கடிதங்கள்

This entry is part of 37 in the series 20030309_Issue

மார்ச் 09, 2003அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

நண்பர் மத்தளராயன் [இரா.முருகன்] கட்டுரையை இனிய உரை நடையில் துவங்கி வெண்பாவில் முடிப்பது ஓர் புதிய அம்சம்தான்! ஆனால் ‘வெண்பா ‘ என்று தலைப்பில் பூசிக் கொண்டு சில வெண்பாக்களை யாப்பிலக்கணப் பிழையில் எழுதி யிருப்பது முறையா என்பதுதான் தெரியவில்லை! நான்கு வரிக் கவிதையை விடுதலை வெண்பாவாக, அவர் ‘புதுக்கவிதை ‘ போல் எழுத வில்லை என்று கருதுகிறேன்! கட்டுரை எழுதும் தோரணையைப் பார்த்தால், அவர் வெண்பா யாப்பிலக்கணம் அறிந்தவர்போல் தெரிகிறது.

‘யாப்பிலக்கணப்படி ‘ நாலடி, ஈரடி வெண்பாக்களில் தேமா, புளிமா முன்பு நிரை சொற்கள்; கூவிளம், கருவிளம் முன்பு நேர் சொற்கள்; தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய் முன்பு நேர் சொற்கள் அமைய வேண்டும். குற்றியலுகரத்துக்கு முன்பு உயிர் எழுத்துச் சொற்றொடர் வந்தால், அவை இணைச் சொற்கள் ஆகும் போது மேற்கூறிய நேர், நிரைச் சொற்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும்.

ஆனால் அவர் அறிந்தோ, அறியாமலோ கீழ்க்கண்ட வெண்பாக்களில் பிழைகள் நேர்ந்துள்ளன! ‘பூசை வைக்கும் தொழில் ‘ கட்டுரையில் ‘நாளைக்(கு) ஓதலாம் ‘ என்பதில் குற்றியலுகரப் புணர்ச்சியால் பிழையாகிறது. அடுத்து அதே வெண்பாவின் முடிவில் ‘பாதிரியே றுவார் ‘ என்பதில் கூவிளங்காய் முன்பு நிரைத் தொடர் வரக் கூடாது. அடுத்து ‘என்னை வரைந்த படம் ‘ என்னும் கட்டுரையில் ‘பின்னர் காயிதக் குப்பை ‘ என்பது பிழையானது! பின்னர் என்னும் தேமா முன்பு காயிதம் என்னும் நேர் தொடர் வரக் கூடாது! மேலும் அதே வெண்பாவில் ‘திடுமென்(று) ஓவியன் ‘ என்பதும் குற்றியலுகரப் புணர்ச்சியால் பிழையாகிறது!

நாலடி நளவெண்பா, ஈரடி வெண்பா திருக்குறள் போன்ற தமிழ் இலக்கிய வெண்பாக்களில் குற்றியலுகரப் புணர்ச்சிகள் வரும் போது, கவனமாக யாப்பிலக்கணம் கையாளப் பட்டுள்ளது. மத்தளராயன் ‘வெண்பா ‘ என்று தலைப்பில் போடாதிருந்தால் நான் இவ்வாறு பிழைகளைக் காட்டி யிருக்கமாட்டேன்.

சி. ஜெயபாரதன், கனடா.


அன்புள்ள ஆசிரியருக்கு,

ஜெயபாரதன் கடிதம் கண்டேன். நான் அணு இணைப்பு உலைகளை கனவு என்று சொன்னதை பல கடந்தகால சம்பவங்களை வைத்து தவறு என்று சொல்கிறார். இன்றைக்கு அது கனவுதான். கனவு காணக்கூடாது என்று சொல்லவில்லையே. நிகழ்காலத்தில் வன்மையாகக் கால் ஊன்றிக்கொண்டுதான், எதிர்காலத்திட்டத்தை தீட்டவேண்டும். எதிர்காலத்தில் பெரிய கோழிப்பண்ணை வைப்பேன் என்றும் வேலையாளை உதைப்பதாகவும் கனவு கண்டுகொண்டு இருக்கும் முட்டைகளை உதைத்துவிடக்கூடாது.

இன்றைய அணு உலைகளில் இருக்கும் பிரச்னைகளை தீர்க்கத்தான் வழி காணவேண்டுமே தவிர, அந்த பிரச்னைகளை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தீர்க்க வேண்டுமே தவிர, தொழில்நுட்பத்தைக் கண்டு ஓடக்கூடாது. நம் காந்திய கிராம பொருளாதார ஆட்களும், வெளிநாட்டு லுட்டைடுக்களும் இந்தியாவில் வறுமையைத்தான் அறுவடை செய்யக்கூடியவர்கள். அந்த வறுமை மீது மேலும் தங்களுடைய வாதங்களையும், இந்தியாவுக்கு ஏன் விண்வெளி கனவு என்ற கிண்டல்களையும்தான் மேலும் மேலும் செய்யக்கூடியவர்கள்.

நட்புடன்

சின்னக்கருப்பன்


அன்புள்ள ஆசிரியருக்கு,

நான் கன்சர்வேடிவ் என்று சொல்லிக்கொண்டாலும், இறுதி வார்த்தைகளில் தன்னை எக்ஸ்ட்ரீம் லிபரல் என்றே சின்னக்கருப்பன் காட்டிக்கொண்டுவிடுகிறார். அந்த பாத்ரூம் கட்டுரை உட்பட.

நரேந்திரனின் கட்டுரைகள் சிறப்பாக நகைச்சுவையுடன் சீரியஸ் விஷயத்தைச் சொல்கின்றன. பலரை காணவில்லை. சிவக்குமார், குமார்பாரதி ஆகியோர் தொடர்ந்து எழுதலாம். டெக்ஸன் என்ற பெயரில் எழுதியவர்கூட நல்ல கட்டுரைகளை எழுதினார். கவிதைகளைப்பற்றி கருத்துச் சொல்ல பயமாக இருக்கிறது.

நரேஷ்


ப்ரம்மதத்தனும் விஷ்னு நம்பூதிரியும்

இக்கடிதம் ஜெயமொஹனின் ‘முகம் ‘ பற்றியது. இந்த கதை என்ன சொல்கிறது, எதை முன்னிலைப் படுத்துகிறது. வாழ்க்கை, அழகு, உண்மை, போன்ற இருத்தலின் தவிர்க்க முடியாத, (தவிர்க்க கூடாத) அம்சங்களை தவிர்த்து வெல்பவன்தான் மாமனிதன் (பிரம்மதத்தன்) என்கிறாரோ ? இதே தத்துவ தவறுகளைத்தான் ப்ரம்ம ரிஷிகள் முதல், நீட்சே தொடர்ந்து, ஜெயமொஹன் வரை(மாந்த்ரீகவாதிகள் உட்பட) தொடர்ந்து செய்துவருகின்றனர். ஆனால், புத்தன் மற்றும் சித்தர்கள் முதல் தோஸ்தொயெவ்ஸ்கி தொடர்ந்து, கோண்ங்கி வரை சொல்லப்படுவதோ ‘இந்த அம்சங்களைத் தவிர்த்தலில் இல்லை; இதன் பலன்களையும், வலிகளையும் உணர்ந்து வாழ்க்கைக்கு தன்னயே கொடுப்பதில்தான் இருக்கிறது மாமனிதமும் அமரத்துவமும் ‘. இந்தக்கதையில் விஸ்ணு நம்பூதிரி யக்ஷிக்கு பலியாகாமல் ஓடைக்கு அப்பால் வெற்றியுடன் சென்றுவிட்டு, வாழ்தலை விரும்பி (பிரம்மதத்தனின் சூன்ய தத்துவத்திற்கு பலிகடா ஆகாமல்) யக்ஷியிடம் திரும்பி வந்து சேருவதை போல் கதை முடிந்திருந்தால் நன்றாக இருக்கும்.

செந்தில்


Series Navigation