அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 11 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான

This entry is part of 35 in the series 20030215_Issue

மஞ்சுளா நவநீதன்


3. ஆனால் இஸ்லாமியர்கள் கட்டாயமாக மதம்மாற்றியுள்ளனரே ? இந்துக்களாக இருந்தவர் மீது ஜிஸ்யா என்னும் தண்டனை வரி விதிக்கப்பட்டதாகப் பாட நூல்களில் படித்திருக்கிறோமே ? என்பது மார்க்ஸ் எழுப்பும் கேள்வி.

‘மன்னர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாய் இருந்தபோதும் அவர்கள் மக்களின் எதிரிகள் தான். ஏதாவது ஒன்றைச் சொல்லி மக்களைக் கொள்ளையடித்தவர்கள் தான். இசுலாமிய மன்னர்கள் இந்துக்கள் மீது ‘ஜிஸ்யா ‘ வரி சுமத்தியது உண்மை தான். ஆனால் இந்த வரி இந்துக் கோயில்களைப் பராமரிக்க என்று சொல்லப் பட்டது. இசுலாமிய மக்கள் மீது வரி இல்லை என்று நினைத்து விடாதீர்கள் ‘சக்காத் ‘ என்ற பெயரில் அவர்களிடமும் வசூலிக்கப் பட்டது. ‘ என்பது மார்க்ஸின் சப்பைக் கட்டு.

இந்த ஜிஸ்யா ,ஜகாத் வரிகளின் மூலம் குரானை அடிப்படையாய்க் கொண்ட ஷாரியத் சட்டம் ஆகும். இதன் சிவில் வடிவங்கள் இன்றும் சுதந்திர இந்தியாவில் முஸ்லிம் தனிச் சட்டமாய்த் தொடர்கின்றன. இதில் உள்ள அநீதியைச் சுட்டிக் காட்டி முஸ்லீம் அறிவாளிகள் கூட பொது சிவில் சட்டம் வேண்டும் என்று வாதாடுகிறார்கள். ஆனால் , முஸ்லீம்களின் சிறுபான்மை உரிமை என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான சட்டம் இருக்க வேண்டுமா என்று விவாதங்கள் நடைபெறுகின்றன. அது ஒரு புறம் இருக்க ஜிஸ்யா, சகாத் பற்றிப் பார்ப்போம்.

ஜிஸ்யா என்ற வரி முஸ்லீம் அரசர்கள் முஸ்லீம்கள் அல்லாதார் மீது சுமத்திய வரி . சகாத் என்பது முஸ்லீம்களின் மீது சுமத்திய வரி. இது எதற்காக என்னும்போது , முஸ்லீம் அல்லாதாரைத் தனியாய்க் காண்பதற்கும், அவர்களைப் ‘பாதுகாக்க ‘ என்றும் சொல்லப் படுகிறது. இது முஸ்லீம் அல்லாதாரை ‘பாதுகாப்பு ‘ வேண்டி நிற்கிற இரண்டாம் தரக் குடிமகன்களாய் ஆக்கப் பயன்படுகிறது. இதன் அழுத்தத்தில் சமூக அங்கீகாரம் வேண்டி அவர்கள் முஸ்லீம்களாக மாறுவதும் நிகழ்ந்தது.

முஸ்லிம் அரசர்களின் ஆளுகையில் வரி என்பது வெறும் ‘பணம் ‘ பற்றிய பிரசினை அல்ல. அது சமூக அந்தஸ்தையும் , சமூக நிலையையும் அறிவிக்கிற ஒரு அடக்குமுறை ஆயுதம். சகாத் செலுத்துவது கடவுளுக்குப் பிரியமான ஒரு செயலாய், முஸ்லீமின் பெருமைக்குரிய கடமையாய்க் கொள்ளப் படுகிறது என்பது தான் முக்கியமான விஷயம். இதைப் பூசி மெழுகிவிட்டு, மார்க்ஸ் யாரோ ஒரு இந்து அரசன் 14ம் நூற்றாண்டில் யூதர்கள் மீது வரி விதித்ததாய்ச் சொல்கிறார். அது யார் என்றோ இந்தியாவின் எந்த பகுதியில் என்றோ அவர் குறிப்பிடவில்லை. 2000 வருடத்துக்கு மேற்பட்ட இந்திய வரலாற்றில் அவர் தேடித் தேடிக் கண்டுபிடித்தது இது ஒன்றைத் தான், என்பதே இது மதம் விதித்த வரிமுறை அல்ல என்பதன் நிரூபணம்.

