இந்தியாவுக்கு புத்த மதம் திரும்பி வருகிறது

This entry is part [part not set] of 37 in the series 20030309_Issue

ஃப்ரான்ஸ்வா கோஷியே


இந்துமதம் தத்துவவிசாரங்களிலும், சடங்குகளிலும், சாதியத்திலும் மூழ்கிக் கிடந்த நாளில் புத்தர் வந்தார் என்பதில் சிறு சந்தேகமும் இல்லை. வெகுகாலத்துக்குப் பின்னர் ஒரு சங்கராச்சார்யர் வந்து இந்துமதத்துக்கு புது தெம்பை கொடுக்க வேண்டியிருந்தது. ஜாதி அந்தஸ்து எவ்வாறாக இருப்பினும் அவர்களது மனித சோகத்திலிருந்து வெளியேற எளிய வழியை கொடுத்தது. நம் யுகத்தின் ஆரம்பத்தில் இந்தியாவின் வடக்குப்பகுதியும் கிழக்குப் பகுதியும் புத்த மதத்தை பின்பற்றுபவர்களால் நிரம்பியிருந்தது என்பதன் காரணம் அதுதான்.

துரதிர்ஷ்டவசமாக, புத்தரின் மறைவுக்குப் பின்னர், அவரைப் பின்பற்றியவர்களும், சீடர்களும் புத்தமதத்தை ஒரு இறுக்கமான மதமாகவும், வளைக்கமுடியாத சட்டதிட்டங்களுடனும், எதைச்செய்யக்கூடாது எதைச் செய்யலாம் என்ற வரைமுறைகளுடனும் உருவாக்கினார்கள். இது புத்த மதத்துக்கு இருந்த பரவலான ஆதரவைக் குறைத்தது மட்டுமல்லாமல், இந்தியாவுக்கும் தீங்கு விளைவித்திருக்கலாம். இந்த தீங்கு இரண்டு முகங்கள் கொண்டது. முதலாவது அஹிம்சை. இரண்டாவது மாயை.

சுயமாக அவரவர்கள் தங்களைத் தாங்களே துன்பத்திலிருந்து விடுவித்துக்கொள்ள முடியும் என்ற புத்தரின் போதனையால், வருமானத்தை இழந்து அதனால் பழிவாங்கும் குணம் கொண்ட தீய பிராம்மணர்களால் புத்தமதம் இந்துமதத்தால் விழுங்கப்பட்டதாக பெரும்பாலான பெளத்தர்கள் கருதுகிறார்கள். ஆனால், உண்மை வேறுவிதமாக இருக்கலாம். இந்துமதத்தின் வேதத்திலும், பகவத் கீதையிலும் அஹிம்சை உயர்ந்த ஆன்மீக குணமாக ஏற்கெனவே உயர்த்திப் பிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதே சமயத்தில், எல்லைகளைக் காக்கவும், பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்றவும், ஒருவார்த்தையில் சொல்லவேண்டுமென்றால் அறத்தைக் காக்கவும், வன்முறை சில சமயங்களில் தேவையாகவும் இருக்கிறது என்பதை புரிந்து வைத்திருக்கிறது.

புத்தமதம் அஹிம்சையை விட்டுக்கொடுக்கமுடியாத, இறுக்கமான மதக்கோட்பாடாக்கும் வரைக்கும், இந்தியாவின் எல்லைகள் உறுதியாக பாதுகாப்பானதாக ஆப்கானிஸ்தானத்திலிருந்து கன்யாகுமரிவரை பரந்திருந்தன. ஆனால், அசோகர் புத்தமதத்தை தழுவியதும், பல ஆயிரக்கணக்கான வருடங்களாக உறுதியாக இந்தியாவைப் பாதுகாத்துவந்த மாபெரும் கவசம் உடைக்கப்பட்டது. புத்த சிந்தனை மறைமுகமான வழியில் பெரும் தலைவர்களான மகாத்மா காந்தி போன்றோரையும் பாதித்து, அவர்களது உண்மையான ஆனால் இறுக்கமான அஹிம்சை கோட்பாடு மறைமுகமான வழியில் தேசப்பிரிவினைக்கு காரணமாக இருந்திருக்கலாம்.

