அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 13 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான

This entry is part of 45 in the series 20030302_Issue

மஞ்சுளா நவநீதன்


11. இந்திய வரலாறு எழுதப்பட்டதே இந்து வகுப்புவாதச் சார்போடு தான் என்பது போலச் சொன்னீர்கள் . வரலாறு என்பது பழைய சம்பவங்களைத் தொகுத்துச் சொல்வது தானே ? இது எப்படி ஒருபக்கச் சார்பாக இருக்க முடியும் ? என்பது மார்க்ஸின் அடுத்த கேள்வி.

மார்க்ஸின் பதில் : ‘வரலாறு என்பது ஒரு வகையான கதை சொல்லல் தான். ..தொடக்க காலத்தில் இந்திய வரலாற்றைக் காலப்பாகுபாடு செய்யும்போது ‘இந்து இந்தியா ‘ , ‘முசுலிம் இந்தியா ‘, ‘பிரிட்டிஷ் இந்தியா ‘ என்று வகுத்தனர். ஆனால் நவீன வரலாற்றறிஞர்கள் இந்திய வரலாற்றை இப்படி மத அடிப்படையில் பகுப்பது தவறு என்கின்றனர். பண்டைய இந்தியா , இடைக் கால இந்தியா , நவீன இந்தியா எனப் பிரிப்பது தான் பொருத்தமாக இருக்கும். ‘

எல்லா வரலாறுகளும் அப்போது வெற்றி பெற்றவர்களின் சார்பாக எழுதப் படுவது உண்மை தான் என்றாலும், இது வரலாற்றியலைச் சார்ந்த விஷயம். வரலாற்றின் அடிப்படைச் சம்பவங்களின் மீது இந்த புரிதல் எழுப்ப முடியும். இந்தியாவை புராதன இந்தியா , இடைக்கால இந்தியா என்று பிரித்தாலும் கூட படையெடுப்புகளும், காலனியாதிக்கமும், மதவாத அரசு இருந்ததையும் மறைப்பதற்கில்லை. அதன் காரணங்கள் என்பது, வெவ்வேறு ஆசிரியர்கள் வேறு விதமாய்ச் சொல்லலாம்.

‘உணர்வு ரீதியாய் இந்தியத் தேசியத்தைக் கட்டமைக்க முயன்ற உயர்சாதி இந்துக்கள் பண்டைய இந்து இந்தியாவை லட்சியமாய் முன்வைத்தனர். இந்தச் செயற்பாடு தான் இசுலாமியர் பற்றிய பல்வேறு விதமான வரலாற்றுப் பொய்களுக்கும் காரணமாகியுள்ளன . ‘ என்பது மார்க்ஸின் அடுத்த கூற்று. எந்தப் பொய்கள் என்று அவர் சொல்லவில்லை. முன் பத்திகளில் அவர் சொல்லியிருந்த பொய்களைக் குறிப்பிடுவதாய் இருக்கலாம்.

