பரதநாட்டியம் – சில குறிப்புகள் -2

This entry is part of 33 in the series 20030317_Issue

வைஷாலி


பரதத்தில் முதல்பாடமாக தட்டிக்கும்பிடுதல் அதாவது நமக்கு பரதம் பயிற்றுவிக்கும் ஆசிரியரை வணங்குதல் கற்றுத் தரப்படும். பின் இறைவனை வணங்குவதற்காக ஒரு தியான ஸ்லோகம் ஒன்றும் கற்றுத் தரப்படும். பின் முறையே அடவுகள் கற்றுத்தரப்படும். அடவுகளில் தட்டடவு, நாட்டடவு, பரவளடவு, குதித்து மெட்டடவு, முழுமண்டியடவு முதலில் கற்றுத் தரப்படும். மேலும் ஸ்லோகங்களும் கற்றுத் தரப்படும். இதில் கழுத்தின் அசைவுகள்,கண் அசைவுகள், தலை அசைவுகள், ஒற்றைக்கை முத்திரைகள், இரட்டைக்கை முத்திரைகள் ஆகியன கற்றுத் தரப்படும். இந்த ஒற்றைக்கை முத்திரைகள், இரட்டைக்கை முத்திரைகளில் கற்றுத் தரப்படும் ஒவ்வொரு முத்திரையும் அது பயன்படுத்தும் முறையின் படி அர்த்தம் கொடுக்கும்.

அதாவது ஒற்றைக்கை முத்திரையில் பதாகஸ் என்னும் முத்திரை (நாம் வணங்கும்போதும் இருகைகளையும் இணைத்து கும்பிடுவோம். அதில் ஒரு கையின் முத்திரைதான் பதாகஸ்) காடு, கதவை மூடுதல், சபதம் செய்தல், உறங்குதல், வெப்பம், நிலவு போன்ற பல அர்த்தங்களைக் குறிக்கும். அதே போல இரட்டைக்கையில் செய்யப்படும் முத்திரைகளும் பல அர்த்தங்களைத் தருவதாக இருக்கும். நாட்டியத்தில் அடவுகளுக்கு உபயோகிக்கக் கூடிய முத்திரைகள் எளிர்கை என்றும், அபிநயத்திற்கு உபயோகிக்கக்கூடிய முத்திரைகள் தொழிர்கை என்றும் அழைக்கப்படுகிறது.

நாட்டியத்தின் உட்பிரிவுகள் மூன்று. அவை:- நிருத்தம், நிருத்தியம், நாட்டியம்.

நிருத்தம் :-

நிருத்தம் பாவாபி நய ஹினம்து

நிருத்தம் இதி அபிதியதே

பொருள்: பாவம் அபிநயம் முதலிய உணர்ச்சிகளை வெளிக்காட்டாது தாளக்கட்டுடன் மட்டுமே ஆடும் நடனம் நிருத்தம் எனப்படும்.

நிருத்தியம்:-

நிருத்திம் ரச பாவ வ்யஞ்ஜன அதியுக்தம்

நிருத்தியமி தீர்யதே

பொருள்:- உணர்ச்சிகளும் அபிநயங்களும் நன்கு கலந்து ஆடப்படும் நடனம் நிருத்தியம் எனப்படும்.

நாட்டியம்:-

நாட்டியம் தந் நாடகம் சைவ புஜியம்

பூவக தாயதம்

பொருள்:- நாட்டியம் அல்லது நாடகம் என்பது முன்பே தெரிந்து புகழ்மிக்க வணங்கத்தக்க கதைகளை தன்னுள் கொண்ட கலையை நடித்துக் காட்டுவதாகும்.

அடவுகளுக்குப் பின்னர் முதல் உருப்படியாக, அலாரிப்பும், அதற்கடுத்ததாக ஜதீஸ்வரமும் கற்றுத் தரப்படும். இவை இரண்டும் நிருத்த வகையை சார்ந்தன.

அலாரிப்பு :-

நாட்டிய அரங்குகளில் விறுவிறுப்புத் தோன்றுவதற்காக முதன் முதலாக ஆடப்படும் நடனம் அலாரிப்பு ஆகும். ஐந்து நிமிடத்திற்குள் ஆடப்படும் இது தத்தகார சொற்கட்டுகளால் ஆனது. இறைவனுக்கும், குருவுக்கும், சபையோருக்கும் வணக்கம் செலுத்தும் வகையில் இது அமைந்திருக்கும். அலாரிப்பை முகசாலி என்றும் கூறுவார்கள். இறுதியில் சிறு தீர்மானத்துடன் முடிக்கப்படும். தீர்மானம் என்பது பல அடவுகளை கோர்வையாக செய்து மிருதங்க சொற்களுக்கு ஏற்ப தாளத்தைப் போடுவது ஆகும்.

ஜதீஸ்வரம் :-

ஜதி என்பது அடவின் சொற்களை மிருதங்க சொல்லாக சொல்வதாகும். அலாரிப்புக்கு அடுத்தபடியாக ஆடப்படும் ஜதீஸ்வரம் ஸ்வர வரிசைகளைக் கொண்டதாகும். இது இசையுடன் அமைந்த தொனிப்பாதலால் ஜதீஸ்வரம், என்றும், துவக்கத்தில் அல்லது இறுதியில் ஜதிகள் இணைக்கப்பட்டிருப்பதால் ஜதீஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.

சப்தம்:-

ஜதீஸ்வரத்திற்கு அடுத்தபடியாக ஆடக்கூடிய சப்தத்தில் தான் முதல்முதலாக அபிநயம் வெளிப்படுத்தப்படுகிறது. சப்தம் என்றால் சொல் என்று பொருள். இதற்கான சாஹித்தியங்களில் தெய்வம், அரசன் அல்லது தலைவன் புகழ் பாடி அவர்களுக்கு வணக்கம் செலுத்துவதாக முடிவுறும். சப்தத்தில் ஆட்டத்திற்கான ஜதிகளும் சாஹித்திய அடிகளும் கலந்து வரும். அநேகமான சப்தங்கள் தெலுங்கு மொழியிலேயே அமைந்துள்ளன. சாகித்திய வரிகளை பாடும்போது ஆடல் நங்கை அதற்கான பாவங்களைப் பற்பலவித அபிநயங்களுடன் தெளிவாக வெளிப்படுத்துவாள். இதில் நர்த்தகியின் மனோதர்மத்தையும், கலைத்திறமையையும் அளவிட முடிகின்றது. மண்டுக சப்தம், கோதண்டராமர் சப்தம் போன்ற சப்தங்கள் மிகவும் பிரபலமானவை. அநேகமான சப்தங்கள் காம்போஜி ராகத்திலேயே பாடப்பட்டவையாகும். இன்று பல தமிழ் சப்தங்களை மற்ற ராகங்களிலும் பாடி ஆடி வருகின்றனர்.

சப்தம், வர்ணம், பதம் போன்றவை அபிநயத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவையாக அமைந்திருக்கும். அபிநயம் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும்…..

Series Navigation