நினைத்தேன்…சொல்கிறேன். கூத்தணங்கும், கருணைத் தம்பிரானும் பற்றி

This entry is part [part not set] of 28 in the series 20030323_Issue

PS நரேந்திரன்


கைலாயத்தில் இறைவன் கவலையில் இருந்தார்.

நாட்டின் தென் பகுதியிலிருந்து வரும் ‘ஓலம் ‘ அவரை நிஷ்டை செய்ய விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது.

‘ஓம் ‘ என்ற ஓங்கார நாதத்தின் ஒலியை மட்டுமே கேட்டுப் பழகிய காதுகளுக்கு, ஓயாமல் ஒலிக்கும் அபயக் குரல் இதயத்தை அறுத்தது.

தென்னாடுடைய சிவனல்லவா ? கவலை கொள்வது இயல்புதானே ?

ஆலயம்தோரும் தன்னைக் குடியமர்த்தி, நித்தமும் நெஞ்சுருகத் தொழும் தன் மக்களுக்கு என்னவாயிற்றென அறிந்து கொள்ள இறைவனின் இதயம் துடித்தது.

‘தேவேந்திரனை அழைத்து வா ‘ எனக் கிங்கரனை ஏவினார்.

ஓடோடி வந்தான் தேவேந்திரன். ‘உத்தரவு ‘ என வாய் பொத்தி நின்றான்.

‘தேவேந்திரா. திருமகனே. என்னாயிற்று தென்னாட்டு மக்களுக்கு ? ஏனிந்த மரண ஓலம் ? ‘

தேவேந்திரனின் முகத்தில் துயரம்.

‘என்னென்று சொல்வேன் மஹாதேவா ? அசுரர்கள் இருவரின் பிடியில் அகப்பட்டு, அழிந்து கொண்டிருக்கிறார்கள் தென்னாட்டு மக்கள் ‘

‘அசுரர்களா ? அழிந்தது அசுர வம்சம் என்றல்லவா இதுவரை எண்ணிக் கொண்டிருந்தேன் ? யாரவர்கள் ? ‘

‘நர்த்தனமாடியே நாட்டை அழிக்கும் கூத்தணங்கும், தீந்தமிழ் பேசியே தீமைகள் செய்யும் கருணைத் தம்பிரானுமே அவர்கள் ‘

‘உண்மைகளை ஒளிக்காமல் கூறும்படி உத்தரவிடுகிறேன் உனக்கு. முதலில் கருணைத் தம்பிரான் பற்றிச் சொல் ‘

‘அங்ஙனமே ஆகுக மகேஸ்வரா. கருணைத் தம்பிரான், மஞ்சளாடை மைந்தன். மதியூகி. கலாச்சாரச் சீரழிவின் பிதாமகன். தென்னாட்டின் முன்னாள் அரசன். திறமைசாலி எனினும்

தீமைகள் பல புரிந்தவன். திக்கிற்கொரு மகனை சிற்றரசனாகக் கொண்டவன். சிக்கிக் கொள்ளாமல் சீரழிவு செய்வதில் வல்லவன். இன்னும்… ‘

‘போதும். இந்திரா…போதும்…நிறுத்து….கூத்தணங்கு பற்றி கொஞ்சம் கூறு ‘

‘இந்நாளைய தென்னாட்டு அரசி. முன்னாள் அரசன், மலை நாட்டு மல்லனின் ஆசைநாயகி. தலைமைத் தகுதியற்ற….(இந்த நேரத்தில் மானுட விமானம் ஒன்று மிகுந்த ஓசையுடன் கைலாயத்தைக் கடந்து செல்கிறது. விமான இரைச்சலினூடே, மக்கள்…துன்பம்…அறிவிலி…விசித்திரப் பிறவி…போன்ற சொற்கள் விட்டு விட்டுக் கேட்கின்றன). கூத்தணங்கின் கோமாளித்தனங்களை, ஏட்டினில் கூறிவிட இயலாது ஈஸ்வரா…. ‘

‘ஐயகோ…கேட்கவே பதறுகிறதே நெஞ்சம்…மக்களைக் காக்க வேண்டியது ராமனின் கடமையல்லவா ? ராமன் என்ன செய்து கொண்டிருக்கிறான் ? ‘

‘சாமியார்கள் ராமனை சம்ஹாரம் செய்து கொண்டிருக்கிறார்கள் ப்ரபோ!. ஓடி ஒளிய ஓரிடம் தேடிக் கொண்டிருக்கிறான் ராமன்!. ‘

பித்தன், பிறைசூடனின் முகம் சினத்தால் சிவந்தது.

