அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 14

This entry is part of 37 in the series 20030309_Issue

இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான கட்டுக் கதைகள் (தொடர்ச்சி)


மஞ்சுளா நவநீதன்

12. 13. 14 மூன்று கேள்விகள் : இந்தக் கேள்விகள் காஷ்மீர் தொடர்பானவை. காஷ்மீர்பற்றி பாகிஸ்தான் சொல்வதை அப்படியே வாந்தியெடுத்து தன்னுடைய பதில்களாய்த் தருவதற்குச் செளகரியமாய் கேட்கப்படும் கேள்விகள் இவை.

‘கடைசியாக ஒரு கேள்வி: இந்தக் காசுமீர் விவகாரம் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள். இந்திய யூனியனில் ஒரு மாநிலமாகிய காசுமீருக்கு மட்டும் என்ன தனி உரிமை ? அரசியல் சட்டத்தின் 370-ஆம் பிரிவை நீக்கிவிட வேண்டும் என்கிற கோரிக்கை நியாயமானது தானே ? காசுமீர மக்களுக்கு இந்திய அரசால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா ? இருந்தாலும் 370-ஆம் பிரிவு இன்னும் நீடிக்கிறதே ? காசுமீர இசுலாமியர்கள் இந்தியாவிற்குள் எங்கு வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம். ஆனால் இந்தியர் யாரும் காசுமீருக்குள் நிலம் வாங்க முடியாதது என்ன நியாயம் ? ‘

இந்தக் கேள்விகளுக்கு மார்க்ஸ் சொல்லும் பதில்கள் மார்க்ஸ் போன்ற ஒருபக்கச் சார்பு உள்ளவரிடம் எதிர்பார்க்கக் கூடியவையே. ‘1846-க்குப் பின்பு பிரிட்டிஷாரின் எடுபிடிகளான டோக்ரா மன்னர்கள் காசுமீரை ஆண்டு வந்தனர். இவர்கள் இந்துக்கள். ஆனால் காசுமீர் பள்ளத்தாக்கின் மொத்த சனத்தொகையில் 77 சதவீதம் பேர் இசுலாமியர். ‘ என்று பதில்களைத் தொடங்குகிறார் மார்க்ஸ். சுவாரஸ்யமான வார்த்தைகள். இதுவரையில் முஸ்லீம் மன்னர்களைப் பற்றி மார்க்ஸ் உபயோகிக்காத் சொற்றொடர் ‘ பிரிட்டிஷாரின் எடுபிடிகள் ‘ இந்து மன்னராய் இருப்பதால டோக்ரா மன்னருக்கு உடனே இந்த அடைமொழி வழங்கப் படுகிறது. காசுமீர்ப் பள்ளதாக்கில் 77 சதவீதம் பேர் முஸ்லீம்கள் என்று சொல்லும் மார்க்ஸ், மிகச் சாமர்த்தியமாய் மறைக்கிற விஷய்ம இது. காஷ்மீர்ப் பிரசினை காஷ்மீர்ப் பகுதியினுடையது மட்டுமல்ல. ஜம்மு-காஷ்மீர்ப் பகுதியினது. காஷ்மீர்ப் பகுதியில் 77 சதவீதம் முஸ்லீம்கள் ஆனது எப்படி என்பதோ, இந்தக் கணிப்பு காஷ்மீர்ப் பண்டிதர்களை முஸ்லீம் தீவிரவாதிகள் விரட்டியதற்குப் பின்பா முன்பா என்பது பற்றியும் மார்க்ஸின் பதிலில் தகவல் இல்லை. ஜம்மு-காஷ்மீர்ப் பகுதியில் மொத்த முஸ்லீம்கள் ஜனத்தொகை 51 சதவிதமே. தவிர பெளத்தர்கள், இந்துக்கள் , சீக்கியர்கள் மிச்சப் பகுதியினர். இந்துமதப் பெரும்பான்மையினர் இந்து ராஷ்டிரம் என்று முழங்குவதை ஜனநாயகத்திற்கு எதிரான பெரும்பான்மைவாதம் என்று விமர்சிக்கும் மார்க்ஸ் காஷ்மீரில் முஸ்லீம்கள் 77 சதவீதம் என்பதால் அவர்களுக்குதனி அடையாளம் என்றும் சொல்கிறார். வினோதமான தர்க்கம் தான்.

‘1939-ல் ஷேக் அப்துல்லா தலைமையில் ‘தேசியமாநாடு கட்சி தொடங்கப்பட்டது ‘ என்கிறார் மார்க்ஸ். உண்மையில் தொடங்கப் பட்ட போது இதன் பெயர் ‘முஸ்லீம் மாநாடு ‘ பிறகு ‘தேசிய மாநாடு ‘ ஆக்கப் பட்டது.