இன்று, உறுத்தல் இல்லாமல், புத்தமதம் தன்னுடைய மாபெரும் திரும்பிவருதலை ஸ்ரீகோயங்கா அவர்களின் விபாசனா இயக்கம் மூலமாக செய்து கொண்டிருக்கிறது. ஸ்ரீகோயங்கா தன்னுடைய இந்த விபாசனா முறையை பர்மாவில் சிறந்த ஆசிரியர் ஒருவரிடம் கற்று இந்தியாவுக்கு 60களில் கொண்டுவந்தார்.

இந்த சிறப்பான விபாஸனா தியான முறை ஒரு வைதீக முறை. இது காணாமல் போய், புத்தர் மீண்டும் கண்டெடுத்தார். சித்தார்த்த கெளதமரின் கையில் இது எளிய, சுய விடுதலை முறையாகவும், ஜாதி, மதம், அந்தஸ்து தாண்டி எல்லோருக்கும் அடையக்கூடியதாகவும் இருக்கிறது. அதனாலேயே, ஒரு காலத்தில் இந்துமதம் தத்துவ விசாரத்திலும், ஜாதியத்திலும், சடங்குகளிலும் சிதைவுண்டு இருந்தபோது, புத்தரின் காலத்தில் பெரும் வெற்றி பெற்றது.

ஸ்ரீகோயங்கா அவரது விபாஸனா இயக்கத்தை சாதி மதம் இனம் மொழி சாராத இயக்கமாகவும், எல்லோருக்கும் வாசல் திறந்ததாகவும் குறிப்பிட்டுச் சொல்கிறார். ஆனால், இதில், புத்தருக்குப் பின்னர் வந்த புத்த பிரிவுகளில் தோன்றிய இந்துமத எதிர்ப்பு மனச்சாய்வை (இன்றைய சிங்கள புத்தமதத்தில் தெளிவாகத் தெரிவது போன்ற மன்சாய்வை) இதில் விட்டுவிட்டாற்போலத் தெரியவில்லை. தியானிப்பவர்கள் வழக்கமாக 10 நாள் திட்டத்தைப் பின்பற்றுகிறார்கள். அதில் ஒவ்வொரு நாளும் முடிவில் கோயங்காவின் வீடியோ டேப்பைப் பார்க்கிறார்கள். அந்த நாடாக்களில் கோயங்கா இந்துமதத்தை தெளிவாக மெதுவாக திட்டுகிறார். ‘சடங்குகளோ, வழிபடும் முறைகளோ.. ‘ அல்லது, புத்தரை கேவலப்படுத்த முனைந்த ‘பூஜாரிகளோ (பிராம்மணர்கள்) ‘ அல்லது ‘பாசிமணியும், சிக்குண்ட முடியும், சிவ அடையாளங்களும் ‘ கொண்ட சாதுக்களோ, ‘அபினும் கஞ்சாவும் குடித்துத்தள்ளாடும் புனித நகரமான ‘ காசியும், அல்லது இன்றைய இந்துமத குருக்களும், இயக்கங்களும்(நேரடியாக பெயர் சொல்லாமல், ஆனால் எளிதாகப் புரியும் வண்ணம்) சாயிபாபாவும் அவரது பெயர் பொறிக்கப்பட்ட மருத்துவ மனைகளும், பள்ளிக்கூடங்களும், ரஜ்னீஷ் அவர்களும் அவரது ரோல்ஸ்ராய்ஸ் கார்களும், அல்லது ஹரே கிருஷ்ணா இயக்கமும் எல்லாம் வந்து விழுகின்றன. இஸ்லாம் கிறுஸ்தவம் போல புத்தமதமும் தன் கொள்கைகளைத் தீவிரமாக பரப்ப விழைந்த, விழையும் இயக்கம் என்பது இப்போதெல்லாம் பேசப்படுவதில்லை. அசோகரின் பிரச்சாரகர்கள் ஆசியா முழுவதும் சென்று பெரும் பரப்பை புத்தமதத்துக்குக் கீழ் கொண்டுவந்தார்கள் என்பதிலிருந்து இன்றுவரை தொடர்கிறது. அது அமைதியான முறையில் நடந்திருந்தாலும். ஆனால், புத்தமதம் இந்துமதத்திலிருந்து வெளிவந்தது. இறுதியில் அதற்குள்ளாகவே சென்றுவிட்டது. இந்த யுகத்தின் ஆரம்பகாலத்தில் இருந்த பல லட்சக்கணக்கான பெளத்தர்கள் மீண்டும் இந்து மதத்துக்குச் சென்றது போல. இதனாலேயே இந்து மதத்தின் மீது இன்றைய பெளத்தர்களுக்கு மனவருத்தம் இருக்கலாம்.

ஸ்ரீகோயங்கா அவர்களது விபாசனா தியான முறை இன்று பல லட்சக்கணக்கான மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஏனெனில் இது ஒரு எளிய, வேலை செய்யும் முறை. ஆனால் ஸ்ரீகோயங்காவின் மிகப்பெரிய பயம், புத்தரின் மறைவுக்கு அப்புறம், இந்து மதம் பெளத்தத்தின் மையத்தை சாப்பிட்டுவிட்டது போல, இவரது மறைவுக்குப் பின்னர் (கோயங்காவுக்கு வயது 80 அருகில்), இதே விஷயம் விபாசனா இயக்கத்துக்கு நடக்கும் என்றுதான்.

ஆகவே, ஒவ்வொரு படியிலும், தன்னுடைய சீடர்களை எச்சரிக்கின்றார். அவர்களுக்கு இந்த முறை பிடித்திருந்தால், அவர்கள் மீண்டும் உலகத்துக்குச் செல்லும்போது, அதனை சிறப்பாக உபயோகப்படுத்த வேண்டுமென்றும், மீண்டும் சடங்குகளுக்கு திரும்பிச் சென்றுவிடக்கூடாது என்றும் கோருகிறார். அதாவது அவர்கள் பெளத்தமதத்தினாராக வேண்டுமென்று கோருகிறார். (அவர் அதனை அந்த வார்த்தைகள் மூலம் சொல்லவில்லை என்றாலும்). இந்து மதத்தை விட்டு விலகவேண்டுமென்றும் கோருகிறார். ஆனால், ஸ்ரீகோயங்கா பார்க்காத விஷயம் என்னவென்றால், நேரடியாகச் சொல்லவில்லை என்றாலும் அவர் மதமாற்றத்தை ஊக்குவிக்கிறார் என்பதும், இரண்டாவது, இன்னும் ஒருமுறை, இந்துமதத்தின் மாபெரும் சகிப்புத்தன்மையையும், திறந்த அமைப்பையும் தவறான முறையில் பிரயோகிக்கிறார்கள் என்பதும்.