‘ஈரிருபது ஆண்டுகள் நான் மோனத்தவம் செய்து முடிக்குமுன்னே இத்துணை அலங்கோலமா ? என்ன செய்கிறேன் பார் அவர்களை! புறப்படுகிறேன் இப்போதே ‘

அருகிருந்து கவனித்த அன்னை பார்வதியின் முகத்தில் கவலை. அண்ணலின் சின வலிவை அனுபவித்து அறிந்தவளல்லவா அவள் ?.

மெல்ல அருகில் வந்து, முகம் தொட்டு, அன்னை சொல்கிறாள்,

‘தேவ தேவா. இன்னொரு முறை சினம் கொள்ள மாட்டேனென்று, முன்னொரு முறை செய்த சத்தியத்தை மறந்து விடாதீர்கள் ‘

செம்முடி தரித்த சிவனாரின் முகத்தில் சிந்தனைக் கீற்று.

‘மறந்து விடவில்லை மாதரசி. எம் மக்களின் துன்பம் கேட்டுத் துடிக்கிறது என் இதயம். தூயவர்தம் துயர் துடைப்பது என் கடனல்லவா ? கொடியவரைக் கொன்றழிப்பது கொற்றவனின் வேலையல்லவா ? ‘

‘நீலகண்டரே. நெற்றிக் கண் பெற்றவரே. நேரம் இன்னும் வரவில்லை அதற்கு. நிலையுணர்ந்து, பொறுத்தருள்க புண்ணியனே ‘

‘அப்படியே ஆகட்டும். முதலில் நான் தென்னாடு சென்று, மக்களின் இன்னல் கண்டு வருகிறேன் ‘

‘அரசர்க்கரசே, தென்னாட்டில் இருக்கும் வரை தங்களின் வலிவை எங்கினும் வெளிப்படுத்துவதில்லை எனும் இன்னுமொரு வாக்கினை எனக்கு அளித்திடல் வேண்டும் ‘

‘நல்லது. உன் விருப்பப்படியே நடக்கட்டும். நாளையே செல்கிறேன் தென்னாடு. தேவேந்திரனும் வரட்டும் என்னோடு ‘

*************

சிவ பெருமானும், தேவேந்திரனும் ஆகாயமார்க்கமாக சென்னை திருவல்லிக்கேணிப் பகுதியில் வந்து இறங்கினார்கள்.

திருவல்லிக்கேணி அண்ணலுக்கு ஏற்கனவே பரிச்சயமானதுதான்.

இந்தப் பகுதியில் குடியிருந்த கந்தசாமிப் பிள்ளையவர்கள் வீட்டிற்கு நாற்பதாண்டுகளுக்கு முன் விஜயம் செய்தது நினைவிற்கு வந்தது இறைவனுக்கு. அன்று அவர் பார்த்த சென்னைக்கும், இன்று இருக்கும் சென்னைக்கும் உள்ள வித்தியாசம் அவர் முகத்தில் தாக்கியது. எங்கும் நகர்ந்து கொண்டிருக்கும் ஜனத்திரள் அவரை மலைக்க வைத்தது.

பிரம்மனின் உற்பத்தித் திறனை எண்ணி மனதுக்குள் வியந்து கொண்டார்.

‘மூவாயிரம் வருடங்களாக முப்பத்து முக்கோடியைத் தாண்டவில்லை தேவ லோகம். மானுடர்கள் வேறு வேலை எதுவும் செய்யவதில்லை போலும் ‘ என்று எண்ணிக் கொண்டார்.

எங்கும் நீக்கமற நிறைந்திருந்த வறுமையும், அழுக்கும், வெயிலும், வாகனப் புகையும், சிறியோர்களின் சிலைகளும், இழிபிறவிகளை வாழ்த்தி ஒட்டப் பட்டிருந்த வண்ணச் சுவரொட்டிகளும், ஆபாச திரைப்பட விளம்பரங்களும் இன்ன பிற சமாச்சாரங்களும் அவரை நிலை குலைய வைத்தது.

