நினைத்தேன். சொல்கிறேன். கொடிகளும், கோமாளிகளும்

This entry is part [part not set] of 33 in the series 20030329_Issue

PS நரேந்திரன்


கொடிகளுடனான எனது பரிச்சயம் சிறிய வயதிலேயே தொடங்கிவிட்டது.

இளம் வயதில் கொஞ்சநாள் கிராமத்திலிருக்கும் என்னுடைய தாத்தா வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்தேன். ஊர் முகப்பில், பஸ் நிறுத்தத்திற்கு அருகில், இரண்டு மூங்கில் கொடிக்கம்பங்கள் இருந்தன. ஒன்று காங்கிரஸ் கட்சியினுடையது. இன்னொன்று தி.மு.க கட்சியினுடையது.

திடாரென்று, மூன்றாவதாக ஒரு கொடிக் கம்பம் முளைத்தது. அது அ.தி.மு.க கட்சிக் கொடி என்பதோ, தி.மு.க கட்சி இரண்டாகப் பிரிந்து விட்டது என்பதோ அப்போது எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளும் வயதுமில்லை எனக்கு.

இந்த புதிய கொடிக்கம்பம், மற்ற இரண்டு கட்சிக் கம்பங்களையும் விட கொஞ்சம் உயரமாயிருந்தது. மறுநாள் தி.மு.க கொடிக்கம்பம் சாய்க்கப் பட்டு, புதிய, அ.தி.மு.க கொடிக்கம்பத்தை விட நீளமான கொடிக்கம்பம் நடப்பட்டது.

அ.தி.மு.க காரர்கள் விடுவார்களா ? அவர்கள் இன்னொரு, தி.மு.க கம்பத்தை விட நீளமான கம்பத்தை நட்டார்கள். உடனே, தி.மு.க காரர்கள், இரண்டு மூங்கில் கம்பங்களை இணைத்து தங்கள் கொடியைப் பறக்க விட்டார்கள். அ.தி.மு.க காரர்கள் சும்மாயிருப்பார்களா ? அவர்கள் உடனே…….

ஆள விடுங்கய்யா….

சுருக்கமாக சொன்னால் இரண்டு கட்சிக்காரர்களும், தங்களுடைய கட்சிக் கொடி மற்றவன் கொடியை விட நீளமான கம்பத்தில் பறக்க விட போட்டியிட்டார்கள். அவ்வளவுதான்.

இப்போதெல்லாம் மூங்கிலுக்கு பதில் இரும்புக் குழாய்களை இணைத்துப் பயன்படுத்துவதால், நிலமை இன்னும் மோசமாக போய்விட்டது.

மேலே பறப்பது என்ன கட்சிக் கொடி என்று ‘பைனாக்குலர் ‘ வைத்துப் பார்த்தால்தான் தெரிகிறது. அந்த அளவுக்கு ‘நீஈஈஈஈஈஈஈளமாக ‘ இருக்கிறது.

முன்பெல்லாம் இரண்டு மூன்று கட்சிகள்தான் இருந்தன. இப்போதோ, எந்த ஊருக்குள் நுழைந்தாலும் ஒரு பத்து அல்லது பதினைந்து கட்சிக் கொடிகள் கண்ணில் படுகின்றன. ஏதொ ஐ.நா. சபைக்குள் நுழையும் நினைப்புதான் வருகிறது. அதை விட, எத்தனை முறை கொடிக்கம்பங்களை மாற்றி இருப்பார்களோ என்ற கேள்வி வேறு என்னை மலைக்க வைக்கிறது. இதே தொழிலாக சிலபேர் ஒவ்வொரு ஊரிலும் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். எப்படியோ, வேலை வாய்ப்பு பெருகினால் சரி!

அரசியல் கொட்சிக் கொடிகள், சாதிச் சங்க கொடிகள், சினிமா நடிகர்களின் ரசிக மன்றக் கொடிகள், மதக் கொடிகள், தொழிற் சங்கக் கொடிகள் என்று விதவிதமான கொடிகளை தமிழ்நாட்டில் மட்டுமே பார்க்க முடியும்.

‘எந்த கலரிலும் சட்டை போட்டுக் கொண்டு வெளியே போக முடியவில்லை… ‘ என்று நண்பர் ஒருவர் வருத்தப் பட்டுச் சொன்னார். அந்த அளவிற்கு எல்லா வண்ணத்திலும் ஒரு கொடி இருக்கிறது.