‘ராஜா அரிசிங் இணைப்புப் பற்றித் திட்டவட்டமான முடிவு எதையும் அறிவிக்காத சூழலில் 1947- அக்டோபர் 26-ல் வடமேற்கு எல்லைப் பகுதியிலிருந்த இனக்குழு மக்கள் பாகிஸ்தான் ஆதரவோடு காஷ்மீர் மீது படையெடுத்தனர். சமாளிக்க முடியாத அரிசிங் இந்திய அரசின் உதவியை நாடினார். இணைப்புக்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே படைகளை அனுப்ப முடியும் என்கிற நிபந்தனையோடு படைகளி அனுப்பிக் காசுமீரை இந்திய அரசு கப்பற்றிக் கொண்டது. இணைப்பு ஒப்பந்த்தத்தை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்யவே அரிசிங் காசுமீரை விட்டே ஓடினார். ‘

ஜம்மு-காஷ்மீர் அரசரின் ஊசலாட்டத்தை மையமாய் வைத்து , பாகிஸ்தான் தொடுத்த காஷ்மீர்ப் படையெடுப்பை மார்க்ஸ் இங்கே குறிப்பிடுகிறார். இந்திய அரசுடன் சேர அரிசிங் எடுத்த முடிவுப் படி பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்த காஷ்மீர்ப் பகுதிகளை விட்டு வெளியேறியிருக்க வேண்டும். இதுவரையில் இது நிறைவேறவில்லை என்பது பற்றி மார்க்ஸ் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை என்பதில் ஆச்சரியம் இல்லை. இந்தியாவின் மீது எல்லாக் குற்றங்களையும் சுமத்துவதில் அவருக்கிருக்கிற ஆர்வத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பற்றி ஒன்றும் இவர் சொல்வதில்லை என்பது மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானப் படி பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை பற்றியும் ஒன்றும் கூறுவதில்லை இவர். ஜம்மு காஷ்மீர்ப் பகுதியில் மக்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகள் கூட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு மக்களுக்கு இல்லை என்பது பற்றியும் மார்க்ஸ் மெளனம் சாதிக்கிறார்.

370-ஆம் பிரிவிற்கு ஆதரவாகவும், இந்தப் பிர்வு எல்லா மாநிலங்களுக்கும் வழங்கப் படவேண்டும் என்பதும் மார்க்ஸின் கோரிக்கை. மாநில சுயாட்சிபற்றிய விவாதங்களைத் தொடர இது இடமில்லை என்றாலும் சில விஷயங்களைச் சொல்லலாம். மாநில சுயாட்சி என்பது இன்றைய மாநிலத் தேர்தல் முறைகளின் கீழ் சாத்தியமா ? இன்றைய மாநிலத் தேர்தல்கள் பெரும்பான்மை இடங்கள் பெற்ற கட்சிக்கு கிட்டத்தட்ட அனைத்து அதிகாரங்களையும் வழங்கி, நீதிமன்ற இடையீட்டைத் தவிர , மிகத் தீவிரமான தேவைகளுக்கு மத்திய அரசின் இடையீடு தவிர கிட்டத்தட்ட எதேச்சையான ஒரு சர்வாதிகாரிக்கான அதிகாரங்களை வென்ற கட்சிக்கு வழங்குகிறது என்ற யதார்த்தத்தின் கீழ் மாநில சுயாட்சியை வழங்குவது , ஜனநாயக விரோதமான ஆட்சியை நிறுவத் தான் பயன்படும். மாநில சுயாட்சியைப் பற்றி மார்க் ? போன்றவர்கள் பேசும்போதெல்லாம் என் நினைவில் வருவது , அமெரிக்காவின் தென் மாநிலங்கள் அடிமைத்தனத்தை நியாயப் படுத்த ‘மாநிலங்களின் உரிமை ‘ என்ற போர்வைக்குள் புகுந்து கொண்ட வரலாற்று நிகழ்ச்சி தான். சரித்திர ரீதியாக ?னநாயகத்தை வலியுறுத்தும் எவரும் மாநில சுயாட்சியை மார்க் ? வலியுறுத்தும் நிலையில் ஆதரிக்கவே முடியாது. இப்போது கொஞ்ச நஞ்சம் இருக்கும் checks and balances பாதுகாப்புகள், இல்லாமல் ஆகிவிடும் நிலை அது.

கணிப்புத் தேர்தல் நடத்துவதற்கு ஐ நா விதித்த முன் நிபந்தனைகள் எதையும் பாகிஸ்தான் நிறைவேற்றாத பட்சத்தில் , இன்று பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகள் காஷ்மீரில் மனித வேட்டையாடும் நிலையில் , கணிப்புத் தேர்தல் என்பது மக்களின் அச்சத்தை மேலும் அதிகரிக்கும். இந்தியாவுடன் இணைந்த ஜம்மு-காஷ்மீர் மக்களுக்குத் துரோகம் செய்வதாகும்.

*********

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation