்புலமறிதல் (அஸ்பாப் அன் நுஸூல்) ஒரு அறிவியலாகவே உள்ளதென அறிவர். எனவே ஒவ்வொரு வெளிப்பாட்டின் காலம், நிகழ்வு மற்றும் வரலாற்றுப்பின்புலம் ஆகியவை முக்கியமானவை. அது இன்றி குர்ரானின் வெளிப்பட்டு ஞானத்தை அறிதல் இயலாது. 23 வருடங்களாக முகமது நபிக்கு கபிரீயல் இறைதுதெனால் 6000 வசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை ஏக இறைவணக்கம், வாழ்வியல் ஒழுக்கங்களை மேம்படுத்தல், நியாயமற்ற சமுதாய அமைப்பினை எதிர்த்தல்,

முந்தைய நபிகளையும் மற்ற தேசங்களையும் மதித்தல் என மாறும் சமுதாய அரசியல் உலகில் முஸ்லீம் வாழத் தேவையான அனைத்து வழிக்காட்டலையும் உள்ளடக்கியுள்ளன. உதாரணாமாக ஏக இறைவணக்கம் குறித்த வெளிப்பாடு வழங்கப்பட்ட போது மெக்காவின் விக்கிரக ஆராதனையாளர்கள் பெறும் உணர்வு பூர்வமான தடைகளை நம்பிக்கையாளர்கள் மீது வைத்தனர்.எனவே அப்போதைய வெளிப்பாடுகள் முஸ்லீம்களை தளராதிருக்கும் படியும் மெக்காவிலேயே இருக்கும்படியும் கூறியது. பின்னர் அவர்கள் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறையினை பயன்படுத்த தொடங்கியதும் குர்ரானின் வெளிப்பாடு முஸ்லீம்களை மதினாவுக்கு செல்லும் படி பணித்தது. யூத இனக்குழு ஒன்று முஸ்லீம்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட போது குர்ரானின் வெளிப்பாடு அவர்களை மதிக்கவும் நியாயமாக நடத்தவும் முஸ்லீம்களை பணித்தது. ஆனால் அவர்கள் அந்த உடன்படிக்கையை முறித்து முஸ்லீம்களின் எதிரிகளுக்கு உதவ முற்பட்ட போது குர்ரான் தவறு செய்த அந்த யூத இனக்குழுவை மட்டுமே தண்டிக்குமாறு கூறியது. அவ்வாறே விக்கிரக ஆராதனையாளருடனான ஒப்பந்தங்களை மதிக்குமாறே இஸ்லாம் பணித்தது. அந்த ஒப்பந்தத்தை விக்கிரக ஆராதனையாளர்கள் மீறி அப்பாவி முஸ்லீம்களை துன்புறுத்திய போதே நியாயத்தை தேடுமாறு குர்ரான் முஸ்லீம்களை பணித்தது. இவை எல்லாமே விதி விலக்கான சூழ்நிலைகளில் முஸ்லீம்களை வழி நடத்தியவை ஆகும். ஆனால் போருக்கான சூழலில் கொடுக்கப்பட்ட ஒரு வசனத்தை வெளிப்பாட்டை அமைதி நிலவும் சூழலில் பயன்படுத்துவது என்பது ஸ்பென்ஸர் மற்றும் அல் கொய்தா போன்ற வெறி பிடித்தவர்களின் செயலேயாகும். முஸ்லீம்கள் முஸ்லீம் அல்லாதோருடனான உறவு முன் நான் மேற்கோள் காட்டிய வரிகளாலும் பின் வரும் வசனத்தாலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ‘ஓ மானுட குலமே! நாம் உங்களை ஆணும் பெண்ணுமாக படைத்தோம்; நீங்கள் உங்களை ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவே நாடுகளாகவும் இனங்களாகவும் ஆக்கினோம். உங்களைப் படைத்த இறைவனின் பார்வையில் மேன்மையானவர் உங்களுள் சிறந்த நன்னடத்தை உடையவரே ‘ (49:13)

ஸ்பென்ஸர்: நீங்கள் பின்புலம் குறித்து அளித்த விரிவுரைக்கு நன்றி. முதன்மையான முஸ்லீம் மறையியலாளர்கள் (குர்ரான் வசனங்களின்) பின்புலம் குறித்து கூறியவற்றை என் முந்தைய பேச்சில் கூறினேன். அதற்கு பதில் கூறிவதை நீங்கள் தவிர்த்துவிட்டார்கள். பரவாயில்லை. கூர்ந்து வாசிக்கும் எவரும் அதை கவனித்திருப்பார்கள்.

(முடிவுறுகிறது)

Series Navigation

ஒரு விவாத கருத்தரங்கு

ஒரு விவாத கருத்தரங்கு

இஸ்லாம் : அமைதியின் மார்க்கமா ? போரின் மதமா ?

This entry is part [part not set] of 31 in the series 20030406_Issue

ஒரு விவாத கருத்தரங்கு


அபுஹாலில்: முதலாவதாக திரு.வராக் அமெரிக்கா போல கருத்து சுதந்திரம் உள்ள ஒரு நாட்டில் பொய்ப்பெயருடன் வாழும் ஒரு மனிதருக்கு பதிலளிப்பதே மடத்தனமாக எனக்குப்படுகிறது. அதெப்படியாயினும் சரி, எந்த மதத்திற்கும் சுத்தமான கரம் கிடையாது. எந்த மதமும் இல்லாத ஒரு உலகம் எனக்கும் உடன்பாடுதான். ஆனால் ஒரு குறிப்பிட்ட மதம் ஒழிந்து போவது அல்ல. மதச் சார்பற்ற மானுடவாதிகளும் இறை எதிர்ப்பாளர்களும் தத்துவார்த்த அடிப்படையில் சமயத்தை எதிர்ப்பவர்கள். ஆனால் ஒரு மதத்தை விட்டுவிட்டு ஒரு மதத்தை மட்டும் எதிர்ப்பது என்பது ஒன்று மதவெறி அல்லது குறுகிய கண்ணோட்டம் அல்லது இரண்டுமே.தேர்ந்தெடுக்கப்பட்ட விதத்தில் மதச்சார்பற்று இருப்பவர்கள் என்றுமே எனக்கு வியப்பளிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட மதம் சகிக்க முடியாததாகவும் மற்றொன்று சகிக்க முடிந்ததாகவும் உள்ளது. கிறிஸ்தவத்தின் வரலாற்றை பொறுத்தவரையில்: கடந்த நூற்றாண்டில் கொல்லப்பட்ட மில்லியன் கணக்கிலான மக்கள் இஸ்லாத்தால் கொல்லப்படவில்லை. கிறிஸ்தவ மேற்கத்திய அரசுகளாலேயே கொல்லப்பட்டனர். கிறிஸ்தவம் அமைதியின் மதம் என்பது அமெரிக்க அரசிலேயே பலராலும் மறுக்கப்படும்.. ஜெரி பால்வெல் எவரையும் கொல்லவில்லையாயிருக்கலாம் (ஆனால் கருகலைப்பு மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட பல அமைதியற்ற ஆர்பாட்டங்களை அவர் தூண்டியிருக்கலாம்.) ஆனால் கிறிஸ்தவர்கள் நிச்சயமாக கொன்றிருக்கின்றனர்.

வராக்: திரு.அபுஹாலில் என் ‘நான் ஏன் முஸ்லீம் அல்ல ‘ எனும் நூலை படிக்கவேண்டும். நான் அனைத்து மதங்களை குறித்தும் கண்டிக்கும் போக்கையே எடுத்துள்ளேன். எனவேதான் கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட இஸ்லாமிய எதிர்ப்பு நூல்களைப் போல என் நூல் சிறந்த விற்பனை நூல் ஆகவில்லை. நிறுவன சமயத்தையும் அரசையும் முழுமையாக பிரிப்பதை தீவிரமாக ஆதரிக்கும் மதச்சார்பற்ற மானுடவாதியே நான். கிறிஸ்தவர்கள் நிச்சயமாக கொலைகளை கிறிஸ்துவின் போதனைகளுக்கு புறம்பாக புரிந்துள்ளனர்.