கொஞ்சம் ஏமாந்தால் ‘கோவணத்தை ‘ உருவி கொடியாக பறக்க விட்டு விடுவார்கள் போலிருக்கிறது.

சொல்ல முடியாது. செய்தாலும் செய்வார்கள். அந்த ‘கண்றாவி ‘யை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாததால் அதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

இந்த கொடியேற்றும் பழக்கம் தமிழ்நாட்டில் எப்படி தொடங்கியது என்று தெரியவில்லை. ‘இமய வரம்பினில் மீன் கொடியேற்றி, இசைபட வாழ்ந்த பாண்டிய ‘னிடமிருந்து ஆரம்பித்திருக்கலாமோ என்னவோ ? மற்ற மாநிலங்களில் இந்த பழக்கம் இல்லை அல்லது இருப்பதாகத் தெரியவில்லை.

ஏன் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஒவ்வொரு ஊரிலும் தங்கள் கட்சிக் கொடியேற்ற ஆலாய்ப் பறக்கிறார்கள் எனத் தெரியவில்லை. கொடியேற்றுவதில் நல்ல ‘துட்டு ‘ கிடைக்கும் என நினைக்கிறேன். இல்லாவிட்டால் இப்படி ‘பத்து அடிக்கு ஒரு கொடி ‘ ஏற்றிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

இப்படி வெட்டியாக கொடியேற்றி காசு பார்ப்பதை விட, நாலு மரங்கள் நட்டால் மழையாவது பெய்யும். ஜனங்கள் பிழைத்துக் கொள்வார்கள்.

ஹும்…நம்ம அரசியல்வாதிகளாவது…ஜனங்களைப் பிழைக்க விடுவதாவது….

********

சில நாட்களுக்கு முன்னால் ஒரு செய்தி படித்தேன். ஒரு பிரபல நகைச்சுவை நடிகர் ‘தேசிய ஒருமைப்பாட்டு ‘ கொடியை அறிமுகப் படுத்தி இருப்பதாகவும், அதை யார் வேண்டுமானாலும் இலவசமாக உபயோகப் படுத்தலாம் என்றும் கூறியிருந்தார். எனக்கு உண்மையிலேயே பெருமையாக இருந்தது (கொடியைப் பார்க்கும் வரை!).

பொதுவாக தமிழ் சினிமா நடிகர்கள் பற்றி எனக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. வெறும் ‘வெத்து வேட்டுச் சில்லறைப் பயல்கள் ‘ என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. அப்படிப் பட்ட எனக்கு, இதுபோன்ற வித்தியாசமான சிந்தனை, அதுவும் ஒரு ‘தமிழ் சினிமா ‘ நடிகரிடமிருந்து வந்தது ஆச்சரியமாயிருந்தது. இருப்பினும், அந்தக் கொடி எனக்கு அளித்தது ஏமாற்றமே.

நடிகருக்கு ‘தேசப் பற்று ‘ இருக்கிறதோ இல்லையோ, ‘காஞ்சிப் பற்று ‘ நிறைய இருப்பது தெரிந்தது. கொடி முழுக்க சங்கராச்சாரியார்களின் படங்களும், கடவுள் படங்களும்தான் இருக்கிறது. இதை எப்படி ‘தேசிய ஒருமைப்பாட்டுக் ‘ கொடி என்று அழைக்கிறார் என்பது அந்த நடிகருக்கு மட்டுமே வெளிச்சம். வேண்டுமானால் ‘தேசிய வெறுப்பேற்றும் ‘ (மைனாரிடிகளை) கொடி என்று வேண்டுமானால் அழைக்கலாம்.

அவரின் கொடியில் யார் படத்தை வேண்டுமானாலும் அவர் போட்டுக் கொள்ளலாம். அது அவரின் அடிப்படை உரிமை. அதைப் பற்றி நான் குறை சொல்லவில்லை. ஒரு குறிப்பிட்ட மதத்தின் குறியீடுகளை மட்டும் போட்டுவிட்டு, ‘தேசிய ஒருமைப்பாட்டு ‘க் கொடி என்றழைப்பது சரியில்லை என்பது என் கருத்து. மற்றபடி யாருடைய மனதையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல.

சுயநல நோக்கத்தோடு, ரசிகர் மன்றக் கொடிகள் வெளியிடும் தமிழ் சினிமா நடிகர்கள் மத்தியில், மேற்படி நடிகரின் வித்தியாச சிந்தனை பாராட்டிற்குரியதே.

