கிரிக்கெட் நாகரிகம்

This entry is part [part not set] of 45 in the series 20030302_Issue

கண்ணன்


(kalachuvadu@sancharnet.in)

இந்தியாவில் கிரிக்கெட் இன்று ஒரு விளையாட்டாகவே இல்லை. பிற தேசத்தவரோடு மோதும்போது தேசப்பற்றின் களனாகவும், பிற இனத்தவரோடு மோதும் போது இன கர்வத்தின் அடையாளமாகவும் பாகிஸ்தானோடு மோதும்போது இந்துப்பற்றின் சின்னமாகவும் போருக்குப் பதிலீடாகவும் விளங்குகிறது.

கிரிக்கெட்டில் உலகக்கோப்பையை வெல்வது போருக்கு நிகரான தேசிய எழுச்சியை ஏற்படுத்துகிறது. கிரிக்கெட் விளையாட்டாளர்களின் (இவர்கள் என்ன வீரர்கள் ?) பிரபல்யமும் அதிகாரமும் அரசியல் தலைவர்கள், திரைப்பட மகா நட்சத்திரங்கள், ஆன்மீகத் தலைவர்கள் ஆகியோருக்கு இணையானது. ‘அயல் நாட்டில் பயணம் மேற்கொண்டு வெற்றி பெற்றுத் திரும்பும் குழுவுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்வது எல்லாக் கட்சிப் பிரதம மந்திரிகளுக்கும் இன்றியமையாதது’ என்கிறார் கிரிக்கெட் நிபுணர் ராமச்சந்திர குகா.

பிரபல்யமும் அதிகாரமும் பொருந்தியவை எல்லாம் ஆக்கபூர்வமானவை எனக் கொள்ள முடியாது. கிரிக்கெட்டின் தாக்கம் சமூகத்தில் என்னவாக இருந்துள்ளது; இன்று அது ஏற்படுத்தி வரும் தாக்கம் என்னவாக இருக்கிறது என்பதைச் சற்று கவனமாகப் பார்க்கவேண்டும்.

சிறுவர்களின் விளையாட்டுகள் வகையும் வண்ணமும் செறிவும் உடையவை. கபடி, மரக்குரங்கு, கிட்டிப்புள், பம்பரம், கோலி, கிளியாந்தட்டு, பாண்டி, என பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபாடுகள் கொண்ட களஞ்சியம் அது. இன்று கிரிக்கெட்டின் வருகைக்குப் பிறகு – அரசியல் பொருளாதார மொழியில் சொல்வதென்றால் – கஷானா காலி. குக்கிராமங்கள் நீங்கலாக அனைத்து இடங்களிலும் கிரிக்கெட் (அத்தோடு தொடர்புடைய தொலைக்காட்சியும்) எல்லா விளையாட்டுகளையும் அழித்துவிட்டது. கடைசியாக நாம் சிறுவர்களை மரத்தின் மீது பார்த்தது எப்போது ? இன்று சினிமாவில்கூட சிறுவர்கள் மரத்தில் ஏறுவதில்லை. சினிமாவில் சிறுவர்கள் மரத்தில் இருப்பது முற்காலத்தின் குறியீடாக காட்டப்படுகிறது – சிலேட்டில் எழுதுவது போல!

மேற்குறிப்பிட்ட விளையாட்டுகளின் முக்கியமான அம்சம் இவற்றை விளையாடுவதற்குப் பணம் தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால் சிறுவர்களின் விளையாட்டு வெளியில் கிட்டத்தட்ட முழுமையான சமத்துவம் நிலவியது. ஆனால் கிரிக்கெட் மேட்டுக்குடி பண்பாட்டையும் பணத்தின் ஆதிக்கத்தையும் மைதானத்திற்குக் கொண்டு வந்தது. அத்தோடு கூட ஸ்டைலும் வந்தது. பணவசதி படைத்தவர்கள் அதை ஒளித்து வைத்துக்கொண்டு பள்ளிக்கு வரவேண்டிய சூழல் – கிரிக்கெட் வெறி பரவுவதற்கு முற்பட்ட காலத்தில் -நிலவியது. கிரிக்கெட் ஆதிக்கத்தின் தாக்கம் இந்நிலையில் ஏற்படுத்தியுள்ள மாற்றம் இன்று வெளிப்படையாகத் தெரிகிறது. இன்று ஒரு சராசரி மாணவனின் உடலில் பல ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் குடி கொண்டுள்ளன.

மத்தியதர வர்க்கத்திற்கு கிரிக்கெட் லெகுவான தேசப்பற்றின் வாய்ப்பான வடிகாலாகிவிட்டது. தேசத்திற்காகவோ சமூகத்திற்காகவோ எதுவும் பங்களிக்க இயலாதவர்கள், வேலைக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, சில மணிநேரம் தொலைக்காட்சி முன் அமர்ந்து, வேர்க்கடலையை கொறித்துக்கொண்டு ஆவேசமாக ஆர்ப்பரிக்கவோ வசைபாடவோ செய்வதன் மூலம் தங்களுடைய தேசப்பற்றை உறுதிப்படுத்திக் கொண்டுவிட முடிகிறது.

கிரிக்கெட் பல அநாகரிகங்களை ஏற்கத்தக்கதாக்கியிருக்கிறது. பணியை புறக்கணித்துவிட்டு டி. வி. பார்ப்பது, வீட்டுக்கு வரும் விருந்தை கவனியாமல் டி. வி. பார்ப்பது, விருந்து வீட்டுக்குச் சென்ற இடத்தில் உரிமையோடு டி. வி. போட்டுவிட்டு உட்கார்ந்துவிடுவது எல்லாம் இன்று மத்தியதர வர்க்கத்தின் பண்பாடாக வளர்ந்து வருகின்றன.

அத்தோடு மத்தியதர வர்க்கத்திற்கும் இளைய தலைமுறைக்கும் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் தொடர்பாக ஏற்பட்ட ஏமாற்றம் தங்களுக்கான முன் மாதிரிகளாக கிரிக்கெட் நட்சத்திரங்களை அடையாளம் காண வைத்துள்ளது. மத்தியதர வர்க்கத்திற்கு அவசர நிலைக்கு பின்னர் ஏற்பட்ட நம்பிக்கை இழப்பை அரசியல் மற்றும் சமூகப் பிரக்ஞையின் நீக்கத்தை – இன்மையை – கிரிக்கெட் நிரப்பியது.

அதே நேரத்தில் கிரிக்கெட் போலி தேசியமும் மதவாதமும் சமூகத்தில் பரவ துணை போயிற்று. இந்தியாவில் ஏற்பட்ட மதக் கலவரங்களின் பின்னணியில் எப்போதும் கிரிக்கெட்டின் நிழல் இருந்து வந்துள்ளது. தேசப்பற்றுக்கும் தேச விரோதத்திற்கும் ஒரு அளவுகோலாக கிரிக்கெட் உருவானதானது இந்தியாவில் மதப்பிளவு தீவிரமடைய ஒரு முக்கிய காரணம்.

இந்தப் பின்னணியில் கிரிக்கெட்டைப் பரவலாக்குவதில் மீடியாவின் பங்கையும் பார்க்க வேண்டும். கிரிக்கெட் மீது மீடியா காட்டிய ஆர்வமானது தன்னை வலுப்படுத்திக்கொள்ள கிரிக்கெட்டை ஒரு அரிய வாய்ப்பாக அது இனங்கண்டு கொண்டதன் விளைவுதான். கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளை ஒட்டி நடக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் கொழுந்து விற்பனை, கேபிள் டிவியின் பரவலாக்கம், உயரும் நாளிதழ் மற்றும் இதழ் விற்பனைகளை நாம் கவனிக்க வேண்டும். ‘விளையாட்டு இதழ்கள்’ என்ற வகையும் தினசரிகளில் விளையாட்டுப் பகுதியும் அடிப்படையில் கிரிக்கெட்டை நம்பி உருவானவையே.

சாதிய இன சமத்துவத்தின் களனாகவும், ஏகாதிபத்திய எதிர்ப்பின் கூறுகளை உள்ளடக்கியதாகவும், தேசிய அரசியலின் சோதனை வெளியாகவும் கிரிக்கெட் செயல்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் வாதங்கள் கிரிக்கெட் சார்பாக முன்வைக்கப்பட்டுள்ளன. அத்தகைய முற்போக்கான பண்புகள் எதையும் அது இன்று கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

அரசியல்வாதிகளிடம் காணக்கிடைக்காத நற்பண்புகளின் உறைவிடமாக கிரிக்கெட் நட்சத்திரங்களை மத்திய தர வர்க்கம் மற்றும் மாணவர்கள் கண்டனர். கிரிக்கெட் பணம் வைத்து விளையாடப்படும் ஒரு மோசடி சூதாட்டம் என்பது சமீபத்தில் வெளிப்பட்ட போது ஆயுதப் பேர ஊழல்களில் பெறாத அதிர்ச்சியை மத்திய தர வர்க்கம் அடைந்தது. கிரிக்கெட்டின் தாக்கம் ஓரளவு சமன்பட இந்த ஊழல் காரணமாயிற்று. அதன் தாக்கம் மேலும் குறைக்கப்பட்டு பல விளையாட்டுகளில் இதுவும் ஒன்று என்ற நிலைக்கு கொண்டுவரப்பட வேண்டும். அதன் அதிகபட்சத் தகுதி அவ்வளவுதான்.

ஆயிரம் பூக்களை அழித்து வளர்ந்திருக்கும் கிரிக்கெட்டுக்கு ஏன் இந்த தேசிய கெளரவம் ?

(காலச்சுவடு இதழின் ஆசிரியர்)

(kalachuvadu@sancharnet.in)

Series Navigation

கண்ணன்

கண்ணன்