99 சதவீத விபாஸனா தியானம் செய்பவர்கள் இந்துக்கள்தான். நான் இது போல பத்து நாள் திட்டங்களில் டஜன் தடவைக்கு மேல் கலந்து கொண்டிருந்திருக்கிறேன். நான் ஒன்று இரண்டு கிரிஸ்தவ கன்யாஸ்திரிகளை பார்த்தேன். ஆனால் ஒரு முஸ்லீம் கூட பார்க்கவில்லை. இந்துக்கள் மட்டுமே புத்தரை அவதாரம் எனக் கருதுகிறார்கள். முஸ்லீம்கள் அவரை கடவுள் மறுப்புவாதி என கருதி, அவரது இறுதித்தடயம் வரை இந்தியாவிலிருந்து அழித்திருக்கிறார்கள். கிரிஸ்தவர்கள் ஜீஸஸ் மட்டுமே கடவுளின் ஒரே உண்மையான புத்திரர் எனக்கருதுகிறார்கள். முந்தைய பெளத்தமதத்தின் தவறுகள் எவ்வாறு இந்தியாவுக்கு பெரும் தீங்கு இழைத்தன என்று கண்டோம். இறுக்கமான, வளையாத அஹிம்சை. உதாரணமாக விபஸனா ஆஸ்ரம கட்டிடத்துக்குள் ஒரு கொசுவைக்கொல்வது கூட தடை செய்யப்பட்டிருக்கிறது. விபாஸனா எவ்வளவுதான் வேலை செய்யக்கூடிய முறையாக இருந்தாலும், ஒரு சந்தோஷமற்ற மகிழ்ச்சி தராத முறை. அதற்கும் இறுக்கமாக உறுதியான மன அமைப்பு தேவை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான பிரிவு சில சமயங்களில் அபத்தமான எல்லைகளுக்கு தள்ளிவிடுகிறது. எல்லாமும் நேரப் பிரகாரம் நடக்கவேண்டும். சிரிப்புக்கோ கற்பனைக்கோ எந்த விதமான இடமும் கிடையாது.

மீண்டும், இந்த உலகத்திலிருந்து தன்னைத்தானே வெளியேற்றிக்கொள்ளுவதில் அடிக்கோடு கொடுக்கப்படுகிறது. ஸ்ரீ கோயங்கா அடிக்கடி, ‘ எல்லாமும் துன்பம் துன்பம் ‘ என்று கூறுகிறார். ‘ஆசையும், வெறுப்பும் ‘ இருப்பதாகவும், ‘நாம் ஒவ்வொரு வினாடியும் இறந்து கொண்டிருப்பதாகவும் ‘ கூறுகிறார். எந்த நேரத்தில் இந்தியாவுக்கு மிக முக்கியமாக உத்ஸாகமும், சக்தியும் தேவையோ அந்தக்காலகட்டத்தில், இது மீண்டும் ஒருமுறை இந்தியாவை தன்னைத்தான் உதாசீனம் செய்வதற்கு இட்டுச்செல்லலாம்.

இறுதியில், ஸ்ரீகோயங்கா மீண்டும் ஒரு பின் செல்லமுடியாத ஒரு இயக்கத்தை (ஒரு புதிய மதத்தை ஸ்தாபிப்பது இல்லை என்றாலும்) கட்டமைக்க தீவிரமாக முயல்கிறார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மும்பையில் கட்டப்பட்டுவரும் பிரம்மாண்டமான கோவிலே அதற்கு அத்தாட்சி.

அவர் வெற்றி பெறுவாரா ? விபாஸனா ஒரு சக்திவாய்ந்த கருவி என்றாலும், அது புதிய மதத்தை ஸ்தாபிக்க உதவக்கூடாது. அதுவும் முழு உலகமும், மதங்களிலிருந்து விலகி ஆன்மீகத்துக்குச் செல்ல முயற்சிக்கும் இந்த காலத்தில் அது கூடாது. மீண்டும் ஒருமுறை, இந்தியா ஒரு ஆபத்துக்குக் கீழ் வர இருக்கிறது. கோயங்காவின் தியானம் செய்பவர்கள், சக்திவாய்ந்த பதவிகளில் அமர்ந்து கொண்டு, அப்படிப்பட்ட ஒரு சிந்தனை கடந்த காலத்தில் பெரும் தீங்கை இந்தியாவுக்கு விழைவித்திருந்த வரலாறு இருந்தும், ஒன்றும் செய்யாத, வலிமையற்ற, அஹிம்சை மனம் கொண்டதாக இந்தியாவை ஆக்குவார்களா ?

Francois Gautier

Series Navigation

ஃப்ரான்ஸ்வா கோஷியே

ஃப்ரான்ஸ்வா கோஷியே