*****

இப்படி நினைத்துக் கொண்டே படுக்கப் போன எனக்கு ஒரு கனவு. அந்த கனவில், என் பக்கத்து வீட்டு பாட்சா பாய் இந்தக் கொடியை வீடு முழுக்க வரைந்து கொண்டிருக்கிறார். அவர் வாய் ‘தேசிய ஒருமைப்பாடு, தேசிய ஒருமைப்பாடு ‘ என்று முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது. தெருவில் என் நண்பர், மேலத் தெரு ஃபெர்ணாண்டோ இந்தக் கொடியை உடம்பெல்லாம் பச்சை குத்திக் கொண்டு வருகிறார். கண்ணைத் தவிர எல்லா இடத்திலும்….என்னை தமிழ் சினிமா நடிகர்கள் விரட்டிக் கொண்டு வருகிறார்கள்…

சடக்கென்று கனவு கலைந்து உட்கார்ந்தேன்.

எனக்குள் ஒரு யோசனை. இந்த கொடிதான் எனக்குப் பிடிக்கவில்லை. நானே ஒரு கொடி தயாரித்தால் ? (காப்பி அடிப்பதுதான் நமது பிறப்புரிமையாயிற்றே!).

உடனே வேலையில் இறங்கினேன். கொடி நிறத்தைப் பற்றி கவலையில்லை. மூவர்ணம்தான் எடுபடும் (தேச ஒருமைப்பாட்டு விஷயமல்லவா ?).

அடுத்து, கொடியில் யார் யார் படத்தை ஒட்டுவது என்பது பற்றி யோசித்தேன். என் மனைவி படத்தை ஒட்டினால், என் அம்மாவிற்கு கோபம் வரும். என் அம்மா படத்தை மட்டும் ஒட்டினால், வீட்டில் ‘சோறு, தண்ணி ‘ கிடைக்காது. இவர் படத்தை ஒட்டினால் அவருக்கு பிடிக்காது. அவர் படத்தை ஒட்டினால் இவருக்கு….

இப்படியே யோசித்து, யோசித்து, கடைசியில் எல்லார் படத்தையும் ஒட்டுவது என்று முடிவு செய்து, ஒட்டிவிட்டு நிமிர்கையில், கொடி ஏறக்குறைய ஒரு ‘எட்டு முழம் வேஷ்டி ‘ சைசுக்கு இருந்தது.

சரி. கொடி தயாராகி விட்டது. இப்போது ஒரு ‘தேசிய ஒருமைப் பாட்டு கீதம் ‘ வேண்டுமே ? பேரறிஞர் ‘சென்னப்பட்டணம் முன்சாமி ‘ நினைவுக்கு வந்தார். அவரிடம் ஓடினேன்.

தன்னுடைய படம் கொடியில் இருக்கிறதா என்பதை ஒரு பெரிய பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்து விட்டு, திருப்தியுடன், ‘சரி…எயுதிக்கோ ‘ என்று தேசிய ஒருமைப்பாட்டு கீதத்தை ராகத்துடன் பாட ஆரம்பித்தார்,

‘அய்த்தலக்கடி அஸ்கா.

நான் அமுக்கிப்புட்டேன் குஸ்கா.

பாட்சா கடை பாயா.

நான் வாங்கி வந்தேன் சாயா.

என் பக்கத்து வீட்டு ஆயா,

படுத்திருக்கு நோயா.

அதப் பாத்து வரலாம் வாய்யா.

ஆ..இந்தா..இந்தா.. ‘

‘யோவ்…நிறுத்துய்யா…என்ன எழவுய்யா இது ? தேசிய ஒருமைப்பாட்டு கீதமா இது ?…உன்ன பேரறிஞர்ன்னு வேற ஊர் பூரா சொல்லிக்கிட்டிருக்கேன்.. ‘

‘ஒனக்கு பிரியலேன்னு சொல்லு…எம்மாம் பெரிய தத்துவம் இதுல கீது தெர்யுமா ?… ‘

‘என்னா பிரியுதோ ? வெறும் காத்துதான் பிரியுது… ‘டமார்…டுமார்னு ‘….பாத்து…வேட்டி கிளிஞ்சிடப்போகுது… ‘

‘இத்தோடா…ஒங் கொடி மட்டும் இன்னாவாம் ? கண்ட கெம்னாட்டிங்கோ படத்த எல்லாம் போட்டுகினு கீற நிய்யி ?… ‘

