மழைக்காலமும் குயிலோசையும் மா. கிருஷ்ணனின் இயற்கையியல் கட்டுரைகள் நூலின் முன்னுரை

This entry is part [part not set] of 45 in the series 20030302_Issue

தொகுப்பாசிரியர் : சு. தியடோர் பாஸ்கரன்


மா. கிருஷ்ணன் :

இயற்கையும் எழுத்தும்

ஆங்கிலத்தில் எழுதி, நாட்டின் தலைசிறந்த இயற்கையியலாளர் என்று புகழ்பெற்ற மா. கிருஷ்ணன், 1930ஆம் ஆண்டுகளில் எழுத ஆரம்பித்தபோது தமிழில்தான் எழுதினார். தமிழின் முதல் நாவலாசி ரியர்களில் ஒருவரான அ. மாதவையாவின் மகன் இவர். சென்னையில் அவர் வளர்ந்த வீடு, எட்வர்ட் எலியட்ஸ் சாலையிலிருக்கும் (டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை) ‘பெருங்குளம் ஹவுஸ்’, தமிழ் இலக்கியவா ணர்கள் கூடும் இடமாக இருந்தது. உ. வே. சாமிநாத அய்யர், மு. கதிரேசஞ் செட்டியார், மு. ராகவையங்கார் முதலியோர் கிருஷ்ண னின் தந்தையாரைச் சந்திக்க அங்கு வருவது வழக்கம். அரசுப் பணியி லிருந்து ஐம்பது வயதிலேயே விருப்ப ஓய்வுபெற்ற மாதவையா, பெருங்குளம் ஹவுஸில் ‘ஆசிரியர் அச்சுப் பிரசுராலயம் – புஸ்தக சாலை’ என்ற பதிப்பகத்தை நிறுவி, இலக்கியப் பணியில் ஈடுபட் டிருந்த காலமது. இத்தகைய சூழலில்தான் கிருஷ்ணனின் இளமைக் காலம் அமைந்தது. (ஏவிஎம் ராஷேஸ்வரி கல்யாண மண்டபம் அருகே யுள்ள இவ்வீட்டில் A. Madhaviah என்னும் பெயர்ப்பலகை இன்றும் காணப்படுகிறது.)

மாதவையா தம்பதியின் எட்டுக் குழந்தைகளில் கடைசியாக 30 ஷூன் 1912இல் கிருஷ்ணன் பிறந்தார். இவருக்குத் தந்தையுடன் மிக நெருக்கம். காலை நேரத்தில் தந்தையுடன் நீண்ட தூரம் நடந்து செல்வது, குதிரை சவாரி செய்வது, ஒன்றாகவே சாப்பிடுவது, அவருக்கு அருகேயே தூங்குவது என்று அன்றாட வாழ்வில் இவர்களு டைய பிணைப்பு வெளிப்பட்டது. தந்தையின் இலக்கிய ஈடுபாடும் இவரைத் தொற்றிக்கொண்டது. தந்தையோடு வெளிப்புறங்களில் அலைந்தபோது இவருக்குப் புறவுலகில், இயற்கையில் ஈடுபாடு ஏற்பட்டது.

1931இல் சென்னை மாகாணக் கல்லூரியில் தமிழை ஒரு பாட மாகக் கொண்டு தாவரவியலில் பி. ஏ. பட்டம் பெற்றார். இந்தத் துறை யில் பேராசிரியராயிருந்த பி.எப். ஃபைசன் (P.F.Fyson) (1877-1947) களஆய்வின் நுணுக்கங்களைக் கிருஷ்ணனுக்குக் கற்றுத் தந்தார். இயற்கையியலில் ஃபைசனைத் தன் குருவாகக் கொண்டார். திருமதி. ரூத் ஃபைசன் (1886-1969) ஓவியக்கலையில் கிருஷ்ணனுக்குப் பயிற்சியளித்தார். பி.ஏ. படிப்பைத் தொடர்ந்து எம். ஏ. படித்தபின் 1936இல் சட்டப்படிப்பையும் சென்னையில் முடித்தார் கிருஷ்ணன். ஆனால் வக்கீலாகப் பணியாற்றவில்லை. 1937இல் பெங்களூரைச் சேர்ந்த இந்துமதியைத் திருமணம் செய்துகொண்டார்.