தொடர்ந்து மார்க்ஸ் சொல்வது இது : ‘ ஜிஸ்யாவுக்குப் பயந்து கொண்டு இந்துக்கள் மதம் மாறினார்கள் என்று நினைத்து விடாதீர்கள். எந்ர்த இசுலாமியமன்னரின் காலத்திலும் இந்து மக்கள் கட்டாயமாக மதம் மாற்றப் பட்டதில்லை. ‘ முழுப் பூசணியை சோற்றில் மறைப்பதற்கு இதை விட உதாரணம் தேவையில்லை. முஸ்லிம் மன்னர்களின் அவையில் இருந்தவர்களே இந்த மதமாற்றங்களைப் பெருமளவில் நடந்ததாய்ப் பதிவு செய்திருக்கிறார்கள். அப்படி இல்லையென்றால் இந்தியத்துணைக்கண்டத்தில் எப்படி பாகிஸ்தான், கிழக்கு வங்கம் பகுதிகளில் மட்டும் இசுலாமியர் பெரும்பான்மையாய் ஆகியிருக்க முடியும் ? 20-ம் நூற்றாண்டிலேயே, நவகாளியிலும், மலபாரிலும் இவை நடந்திருக்கின்றன.

4. அலாவுதீன் கில்ஜி இந்து சமீன் தார்களை ஒடுக்கினானே ? என்பது மார்க்ஸ் தொடுக்கும் அடுத்த கேள்வி.

‘அவுரங்கசீப் போன்ற மன்னர்கள் செய்த சில முயற்சிகளை , பெரும் மக்கள் திரள்களைக் கட்டாயமாக மதம் மாற்றினார்கள் என்கிற பொருளில் நாம் புரிந்துகொள்ளக் கூடாது. ‘ என்கிறார் மார்க்ஸ். பின் எப்படிப் புரிந்து கொள்வது ?

‘எத்தனையோ தலைமுறைகளுக்கு முன்பு மேற்கொள்ளப் பட்ட அதிகார வெறி பிடித்த மன்னர்களின் நடவடிக்கைகளை அவற்றிற்குரிய சூழலிலிருந்து விலக்கிப் பூதாகாரப் படுத்தி இன்றைய தலைமுறையைச் சேர்ந்த அப்பாவி மக்கள் மீது இரத்த வெறி கொண்ட பகைமையை ஏற்படுத்தப் பயன்படுத்தக் கூடாது ‘ என்ற மார்க்ஸின் கூற்றுடன் நான் முழுக்க முழுக்க உடன்படுகிறேன். ஆனால், இந்த நிலைபாட்டை எடுப்பதற்கு முன் நேர்மையான வரலாற்று வரைவு வேண்டும். ஆமாம், இதெல்லாம் நடந்தது. ஆமாம் தாம் இஸ்லாமுக்குப் பணி புரிகிறோம் என்று நம்பிய அரசர்களால் இது நடத்தப் பட்டது என்ற உண்மையை பூசி மெழுகாமல் பதிவு செய்து , அதனை கடந்த காலநிகழ்வாக ஒப்புக்கொண்டால் தான் நாம் அதைத் தாண்டிச் செல்ல முடியும். அதில்லாமல் இந்து மன்னர்களும் இதைச் செய்தார்கள் என்று சொல்வது எந்த விதத்திலும் உதவாது.

அப்படி வரலாற்றை ஒப்புக் கொண்டால் தான் நாம் வரலாற்றின் பழைய தவறுகளைத் தவிர்க்க முடியும். இசுலாமிய மன்னர்களின் செயல்கள் ஏன் இசுலாமுடன் இனங்காணப் பட்டன ? இனங்காணப் படுகின்றன ? ஜாலியான் வாலாபாகின் டயர் அட்டூழியத்தை யாரும் கிறுஸ்தவத்துடன் இனங்காண வில்லையே ஏன் ? காரணம் என்ன என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

5. இந்து மன்னர்கள் எத்தனையோ கொடுமைகள் செய்திருக்கலாம். ஆனால் ஓரிருவரைக் கூட கட்டாயமாய் மதம் மாற்றியதில்லையே ? என்பது மார்க்ஸின் அடுத்த கேள்வி.

‘ இசுலாம், கிறுஸ்தவம் போன்றவை பரப்புதற்குரிய மதங்கள் இந்து மதம் அப்படிப்பட்டதல்ல. ..எனவே ஒருவரை இந்து மதத்திற்கு மாற்றினால் அவரை எந்தச் சாதியில் வைப்பது என்பது இந்து மதத்திற்கு ஒரு பிரசினை. இங்கேயுள்ள வைதிக, சனாதன மதத்திற்கு இந்து மதம் என்ற பெயர் சமீபத்தில் ஏற்பட்டது தான். மூன்றாவதாக: மதம் மாற்றியதில்லையே தவிர , மாற்று மதங்களை இழிவு செய்ததிலும் அரசதிகாரத்தின் துணையோடு மாற்று மதத்தவரை இரக்கமேயில்லாமல் கொன்று குவித்ததிலும் இந்து மதம் வேறெந்த மதத்திற்கும் சளைத்ததில்லை. ‘

இதை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம். ஆனால் அந்த மூன்றாவது காரணம் தான் மார்க்ஸின் மொழிதலில் சுவாரஸ்யமான ஒன்று . இந்து மதத்தைத் தாக்குகிற தீவிரத்துடனே கூட தன்னை மறந்து மார்க்ஸ் தந்திருக்கும் ஒப்புதல் வாக்கு மூலம் இது. கிறுஸ்தவமும் ,இசுலாமும் ‘மாற்று மதங்களை இழிவு செய்ததிலும், அரசதிகாரத்தின் துணையோடு மாற்று மதத்தவரை இரக்கமேயில்லாமல் கொன்று குவித்த ‘வை தாம் என்று மார்க்ஸ் ஒப்புக் கொள்வது பாராட்டத்தக்க உண்மை. மார்க்ஸ் ஒரு வழியாக உண்மையை முன்மொழிந்ததற்கு அவரைப் பாராட்டத்தான் வேண்டும்.