ஆனால் முஸ்லீம்கள் ஜிகாத் என்கிற பேரில் நடத்தும் கொலைகளுக்கு குர்ரான், ஹாடித் மற்றும் சுன்னா ஆகியவற்றில் போதுமான அளவு நியாயப்படுத்துதல் உள்ளது.

இச்சமயத்தில் திரு அபுஹாலின் வாதத்தன்மை ஆதிக்கத்தன்மையும் பிறரை தனிப்பட்ட முறையில் தாக்கி அவமானப்படுத்தும் விதமாகவே தன்வாதங்களை வைப்பதாக உள்ளது. மேலும் என் நெருங்கிய குடும்பத்தினர் அனைவருமே முஸ்லீம்களே. என்நூலின் முகவுரையிலேயே இதனை கூறியுள்ளேன். என் உடன் பிறந்த சகோதரனைப் போல ஒரு உயிரை கனவில் கூட துன்புறுத்த துணியாத ஒரு மனிதரை நான் கண்டதில்லை. எனவே எல்லா முஸ்லீம்களும் கொலைவெறியர்கள் என நான் கூறவில்லை. 9/11 துயரச் சம்பவத்திற்கு பின் நான் எழுதிய கட்டுரையில் (காண்க WWW.SECULARISM.ORG) எல்லா முஸ்லீம்களும் பயங்கரவாதிகள் அல்ல என்றும் முஸ்லீம்களுக்கான பாதுகாப்பு

அதிகப்படுத்தப்பட வேண்டும் என்றும் எழுதியிருந்தேன்.முஸ்லீம்களிடையே அமைதிவாதிகள் இருந்தாலும் இஸ்லாம் சமரசப் போக்குடையதல்ல. இஸ்லாமுக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கும் இடையேயான வேறுபாடு தரத்தினுடையதன்று அளவினுடையதே.

ஸ்பென்ஸர்: முஸ்லீம் வெறியர்கள் இஸ்லாமை விமர்சித்த முஸ்லீமான ரஷித் கலிஃபாவினை அரிசோனாவில் கொன்றது 1990 இல். எனவே இபின் வராக் தான் விரோதித்திருப்பது யாரை என நன்றாகவே அறிவார். எல்லா மதங்களிலும் மதவெறி சமமான தன்மையுடையது என்பது மடத்தனமானது.பால்வெல்லை கொலையுடன் இணைக்க உங்கள் கற்பனையை எவ்வளவுக்கு ஓடவிட வேண்டும் ஆனால் இஸ்லாமிய தீவிரவாதிகளும் கொலையும் இணைவது எத்தனை எளிதான விஷயம். ஏனென்றால் இஸ்லாமின் மரபுப் போதனைகளிலேயே போரும் வன்முறையும் உள்ளடங்கி உள்ளன. ஜிகாத் குறித்த வரலாற்று பெரும்பான்மை பார்வை ஹன்பலி மெளலானாவான இபின் தாய்மியாவால் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. சன்னி பார்வையினை ஏற்றுக்கொள்ளும் இவர் கூறுகிறார், ‘நீதிக்குட்பட்ட போர் என்பது ஜிகாத்தான், ஏனெனில் ஏக இறைவனின் மதமே அதன் நோக்கமாகும். இறைவனின் வார்த்தையே அதன் முக்கிய விஷயமாகும்.இந்த நோக்கத்தின் பாதையில் நிற்போர் அனைவருடனும் போராட வேண்டியது ஒவ்வொரு முஸ்லீமினுடையவும் கடமையாகும்.. நம்மோடு போராட முடியாத பலஹீனர்கள் நமக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடும் வரை கொல்லப்படவேண்டியதில்லை. ‘ இது உண்மையில் முஸ்லீம், புகாரி மற்றும் அபு தாவுத் ஆகியவற்றில் இருக்கும் முகமதுவின் ஹாடித்தின் விரிவான விளக்கமே, ‘அல்லாவைத்தவிர வேறு இறைவன் யாருமில்லை மற்றும் நானே அல்லாவின் தூதர் என்பதை மக்கள் ஏற்பது வரை நான் போராட கட்டளையிடப் பட்டிருக்கிறேன். அவ்வாறு நம்பிக்கை தெரிவிப்பவர்களின் இரத்தம் மற்றும் உடமைகள் என்பெயரால் பாதுகாப்பளிக்கப்படும். ‘ இத்தகையதோர் கோட்பாடோ அல்லது இதற்கு இணையான ஒன்றோ கிறிஸ்தவத்திலோ அல்லது இஸ்லாமைத் தவிர மற்ற மதத்திலோ கிடையாது.

அய்லோஷ்:இஸ்லாம் அமைதி விரும்பி மதமல்ல. இஸ்லாம் நம்பிக்கையாளர்களுக்கு தங்களையும் மானுடகுலம் முழுவதையும் ஆக்ரமிப்பாளர்களுக்கு எதிராக பாதுகாக்க

போராட வேண்டுமென விதிக்கிறது. இந்த நியாய போர்கூட கட்டுப்பாடான வரைமுறைகளுக்கு உட்பட்டது. குர்ரான் கூறுகிறது: ‘உங்களுக்கு எதிராக போராடுவோருக்கு எதிராக இறைவனுக்காக போராடுங்கள் ஆனால் ஆக்ரமிக்காதீர்கள் ஏனெனில் இறைவன் ஆக்ரமிப்பாளர்களை அன்பு செய்வதில்லை ‘ (2:190) ‘ஓ நம்பிக்கையாளர்களே!இறைவனுக்காக திடமாயிருங்கள்; நியாயத்தின் சாட்சியாயிருங்கள். ஒரு மக்களிடமான வெறுப்பு உங்களை நியாயமற்றவர்களாக்காத படி பார்த்துக் கொள்ளுங்கள். நியாயவான்களாயிருங்கள். அதுவே நன்மைக்கு அருகாமையிலிருக்கிறது. மேலும் இறை அச்சத்துடனிருங்கள்; ஏனெனில் நீங்கள் செயவதனைத்தையும் இறைவன் அறிந்திருக்கிறான். ‘ (5:8) யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் பொறுத்தவரையில் இஸ்லாம் அவர்களை ‘நூலின் மக்கள் ‘ என தனி அந்தஸ்து அளிக்கிறது. ஏனெனில் நாம் அனைவருமே ஆபிரகாமின் கடவுளாகிய ஒரே கடவுளை வழிபடுபவர்கள். மேலும் ஒரே இறைதூதர்களில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். மேலும் மத்திய இழக்கில் 14 நூற்றாண்டுகளுக்கு பின் பல மில்லியன் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களுடன் பக்கத்து பக்கத்து வீடுகளில் கிராமங்களிலும் நகரங்களிலும் வாழ்கின்றனர். இச்சகோதரத்துவத்துக்கு எதிரான சிற்சில சம்பவங்கள் நம் அனைவரையுமே சமமாக பாதிப்பவை. நபிகள் நாயகம் (சல்) ஒரு கிறிஸ்தவரையும் யூதரையும் மணந்தவர், அவர் கூறினார், ‘கிறிஸ்தவனையோ யூதனையோ துன்புறுத்துபவன் என்னையே துன்புறுத்துகிறான். ‘