எந்த விடுதலை இயக்கத்திலும் முதலில் முன்கால் எடுத்து வைப்பது ‘எலீட் ‘ என்று சொல்லத் தக்க மேல்தட்டினரும் ,மத்தியதர வர்க்கத்தினரும் தான். அவர்கள் இந்த நோக்கில் பழைமை நோக்கிப் பாய்வது என்பதும் எல்லா விடுதலை மற்றும் சீர்திருத்த இயக்கங்களிலும் நடப்பது தான். ஆனால் இந்திய தேசிய விடுதலை இயக்கத்தின் பழைமை மீட்புக் கண்ணி வெகு சீக்கரமே அறுபட்டுவிட்டது. காந்தியும், நேருவும் மர்றும் ஆங்கிலம் பயின்ற தலைவர்களும், சோஷலிஸ்டுகளும் நிரம்பிய தலைமை இது. இன்று ஆர் எஸ் எஸ் கொண்டிருக்கும் செல்வாக்கை வைத்து வரலாற்றைத் திருக மார்க்ஸ் செய்யும் முயற்சி இது. ஆர் எஸ் எஸ்-இன் கருத்து இந்திய விடுதலை வரலாற்றில் எந்த இடத்தையும் வகிக்க வில்லை. திராவிட இயக்கங்கள் தமிழனின் ஆதிப் பெருமையை முன்வைப்பது போன்றதே இந்திய தேசியத் தலைவர்கள் இந்தியாவின் முற்காலத்திய பெருமையை முன்வைப்பது. எல்லாவற்றிலும் சாதியம் பார்க்கும் மர்க்ஸிற்கு இதில் சாதியம் தோன்றுவதில் வியப்பில்லை. ஆனால் இந்திய தேசியம் முஸ்லீம்களை விலக்கி வைக்கவில்லை. ஆனால் முஸ்லீம் தலைமை எப்போதுமே இந்துக்களை மத வெறுப்புடன் நடத்தியிருக்கிறது என்பது வெளிப்படை. வங்காளம் இரண்டாய்ப்பிளவுண்ட போதும் அதற்கான எதிர்ப்பு இந்துக்களிடம் தான் வெளிப்பட்டதே தவிர முஸ்லீம் தலைவர்களிடம் அல்ல.

இன்றைய கருத்துமோதல்கள் செக்குலரிஸம் என்னும் நேரு கட்டமைத்த மதச்சார்பின்மை கொள்கைக்கும், இந்துத்வா அமைப்புகள் அமைக்கும் கருத்துக்களத்துக்கும் இடையேயான போராட்டம். நேருவும் அவரது காங்கிரஸின் மதச்சார்பின்மைக் கொள்கையின் பக்கத்தோழர்களே திராவிட இயக்கமும் அன்றைய சீர்திருத்தவாதிகளும். அந்த நேரு கொள்கை சார்ந்த மதசார்பற்ற அமைப்புகள் உருவாக்கிய வரலாறுகளே இன்று வரலாறாக முன்வைக்கப்படுகிறது. நேரு அன்றைய எலீட்டான சோசலிஸ்ட், லண்டனில் படித்த பாரிஸ்டுகளின் பிரதிநிதி. அவர் தெளிவாகவே இந்து மத எதிர்ப்பு போக்கை கொண்டிருந்தார் என்பதற்கான ஏராளமான ஆதாரங்கள் உண்டு. அவரையும் அவரது கொள்கை வழி வந்த வரலாற்றாசிரியர்களையும் மேல்ஜாதி இந்து என்று மார்க்ஸ் வரையறை செய்வதுதான் ஆச்சரியம் – இத்தனைக்கும் அந்த வரலாற்றாசிரியர்கள் சொன்னதையே புத்தகம் முழுவதும் தன் கருத்துக்களாகவும் பிரசுரித்துக்கொண்டிருப்பவர் மார்க்ஸ். மார்க்ஸின் பழைய மார்க்ஸிஸ்ட் அவதாரத்தில் நேரு போன்றவர்கள் ‘தரகு முதலாளிகளாகவும் ‘ சீனப் போருக்குப் பின்பு, ஏகாதிபத்திய அடிவருடிகளாகவும் இருந்தார்கள்.ஆனால் மார்க்ஸின் இன்றைய ‘கதை சொல்லலில் ‘ இன்று மேல்சாதி இந்துவாக ஆகிவிட்டார். நாளை என்ன ஆவாரோ தெரியாது. காந்தியை பனியா என்று சோன்னவர்களும் இவர்களே. ஒரு வேளை காந்தியை முன்னிறுத்தித் தான் ‘மேல்சாதி இந்துக்கள் ‘ என்று மார்க்ஸ் இங்கே குறிப்பிடுகிறாரோ என்னவோ ? அதை அவர் தெளிவுபடுத்தவில்லை.

*********

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation