கடிதங்கள்

This entry is part of 33 in the series 20030317_Issue

மார்ச் 17, 2003‘முகம் ‘ கதை மீதான வாசகரின் கடிதம் ஆச்சரியம் தருகிறது. ஒரு கதை தன் சித்தரிப்பிலே எதையெல்லாம் முக்கியப்படுத்தி சொல்கிறதோ அதையெல்லாம் எடுத்துக் கொண்ட வாசிப்பே சரியான வாசிப்பு . முகியமான பகுதிகளை விட்டு விட்டு வாசிப்பு அமைய முடியாது. முகம் கதை ஆண் பெண் உறவின் சில தளங்களை மட்டுமே சொல்கிறது . யட்சிக்கதைகள், மோகினிக்கதைகள் எல்லாமே ஆண்பெண் உறவைப்பற்றியவை என்று சொல்வார்கள். ஒரு ஆணின் மனத்துக்குள் உள்ள ‘பெண் வடிவம் ‘ எப்படிப்பட்டது , அதன் அடுக்குகள் என்ன என்பதைத்தான் அக்கதை பேசுகிறது. பலவரிகள் றேடியாகவே அதை பேசுகின்றன. ‘உனக்கு மிகப்பொருத்தமான காதலி ‘ என்று சொல்லி யட்சி ஒரு வடிவததை எடுத்து காட்டுகிறது.அவன் அதிர்ச்சி அடைகிறான், ஆனால் அது உண்மை என்றும் அவனுக்கு தெரிகிறது. சாதாரணமாக ஆபாசத்தின் உச்சம் என்று சொல்லபடும் பகுதிகளைக்கூட இக்கதை குறிப்பால் சொல்கிறது. ‘நீ நிர்வாணமாக பார்க்க விரும்புபவளின் வடிவில் நான் நிற்கிறேன் ‘ என்கிறது யட்சி . கடைசியில் ‘எந்த ஆண்மகனுமே தவிர்த்துவிட்டு போக முடியாத முகம் ‘ ஒன்றை அது காட்டுகிறது. அவன் அதைப்பார்த்து மடிகிறான் .அது என்ன என்பதை கதை சொல்லவில்லை. அந்தரங்கமாக உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா என்று கேட்கிறது . நமது அந்தரங்கத்தை சீண்டக்கூடிய விசித்திரமான கதை இது. இதை அப்படி எளிதாக அர்த்தம் செய்துகொள்ளக் கூடாது. அடுத்த இதழில் வெளியான ‘கண்ணாடிக்கு அப்பால் ‘ கதையும் இப்படிப்பட்டதே. நம் மனதில் உள்ள காமம் ‘பெண் வடிவம் எப்படி வரலாற்றிலிருந்து கிடைத்தது என்று அது சொல்கிறது. எல்லா பெண்பேய் கதைகளும் அடிப்படையில் ஆணின் கற்பனை அச்சத்தின் விளைவுகள்தான் மேலும் புலன்களை ‘தாண்டி செல்லும் ‘ துறவு மனநிலையை எல்லாம் இக்கதை சொல்லவில்லை. அது கதையின் தளத்திலில்லை . இச்சையின் தவிர்க்கமுடியாத வல்லமையை பற்றியே சொல்கிறது .அதாவது இச்சை என்பது பல பல அடுக்குகளாக பல வடிவம் கொண்டு மனத்தில் ஊடுருவி இருப்பது என்றும் மனிதன் அதை வெல்ல முடியாது என்றும் சொல்கிறது. அது சரி கோணங்கி இங்கே எங்கே வந்தார் ? அவருக்கும் இதற்கும் என்ன் சம்பந்தம் ? அவர் பாட்டுக்கு காதில் விழுகிற சொற்களை எல்லாம் சகட்டுமேனிக்கு குவித்து வைத்துக் கொண்டிருக்கிறார். அதை அர்த்தம் செய்ய முயன்று அவரை ஏன் தொந்தரவு செய்யவேண்டும் ?

சூரியா


காஞ்சனா தாமோதரனின் பயணக் குறிப்புகள் சிறப்பாக் இருந்தன. தமிழ் நாட்டின் இலக்கிய உலகின் ஒரு சிறு அறிமுகம் போல் இருந்தது. இதற்கு முன்னால் யமுனா ராஜேந்திரன் இதே போல் எழுதிய பயணக் குறிப்புகளை இத்துடன் படிகக் நேர்ந்தது. எழுத்தாளர்களைப் பற்றிய இணக்கமும், அன்னியோன்னியமும் இணைந்த குறிப்புகளாக இருவரும் எழுதியுள்ளனர்.

சு ரா பற்றி ஜீவா, நீலகண்டன் எழுதிய இரண்டு கட்டுரைகளுமே படைப்பாளியின் கருத்துலகச் சார்புகள் பற்றி கேள்விகள் மற்றும் குற்றச்சாட்டுகளை எழுப்புகின்றன. ஜீவானந்தத்தை ஸ்டாலினிஸ்ட் என்றும் இந்திய மரபு பற்றி அறியாதவர் என்றும் நீலகண்டன் குறிப்பிட்டிருப்பது, அவர் ஜீவாவைப் பற்றி அறிந்தவர் தானா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. சு ரா மீதான குற்றச்சாட்டுகள் தேவையற்ற எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் எழுந்தவை. படைப்பாளி கருத்துலகை எதிர்கொள்ளும் போது ஒரு ‘படிப்பாளி-ஆய்வாளர் ‘ (Scholar) என்ற நிலையில் எதிர்வினை ஆற்றுவதில்லை. அது சாத்தியமும் அல்ல. படைப்பாளியாய் எதிர்வினை ஆற்றும் போது ஒரு கருத்தின் சாராம்சத்திற்குத் தான் எதிர்வினை ஆற்ற முடியும்.

கோ ராஜாராம்


Series Navigation