அபுஹாலில்: செவ்விய கிழக்கத்தியம் எனும் இன்று அறிவுலகத்தால் புறக்கணிக்கப்பட்ட கருத்தாக்கத்தையே ஸ்பென்ஸர் நம்பியிருப்பதை பாருங்கள்.21 ஆம் நூற்றாண்டு முஸ்லீம்களை பற்றிய விவாதத்தில் பல நூற்றாண்டுகள் முற்பட்ட முக்கியத்துவமற்ற இபின் தய்மிய்யா மூலம் அவர் முயற்சிப்பதை காணலாம்.கிறிஸ்தவர்களற்றவர்களுடனான கிறிஸ்தவ அரசுகளின் வெளியுறவு கொள்கையை புனித அகஸ்தீனின் கோட்பாட்டால் விளக்க முற்பட்டால் எப்படி மடத்தனமாக இருக்கும் ? இஸ்லாமின் பழம் வரலாறு இன்றைய முஸ்லீம்களுக்கு விட ஸ்பென்ஸருக்கு முக்கியமானதாக உள்ளது போலும். மேலும் ஜிகாத்தை பொறுத்தவரையில் அது பல பொருள்களை உள்ளடக்கியது. என் அண்மை நூலில் இது குறித்து ஒரு பகுதியையே ஒதுக்கி உள்ளேன். இராணுவ விளக்கத்தை தாண்டி பல பொருட்பதம் அது. பின்லாடன் போன்ற வெறியர்களும் ஸ்பென்ஸர் போன்ற இஸ்லாமிய எதிர்ப்பாளர்களுமே அது புனித போர் மட்டுமே என பிரச்சாரம் செய்கின்றனர் என நான் அதில் விளக்கியுள்ளேன். இந்நூல் அராபியமொழியிலும் வெளியிடப்பட்டது. என் இந்த மதச்சார்பற்ற விளக்கத்திற்காக எந்த முஸ்லீம் மத வெறியனாலும் நான் கொல்லப்படவில்லை என்றுதான் நினைக்கிறேன். அல்லது ஸ்பென்ஸரின் 10 ஆம் நூற்றாண்டு கணக்கு படி நான் கொல்லப்பட்டுவிட்டேனா ?

வராக்கை பொறுத்தவரையில் எல்லா முஸ்லீம்களும் பயங்கரவாதிகள் இல்லை என சொல்லும் அவரது தாராள மனதிற்கு நான் என்ன பரிசா அளிக்க முடியும் ? ஏன் ஹிட்லரின் வெளியுறவு அமைச்சர் வான் ரிபெந்த்தாராப் கூட நியூரம்பர்க் விசாரணையில் இவ்வாறுதான் அனைத்து யூதர்களையும் தான் வெறுக்கவில்லை என கூறினான்.

ஸ்பென்ஸர்: நான் இஸ்லாமின் தொடக்க கால வரலாறு முதல் இன்றுவரை பல்வேறு அதிகார பூர்வ ஜிகாத் குறித்த விளக்கங்களை முன்வைக்க முடியும். ஆனால் அபு காலில் அவை எல்லாம் இஸ்லாமிய பொது நீரோட்டம் சாராத விளிம்பு நிலை விளக்கங்கள் என ஒதுக்கிவிட கூடும். உண்மையில் ஆசாத், இன்றும் புனித அகஸ்தினை படிக்கும் கிறிஸ்தவர்கள் உள்ளனர்.அதைப்போலவே தயிமியாவை பின்பற்றும் வன்முறை ஜிகாத்தை பின்பற்றும் இஸ்லாமியர்களும் உள்ளனர். நம்பிக்கையற்றோருக்கு எதிராக புனிதப்போர் தொடுப்பதே ஜிகாத் என கூறும் எஸ்.கே.மாலிக்கின் நூல் பாகிஸ்தானில் 1979 இல் வெளியிடப்பட்டது. பாகிஸ்தானிய அதிபர் ஜியா வுல் ஹக் ஜிகாத் ஒன்றேரொரு இஸ்லாமிய நாட்டிற்கான நியாயமான போர் வழிமுறை என்றார் . ஓ சரி சரி இதுவும் ஒரு விளிம்பு நிலை கண்ணோட்டம்தான். ஜியா வெறும் அதிபர்தான். ஜிகாத் எனும் பதத்திற்கு ராணுவரீதியான போர் என்பதற்கு அப்பால் பல பொருள்கள் உள்ளன என்பது உண்மையானதுதான். ஆனால் ஜிகாத் ராணுவரீதியான போருக்கான பதமே அல்ல என கூறினால் நீங்கள் மக்களை இஸ்லாமிய வரலாற்றின் பெரும் பகுதியை குறித்தும் இன்றைய சூழலை குறித்தும் ஏமாற்றுகிறீர்கள்.

அய்லோஷ்: எந்த மதத்தையும் அதன் புனித நூலிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட சில மேற்கோள்கள் மூலம் மதிப்பிடக்கூடாது. எந்த புனித நூலிலும் பயங்கரவாதத்தை

நியாயப்படுத்தும் வாசகங்களை பயங்கரவாதிகள் தேடி எடுத்துக்கொள்ள இயலும். உதாரணமாக பைபிள் வசனங்கள் எவ்விதமாக சிலுவைப்போர்களை, கிழக்கத்திய கிறிஸ்தவர்களையும், முஸ்லீம்களையும் கொல்லவதை, புனித இன்க்விசஷன்களை, கறுப்பின மக்களினை அடிமைப்படுத்துதல் மற்றும் அவர்களை வெட்டிக்கொல்லுதலை, நாஸி போர்வீரர்களுக்கு ஆசிர்வாதம் அளித்தலை, ஐரோப்பாவில் கத்தோலிக்கர்களும் புரோட்டஸ்டண்ட்டுகளும் சுழற்சி முறையில் ஒருவரை ஒருவர் கொன்று குவித்தலை,

தென்னாப்பிரிக்காவில் இனவேற்றுமையை, கருகலைப்பு மருத்துவமனைகளை வெடிகுண்டு வைத்து தகர்த்தலை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டதென பாருங்கள். இவை எல்லாமே பொய்யாக இறைவனின் பெயரால் அல்லது ஏசுவின் பெயரால் நடத்தப்பட்டன.

‘நான் சமாதானத்தை கொண்டுவர வந்தேன் என எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல போர்வாளையே கொண்டு வந்தேன் ‘ (மத்தேயு 10:34)

‘வயதானவர்கள், இளைஞர்கள், பணிப்பெண்கள், பெண்கள் குழந்தைகள் அனைவரையும் கொல்லுங்கள் ‘ (எசேக்கியேல் 9:6)

‘உங்களிடமிருக்கும் ஆண் பெண் அடிமைகளை பொறுத்தவரையில்: உங்களை சுற்றியிருக்கும் தேசங்களிலிருந்து ஆண் மற்றும் பெண் அடிமைகளை வாங்கிக்கொள்ளுங்கள்,அந்த அடிமைகளை உங்கள் சந்ததியினர் உங்களுக்கு பின் அதனை தங்களை சொத்தாக ஏற்றுக்கொள்வார்கள் ‘ (லேவியாகமம் 25:44ெ46)

ஆனால் முஸ்லீம்களாகிய நாங்கள் கிறிஸ்தவத்தையும் யூத மதத்தையும் இத்தகைய வாசகங்களால் தீர்ப்பிடுவதில்லை, மாறாக இறைவாக்கினரான மோசஸ் மற்றும் ஏசு (அவர்கள் மீது அமைதி நிலவுவதாக) ஆகியோரின் செய்தின் முழுமையான அமைதியின் மீதான எங்கள் நம்பிக்கையின் அடிப்படையிலேயே முன்வைக்கிறோம். இஸ்லாமின் செய்தியின் இவ்வாறே அதன் 1.3 பில்லியன் நம்பிக்கையாளர்களால் பின்பற்றப்படும் நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றால் மதிப்பிட பட வேண்டும். எனவே வாசகர்களை முதலில் இஸ்லாமிய வெறுப்புத்தன்மை கொண்ட விமர்சகர்களால் ஏற்பட்ட முன்பார்வைகளற்று

குர்ரானை முழுமையாக வாசிக்க நான் அழைப்பு விடுக்கிறேன்.