கிறுஸ்தவமும், இசுலாமும் மிஷனரி மதங்கள் என்பதால் அவை பண்ணிய அட்டூழியத்தைப் பொறுத்தருள வேண்டும். ஆனால் இந்து மதம் மிஷனரி மதம் அல்ல என்பதால் , இஸ்லாமுக்கும் கிறுஸ்துவத்திற்கும் வ்ழை விட்டு இந்து மதம் விலகி நிற்க வேண்டும் என்பது மார்க்ஸ் போன்றோரின் கூற்று. மிஷனர் மதம் என்பது என்ன ? உலகில் மற்ற நம்பிக்கையினரிடையே ‘நற்செய்தி ‘யைக் கொண்டு போகிற தெய்வீகக் கடமை என்பது இதன் பொருள். இந்தப் பரப்புதலுக்கான வழிமுறைகளின் நேர்மை பற்றி இந்த மதங்கள் கவலைப் பட்டதில்லை என்பது மார்க்ஸ் ஒப்புக்கொள்வது தான். ஆனால் இப்படி , பரப்புதலை முக்கிய நோக்கமாய்க் கொண்டு செயல்படும் ஒரு மதத்துடன் , சாதகமாகவோ பாதகமாகவோ உறவு கொள்கிற இன்னொரு மதம் எப்படி தன்னை அடையாளப் படுத்திக் கொள்ள முடியும் ? இந்து மதத்தின் முன்னால் கடந்த 1000 வருடங்களாக நிற்கும் கேள்வி இது. சாதியம் என்பது மட்டுமே இந்து மதத்தின் அடையாளம் அதனால் இந்துவாய் மதமாற்றம் செய்வது இந்துக்களுக்குக் கூடவில்லை என்று சொல்லும் மார்க்ஸ் அடுத்த பத்தியிலேயே சொல்வது இது. ‘ இந்து மதம் பரப்புதற்குரிய மதமில்லை என்ற போதிலும் பல்வேறு இனக்குழு மக்கள் இந்து மதத்திற்குள் கொண்டு வரப்பட்டு சாதியப் படி நிலையில் இருத்தப்பட்டது ‘ என்று சொல்கிறார். ஆதாரம் இதற்கும் இல்லை. இந்திய இலக்கியத்தில் சாதியம் பேசப்படுவதன் கூடவே அதன் எதிர்க்குரல்களும் பதிவு செய்யப்பட்டு வந்திருக்கின்றன. மதம் என்ற ஓர் அமைப்பின் ஐரோப்பியப் புரிதல்கள் இந்தியாவில் நுழைந்ததே சமீபத்திய வரலாறு தான். இன்று இந்து மதமும் அப்படி உருக்கொள்வது அவசியமாகிறது. இந்துமதம் என்பது பெயரால் அப்படி சுட்டப் படாவிட்டாலும் அதன் வேர்கள் காலங்காலமாக இருந்துஅருபவை என்பதை அறிந்த எவரும் இந்து என்ற பெயர் சமீபத்தில் ஏற்பட்டதைக் காரணம் காட்டி அதைக் கண்டனம் செய்ய முடியாது. சாதியம் என்பது சமூகத்தைக் கட்டமைக்கும் ஒரு செயல். மதம் என்பது சமூகக் கட்டமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஒரு சூழலில், இந்து மதத்தின் அங்கமாய் இது ஆகிப் போனதும் அது பற்றிய விமர்சனங்கள் எழுந்தவுடன் , நகர்மயமாதலுடன் இணைந்து அது தன்னைப் புனரமைத்துக் கொள்ள முயன்றதும் வரலாறு. இந்த வரலாற்றை ஒரே வரியில் முடித்து விடுகிறார் மார்க்ஸ். இதனால் பெளத்தமும், சமணமும் கூட முழுக்க சாதியத்தைத் துறக்க முடியவில்லை. இதனால் தான் இஸ்லாமும், கிறுஸ்துவமும் இந்தியாவில் சாதியத்தைத் துறக்க முடியவில்லை. சமூகப் படி நிலைகளில் இயங்கிய ஒரு சமூகத்தில் மதமாற்றம் மட்டும் சாதியத்தைத் தகர்த்து விட முடியாது என்பது பால பாடம்.

*********

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation