இந்த வாரம் இப்படி- பிப்ரவரி 2, 2003

This entry is part of 37 in the series 20030202_Issue

மஞ்சுளா நவநீதன்


***

கொலம்பியா வெடிப்பு – கல்பனா சாவ்லா

ஆகாயவெளி ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு அங்கிருப்பவர்களுக்கான உபகரணங்கள் மற்றும் உணவை அளித்துவிட்டு திரும்பி வரும்போது, டெக்சாஸ் மானிலம் மீது கொலம்பியா விண்கப்பல் சிதறியிருக்கிறது. உயிரிழந்த எழுவரில் ஒருவர் இஸ்ரேலியர். ஒருவர் இந்தியர். கல்பனா சாவ்லா டாக்டர் பட்டம் பெற்றவர். கர்னாலில் படித்து நாசாவில் பணிபுரியும் அளவு உயர்ந்தவர். தானியங்கி இயந்திரங்களைச் சிறப்பாக கையாளும் பயிற்சி பெற்றவர். ஏற்கனவே விண்வெளிக்கப்பல்களில் பயணம் செய்து அனுபவம் பெற்றவர். இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தவர். கர்னால் ஊரே இவருக்காக சோகம் காத்தது. அனுதாபங்கள். இவருடைய முன்மாதிரி பல இந்தியர்களுக்குத் தூண்டுகோல் ஆகியுள்ளது என்பது செய்தி.

***

பரிதி இளம்வழுதி சிறை

தமிழ் நாட்டுச் சட்டசபையின் வீரதீர சாகச நாடகங்களின் தொடர்ச்சியில் இன்னொரு அங்கம். நமக்குத் தகுதியான ஆள்கள் தான் நமக்கு பிரதிநிதியாக வருவார்கள். எந்தவித வெட்கமும் இல்லாமல் நடந்த குதிரை வியாபாரத்தில் பிளவுண்ட த மா க, பா ம க வை முன்னிறுத்தி ஜெயலலிதா கட்சியினர் காட்டும் அலங்கோலம் இது.

நம்முடைய ஜனநாயகத்தை மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்கிற ஜெயலலிதா போன்றவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.

****

சாத்தான் குளம் இடைத் தேர்தல் : காங்கிரசுக்கு என் ஓட்டு

கருணாநிதி சாத்தான் குளம் இடைத்தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார். ஏன் என்று தெரியவில்லை. காங்கிரசுக்கு ஆதரவு அளித்தால் மத்தியில் பா ஜ க கோபித்துக் கொள்ளும். உள்ளூர் பா ஜ கவிற்கு இருக்கிற நூற்றுச் சொச்சம் வாக்குகள் எப்படியும் அ தி மு க-விற்குத்தான் விழும் என்ற விவேகத்தில் எழுந்த முடிவு போலும் இது.

இடைத்தேர்தல் என்ற பெயரில் எல்லா அமைச்சர்களும் கூடாரமடிப்பதும், அனல் பறக்க வெட்டிப் பேச்சுப் பேசுவதும், பலப் பரீட்சை என்ற பெயரில் வீரம் காட்டுவதும், ஆளும் கட்சி தோற்றால் ஆளும் கட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருவதும், ஆளும் கட்சி வென்றால் ஊழல் என்று எதிர்க்கட்சிகள் கூச்சலிடுவதும் எந்த விதப் பயனுமற்ற ஒரு காரியம்.

முன்னால் எந்தக் கட்சி வென்றதோ அதன் பிரதி நிதியை சத்தம் போடாமல் சட்ட சபை உறுப்பினர் ஆக்கிவிட்டால் செலவும் மிச்சம். இடையில் உறுப்பினர் கட்சி மாறியிருந்தாலோ அல்லது, சுயேட்சை வெற்றி பெற்ற இடம் காலியானாலோ, வெற்றி பெற்றவருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் சட்டசபை உறுப்பினர் ஆகும் நடைமுறையினைச் சட்டபூர்வமாய் ஆக்கலாம்.

***

பங்களாதேஷ் குடிமக்களை இந்தியா திருப்பி அனுப்ப முயற்சி

பங்களாதேஷ் முஸ்லீம்களை இந்தியா திருப்பி அனுப்ப முயற்சி செய்கிறது. இதற்கு பங்களாதேஷ் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. அவர்கள் எங்கள் குடிமகன்களே அல்ல, என்பது முதல் இது முஸ்லீம் எதிர்ப்பு முயற்சி என்பது வரையில் பலவிதமாய் வாதங்கள் எழுந்துள்ளன. பங்களாதேஷ் குடிமக்கள் இந்தியாவிற்குள் வந்து வாழ்வதை பங்களாதேஷ் அரசாங்கம் மறுத்து வருகிறது.

முன்பு பாகிஸ்தானியர்கள் எல்லைதாண்டி வந்தபோது கொல்லப்பட்ட சமயம் பாகிஸ்தான் அரசு இவர்கள் எங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று சொன்னதும் நினைவிற்கு வருகிறது.

பங்களாதேஷ் குடிமக்கள் இந்தியாவில் இருந்தால் அவர்களை திரும்ப அனுமதிப்பது தான் முறை. எந்தக் காரணத்திற்காக இந்த மக்கள் பங்களாதேஷிலிருந்து இங்கு வந்தார்களோ, இன்று பங்களாதேஷில் அந்தப் பிரசினை இல்லை. இவர்கள் ஊடுருவலால் ஏற்கனவே அஸ்ஸாமில் பெரும் பிரசினை முளைத்ததுண்டு.

இப்போது அரசாங்கமும் , பங்களா தேஷ் ராணுவமும் சேர்ந்தே இந்தச் செயலைச் செய்கிறார்கள். பாகிஸ்தான் காஷ்மீரில் செய்து கொண்டிருப்பதை பங்களாதேஷ் எல்லைப் புறத்திலும் செய்வது இவர்கள் நோக்கமாக இருக்கலாம். பங்களா தேஷ், பாகிஸ்தான் சமீபத்தில் உறவு பேணத் தொடங்கியிருப்பதன் தொடர்ச்சியாய் இது நடக்கிறது போலும்.

இது பற்றிய எச்சரிக்கை தேவை.

***

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

மஞ்சுளா நவநீதன்