வாராக்: பைபிள் கடவுளின் நேரடி வார்த்தை என நம்பும் கிறிஸ்தவர்கள் ஒரு சிறு கூட்டமே. ஆனால் அனைத்து முஸ்லீம்களும் குர்ரானை இறைவனின் நேரடி வார்த்தையாக ஏற்கின்றனர். பல கிறிஸ்தவர்களுக்கு பல பண்பாடற்ற வசனங்களை முழுமையாக மறுப்பதில் எந்த கஷ்டமும் கிடையாது ஆனால் ஒரு முஸ்லீம் அவ்வாறு செய்ய முடியாது. ஆனால் அத்தகைய வசனங்களை குர்ராருஷ் பல நூறு காட்டலாம்.

மேலும் குர்ரானே இஸ்லாமிய சட்டமான ஷரியத்தின் அடிப்படை, எனவே அதுவே பண்பாடற்ற தண்டனைகள் (கை,கால்களை ஊனப்படுத்துதல் போன்றவை), பெண்களுக்கான கீழான நிலை (ஆண்கள் அவர்களை சட்ட பூர்வமாக அடிக்க முடியும் போன்றவை), தீவிர யூத வெறுப்பு, முஸ்லீம் அல்லாதவர்கள் மீதான வெறுப்பு, மற்றும் இராணுவ பொருளிலான ஜிகாத் ( ‘நம்பிக்கையற்றோரை காணுமிடங்களிலெல்லாம் கொல்லுங்கள் ‘) ஆகியவற்றின் மூலமாக விளங்குகிறது. ஜிகாத்தின் இராணுவ அடிப்படையிலான விளக்கமும் நடைமுறையும் செவ்விய முஸ்லீம் மறையியலாளர்களிடமிருந்தே நமக்கு வந்துள்ளன. உதாரணமாக இபின் தமியா, அவ்வெரோஸ், இபின் கால்துன் ஆகியோர் போன்ற கற்றறிந்த இஸ்லாமிய பெருமக்கள் ஏதோ குர்ரானால் புனித இரத்தம் சிந்தும் ஜிகாத்தை நியாயப்படுத்தும் விளிம்பில் உள்ள கூட்டம் அல்ல.சகிப்புத்தன்மையை போதிக்கும் மூன்று வசனங்கள் குர்ரானில் இருந்த போதிலும் அவை முஸ்லீம் அல்லாதவர்களை கொல்லச்சொல்லும் வாளின் வசனங்களால் மறுக்கப்பட்டு பின் தள்ளப்பட்டுவிட்டன.

இறுதியாக நான் ஒரு முஸ்லீமாக குர்ரானை கற்ற போது அதன் பண்பாடற்ற தன்மையை உணர்ந்ததாலேதான் நான் முஸ்லீமாக இன்று இல்லை.

அபுஹாலில்: நீங்கள் வரும் முடிவு உங்களுக்கு நன்மையை தரட்டும். ஆனால் நீங்களும் சரி ஸ்பென்ஸரும் சரி (உங்கள் இருவர் நூலையும் நான் படித்திருக்கிறேன்) யூத வெறுப்பாளர்கள் யூதர்களை நடத்தியது போன்றே முஸ்லீம்களை நடத்துகிறீர்கள். நீங்கள் முஸ்லீம்கள் ஒரு ஒற்றைத்தன்மை கொண்ட மக்கள் என கருதுகிறீர்கள். முஸ்லீம்கள் எல்லோருமே குர்ரானை கடவுளின் வார்த்தை என நம்பி செயல்படுவதாக கூறுவது மடத்தனமானது. அவ்வாறு நீங்கள் நம்பினால் ஒவ்வொரு முஸ்லீமும் இப்போது கொல்வதற்கு ஒரு நம்பிக்கையற்றவன் கிடைப்பானா என தேடித்திரிவதாகவும் ஒவ்வொரு முஸ்லீமும் தன் மனைவியை (அன் நிசா சுராவின் வரிகளின் அடிப்படியில்) அடிப்பதாகவும் எண்ணவேண்டும் . உண்மையில் எல்லா சமயங்களிலும் உள்ள மக்கள் அவர்கள் தங்கள் புனித நூல்களின் வரிகளுக்கு, அதை அவர்கள் கடவுளின் வார்த்தைகளாக மதிக்கிறார்களோ அல்லவோ, மிகுந்த நெகிழ்ச்சியான முறையில்தான் ஏற்றுக் கொள்கிறார்கள். குர்ரான் முத் ‘தா எனும் தற்காலிக திருமணத்தை அனுமதிக்கிறது. ஆனால் முகமது நபியின் மரணத்திற்கு சில வருடங்களுக்கே பின் ‘சன்னி ‘ முஸ்லீம்கள் அதனை தடை செய்தார்கள். இந்த மூன்று புனித மதங்களிலும் இருக்கும் சர்ச்சைக்குரிய, சகிப்புத்தன்மையற்ற வரிகளை நம்புபவர்கள் வன்முறைவாத வெறியர்கள்தான். அவர்களைதான் ஸ்பென்ஸரும் வாராக்கும் உலக முஸ்லீம்களின் பிரதிநிதிகள் என கூறிவருகின்றனர்.

ஸ்பென்ஸர்: ஆசாத், நீங்கள் வாசித்தறிதல் குறித்து வகுப்புக்களுக்கு போக வேண்டிய நிலையில் உள்ளீர்கள். நான் ஒரு போதும் வன்முறைவாத முஸ்லீம் வெறியர்கள்தான் உலக முஸ்லீம்களின் பிரதிநிதிகள் என கூறவில்லை. நான் கூறுவதெல்லாம் குர்ரானில் காணப்படும் தத்துவங்கள் இராணுவத்தன்மை கொண்ட கொலைவெறிக்கு ஒருவரை கொண்டு செல்வதாகவே உள்ளன. நீங்கள் கூட இதை ஏறக்குறைய ஏற்றுக் கொள்வது போல படுகிறது. இவ்வுண்மை எதிர்கொள்ளப்பட்டு குர்ரானும் சன்னாவும் மறு மதிப்பீடு செய்யப்படும்வரை பெருமளவில், ஒரு சிறிய அளவில் அல்ல, மத வெறியாலான வன்முறை இஸ்லாமின் ஒரு பகுதியாகவே இருக்கும். அதனை நீங்கள் நீக்க முடிந்தால் நான் பெ¢ரு மகிழ்ச்சி அடைந்து உங்களை பாராட்டுவேன். ஆனால் உங்களால் அது முடியுமென எனக்கு தோன்றவில்லை. எனவே குர்ரானின், ‘நம்பிக்கையற்றோரை காணுமிடங்களிலெல்லாம் கொல்லுங்கள் ‘ (சுரா 9:5) எனும் வசனத்திற்கும் தற்போது மேற்கோள் காட்டப்பட்ட பைபிள் வசனங்களுக்குமான வேறுபாடென்னவென்றால்,அவை அங்குமிங்குமாக பொறுக்கி எடுக்கப்பட்டவை. ஆனால் குர்ரானிலோ அது அடிப்படையானது. மேலும் மரபிலும் இறையியலிலும் அது உறைந்துள்ளது. டாக்டர்.முகமது முஷின் கான் ஷாகித் புகாரி எனும் ஹாடித் தொகுப்பின் மொழிபெயர்ப்பாளர் கூறுகிறார், ‘முதலில் போராடுதல் விலக்கப்பட்டிருந்தது; பின்னர் அது அனுமதிக்கப்பட்டது; பின்னர் அது கடமையாக்கப்பட்டது. ‘. எஸ்.கே மாலிக் ‘The Qur ‘anic Concept of War ‘ எனும் நூலில் விளக்குகிறார், ‘அல்லா முஸ்லீம்களுக்கு புனிதப்போரை இறைக்கடமையாக செயலாக்கும்படியாக கட்டளை அளித்துள்ளார். ‘ சன்னி இஸ்லாமிய மரபின் நான்கு முக்கிய நீதியியல் மரபுகளாகிய ஷாஃபி, மாலிகி, ஹனாஃபி,ஹன்பலி ஆகிய நான்குமே, ஜிகாத் குறித்து விரிவாக விவரிக்கின்றன, வன்முறைக்கு அனுமதி அளிக்கின்றன. இபின் கல்துன் (1406) கூறினார், ‘முஸ்லீம் சமுதாயத்தில் புனித போர் ஒரு இறைக்கடமையாகும். இஸ்லாமின் உலகளாவிய பணிநோக்கு அனைவரையும் புரியவைத்தோ அல்லது கட்டாயப்படுத்தியோ முஸ்லீம் ஆக்குவதாகும். மற்ற மதத்தினருக்கு ஒரு உலகளாவிய பணிநோக்கு இன்மையால் புனிதப்போர் எனும் தத்துவமும் இல்லை…இஸ்லாம் உலக நாடுகள் அனைத்தின் மீதும் ஆட்சி செய்வது என்பது அதன் கடமையாகும் ‘

இந்த முஸ்லீம்கள் எல்லாம், ‘இஸ்லாமிய வெறுப்புத்தன்மை கொண்ட விமர்சகர்களா ‘ ? இஸ்லாத்திற்கு வன்முறையை இறையியல் ரீதியாக நியாயப்படுத்தும் ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உள்ளது. நவீன காலத்திலும் முஸ்லீம்கள் மதத்தின் பெயரால் செய்யும் வன்முறைகளை நியாயப்படுத்த அந்த மரபு துணைபோகிறது. கிறிஸ்தவத்திற்கு அத்தகையதோர் மரபு இல்லை.

அபுஹாலில்: ஸ்பென்ஸரின் அறியாமை எந்த அளவு இருக்கிறதென்றால், ஒரு சாதாரண முஸ்லீம் அறிந்திராத சிலருக்கும் ஒரு முக்கிய இஸ்லாமிய பார்வைக்குமான வேறுபாடு கூட அவருக்கு தெரியவில்லை. ஸ்பென்ஸரை நான் அதிர்ச்சி அடைய செய்கிறேன். முஸ்லீம்கள் தங்கள் ஒவ்வொரு நாள் வாழ்க்கைக்கும் ஒரு குர்ரான் வசனத்தை தேடிப்பிடித்து அதன் படி நடப்பதில்லை…

[தொடர்கிறது]

நன்றி: www.frontpagemagazine.com

Series Navigation

ஒரு விவாத கருத்தரங்கு

ஒரு விவாத கருத்தரங்கு

இஸ்லாம் : அமைதியின் மார்க்கமா ? போரின் மதமா ?

This entry is part [part not set] of 33 in the series 20030329_Issue

ஒரு விவாத கருத்தரங்கு


இக்கருத்தரங்கு அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘பிரண்ட்பேஜ் ‘ பத்திரிகையால் நடத்தப்பட்டது. இன்று மேற்கினை அச்சுறுத்தும் பயங்கரவாதம் சில இஸ்லாமியர்களால் நடத்தப்படுவதால் அது இஸ்லாமிய பயங்கரவாதமா ? அல்லது ‘பண்பாடுகளின் மோதலை ‘ தவிர்க்க இயலாததாக்கும் ஏதோ ஒன்று இஸ்லாமின் அடிப்படை கருத்தியல்பில் உள்ளதா ? என்பதை விவாதிப்பதே மார்ச் 4 2003 இல் நடத்தப்பட்ட இவ் விவாத கருத்தரங்கின் நோக்கம். இதில் பங்கு பெற்றோர்:

ஜேமி கிளாசோவ்: வரலாற்றாய்வாளர், மற்றும் பிரண்ட்பேஜ் பதிரிகையின் மேற்பார்வை ஆசிரியர். இவரது முக்கிய நூல் Canadian Policy towards Kurushchevாs Soviet Union மற்றும் 15 Tips on How to be a Good Leftist. இவ்விவாதக் கருத்தரங்கை வழிநடத்துபவர் இவரே. அவரும் அதில் பங்கெடுக்கிறார்.

இபின் வாராக்: பகுத்தறிவாளர், மதச்சார்பற்ற மானுடவாதி, ‘நான் ஏன் முஸ்லீம் இல்லை ‘ எனும் நூலின் ஆசிரியர்.

ஹுசாம் அயலூஷ்: தென் கலிபோர்னியாவின் அமெரிக்க இஸ்லாமிய உறவுகள் மையத்தின் (Council on American Islamic Relations CAIR) இயக்குநர்.

ஆசாத் அபு ஹாலில்: ஸ்தனிஸ்தலாஸான் கலிபோர்னிய மாநில பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை பேராசிரியர். மத்திய கிழக்கு குறித்த பேராசிரியராக இதே பல்கலைக்கழகத்தின் பெர்க்லீ பிரிவில் பணியாற்றுகிறார். ாBin Laden, Islam, and Americaாs New War on Terrorismா எனும் நூலின் ஆசிரியர்.

ராபர்ட் ஸ்பென்ஸர்: Free Congress Foundation அமைப்பின் உறுப்பினர், ா Islam Unveiledா எனும் சர்ச்சைக்குரிய நூலின் ஆசிரியர்.

ஜேமி கிளாசோவ்: கனவான்களே இக்கருத்தரங்கில் நான் பெரிதாக ஏதும் பங்கு பெறப்போவதில்லை. ஒரு வினாவின் மூலம் விவாதத்தை தொடக்கி விட்டு மேடை இறங்கி விடுவதே என் பங்கு. எனவே தொடங்குவோம். மேற்கத்திய நாடுகளின் பார்வையில் ஒரு அபாயமாக கணிக்கப்படும் ஓர் நிகழ்வு இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களில் உள்ளதா அல்லது இஸ்லாமின் அடிப்படையிலேயே உள்ளதா ? இன்று ஜனநாயகம், கருத்து சுதந்திரம் ஆகியவற்றிற்கான ஆபத்துக்கள் சில தீவிரவாதிகள் ஏற்படுத்தக் கூடியதா அல்லது ஜனநாயகம், கருத்து சுதந்திரம் ஆகியவற்றுடன் இணைந்து வாழ முடியாத தன்மை இஸ்லாமின் அடிப்படைகளில் உள்ளதா ? இதுதான் இந்த வன்முறைகளுக் கெல்லாம் காரணமா ?

ராபர்ட் ஸ்பென்ஸர்: எந்த ஒரு தனி நபரும் இஸ்லாம் அனைத்திற்குமாக என்று பேசிவிட முடியாது. முஸ்லீம்களில் ஒரு சாரார் இஸ்லாமின் அடிப்படை என கருதுவது மற்றொரு சாராரால் இஸ்லாமின் அடிப்படைக்கே விரோதமான ஒன்றானதென கருதப்படலாம். சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள பயங்கரவாத ஆலோசகன் ஷேக் ஒமர் அப்துல் ரக்மான் பின்வருமாறு கூறுகிறான், ‘புனித போர் கடமை இஸ்லாத்தின் தலையாய கடமை ஆகும். புனிதபோர் இல்லாத இஸ்லாம் தலையில்லாத உடல் போன்றதாகும். ‘ சிறை தண்டனை

பெறும் முன்னர் ஷேக் ஒமர் நியூயார்க் மசூதிகளில் இமாம் சிராஜ் வகாஜான் அழைப்பின் பேரில் உரைகள் ஆற்றி வந்தான். இமாம் சிராஜ் வகாஜ் அமெரிக்க இஸ்லாமிய உறவுகள் மைய (CAIR) ஆலோசனை குழு உறுப்பினர் என்றாலும் இந்த கருத்தியலை ஹுசாம் அயலூஷ் மறுப்பார் என நம்புகிறேன். எனினும் இத்தகைய வன்முறைக்கு ஆதரவான கருத்துக்களை முன்வைப்பவர்கள் தம் கருத்தியலை குர்ரான் மற்றும் இஸ்லாமிய வரலாறு மற்றும் பாரம்பரியம் சார்ந்தே உருவாக்குகிறார்கள் என்பது மறுக்கமுடியாதது. இராணுவவாத இஸ்லாமின் ஆதரவாளர்கள் முகமதுவின் முக்கிய ஹதீஸானை ‘அல்லாவையே தங்கள் இறைவனாகவும் என்னை(முகமதுவை) இறுதி நபியாகவும் மக்கள் ஏற்குமளவும் அவர்களுடன் போராடவே எனக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. அவ்வாறு அவர்கள் ஏற்கும் போதே அவர்களது இரத்தமும் சொத்துக்களும் பாதுகாப்பு பெறும். ‘ மேற்கோள் காட்டுகின்றனர். எனவே இஸ்லாமிய பயங்கரவாதிகள் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து விலகிவிட்டவர்கள் என்பது ஒரு பார்வையில் சரியாகவே இருக்கலாம்.

ஆனால் அவர்களது இஸ்லாம் அமைதியான இஸ்லாம் போன்றே ஒரு வேளை அதைக் காட்டிலும் உண்மையான வரலாற்றுப் பாரம்பரியம் உள்ள இஸ்லாமிய மரபென்பதே உண்மை.

ஆசாத் அபு ஹாலில்: ஸ்பென்ஸர் இஸ்லாம் குறித்த தன் அறியாமையை வெளிக்காட்ட எந்த சந்தர்ப்பத்தையும் தவறவிடுவதில்லை. அவரது இஸ்லாம் குறித்த அறிவினை பறைசாற்றுபவை எல்லாம் ஒன்று மேற்கத்திய பத்திரிகை செய்திகள் அல்லது ஏதாவது அமெரிக்க சிறையில் வசிக்கும் வெறி பிடித்த மெளல்வியுடையவை. டேவிட் க்வாரேஷ் அல்லது டெட் பண்டி ஆகியோரினை கிறிஸ்தவ இறையியலின் உதாரணங்களாக காட்டுவது போன்ற மடத்தனம் இது. இஸ்லாம், கிறிஸ்தவம் யூதம் ஆகிய மூன்று மதங்களின் வரலாறுகளுமே சமயப் பொறுமை மற்றும் மானுட சமத்துவம் ஆகிய விஷயங்களில் கறை படிந்தே விளங்குகின்றன. ஆனால் மறை நூல்களிலும் வரலாற்றிலும் மிகுந்த கொடுமைகளை செய்ததில் கிறிஸ்தவமே முன்னணியில் உள்ளது. இஸ்லாமை திட்டுகிற ஸ்பென்ஸர் அதே நேரத்தில் கிறிஸ்தவத்தின் வரலாற்றை கேள்விக்குள்ளாக்காமல் இருக்க முடியாது. முதலில் கேட்கப்பட்ட கேள்வியை பொறுத்தவரையில் எல்லா மதங்களிலுமே வெறியர்கள், பயங்கரவாதிகள், பித்துக்குளித்தனமானவர்கள் உள்ளனர். அதை வைத்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, கலாச்சாரத்தையோ அல்லது மக்களையோ முத்திரை குத்துகிற போக்கு சரியில்லை.

ஸ்பென்ஸர்: ஒமர் அப்துல் ரக்மான் புகழ் பெற்ற அல் அசார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். ஆனால் டேவிட் க்வாரேஷோ அல்லது டெட் பண்டியோ அந்த அளவு முக்கிய உயர் பொறுப்பினை மேற்கில் என்றும் அடைந்ததில்லை. எனது இஸ்லாமிய அறிவிற்கு ாமேற்கத்திய பத்திரிகை செய்திகள்ாதான் மூலம் என்பதை பொறுத்தவரை எனது இஸ்லாமிய அறிவு இபின் கால்துன், இபின் தாய்மியா,முகமது முஷான் கான், S. K.மாலிக், மற்றும் சாயித் ராஜாய் கோரசானி ஆகியோரது கூற்றுக்களின் அடிப்படையில் அமைந்தது என தெளிவு படுத்துகிறேன். நான் மேற்கூறிய நபர்கள் எல்லாம் எந்த மேற்கத்திய பத்திரிகைகளின் செய்தியாளர்கள் என அபு ஹாலில் தெரியப்படுத்துவார் என கருதுகிறேன். கூறும் மனிதனை குறை கூறி (ad hominem )கருத்துக்களை எதிர்கொள்வது

தன்னிடம் கருத்துக்கள் தீர்ந்துவிட்ட ஒருவரது வாதத்தன்மை. கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலை விவாதிப்பதில் கருத்தை செலுத்தலாம். கிறிஸ்துவத்தின் குறைகளை சுட்டிக்காட்டி இஸ்லாமை பாதுகாக்க நினைப்பதும் அதைப்போலவே சரியான நிலைபாடல்ல. ஹிட்லருக்கோ ஸ்டாலினிக்கோ கிறிஸ்தவம் பொறுப்பேற்க முடியாது. இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்துக்குமான அடிப்படை வேறுபாடு யாதெனில், இஸ்லாம் மட்டுமே நம்பிக்கையற்றோருக்கு எதிரான புனிதப்போரினை கடமையாக முன்வைக்கிறது. இஸ்லாமில் மட்டுமே அதன் செவ்விய நாட்களில் இருந்து இன்று வரை அதன் மிக முக்கிய

இறையிலாளர்களால் நம்பிக்கையற்றோருக்கு எதிரான வன்முறையும் போரும் நிறுவனப்படுத்தப்பட்டு நியாயப்படுத்தப்பட்டுள்ளது. புகழ் பெற்ற மாலிகி நீதிபதி இபின் அபி சாயீத் அல் க்ய்ராவானி கூறுகிறார், ‘ ஜாகாத் இஸ்லாமியரின் புனித நிறுவனமாகும். முஸ்லீம் அல்லதாவர்கள் இஸ்லாமுக்கு மாறலாம் அல்லது ஜாஸாயா வரியினை பணிவுடன் கட்டலாம். இரண்டும் இல்லையெனில் நம்பிக்கையற்றோர் மீது போர் தொடுப்பது அவசியமாகும். ‘ அபு ஹாலில் தாங்கள் தயை கூர்ந்து இக்கோட்பாட்டினை மறுக்கும் ஒரு முக்கிய இஸ்லாமிய மரபினை காட்டுவீர்களா ? உதாரணமாக ஏறத்தாழ அனைத்து கிறிஸ்தவ சர்ச்களும் சிலுவைப்போரின் மூல கருத்தியல்களை மறுக்கின்றனர்.

அபு ஹாலில்: மீண்டும் ஸ்பென்ஸர் தன் அறியாமையை வெளிக்காட்ட எந்த சந்தர்ப்பத்தையும் தவறவிடுவதில்லை என நிரூபித்துள்ளார். ஒமர் அப்துல் ரக்மான் என்றென்றும் அல் அசார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றவில்லை. மாறாக அதன் கிளை ஒன்றில் பகுதி நேர விரிவுரைக்கு வரவழைக்கப்பட்டார். அவரது வெறித்தன்மை வெளியானதும் அல் அசார் அதிகாரிகள் அவரை வெளியேற்றினர். ஆக இஸ்லாமிய உலகின் முக்கிய அல் அசார் பல்கலைக்கழகம் ஒமர் அப்துல் ரக்மானின் கருத்துக்களுக்கும் இஸ்லாமுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என வெளீப்படையாக அறிவித்துள்ளது. இஸ்லாமிய உலகில் ஒமர் அப்துல் ரக்மானுக்கு ஆதரவாக எவ்வித ஆர்ப்பாட்டமும் நடைபெறவில்லை. ஆனால் ஸ்பென்ஸரோ எவ்வித இஸ்லாமிய உலகில் எவ்வித முக்கியத்துவமுமற்ற வார்த்தைகளை பிடித்துக்கொண்டு ‘ஒமர் அப்துல் ரக்மான் அனைத்து இஸ்லாமின் பிரதிநிதி அனைத்து முஸ்லீம்களாலும் மதிக்கப்படுபவர் ‘ என கூறுகிறார். முஸ்லீம்களை விட ஸ்பென்ஸருக்குத்தான் ஒமர் அப்துல் ரக்மான் முக்கியமானவராக தோன்றுகிறார்.

ஸ்டாலின் வேண்டுமானால் கிறிஸ்தவத்துடன் உறவற்றவராக இருக்கலாம். ஆனால் ஹிட்லர் ? ஹிட்லர் தன்னை முழுக்க முழுக்க கிறிஸ்தவராகவே கருதியவர். ஆனால் ஸ்பென்ஸர் இதைவிடவும் ஒருபடி மேலே போகிறார், சிலுவைப்போர்களுக்கும் போப்களுக்குமான தொடர்பு, நிறுவனப்படுத்தப்பட்ட யூத வெறுப்பு, 3 லிருந்து 9 மில்லியன் பெண்களை சூனியக்காரிகளென எரித்தது, நீதியின் தோமிய கோட்பாடு ஆகிய அனைத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் தொடர்பு கிடையாது என கூறுகிறார் போலும். நம்பிக்கையற்றவர்களுக்கு எதிரான புனிதப்போர் இஸ்லாமில் மட்டுமே உள்ளது என ஸ்பென்ஸர் கூறுவது அறியாமையும் நேர்மையின்மையும் கலந்தது. தாமஸ் அகினாஸ் எழுதுயிருப்பதை படியுங்கள் பின் வாதத்திற்கு வாருங்கள்.

ஸ்பென்ஸர்: அல் அசார் பல்கலைக்கழக முன்னாள் மாணவன் ஒருவரின் வார்த்தைகள், ‘ஷேக் ஒமர் அப்துல் ரக்மான் எனக்கு அல் அசார் பல்கலைக்கழகத்தில் குர்ரான் குறித்த விளக்கங்கள் என விரிவுரைகளாற்றினார். பின்னர் தன் பணியிலிருந்து விலகி ‘ஜாகாத் ‘ மற்றும் ‘கமா அல் இஸ்லாமியா ‘ எனும் இயக்கங்களில் பணியாற்றினார். ‘ ‘அப்துல் ரக்மான் அனைத்து இஸ்லாமின் பிரதிநிதி அனைத்து முஸ்லீம்களாலும் மதிக்கப்படுபவர் ‘ என நான்கூறியதாக கூறுவது என் வார்த்தைகளை கவனிக்காததால் எழுந்த பிழை. நான் அவ்வாறு எவ்விடமும் கூறவில்லை.மாறாக நான் என்ன கூறுகிறேன் என்றால் அப்துல் ரக்மான் இஸ்லாமின் பாரம்பரியமிக்க செல்வாக்குள்ள ஒரு மரபினைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். பல குற்றமற்றவர்களை கொல்லும் மானுட வெடிக்குண்டு தாக்குதல் ‘இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் நியாயமானதோர் விஷயமாகும் ‘ என அண்மையில் கூறினார் அல் அசார் பல்கலைக்கழக முதன்மை ஷேக் முகமது சாயீத் தந்தாவி. ஏதோ ஓரிரு தீவிரவாதிகளின் குரலா இது ஆசாத் ? மாறாக அண்மையில் அலெக்சாண்டிரியா பல்கலைக்கழகத்தில் மானுட வெடிக்குண்டுகளுக்கான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட ஆரம்பிக்கப்பட்ட ஒரு இயக்கத்தில் 2000 பல்கலைக்கழக மாணவர்கள் மானுட வெடிகுண்டுகளாக முன்வந்தனர். கத்தோலிக்க திருச்சபை குறித்த அவரது மடத்தனமான மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலளிக்கப் போவதில்லை. திருச்சபையின் பாவங்களுக்கு மதம் காரணமில்லை என நான் கூறியதாக ஒரு பொய்யனோ அல்லது மடையனோ தான் கருத முடியும்.இஸ்லாமை பாதுகாக்க கிறிஸ்தவத்தை கீழ்மைப்படுத்த வேண்டும் என்கிற நிலையே மோசமானது. இதோ இன்றைய நிலையில் கிறிஸ்தவ வெறித்தன்மைக்கும் இஸ்லாமிய வெறித்தன்மைக்குமான வேறுபாடு. கனடாவைச் சார்ந்த ஜெரி பால்வெல் முகமதுவை பயங்கரவாதி என்கிறார். அதனால் இந்தியாவில் வெடிக்கும் கலவரத்தில் 8 பேர் மரணம் 90 பேர் படுகாயம். ஈரான் ஜெரி பால்வெல்லுக்கு மரண தண்டனை விதிக்கிறது. இந்த எதிர்வினைகள் அனைத்துமே இஸ்லாமிய அடிப்படை கொண்டவை.அதைப்போலவே ஹிட்லருக்கும் ஒசாமாவுக்குமான வேறுபாடு என்னவென்றால் ஹிட்லரின் சித்தாந்தத்திற்கு ஆதரவாக அவன் கிறிஸ்தவ விவிலிய மேற்கோள்களை காட்டவில்லை. மாறாக இஸ்லாமிய பயங்கரவாதிகள் தம் செயல்களை குர்ரானையும் ஹதீசையும் இஸ்லாமிய இறையியலையும் கொண்டு நியாயப்படுத்த முடிகிறது. ஈரானின் ஐ நா துதெராக விளங்கும் ஒருவரான சாயித் ராஜாய் கோரசானி ‘மானுட உரிமைகள் என்பதே கிறிஸ்தவ யூதேய கருத்தமைப்புதான், அது இஸ்லாமுக்கு அந்நியமானது ‘ என கூறும் போது அதை ஒரு கணிசமான இஸ்லாமியரின் கருத்தியல் இல்லை என எப்படி கூறு முடியும் ?

