அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 16 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான

This entry is part of 28 in the series 20030323_Issue

மஞ்சுளா நவநீதன்


கேள்வி 23 : நீங்கள் சொல்வதெல்லாம் சரி போலத் தான் தோன்றுகிறது, என்றாலும் இசுலாமியர் மத்தியில் மற்றவர்களைக் காட்டிலும் மத அடிப்ப்டையிலான ஒற்றுமை கூடுதலாக இருக்கிறதே ? அவர்களின் நாட்டுப் பற்றை நாம் நம்ப முடியுமா ?

இந்தக் கேள்வியை எழுப்பி மார்க்ஸ் சொல்வது இந்தப் பதில் : ‘சிறுபான்மையினரின் உளவியலை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இசுலாமியரின் பல உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப் பட்டுள்ளன. அவர்கள் மீதான பெருமதவெறியும் வன்முறையும் அமைப்பு ரீதியாக அதிகரித்துள்ளன. அரசு, ராணுவம் , பத்திரிகைகள் எல்லாம் வெளிப்படையாகவே இசுலாமியர்க்கு எதிராக உள்ளன. இத்தகைய பாதுகாப்பற்ற சூழலில் இசுலாமியர் மதத்தின் பெயரால் இணைந்து நிற்பதையும் , தங்களின் அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்ள முனைவதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அவர்களின் மத உணர்வு தற்காப்பு நோக்கிலானது; தாக்குதல் நோக்கியதல்ல. ‘

சிறுபான்மையினரின் உளவியல் என்பது இவ்வளவு சுருக்கமாய் விளங்கிக் கொள்ளக் கூடியதல்ல. சிறுபான்மையினர் எல்லா நாடுகளிலும் உண்டு. சொல்லப் போனால் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு இருக்கும் உரிமைகளும், தனித்த சலுகைகளும் வேறெந்த நாட்டிலும் இல்லை. இசுலாமியர்க்கு எதிராக ஆர் எஸ் எஸ் போன்ற மதவெறி இயக்கங்கள் செயல்பட்டாலும், எல்லாக் கட்சிகளும் இசுலாமியர்க்கு எல்லா விதத்திலும் ஆதரவாய் இருந்திருக்கிறார்கள். என்ன உரிமைகள் இது வரையில் பறிக்கப் பட்டிருக்கின்றன என்று மார்க்ஸ் கூறவில்லை. ஏனென்றால் அப்படி எந்த உரிமைகளும் பறிக்கப் படவில்லை. பொது சிவில் சட்டம் என்ற ஒன்று தான் ‘உரிமைப் பறிப்பு ‘ என்று பலரால் சுட்டிக் காட்டப் படுகிறது. ஆனால் அம்பேத்கர் , மற்றும் இஸ்லாமியத் தலைவர்கள் உள்ளிட்ட சட்ட அமைப்பு வரைவிலேயே, பொது சிவில் சட்டம் நோக்கிய செயல்பாடு இருக்க வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்ப்பட்டுள்ளது. பத்திரிகைகள் இந்து மதவெறிக்கு எதிராக மிக தீவிரமான எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்திருக்கின்றன. சொல்லப் போனால் இந்து மத வெறியினால் நடக்காத குற்றங்களைக் கூட , சிறுபான்மையினரின் மீது தாக்குதல் நடந்த ஒரே காரணத்திற்காக, இந்து அமைப்புகளைக் குற்றம் சாட்டி எழுதும் போக்கும் பத்திரிகைகளில் அதிகரித்துள்ளது. இது இசுலாமியர்க்கு உதவி செய்து இந்து மதவெறியைக் குறைக்கும் என்று இவர்கள் காரணம் கற்பிக்கிறார்கள்.

