ரம்ஸ்ஃபீல்ட் உருவாக்கிய போர்முறைக்கு ஒரு பரிசோதனை.

This entry is part [part not set] of 33 in the series 20030329_Issue

ஜெஃப்ரி டோனோவன்


ஈராக் போரை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு புதுமாதிரி போர் என்று அமெரிக்காவின் போர் அதிகாரிகள் அழைக்கிறார்கள். போர் ஆரம்பித்த முதல் சில தினங்களில், அமெரிக்க ராணுவம் முக்கியமான ஈராக்கிய தலைமையை பாக்தாத்திலும் இன்னும் பல இடங்களில் குண்டு வீசி அழிக்க முயன்றது. இந்த முயற்சிக்கு பின்னர், மாதக்கணக்கில் மனவியல் ரீதியான போரை ஈராக்கிய ராணுவ அதிகாரிகள் மீது தொடுத்து அவர்களை போரின்றி சண்டையின்றி சரணடைய வைக்க முயன்றது.

ஆரம்பத்தில் ஈராக்கிய ஜனாதிபதி குண்டுவீச்சில் இறந்தார் அல்லது காயமடைந்தார் என்று அமெரிக்கா சொன்னதும், அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், பார்வையாளர்கள், இந்த போர் மிகவும் சுருக்கமாக, ரத்த சேதமின்றி முடிந்துவிடும் என்று கருதினார்கள்.

மார்ச் 22ஆம் தேதி, அமெரிக்க ஜெனரல் டாமி ஃப்ராங்க்ஸ் அவர்கள் கட்டார் நகரத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, அமெரிக்கா புதுவகை போரை தொடுக்கிறது என்று பீற்றிக்கொண்டார். ‘இதுவரை வரலாற்றில் இல்லாத ஒரு புதுவகை போரை அமெரிக்கா தொடுத்திருக்கிறது. இதில் அதிர்ச்சி, ஆச்சரியம், வளைந்து கொடுக்கும் தன்மை, மிகவும் குறிபார்த்து அடிக்கும் குண்டுகள், இதுவரை யாருமே செய்யாத அளவில் ஒரே அடியாக அடிப்பது, மாபெரும் சக்தியோடு போரிடுவது ஆகியவை இதில் அடங்கும் ‘ என்று சொன்னார்.

ஆனால், ‘சுத்தமான ‘ சீக்கிரமான போர், உடனடி ஈராக்கிய சரணாகதியில் முடியும் என்ற எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் அடுத்த நாளே காற்றில் கரைந்துவிட்டன. அதற்குள்ளேயே அமெரிக்க ஆதரவு படைகளில் மோசமான இழப்புகள் இந்த நவீன அமெரிக்க போர்தந்திரத்தை கேள்வி கேட்க வைத்துவிட்டன. ஈராக்கிய படைகளிலிருந்து எதிர்ப்பையும் அமெரிக்க ஆதரவு படைகள் எதிர்பார்க்கவில்லை.

12 அமெரிக்க துருப்புகள் தென் ஈராக்கில் இழந்ததும், அடுத்து 12 காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டதும், இந்த நவீன போர்முறையை பற்றிய கேள்விகளை எழுப்பின. இந்த நவீன போர்முறை ஈராக்கிய அரசை மட்டும் குறி வைப்பதாகவும், பொதுமக்கள் காயம்படுவதை குறைப்பதாகவும், முக்கியமான கட்டுமானங்களை போருக்கு பின்னர் மறு கட்டுமானத்துக்காக விட்டு வைப்பதையும் கொண்டிருக்கிறது.

ஆராய்ச்சியாளர்கள் இந்த போர்முறை அமெரிக்க பாதுகாப்பு மந்திரி டோனால்ட் ரம்ஸ்ஃபீல்ட் அவர்களின் கருத்து அடிப்படையிலானது என்று கூறுகிறார்கள். அதி தொழில்நுட்ப ஆயுதங்கள், மனவியல் போர் ஆகியவற்றை பாரம்பரிய போர்முறையோடு இணைத்து ‘புதுவகை சிந்தனை ‘ என்று போர்தந்திரமாக வடிவமைத்தது.

முன்னாள் போலந்து பாதுகாப்பு அமைச்சரும், வெளியுறவு மந்திரியுமாக இருந்த ரேடெக் சிகோர்ஸ்கி இப்போது வாஷிங்டனில் இருக்கும் அமெரிக்க என்டர்பிரைஸ் இன்ஸ்டிட்யூட்டில் ஆராய்ச்சியாளராக இருக்கிறார். 1991இல் முதல் வளைகுடா போரின் போது பெருமளவு குண்டுகளை ஒரேநாளில் போட்டதுபோல இல்லாமல், சமீபத்திய போர்முறை டோனால்ட் ரம்ஸ்ஃபீல்டின் சிந்தனைப்படி அமைந்திருக்கிறது என்று கருதுகிறார். ‘இது தொழில்நுட்பம் அனுமதிக்கும் அளவுக்கு வளைந்து கொடுக்கும் தன்மையோடு இருக்கிறது. ‘ஜெனரல்கள் எப்போதும் முந்தைய போரையே போரிடுகிறார்கள் ‘ என்ற பழமொழியை உடைப்பதாகவும் இருக்கிறது. இந்த முறை, ‘ராணுவத்தில் புரட்சி ‘ என்ற டோனால்ட் ரம்ஸ்ஃபீல்டின் சிந்தனையை பெண்டகன் ஏற்றுக்கொண்டதுபோலத்தான் இருக்கிறது ‘ என்று சிகோர்ஸ்கி கூறுகிறார்.

உண்மையில், தங்கள் குறிக்கோள்களை நிறைவேற்ற, அமெரிக்க ஆதரவு படைகள் குறிபார்த்து தாக்கும் குண்டுகளை ஈராக்கிய ராணுவ மற்றும் அரசாங்க குறிகள் மீது செலுத்தினார்கள். அதே நேரத்தில் தெற்கில் குவாய்த்திலிருந்து தரைவழி தாக்குதலை மேற்கொண்டு பாக்தாத் வரைக்கும் வந்துவிட்டார்கள்.

பிரிட்டனிலிருந்து வெளிவரும் பாதுகாப்பு பத்திரிக்கையான ‘ஜேன்ஸ் டிபன்ஸ் வீக்லி ‘யின் நிறுவனரும் ஆசிரியருமான ராபர்ட் ஹட்சின்ஸன் அவர்கள் கூறும்போது, ரம்ஸ்ஃபீல்டின் அணுகுமுறை உண்மையிலேயே புதியவகையானது என்றும், ரம்ஸ்ஃபீல்டின் திட்டங்கள், அதிகப்படி தரைப்படையை அனுப்பி போரிடவைக்கும் மூத்த ராணுவ அதிகாரிகளின் திட்டங்களை உதாசீனம் செய்துவிட்டு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்றும் கூறுனார்.

போவல் அணுகுமுறை என்பது அமெரிக்க உள்துறை மந்திரியான கோலின் போவல் அவர்களது அணுகுமுறை. அளவுக்கு அதிகமான சக்தியை உபயோகிக்காமல் அமெரிக்கா போருக்குச் செல்லக்கூடாது என்பது போவல் அணுகுமுறை. இது டோனால்ட் ரம்ஸ்ஃபீல்டின் அணுகுமுறைக்கு நேர் எதிரானது. இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசத்தை ஹட்சின்ஸன் குறிப்பிடுகிறார். ‘அமெரிக்க பாதுகாப்பு மந்திரி குறைந்த அளவு படைகளை நம்புகிறார். அறுவை சிகித்சை போன்ற தாக்குதல்கள். அதன் பின்னர் அதிக பாதுகாப்புள்ள பெரும் தளவாடங்கள் பரந்த முனையில் எதிரியை சந்திப்பது. இந்த அணுகுமுறைக்கு பின்னால் இருப்பது அமெரிக்க மற்றும் இங்கிலாந்து அரசாங்கங்களின் ‘ஈராக்கிய மக்களுக்கு சதாம் உசேனை பதவியிலிருந்து இறக்க நேரம் கொடுக்க ‘ இருக்கும் விருப்பம். ‘என்று ஹட்சின்ஸன் கூறுகிறார்.

இருப்பினும், ராணுவ திட்டமிட்டவர்கள் விரும்பியது போல பரந்த ஈராக்கிய சரணாகதிகள் நடக்கவில்லை. முக்கியமாக, சதாம் உசேனுக்கு எதிராக தீவிரமான கருத்து இருக்கும் ஷியா பிரிவினர் வாழும் தெற்கில் கூட நடக்கவில்லை. இதன் விளைவு, பாஸ்ரா மற்றும் நஸரியா போன்ற முக்கிய நகரங்களை கைப்பற்ற அமெரிக்க ஆதரவு படைகள் நீண்ட மற்றும் விலை கொடுக்க வேண்டியிருந்த சண்டைகள்.

இந்த சண்டைகள் நீண்டால், அமெரிக்க ஆதரவு படைகள் இன்னும் பலத்த பரிசோதனைக்குள் மாட்டலாம். ஏனெனில், குவாய்த்திலிருந்து செல்லும் ஒரே ஒரு சாலை மட்டுமே, பாக்தாத்தை நெருங்கிவிட்ட அமெரிக்க ராணுவத்துக்கு தளவாடங்களையும் உணவையும் அளிக்க இருக்கும். இந்த நகரங்களை எடுத்தே ஆகவேண்டும் என்று கடினமாக அமெரிக்க படைகள் முயன்றால், பெருமளவு பொதுமக்கள் இறப்பது நேரிடும்.

இதற்கிடையில், மனிதநேய சிக்கல் தெற்கில் வருவது போன்ற எச்சரிக்கைகள் வர ஆரம்பித்திருக்கின்றன. இந்த சண்டை மிகவும் தேவையான உதவியை வர தாமதப் படுத்திவிட்டது. பாஸ்ராவின் குடிமக்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐக்கியநாடுகள் செயலாளர் கோபி அண்ணான் கோரியிருக்கிறார். இந்த நகரத்தின் முக்கியமான தண்ணீர் உற்பத்தி தொழிற்சாலை மின்சாரம் தடை பட்டதால் செயலிழந்து விட்டது. ஈராக்கின் துறைமுகங்கள், தளவாட சாலைகள், மக்கள்தொகை இருக்கும் மையங்கள் ஆகியவை அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டுக்குக்கீழ் வந்ததும், உடனே உதவியை கொடுக்கப்போவதாக வாஷிங்டன் வாக்குறுதி அளித்திருக்கிறது.

இறுதியாக, பாக்தாத். ஈராக்கின் தலைமை தலைநகரத்தைவிட்டு ஓடுவதாக தெரியாததால், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் துருப்புகள், பாக்தாத்தின் நுழைவாயில்களை காத்துவரும் ஈராக்கின் குடியரசு காவல்படையை தாக்கி வருகிறார்கள். சில ஆராய்ச்சியாளர்கள், பாக்தாத்துக்கான போர் நீண்டதாகவும், ரத்தசேதம் மிக்கதாகவும் இருக்கும் எனக் கருதுகிறார்கள்.

அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் பொதுவாக போரின் முன்னேற்றத்தைப் பற்றி உற்சாகமாக இருந்தாலும், ரம்ஸ்ஃபீல்டின் புதுவகை போர்முறை ஆதரவாளர்கள் உட்பட, எல்லோருமே இந்த போர் இன்னும் வெற்றியடையவில்லை என்பதை குறித்து எச்சரிக்கிறார்கள்.

ஜெஃப்ரி ரானே என்ற போர் நிபுணர், இந்த புதுவகை போர்முறைக்கு பெருத்த ஆதரவாளர். அமெரிக்க ஆதரவு படைகளின் போர்தந்திரத்தின் முக்கியமான பங்கு, ராணுவ சக்தி, மனவியல் போர்முறை போன்ற பலவித உபாயங்கள் மூலம் குறிக்கோளை எட்டுவது என்று கூறுகிறார். இங்கு குறிக்கோள் ஈராக் அரசாங்கத்தின் கவிழ்ப்பு.

இந்த ஈராக் போர் ரம்ஸ்ஃபீல்டின் திட்டப்படி நடக்கிறது என்று கூறுகிறார். இது போர் வருங்காலத்தில் எப்படி இருக்கும் என்பதன் அறிகுறி. ஆயினும் இதன் முடிவை கணிக்க முடியாது என்றும் கூறுகிறார். ‘போர் ஆரம்பித்து 5 நாட்களே ஆகின்றன, நாம் வெற்றி பெற்றோமா, என்று தெரியாது. குயாத்திலிருந்து பாக்தாத் வரைக்கும் இருக்கும் இந்த சப்ளை சாலை தொடர்ந்து நம் கையில் இருக்குமா என்று தெரியாது. இல்லையென்றால், நாம் இந்த திட்டத்தை மோசமானது என்று சொல்வோம். ஆனால் இது பற்றி ஆரம்பத்திலேயே சொல்ல முடியாது. காத்திருந்துதான் பார்க்கவேண்டும் ‘

***

Series Navigation

ஜெஃப்ரி டோனோவன்

ஜெஃப்ரி டோனோவன்