1937- 42ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சென்னையில் வசித்த கிருஷ்ணன் முதலில் ஒரு பதிப்பகத்திலும், பின்னர் சென்னை கலைப் பள்ளியிலும், அகில இந்திய வானொலியில் மக்கள்தொடர்பு அலுவலராகவும் பணியாற்றினார். இந்தக் காலத்திலும், பின்னர் சண்டூர் சமஸ்தானத்தில் வேலை பார்த்தபோதும் அவரது கதைகளும் கட்டுரைகளும் தமிழ்ப் பத்திரிகைகள் சிலவற்றில் வெளியாயின.

1937இல் மெட்ராஸ் மெயில் பத்திரிகையில் எழுத ஆரம்பித்தார். 1942இல் கர்நாடகாவில் குல்பர்காவிற்கு அருகேயுள்ள சண்டூர் சமஸ்தா னத்தில் வேலை கிடைத்தது. அங்கு எட்டு ஆண்டுகள் பணியாற்றி னார். சண்டூரில் அவர் செய்த வேலை பன்முகம் கொண்டதாக அமைந்தது : பள்ளி ஆசிரியர், நீதிபதி, மக்கள் தொடர்பு அதிகாரி. கடைசியாக மன்னருக்கு அரசியல் செயலராக இருந்தார். பாறைக் குன்றுகளால் சூழப்பட்ட சண்டூர் பள்ளத்தாக்கின் நடுவே ஓடியது துங்கபத்ரை. சுற்றியிருந்த காடுகளில் காட்டுயிர்களை அவதானிக்க அவருக்குக் கிடைத்த வாய்ப்பு, அன்றாடப் பணியின் அயர்வை நீக்கி யது. வீட்டிலிருக்கும் வேளைகளில் ஆடு வளர்த்தார். பந்தயப் புறாக் களை வைத்திருந்தார். சில புறாக்களைக் கடிதம் கொண்டுசெல்லவும் பழக்கி வைத்திருந்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், சண்டூர் சமஸ்தானம் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. அரசுப்பணியில் சேர வந்த வாய்ப்பைத் தவிர்த்து, எழுதுவது, புகைப்படமெடுப்பது ஆகிய வற்றின் மூலமே வாழ்க்கையை நடத்தத் தீர்மானித்தார். 1949இல் சண்டூரை விட்டு சென்னைக்குக் குடியேறி, பெருங்குளம் இல்லத்தில் வசித்துவந்தார். கல்கத்தாவிலிருந்து வெளியாகும் ஷிtணீtமீsனீணீஸீ நாளித ழில் விஹ் சிஷீuஸீtக்ஷீஹ் ழிஷீtமீ ஙிஷீஷீளீ என்ற மாதமிருமுறைத் தொடரை 1950 முதல் எழுதலானார். இத்தொடரின் கடைசிக் கட்டுரை அவர் இறந்து சில நாட்கள் கழித்து அச்சேறியது. (மிக அதிக காலம் வெளியான இந்தியப் பத்தி என்ற பெருமை இதற்கு உண்டு.)

மா. கிருஷ்ணன் இந்திய வனவிலங்கு வாரியத்தில் (Indian Board for Wildlife) முப்பதாண்டுகளுக்கு மேலாக அங்கம் வகித்தார். 1968இல் இந்திய நாட்டுப் பாலூட்டிகளைப் பற்றி ஆய்வு மேற்கொள்ள இவருக்கு ஷவாகர்லால் நேரு ஆய்வு நல்கை வழங்கப்பட்டது. 1969இல் இவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. புலிகளைக் காக்க 1970இல் நிறுவப்பட்ட Project Tiger திட்டத்தில் முக்கியப் பங் காற்றினார். 1995இல் ஐக்கியநாடு சுற்றுச்சூழல் கழகம் தெரிந்தெடுத்த ‘உலக ஐந்நூற்றுவர்’ என்ற தொகுப்பிற்கு நியமிக்கப்பட்டு கெளர விக்கப்பட்டார். இந்துமதி-கிருஷ்ணன் தம்பதியரின் ஒரே மகன் ஹரி கிருஷ்ணன். இவர் தமிழ்நாட்டின் தலைமை வனத்துறைப் பாது காவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

1939முதல் 1941வரை வெளிவந்த சில்பஸ்ரீ என்ற இதழில் தமிழ் அறிஞர்களான வையாபுரிப் பிள்ளை, ரா. பி. சேதுப்பிள்ளை முதலி யோர் எழுதிவந்த சமயத்தில் இந்தப் பத்திரிகை கிருஷ்ணனின் எழுத்துகளுக்கு இடமளித்தது. முதலில் கிருஷ்ணன் சிறுகதைகள்தான் எழுதினார் : தன் இயற்பெயரிலும், ‘கண்ணன்’ என்ற புனைபெயரிலும். கிருஷ்ணனுடைய சிறுகதைகள் இயற்கையியல் பின்னணியில் எழுதப் பட்டவை. பந்தயப் புறாக்கள், நாய்கள், தாவரங்கள் அவருடைய கதைகளில் பாத்திரங்களாக அமைந்தன. (மாதவையாவின் பிள்ளை களில் ஆறு பேர் – தமிழ்நாட்டின் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற மா. அனந்தநாராயணன் உட்பட – தமிழில் கதைகள் எழுதினார் கள். இந்த அறுவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பு முன்னிலா என்ற தலைப்பில் 1944இல் தினமணி வெளியீடாக வெளிவந்தது.)

கிருஷ்ணனின் கதைகளைப் படித்த கலைமகள் ஆசிரியர் கி. வா. ஷகந்நாதன், காட்டுயிர்களைப் பற்றித் தமிழில் எழுத வேண்டுமென்று அவரை ஊக்குவித்தார். கலைமகள் இதழில் கிருஷ்ணனின் கட்டுரை கள் பல வெளியாயின. பின்னர் கல்கி இதழிலும் எழுதினார். தமது கல்லூரித் தோழர் பெரியசாமி தூரனின் அழைப்பின்பேரில் கலைக் களஞ்சியத்தில் இடம்பெற்ற உயிரினங்கள் பற்றி மிக அதிக எண்ணிக் கையிலான கட்டுரைகளை அவர் எழுதினார்.

அறிவியல் நோக்கில் காட்டுயிர்களைப் பற்றி முதன்முதலாகத் தமிழில் எழுதியவர் கிருஷ்ணன்தான். அன்றைய சூழலில், தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் இயற்கை பற்றியோ, காட்டுயிர் பற்றியோ யாரும் அக்கறை காட்டி எழுதவில்லை. சுற்றுச்சூழல் பேணல் பற்றிய விழிப்புணர்வு சிறிதும் இல்லாத காலகட்டத்தில் கிருஷ்ணன் அவை பற்றி எழுதினார். அதுமட்டுமல்லாமல், அன்று காட்டுயிர் பற்றி எழுதிக் கொண்டிருந்தவர்களில் துப்பாக்கி தூக்கி வேட்டையாடாத இயற்கை வாதியான கிருஷ்ணன் தனித்து நின்றார். காட்டுயிர்கள் மனிதனின் பொழுதுபோக்கிற்கானவை அல்ல என்பது அவர் வாதம்.

1957வரை தமிழில் காட்டுயிர் பற்றியும் இயற்கை பற்றியும் எழுதி னார். ஒவ்வொரு கட்டுரையுடன் அவர் வரைந்த கோட்டோவியம் ஒன்றும் இடம் பெற்றது. கட்டுரையின் சாராம்சத்தைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுவதுபோல இவ்வோவியங்கள் அமைந்தன. கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் சென்னையிலுள்ள கலை மற்றும் கைவினைப் பள்ளியில் சிறிது காலம் பணியாற்றிய அனுபவம் அவரது ஓவியத் திறமைக்கு நல்ல அடித்தளமாக அமைந்திருந்தது. சில்பஸ்ரீ யில் வெளியான மற்ற சில எழுத்தாளர்களின் கதைகளுக்கும் கட்டுரை களுக்கும் கிருஷ்ணன் ஓவியங்கள் வரைந்ததுண்டு. முதலில் ஞீ என்று இந்த ஓவியங்களில் கையெழுத்திட்டவர், பின்னர் விரி என்று கையெ ழுத்திடலானார். ஞீ என்ற புனைபெயரில் சில கட்டுரைகளையும் இவர் இந்து நாளிதழில் வெளியிட்டதுண்டு.

கிருஷ்ணனுக்குத் தமிழ் செவ்விலக்கியத்தில் நல்ல பயிற்சி உண்டு. இலக்கியக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். சத்திமுத்தப் புலவர் எழுதிய “நாராய், நாராய் . . .” பாடலை இவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கும் நேர்த்தி இவரது திறமைக்குச் சான்று. இயற்கை சார்ந்த கட்டுரைகளில் பண்டை இலக்கியத்திலிருந்து சான்றுகள் காட்டுவார். பூநாரை, சல்லடை போன்ற அமைப்புடைய தன் அலகால் ஏரிகளில் இரைதேடுவதை விளக்கச் சங்கப்பாடல் ஒன்றைச் சுட்டிக் காட்டுகிறார். சமகால இலக்கியத்திலும் அவருக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. அவருடைய நண்பர் தி. ஷானகிராமன் எழுதிய அம்மா வந்தாள் நாவலை The Sins of Appu ‘s Mother என்ற தலைப்பில் ஆங்கி லத்தில் மொழிபெயர்த்து, இல்லஸ்ட்ரேடட் வீக்லியில் தொடர்ந்து வெளியிட்டார். பின்னர் இது ஒரு நூலாகவும் வெளிவந்தது. 1995இல் கதிரேசஞ் செட்டியாரின் காதல் என்ற துப்பறியும் நாவலை எழுதி வெளியிட்டார்.

கிருஷ்ணன் தமிழில் விளையாட்டாகச் சில கவிதைகளும் எழுதியி ருக்கிறார். ஆனால் அவை பிரசுரமாகவில்லை. வால்பாறைக்கருகே உள்ள வனத்துறையைச் சார்ந்த தங்கும் விடுதியொன்றிலுள்ள விருந் தினர் புத்தகத்தில் கிருஷ்ணன் தம் கைப்பட எழுதிய பாடல் ஒன்றைப் படித்தேன். அந்த விடுதியின் காப்பாளர் தங்கவேலு என்பவர் ஒரு பிரபல இயற்கை வரலாற்றியலாளரிடம் பேசுகிறோம் என்றறியாமல், சுற்றியுள்ள காட்டில் நான்கு வகையான புலிகள் உண்டு என்று கூறி, ஒவ்வொன்றையும் விவரிக்க ஆரம்பித்திருக்கிறார். இதைக் கேட்ட கிருஷ்ணன், அந்தக் குறிப்பேட்டில் பின்வருமாறு எழுதிவைத்தார் :

படிப்பில்லையானாலும் பார்த்தும் பல்லாண்டு பகுத்தறிவின்

அடிப்படியாக அறிந்தவை யெத்தனை – அத்தனையும்

படிப்படியாகப் பிறர்க்குப் பயனூட்டும் தங்கவேலு

கொடிப்புலி கண்ட குருவே நீ வாழி கொழுந்துவிட்டே.

அங்கிருந்து டாப்ஸ்லிப் என்னுமிடத்திற்குச் சென்றார். அங்கு பன்னீர் செல்வம் என்ற வனஅதிகாரி வரையாடு இருக்குமிடத்தைக் கண்டு, கிருஷ்ணனை மாலையில் அழைத்துப் போவதாகக் கூறினார்; ஆனால் வரவில்லை. அவருக்குக் கிருஷ்ணன் ஒரு வெண்பா எழுதி அனுப்பி வைத்தார்.

வரையாடு வருவதையும் வாராததையுமறிந்து சொல்ல

உரையாடிச் சென்றேன் உமதிடத்தில் – திரையாடும்

பேசும்படம் பார்க்கப் பேசாது சென்றுவீட்டார்

ஏசும் படியா னேனே!

கிருஷ்ணன் தமிழில் இலக்கியக் கட்டுரைகளையும், கதைகளையும் எழுதியிருந்தாலும் இயற்கை வரலாறு சார்ந்த கட்டுரைகளே அதிகம்; முக்கியமும்கூட. இத்தகைய கட்டுரைகளுக்கு நல்ல எடுத்துக்காட்டு 1950இல் எழுதிய நாயக்கர்சேரி நாய்கள். ஆங்கில எழுத்தாளர்கள் ஷேம்ஸ் தர்பர், பி. ஜி. வோடோஸ் நாய்களை வர்ணிக்கும் நடையை இது ஞாபகப்படுத்துகிறது. கிருஷ்ணனுக்கு வோடோஸ்ஸின் எழுத்தில் மிக்க அபிமானம் உண்டு. எளிய நடையில் காட்டுயிர் சார்ந்த கருது கோள்களைத் தெளிவாக விளக்குவது கிருஷ்ணனின் திறமை. ஊடே நகைச்சுவையும் சன்னமாக இழையோடும்.