‘சரி….சரி..விடு…கதைய கந்தலாக்கிடாத…..ஒரு நல்ல தேசிய Motto ஒண்ணு சொல்லு… ‘

‘அப்டான்னா ? ‘

‘அதான்யா…சத்யமேவ ஜெயதே…வாய்மையே வெல்லும்…அப்படிங்கறா மாதிரி…. ‘

‘சரி…புட்சிக்கோ… ‘

‘சொல்லு ‘

‘ஆங்..அமுக்கு. ஆங்…குமுக்கு ‘

‘நாசமாப் போச்சு…இதுதான் mottoவா ?….என்னாய்யா அர்த்தம் இதுக்கு ? ‘

‘அப்டி கேளு…சொல்றேன்…நீ இந்த மாரி கொடியல்லாம் தயார் பண்ணி மொதலமச்சராயிட்டேன்னு வெச்சிக்கோ….அப்பால கெட்ச்சத எல்லாம் ‘அமுக்கு ‘…எவனாவது எதிர் கட்சிக்காரன் கேட்டான்னா, அவன ஜெயில்ல போட்டு நல்லா ‘குமுக்கு ‘….பிரியுதா ? ‘

ஆஹா. என்ன ஒரு தத்துவம்!. பேரறிஞர் பேரறிஞர்தான். அவருக்கு நன்றி.

எனவே நண்பர்களே, எனது இந்த புதிய தேசிய ஒருமைப் பாட்டுக் கொடியை நீங்கள் தாராளமாக, இலவசமாக உபயோகித்துக் கொள்ளலாம் என்று பெரிய மனதுடன் கூறிக் கொள்கிறேன்.

இத்தனை பெரிய கொடியை, ‘திண்ணை ‘யில் பிரசுரிக்க முடியாது என்று திண்ணை ஆசிரியர் எதிர்பாராத விதமாக ‘கடித்து ‘ வைத்து விட்டதால், வேறு இடம் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் கண்டிப்பாக என் கொடியை பிரசுரம் செய்வேன் என்று அறுதியிட்டு, இறுதியாக, உறுதியாக கூறிக்கொள்கிறேன். அதுவரை எனது தேசிய ஒருமைப்பாட்டு கீதத்தையும், mottoவையும் இலவசமாக உபயோகித்து பலன் பெறுவீர்களாக.

(கொஞ்சம் ஜாலியான மூடில் எழுதியதால், கட்டுரை கொஞ்சம் ‘அச்சுப் பிச்சு ‘ ஆகிவிட்டது. பொறுத்தருள்க)

**********

வேலைப் பளு அதிகமிருப்பதால், இனி வாரா வாரம் எழுத முடியாது என்று நினைக்கிறேன். முடிந்தவரை எழுத முயற்சி செய்கிறேன். எழுதுவது என்னுடைய முழு நேர வேலையில்லை என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே.

ஆரம்பத்தில் எழுத ஆரம்பிக்கும் போது, ‘யார் இவற்றை எல்லாம் படிக்கப் போகிறார்கள் ? ‘ என்ற எண்ணம்தான் எனக்கு இருந்தது. என்னுடைய சில கருத்துக்கள் பொதுவான ‘ஆட்டு மந்தைத் தமிழ்நாட்டுச் சிந்தனை ‘களுக்கு முற்றிலும் வேறானவை. இப்படிப் பட்ட ‘பிரபலமான ‘ எழுத்துக்களை யாரும் படிக்க மாட்டார்கள் என்றுதான் நினைத்தேன்.

அப்படியே தப்பித் தவறி படித்தாலும், கண்டிப்பாக ‘வாழ்த்தி(! ?) ‘ எழுதுவார்கள் என மனதளவில் தயாராகத்தான் இருந்தேன்.

ஆனால் நடந்ததே வேறு. நானே எதிர்பாராத விதத்தில் திண்ணை வாசக நண்பர்கள், என்னை ‘பாராட்டு மழையில் (நிஜமான!!) ‘ நனைய வைத்து விட்டார்கள். ஒன்றிரண்டு பேர் ‘வாழ்த்தியும் ‘ எழுதி இருந்தார்கள். அவர்கள் மிக சொற்பமானவர்களே.

‘திண்ணை ‘யில் நடை பயிலும் எழுத்துக் குழந்தையான என்னை பாராட்டியும், ஊக்குவித்தும் எழுதியவர்களுக்கு மிகவும் நன்றி.

தனிப்பட்ட முறையில் உங்கள் அனைவருக்கும் பதில் எழுத எனக்கு விருப்பமிருந்தாலும், நேரமில்லை. மன்னித்து, மறக்காமல் எழுதுங்கள்.

***

psnarendran@hotmail.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்