பெருமதவெறி என்பது பெரும்பான்மைவாதம் என்ற அடையாளத்திலிருந்து எழுவது. இந்துப் பெருமதவெறி இந்தியாவிலும், இசுலாமிய நாடுகளில் இஸ்லாமியப் பெருமதவெறியும் எழுகிறது என்றால், பாகிஸ்தானில் , பங்களாதேஷில் இந்துக்கள் என்ற சிறுபான்மையினர், இசுலாமியர் இந்தியாவில் இருக்கும் அளவிற்கு உரத்த குரல் கொடுப்பவர்களாக ஏன் இல்லை ? இது ஒரு முக்கியமான கேள்வி. இந்துக்களுக்கும் மற்ற சிறுபான்மையினருக்கும் மிகுந்த அழுத்தமும், சகிப்பின்மையும் இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளில் செய்யப் பட்டு வருகின்றன என்று பதிவு செய்யப் பட்டுள்ளது. விடுதலைக்குப் பின்னர், இந்தியாவில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை வளர்ந்து வந்திருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் பங்களாதேஷ் நாடுகளில் கிட்டத்த்தட்ட இந்துக்களே இல்லை என்ற அளவிற்கு ஆகிவிட்டிருக்கிறது. இருந்தும் மார்கஸ் போன்றவர்கள் இந்திய அரசைக் குற்றம் சாட்டுவார்கள். இஸ்லாமிய நாடுகளில் எழும் இந்து எதிர்ப்பு வெறிக்கு எதிரொலியாக இங்கு இந்து பெரும்பான்மை வாதம் எழுகிறது. இது தவறு தான் என்றாலும், உலகமே ஒரு கிராமம் போலக் குறுகிவிட்ட ஒரு சூழலில் ஒரு மூலையில் நடக்கும் நிகழ்ச்சிகள் வேறொரு சமூகத்தில் எழும் இயக்கங்களை சரியாகவோ தவறாகவோ பாதிக்கின்றன. ஆனால் இசுலாமியரின் ‘எதிரொலி ‘ சரி என்று வாதிடும், மார்க்ஸ். இந்து அடிப்படைவாதம் எழுந்ததற்கு இதே போல் காரணம் சுட்டப் படுவதை கவனமாய்த் தவிர்த்து விடுகிறார். காஷ்மீரில் சிறுபான்மை இந்துக்கள் இதே வாதத்தை உபயோகித்து இசுலாமியர்கள் மீது தாக்குதல் நடத்தினால், இதே மாதிரி ‘தற்காப்பு நோக்கிலானது ‘ என்று மார்க்ஸ் வாதிடுவாரா என்று தெரியவில்லை.

பார்க்கப் போனால் பெரும்பான்மை, சிறுபான்மை என்பதே ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை குழுவின் அடையாளமாக மாற்றும் ஒரு அரசியல் செய்கை. அந்த அடையாளத்தை வரையறை செய்வதில் ஒரு சீரான தன்மையை மக்கள் மீது சுமத்துவது சில குறிப்பிட்ட தலைமைக்கும் அதன் சுயநலத்திற்கும் பயன்படும் வகையிலானது. இது பற்றிய விமர்சனங்கள் தனியாய்ச் செய்யப்பட வேண்டியவை.

கேள்வி : 24 :இசுலாம் அடிப்படையில் வன்முறையைப் போதிக்கும் மதந்தானே ? ஒரு கையில் குரானையும் ஒரு கையில் வாளையும் வைத்துக் கொண்டு மதத்தைப் பரப்புவதும், சிலை வணக்கம் செய்பவர்கள் மீது ‘ஜிகாத் ‘(புனிதப் போர்) நடத்துவதும் தானே இசுலாமியரின் மதக் கொள்கை ? என்று மார்க்ஸ் கேள்வி எழுப்புகிறார்.

இதற்குப் பதிலாக குரானில் உள்ள வாசகங்களை மேற்கோள் காட்டுகிறார். ‘கருணை மிகுந்த அல்லாஹ் யார்மீதும் தேவையற்ற வன்முறையைப் போதிக்கச் சொல்லவில்லை ‘ என்பது மார்க்ஸின் ஒரு வாசகம். குரானில் மதப் பரப்புதலில் வன்முறைக்கும் வற்புறுத்தலுக்கும் இடமில்லை என்ற வாசகங்கள், ‘எல்லா வழிபாட்டு இல்லங்களிலும் ஒலிப்பது அல்லாஹ்வின் திருப் பெயர் தான். ‘ என்பதாக குரானில் வரும் வாசகங்களையும் மேற்கோள் காட்டுகிறார்.