ஹுசாம் அயலூஷ்: இத்தருணத்தில் நான் ஒன்றினை தெளிவாக்க விரும்புகிறேன். மற்ற மதத்தினரை அவர்களது நம்பிக்கைகளை இழிவாக பேசுவதென்பது இஸ்லாமுக்கு விரோதமான ஒன்று. உலகின் அனைத்து தீவிரவாதிகளும் தம் வெறுப்பினை பரப்ப மதங்களை தவறாக பயன்படுதியுள்ளனர். ஆம் ஹிட்லர் கிறிஸ்தவ மத நம்பிக்கையை அவ்வாறு பயன்படுத்தியுள்ளான். இதோ அவனது பேச்சிலிருந்தே, ‘ஒரு கிறிஸ்தவன் என்னும் முறையில் என் உணர்ச்சிகள் என் தேவரை என் மீட்பரை ஒரு போர் வீரராகவே காட்டுகிறது. ஒரு தனி மனிதனாக தனிமையில் உண்மையை உணர்ந்து யூதர்களுக்கு எதிராக போராட அழைப்பு விடுத்த போராளியாக நான் அவரை காண்கிறேன். ‘ (ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிடி பிரஸ் வெளீயீடு) ஒரு இஸ்லாமியன் என்ற முறையில் வெறுப்பைத் துணெ¢டும் இவ்வார்த்தைகளுக்கும் நாங்கள் நேசிக்கும் இயேசு (அவருக்கு அமைதி உண்டாகட்டும்) வின் போதனைகளுக்கும் தொடர்பில்லை என நான் அறிவேன். ஆனால் எந்த மதமும் மனிதனின் தவறான பயன்பாட்டுக்கு விதிவிலக்கல்ல என்பதனை இது காட்டுகிறது . இஸ்லாம் கிறிஸ்தவம் மற்றும் உலகின் அனைத்து மதங்களும் அமைதியுடன் வாழ முடியும். அதற்கு உண்மையான மத நம்பிக்கையாளர்கள் தங்களுள் இருக்கும் சில வெறியர்களை சகிக்கும் போக்கை கைவிட வேண்டும். நம்மிடம் இருந்து வேறுபடும் மக்களின் நற்குணத்தை நிராகரிப்பவர்களை நாம் சகிக்ககூடாது. நான் ஒரு முஸ்லீம் எனவே இஸ்லாமை அறிவேன். அதேசமயம் நாம் பயின்ற பிராட்டஸ்டண்ட் பள்ளியிலிருந்தும் மேலும் என் நண்பர்கள் உறவினர்களிடமிருந்தும் நான் யூத கிறிஸ்தவ சமயங்களை அறிந்தேன். எனவே உசாமா பின்லேடனும் ஸ்பென்ஸரும் கருதும் வேறுபாட்டைக் காட்டிலும் நம் அனைவரிடமும் அதிகமான பொதுமை இருப்பதை நான் அறிந்துள்ளேன். தீவிரவாதத்தை பொறுத்தவரையில் அது ஒரு வளரும் அபாயம். மேற்கத்திய நாடுகளுக்கென்றில்லை உலகமனைத்திற்குமே அது ஒரு அபாயம் தான். அந்த அபாயம் மதத்தீவிரவாதம் தலை துகெ¢குவதுதான். இந்தியாவில் ஹாந்து தீவிரவாதம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவில் இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்ரேலில் யூத தீவிரவாதம், செர்பியா ஏன் அமெரிக்காவிலும் கூட கிறிஸ்தவ தீவிரவாதம். ஐநாவில் டிசம்பர் 1999 இல் இப்பிரச்சனை எழுப்பப்பட்டது. 23 பக்க ஐநா அறிக்கை தெரிவிப்பதென்ன ? எந்த மதமும் தீவிரவாதத்திற்கு விதி விலக்கல்ல. மேலும் அந்த அறிக்கை இந்த மத தீவிரவாதங்கள் அவற்றை வளர்க்கும் சமுதாய பொருளாதார காரணிகளின் முழுமைத்தன்மையுடன் பார்க்கப்பட வேண்டுமென தெரிவிக்கிறது. குறிப்பாக அந்த அறிக்கை கூறுகிறது, ‘ இஸ்லாமை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி வரும் சிறு எண்ணிக்கையிலான பயங்கரவாதிகளையும், இஸ்லாமை மார்க்கமாக பின்பற்றி வரும்

அமைதி, மதச் சகிப்புத்தன்மை மற்றும் பாகுபாடற்ற தன்மையுடன் வாழும் பெரும்பாலான இஸ்லாமியர்களையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டியது அவசியம். ‘ கொசோவா மற்றும் போஸானியாவிலும் நடைபெற்ற படுகொலைகளுக்கு கிறிஸ்தவம் பொறுப்பினை ஏற்காதது போல் இஸ்லாமும் சில தனிமனிதர்களின் செயலுக்கு பொறுப்பேற்க வேண்டியதில்லை. கொசோவா மற்றும் போஸானியாவிலும் நடைபெற்ற படுகொலைகளை சில மில்லியன் கிறிஸ்தவர்கள் திட்டமிட்டு நடத்தி ஆதரித்திருந்தும் கூட.

இபின் வாராக்: எல்லா மதத்தீவிரவாதங்களும் ஒரே தன்மை கொண்டவைதான். அவை சமுதாய பொருளாதார காரணிகளால் வளர்ந்து வலு பெற்று வருவதும் உண்மைதான். கிறிஸ்தவ ஹாந்து யூத தீவிரவாதிகள் வன்முறையில் ஈடுபடுகின்றனர். ஆனால் அவை ஒரு நாடு சார்ந்தவை. ஆனால் இஸ்லாமிய தீவிரவாதமோ உலகப்பேரரசு கனவு கொண்டது.

உலகம் முழுவதும் ஒற்றை இறைச்சட்டத்தின் கீழ் ஷரியத்தின் கீழ் வரவேண்டும் எனும் நோக்கம் கொண்டது. யூதர்களும் ஹாந்துக்களும் மதம் மாற்ற நோக்கங்கள் கொண்டவர்களல்ல. கிறிஸ்தவர்கள் மதம் பரப்ப சர்வ தேச பயங்கரவாதத்தை கருவியாக்குவதில்லை.மதம் சார்ந்த வன்முறைக்கு ஏக இறைவணக்கத்தை வலியுறுத்தும் மதங்களே பெரும் காரணமாக இருக்கின்றன. ஆனால் கிறிஸ்தவம் போல இஸ்லாம் தன்னை சுய பரிசோதனைக்கு ஆளாக்கி கொள்ளவில்லை. இரண்டாவதாக வன்முறை இஸ்லாமின் தன்னியல்பில் உள்ள ஒன்று. முகமது நடத்திய போர்கள், குர்ரானில் உறைந்திருக்கும் வாளின் சுராக்கள் இவை அனைத்திலும் அவ்வன்முறை உள்ளது. ஒரு கிறிஸ்தவன் செய்யும் வன்முறை ஏசுவின் மறு கன்னத்தை காட்ட சொன்ன வார்த்தைகளை மீறி செய்யும் வன்முறை. ஆனால் ஒரு இஸ்லாமியனின் வன்முறைக்கு குர்ரான், ஹதீஸ் மற்றும் மதக்குருக்களின் ஆசிர்வாதம் இருக்கிறது. 1992 இல் இருந்து 1,50,000 மக்களை அல்ஜீரியாவில் கொன்று குவித்துள்ள இஸ்லாமிய தீவிரவாதத்திற்கும் அமெரிக்க வெளியுறவு கொள்கைக்கும் என்ன தொடர்பு ? அல்லது அதற்கும் வறுமைக்கும் என்ன தொடர்பு ? இஸ்லாம் அரசியலுக்காக பயன்படுகிறதா ? இல்லை அரசியல், அரசியலற்றது என்கிற பகுப்புக்கள் எல்லாம் இஸ்லாம் அறியாதவை. இஸ்லாம் வாழ்க்கை முழுவதற்கும் ஆணைகள் கொண்டதோர் மார்க்கம்.

முதல் நாள் கருத்தரங்கின் மீதிப்பகுதி அடுத்த வாரம்

நன்றி: www.frontpagemagazine.com

***

மொழிபெயர்ப்பாளர் திண்ணைக்குழுவை சார்ந்தவர் அல்ல. வேண்டுகோளினால் அவர் பெயர் வெளியிடப்படவில்லை.

***

Series Navigation

ஒரு விவாத கருத்தரங்கு

ஒரு விவாத கருத்தரங்கு