1954-1961ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கலைக்களஞ்சிய த்தில், கிருஷ்ணனின் காட்டுயிர் சார்ந்த கட்டுரைகள் பல இடம்பெற்றன. பாலூட்டிகளுக்கும் பறவைகளுக்கும் புழக்கத்திலிருக்கும் சரியான தமிழ்ப் பெயர்களை இவர் பயன்படுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது. அவருடைய களப்பணி அனுபவத்தைச் சார்ந்தே அவரின் கட்டுரைகள் அமைந்திருந்தன. மற்றொருவர் நோக்கையோ, கண்டுபிடிப்பையோ பற்றி அவர் எழுதவில்லை. காட்டுயிர்களின் வாழ்முறையைத் துல்லி யமாக, எளிய தமிழில் விவரிக்கிறார். சுற்றுச்சூழல் பற்றிய பாரம்பரிய ஞானத்தின் வெளிப்பாடுகளைச் சுட்டிக்காட்டுகிறார். அறிவியல் சார்ந்த கருத்துகளை எளிதில் புரிந்துகொள்ளும்வண்ணம் விளக்குகிறார்.

தமிழில் நூற்றுக்கணக்கான பத்திரிகைகளும், ஆயிரக்கணக்கான புத்தகங்களும் வெளியிடப்பட்டாலும், காட்டுயிர் பற்றியும் இயற்கை பற்றியும் எழுதப்படுபவை மிகக் குறைவு. வெகு அரிதாகக் காட்டுயிர் பேணல் பற்றிய கட்டுரை இரண்டொன்றைக் காண முடிந்தாலும், இயற்கையியல் சார்ந்த நூல்களைக் காண முடிவதில்லை. பிரிட்டிஷ் அரசு காலத்தில் பிரபல வேட்டைக்காரராயிருந்த ஜிம் கார்பெட்டின் நூல்கள் சில மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இன்றைய அச்சு ஊடகங்களில் காட்டுயிர் பற்றிய சில செய்திக்குறிப்புகள் வந்தாலும், அவை பற்றிய பெயர்கள், கலைச்சொற்கள் ஆகியவற்றில் பெருங் குழப்பத்தையே காணமுடிகிறது. சாதாரணமாக மாலைவேளையில் காணக்கூடிய கூகை என்ற ஆந்தையை ஒரு நாளிதழ் ‘விநோதப் பறவை பிடிபட்டது’ என்று தலைபிட்டு எழுதுகிறது. அழுங்கு என்று கிராமப்புறத்தில் அழைக்கப்படும் சிறு விலங்கு ஒன்றின் படத்தை வெளியிட்டு ‘எறும்புத்தின்னி’ என்று அதன் ஆங்கிலப் பெயரான ant-eater என்பதன் மொழியாக்கத்தை வெளியிட்டது மற்றொரு நாளேடு.

அண்மையில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நூலிலும் இல் லாத பெயர்களைக் கற்பித்தெழுதி மேலும் குழப்பத்தை உண்டாக்கி விட்டார்கள். மலைமுகடுகளில் வாழும் வரையாடு என்ற விலங்கிற்கு, ‘நீலகிரி காட்டாடு’ என்று பெயர் சூட்டிவிட்டார் மொழிபெயர்ப்பாளர். பற்பல பறவை, விலங்குப் பெயர்களுக்கும் இதே கதிதான் – ‘அருவி’ என்பது ‘நீர்வீழ்ச்சி’ என்றாகிவிட்டது போல! நல்லவேளையாகத் தாவரங்களின் பெயர்கள் மறக்கப்படவில்லை. சித்த மருத்துவர்களால் அவை பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் உயிரினங்களின் தமிழ்ப் பெயர்கள் மெல்ல மறைந்து வருகின்றன.

காட்டுயிர்ப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பேணல் இவை பற்றிய கலைச் சொற்கள் தமிழில் வளராதது, இப்பொருள் பற்றி நம்மிடையே எந்தவொரு விழிப்புணர்வும் ஏற்படாததைக் காட்டுகிறது. இதன் விளை வாகத் தமிழ் வாசகர்களிடையே காட்டுயிர் பற்றியோ, அவற்றைப் பேணுவது பற்றியோ ஆர்வம் உருவாகவில்லை. நம் நாட்டில் பல் வேறு வகையான வாழிடங்கள் – மலைத்தொடர்கள், கடற்கரை, மழைக்காடுகள், நதிகள், பாலைவனம், புதர்க்காடு, ஏரிகள் என – இருந்தும் சூழலியல் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றிய சொல்லாடல் இன்னும் உருவாகவில்லை. தற்காலத் தமிழ் இலக்கிய உலகம் ஒரு புதிய உத்வேகத்துடன் இயங்கினாலும் பசுமை இலக்கியம் தமிழில் உருவாவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. வயற்புறம் மற்றும் காடுகளில் காணப்படும் உயிரினங்கள் பற்றிய நாட்டுப்புற மக்களின் பட்டறிவு, பதிவு செய்யப்படாமல் மறைந்து வருகிறது. இந்த அறிவும் அது சார்ந்த சொற்களும் மீட்கப்பட்டுப் புழக்கத்திற்கு வர வேண்டும். பறவைகள், விலங்கினம் இவற்றின் பாரம்பரியத் தமிழ்ப் பெயர்களை மறந்துவிட்டோம். இத்தகைய பின்புலத்தில் மா. கிருஷ்ணனின் கட்டுரைகளை நாம் காண வேண்டும். எழுத்தையே வாழ்க்கைக்குரிய ஊதியம் தரும் தொழிலாக மா. கிருஷ்ணன் மேற்கொள்ள முடிவு செய்தபோது தமிழில் இது சாத்தியம் இல்லையென்று ஆங்கிலத்தி லேயே எழுத முற்பட்டதைத் தமிழுக்கு ஏற்பட்ட இழப்பென்று சொல் லாமல் இருக்க முடியாது.

1970இல் ஏற்பட்ட எண்ணெய்ப் பற்றாக்குறை, சுற்றுச்சூழலைக் கூர்ந்து கவனிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. 1972இல் ஸ்டாக்ஹோம் நகரில் நடந்த உச்சி மாநாடு, எல்லா நாடுகளின் கவனத்தையும் சுற்றுச்சூழல் மீதும், கானுயிர் மீதும் திருப்பியது. இதன் விளைவாகக் கானுயிர் பற்றிய அக்கறை நம் நாட்டில் ஒரு பேரலை யாக எழுந்தது. கானுயிர்ப் பாதுகாப்புச் சட்டம் 1972இல் இயற்றப்பட் டது. 1976இல் புலிகள் பாதுகாப்புத் திட்டம் செயலாக்கப்பட்டது. வேட்டையாடும் கொடிய பழக்கம் 1991இல் தடை செய்யப்பட்டது. கானுயிரியல், சூழலியல் என்ற புதிய துறைகள் அறிவியல் உலகின் கவனத்தை ஈர்த்தன. உத்திராஞ்சல் மாநிலத்தில் டேராடூன் நகரில் இந்தியக் கானுயிர் நிறுவனம் இயங்கத் தொடங்கியது. பல புதிய சரணாலயங்களும், தேசியப் பூங்காக்களும் தோற்றுவிக்கப்பட்டன.

இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் கானுயிர்ப் பாதுகாப்பு பற்றிய ஆர்வம் பல நடவடிக்கைகளில் பிரதிபலிக்கப்படுவதை நாம் காண லாம். இதைச் சார்ந்த சுற்றுச்சூழல் இயக்கமும் தன்னைப் பலவிதங் களில் வெளிப்படுத்திக்கொள்கிறது. எடுத்துக்காட்டாக, கர்நாடகத்தில் கானுயிர்ப் பாதுகாப்பிற்கு மட்டும் ஏறக்குறைய 40 தன்னார்வக் குழுக் கள் இயங்கி வருகின்றன. கேரளத்தில் சுற்றுச்சூழல் சமன்பாடு, கானு யிர்ப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. இத்துறைக்கெனத் தனி பத்திரிகைகளும் உண்டு. வெகுசன பத்திரிகை களும் இயற்கை சார்ந்த கட்டுரைகளை வெளியிட்டுத் தங்களுக்கு இருக்கும் அக்கறையை வெளிப்படுத்திக்கொள்ளுகின்றன. புறஉல கைப் பற்றியும் சுற்றுச்சூழல் பற்றியும் ஒரு தீவிரச் சொல்லாடல் அங்கே இருப்பதை நாம் காணலாம். கன்னடத்திலும் மலையாளத் திலும் சுற்றுச்சூழல் பற்றிய கலைச்சொற்களும், அவை சார்ந்த கருது கோள்களும் முன்பே புழக்கத்தில் இருந்தது. அதைப் பற்றிய சொல் லாடல் ஒன்று அங்கே உருவாக ஏற்ற சூழலை இது உருவாக்கியது.

தமிழ்நாட்டில் கானுயிர் பற்றிய நூல்களோ சொல்லாடலோ உரு வாகவில்லை. பத்திரிகைகளும் கானுயிருக்கு இடம் ஒதுக்குவதில்லை. செய்திகளை வெளியிட்டாலும் அவை மிகவும் அந்நியப்படுத்தப்பட்ட தொனியிலேயே இருக்கின்றன. சூழலியல், கானுயிர்ப் பாதுகாப்பு, உயிரியல் ஆகிய துறைகளைச் சார்ந்த பிரச்சினைகளை விவாதிக்க உரிய கலைச்சொற்கள் இன்னும் உருவாகவில்லை. நாவல், சிறுகதை போன்ற படைப்பிலக்கியங்களிலும் விலங்குகள், பறவைகள் பற்றி வரும் குறிப்புகள் கானுயிர் பற்றி நமக்கிருக்கும் அறியாமையையும் உதாசீனத்தையும் காட்டுகின்றன.

இந்தப் பின்னணியில் கிருஷ்ணனின் கட்டுரைகளை நாம் அணுக வேண்டும். 1940களிலும், 50களிலும் எளிய தமிழில் கானுயிர் பற்றியும், இயற்கை பற்றியும் கட்டுரைகள் எழுதி, சூழலியல் சார்ந்த கருதுகோள் களை அவர் விளக்க முற்பட்டார். அவர் எழுதிய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு நம் நாட்டிலோ அல்லது உலகள விலோகூடத் தோன்றியிருக்கவில்லை. வேட்டை இலக்கியங்களைப் படித்து மகிழ்ந்துகொண்டிருந்த காலமது. அவருடைய கட்டுரைகளின் சிறப்பை அறிவுலகம் அடையாளம் கண்டுகொள்ளாததற்கு இதுவும் ஒரு காரணம். மழைக்காடுகளைப் பாதுகாப்பது பற்றியும், புலி அழி வின் விளிம்பிலிருப்பது பற்றியும், இந்தியாவில் பல உயிரினங்கள் அற்றுப் போகும் ஆபத்து பற்றியும் ஒரு தீர்க்கதரிசி போல் எழுதினார்.

பறவைகளைப் பற்றிய ஆர்வம் என்னுள் துளிர்விட்டபோது (1962) நான் மா. கிருஷ்ணனைச் சந்தித்தேன். அன்று ஏற்பட்ட நட்பு அவர் மறையும்வரை தொடர்ந்தது. மா. கிருஷ்ணன் என் வாழ்வின் ஒரு முக்கியப் பாதிப்பு. அவருடைய பகுத்தறிவுக் கண்ணோட்டம் என்னைப் பெரிதும் ஈர்த்தது. வெளி மாநிலங்களில் பணியாற்றிக்கொண்டிருந்த போது சென்னைக்கு வரும்போதெல்லாம் அவருடன் செலவிட ஒரு மாலை நேரத்தை ஒதுக்குவதுண்டு. மொட்டை மாடியில், சாய்வு இருக் கையில் அமர்ந்தபடி மணிக்கணக்காகப் பேசுவார். 1996இல் ஷனவரி மாதம் அவரைக் காணச் சென்றேன். அன்று அவர் படுத்துக் கொண்டே பேசியது என் நெஞ்சை அழுத்தியது. நான் அஹமதாபாத் சென்ற சில வாரங்களில் அவர் மரித்த செய்தி கிடைத்தது.

சு.தியடோர் பாஸ்கரன்

மழைக்காலமும் குயிலோசையும்

மா. கிருஷ்ணனின் இயற்கையியல் கட்டுரைகள் நூலின் முன்னுரை

தொகுப்பாசிரியர் : சு. தியடோர் பாஸ்கரன்

பக்கம் : 208, விலை ரூ.90

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629 001

தொலைபேசி : 91-4652-222525

தொலைநகல் : 91-4652-223159

மின்னஞ்சல் :kalachuvadu@sancharnet.in

Series Navigation

தொகுப்பாசிரியர் : சு. தியடோர் பாஸ்கரன்

தொகுப்பாசிரியர் : சு. தியடோர் பாஸ்கரன்