கருத்த மேனியுடனும், கழுத்தில் பாம்புடனும், இடையில் புலித் தோலுடனும், சூலாயுதம் தாங்கி தேவேந்திரன் பின் தொடர நடந்து சென்ற சிவ பெருமானை, சென்னை வாழ் மக்கள் வியப்புடன் பார்த்தார்கள்.

‘ஏதோ நாடக நடிகருங்க போல கீது. நெஜம் பாம்ப கயுத்ல போட்டுகினு கீறாரு… ‘ என்று, பார் புகழும் சென்னைத் தமிழில் தங்களுக்குள்ளே பேசிக் கொண்டார்கள்.

சாலை ஓரத்தில் அமர்ந்திருந்த பிச்சைக்காரன் ஒருவன் இறைவனின் கண்ணில் பட்டான். கண்கள் பஞ்சடைந்து, கன்னங்கள் ஒட்டி பரிதாபகரமாக அவன் அமர்ந்திருந்த கோலம் அவர் மனதை உருக்கியது. தன் இடுப்பில் சொருகியிருந்த சுருக்குப் பையிலிருந்து ஒரு வைரக்கல்லை எடுத்து, பிச்சைக்காரனின் பாத்திரத்தில் போட்டார்.

போட்ட வேகத்தில் வைரம் திருப்பி எறியப்பட்டது.

‘காச போட்றான்னா கண்ணாடிக் கல்ல போட்றாம் பாரு, பேமானி….திருட்டு சாமியாரு…சோமாறி… ‘

உலகாலும் ஈசனுக்கு வியப்பு. இத்தனை விலையுயர்ந்த வைரக்கல்லை ஏன் விட்டெறிந்தான் என்று. மீண்டும் எடுத்து அவனிடம் கொடுக்கப் போனார். தேவேந்திரன் தடுத்தார்.

‘வெறும் உப்புக் கல்லை மட்டுமே வைரமாக பார்த்தறிந்தவன் அவன். உண்மை வைரத்தின் மதிப்பு அறியாதவன். விட்டு விடுங்களவனை ‘ என்றார்.

சமயோசிதமாய் தேவேந்திரன் தன்னுடன் கொண்டு வந்திருந்த, மானுடப் பணத்தில் சிறிதை பிச்சைப்பாத்திரத்தில் இட்டுவிட்டு மேலே நடந்தார்கள்.

முன்னரே திட்டமிட்டபடி, கருணைத் தம்பிரானையும், கூத்தணங்கையும் கண்டு வர அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள்.

சென்னை நகரச் சாலைகள் குண்டும் குழியுமாக இமயமலையின் ஏற்ற இறக்கங்களை ஒத்திருந்ததால், எந்த சிரமமும் இல்லாமல் எளிதாக நடந்து போனார் இறைவன். பாவம், தேவேந்திரன்தான் பரிதவித்துப் போனார்.

‘மன்னிக்க வேண்டும் மஹாப்ரபோ. இனி ஒரு எட்டு வைக்க இயலாது என்னால். வினோத சத்தமிடும் இந்த மூன்று கால் நர வாகனத்தில் ஏறி சேருமிடம் சேரலாம் சீக்கிரம் ‘ என்றார்.

சிவ பெருமானுக்கும் அது சரியெனப் படவே, ஒரு ‘ஆட்டோ ‘வில் ஏறி அமர்ந்தார்கள்.

ஊருக்கு புதியவர்கள், இந்த இரு முதியவர்கள் என கணத்தில் கணித்த ஆட்டோக்காரன், ‘மீட்டருக்கு மேல நூறு ரூபா குடு சாமி ‘ எனக் கேட்டு பதில் வருமுன்பே புறப்பட்டு, விரட்டிக் கொண்டு போனான்.

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அவர்கள் இருவரும் அமர்ந்திருக்க, வளைந்து, நெளிந்து, புகுந்து, புறப்பட்டு பறந்தது ஆட்டோ.

இறைவனின் பயணம் தொடரும்.

அவரின் சித்தப்படி.

***

psnarendran@hotmail.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்