இது ஒரு பயனற்ற செயல். குரான், விவிலியம், வேதம், பகவத் கீதை போன்ற புனித நூல்களில் ஒரு கருத்துக்குச் சார்பாக இருக்கும் வாசகங்கள் போன்றே, அந்தக் கருத்துக்கு எதிர்ப்பாகவும் இருக்கும் வாசகங்கள் உண்டு. இந்த நூல்கள் எழுதப் பட்டது ஒரே நேரத்தில் அல்ல, என்பதால் அந்தந்தக் காலத்தின் எதிரொலிகள் இதில் பதிவு பெற்றிருக்கும். இஸ்லாம் மட்டுமல்ல எந்த மதமுமே வன்முறையைப் போதிப்பது இல்லை. இந்து மதத்திலும் ஒரு புறம் ‘வசுதைவ குடும்பகம் ‘ என்றும் இன்னொரு புறம் சாதியமும் உண்டு. அதே போல் வேறு புனித நூல்களிலும் ஒன்றுக்கொன்று முரணான வாசகங்கள் இடம் பெற்றிருக்கலாம். ஆனால் ஒரு பொதுக் கருத்தாக எது மேலாண்மை பெற்றிருக்கிறது, எது வழிநடத்துகிறது என்று பார்க்க வேண்டும். இன்று இசுலாமிய நாடுகளாய் அறியப் படுபவை எல்லாமே வேறு வேறு கலாசாரங்களின் பெருமை மிக்க அடித்தளங்களை அழித்து உருவானவை. இன்று அந்த அடையாளங்கள் முழுமையாய் அழிக்கப் பட்டதற்கு இசுலாமின் மதப்பரப்புதல் வழிகள் காரணம் என்று வரலாற்றாசிரியர்கள் ஒப்புக்கொள்கின்றனர். இந்த அழிவிற்கு குரானின் வாசகங்கள் காரணம் அல்ல என்று இன்று மார்க்ஸ் சொல்வது உண்மையாய் இருந்தாலும் சாராம்சத்தில் இசுலாமியக் கலாசாரம் மற்றும் மதப் பரப்புதலில் இருந்த இருக்கும் வன்முறையின் இடத்தை மறுப்பதற்கில்லை.

இதன் பொருள் நிச்சயம் சாதாரண இசுலாமியர்கள் மீது குற்றம் சுமத்துவதல்ல. மதத் தலைமைகள், அரசியல் தலைமைகள் முஸ்லீம்களின் அடிப்படையான போக்கை நிர்ணயிப்பதில் எப்படிச் சுயவிமர்சனமற்று. புதிய தடங்களைத் தவிர்க்கிறார்கள் என்று காட்டுவது தான். இந்தப் போக்கிற்கு இசுலாம் அல்லாதவர்கள் மட்டுமல்ல, இஸ்லாமியருமே பலியாகிறார்கள் என்று காட்டுவது தான் என் நோக்கம். அந்தச் சுய விமர்சனம் நோக்கிய திசையில் அவர்களைச் செல்ல விடாமல் தடுப்பதில் மார்க்ஸ் போன்ற முற்போக்காளர்களும் பெரும் பங்கு வகிக்கிறார்கள். இசுலாமியத் தலைமையில் இப்போது இருப்பது எல்லாமே சரி , எல்லாத் தவறும் இந்து மதவெறித் தலைமையினுடையது தான் என்பதான இந்தப் போக்கு நல்லதல்ல.

கேள்வி : 25 : அப்படியானால் வேறெந்த மதத்தைக் காட்டிலும் இசுலாத்தை ஏன் இந்துக்கள் வெறுக்கிறார்கள் ? என்பது மார்க்ஸின் கேள்வி.

சுமையேற்றப் பட்ட கேள்வி இது. இந்தக் கேள்வியின் உட்கருத்தை உடனே மார்க்ஸ் மறுக்கும் விதத்தில் பதில் சொன்னாலும், விஷத்தை ஏற்றியாகிவிட்டது. ‘சாதாரண மக்கள் வெறுப்பில்லாமல் சகோதரர்களாய்த் தான் வாழ்கின்றார்கள் ‘ என்று பதில் சொல்வதற்கு இந்தக் கேள்வியைப் பயன் படுத்த வேண்டுமா ?

கேள்வி 26 : மன்னியுங்கள் ஆர் எஸ் எஸ், விசுவ இந்து பரிஷத், பரதீய ஜனதா போன்ற இந்து மதவெறி அமைப்புகள் மற்ற மதங்களைக் காட்டிலும் இஸ்லாம் மதத்தைக் குறிவைப்பதேன் ?

மார்க்ஸின் பதிலிலிருந்து உதிரும் முத்து இது : ‘ இந்து மதத்தின் அடிப்படைகளான வருணாசிரமம், சாதிக் கொடுமை , தீண்டாமை ஆகியற்றுக்கு ஒரு சரியான சவாலாக விளங்குவது இசுலாம் தான். ‘ ‘இசுலாம் மட்டுமே சாதியை வென்றது. ‘ பச்சைப் பொய். முன்னமே நான் குறிப்பிட்ட படி எந்த மதத்திற்கும் சமத்துவம் என்பது ஒரு முன் கோரிக்கையோ , நிபந்தனையோ அல்ல. மதம் என்பது சில நம்பிக்கைகளின் தொகுப்பு. ஒரு இறைக் கொள்கையின் விளக்கம். ஒரு சில நெறிகளை முன்வைப்பது. சமத்துவம் என்பது அல்ல மதங்களின் குறிக்கோள். கம்யூனிசம் மாதிரி ஒரு சமூகத்தை ஸ்தாபிப்பது இசுலாமின் நோக்கம் என்று பாமரத்தனமான புரிதல் மார்க்ஸிற்கு. (இதனால் தான் இசுலாமியரிடையே கம்யூனிசம் என்பது சைத்தான்களின் தத்துவம் என்று பரப்பப்படுவது பற்றியோ, இசுலாமிய நாடுகளில் மற்ற மதங்கள் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் இயக்கமும் தடை செய்யப்பட்ட ஓர் இயக்கமே என்பது பற்றி வாயைத் திறக்க மார்க்ஸ் தயாரில்லை. )

இறைவனின் முன் எல்லோரும் சமம் என்று எல்லா மதங்களும் வாய்ப்பேச்சளவில் சொன்னாலும் நடைமுறையில் இது சாத்தியம் அல்ல. பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும், ஏன் தமிழ்நாட்டிலும் கூட இசுலாமியர்களிடையே சாதியம் மறைந்து விடவில்லை. வரலாற்று ரீதியாக சாதியத்திற்கு எதிரான போராட்டங்களும் சமூக இயக்கங்களும் கூட பிரிட்டிஷாரின் வருகைக்குப் பின்பு தான் வலுப்பெற்றது. ஆங்கில வாசிப்பும், ஜனநாயக மரபுகள் பற்றிய அறிதலும் சோஷலிசச் சிந்தனைகளின் வளர்ச்சியும், இந்துக்களின் மத்தியில் தோன்றிய சுயவிமர்சனப் போக்கும் எல்லாமே இசுலாமின் பாதிப்புக்கு அப்பற்பட்டு எழுந்தவை. சாதியத்தின் முனையைக் கூட இசுலாமிய அரசுகள் முறிக்கத் தயாராய் இல்லை.

ஆனால் மார்க்ஸின் உளவியலை அறிய இந்தப் பதில் ஒரு சரியான குறியீடு. சாதியத்திற்கு இசுலாம் சவால். அதனால் அதன் மீது குறிவைக்கப் படுகிறது என்று சொல்லும் மார்க்ஸ் , இசுலாமியர்கள் ஒரு தேசம் என்று குறிப்பிடப்பட்டு நாடு பிளவுண்டு லட்சக்கணக்கான மக்கள் பலியிடப்பட்டதும் ஒரு காரணம் என்று குறிப்பாகக் கூடச் சொல்லத் தயாரில்லை.

***

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation