மாயாவதியைத் திட்டுவது ஏன் ?

This entry is part [part not set] of 30 in the series 20030125_Issue

விவேக் குமார்


மாயாவதியின் பிறந்தநாள் விழாவிற்காக ஊடகங்களும், சமூகத்தின் சில பிரிவினரும் மாயாவதியின் மீது வெறுப்பைக் கொட்டுவது போலித்தனம் , கட்சி அரசியல். சமூகத்தில் மேலாண்மை கொண்ட குழுக்களின் உணர்வு தான் இப்படிப் பிரதிபலிக்கிறது. தலித்கள் இந்த விழாவினால் பெற்ற மகிழ்ச்சியையும், உணர்வையும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வினால் பெற்ற வலிமையையும் இவர்கள் காணத் தவறி விட்டார்கள்.

மாயவதி போல் தலித் பெண்கள் கழுத்தைச் சுற்றி துப்பட்டா அணிந்து , மாயாவதி போல் தானும் ஒரு நாள் வருவேன் என்று பெருமிதம் கொண்ட நிகழ்ச்சிகளைக் காண மறுத்துவிட்டார்கள். மேல்பட்டப் படிப்பு முடித்த ஒரு தலித் இளைஞன் இது பற்றி சொன்னான் : ‘ டாகுர்களும், பிராமணர்களும் இதை விட பெரிய விருந்துகளை ஏற்பாடு செய்ததை நாங்கள் பார்த்திருக்கிறோம். அந்த மினுமினுக்கும் உலகிற்குள் எங்களால் நுழையக் கூட முடியாது. ஆனல் பஹன்ஜி எங்களை இந்த விழாவில் பகுஜனங்களுடன் சமமாய்ப் பங்கேற்கச் செய்ததன் மூலம் பெருமைப் படுத்தியிருக்கிறார்.

‘ 47 வயது சிறுமியின் பிறந்தநாள் கொண்டாட்டம் ‘ , ‘ மாயா மேடத்தின் திருவிழா ‘ என்றெல்லாம் சகட்டுமேனிக்குத் திட்டி தலித் தலைவியின் மீது வெறுப்பைக் கொட்டினார்கள். தொலைக்காட்சி நிலையங்கள் இந்த நிகழ்வைப் பற்றி ஒளிபரப்பி விதம் வியப்பளித்தது. நிருபர்கள் எல்லோரும் கருத்துச் சொன்னார்களே தவிர செய்தியைச் சொல்லவில்லை. ஒரு தலித்தைக் கூட பேட்டி காணவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு ஊழியனுடன் கூடப் பேசவில்லை. இவர்கள் செய்தி வாசிப்பின் மீது கொப்பளித்த கிண்டல், இதை தலித்துகள் எப்படிப் பார்க்கிறார்கள், என்ன குறியீடு இது என்று காண மறுத்த அறியாமையில் விளைந்தது.

தலித் நிகழ்வைத் தங்களுடைய சிம்மாசனத்தில் இருந்து எட்டிப் பார்த்த ஒரு மேலாண்மையே இதில் தெரிந்தது. கிராம்சி சொன்ன ‘ மாற்று மேலாண்மை ‘ (alternative hegemony ‘) , பாவ்லோ ஃப்ரையர் கூறிய ‘ ஒடுக்கப் பட்டோரின் கூற்றுகள் ‘ (Pedagogy of the oppressed) பற்றி இவர்கள் பாடம் படிக்க வேண்டும். தலித்கள் பெறும் வளர்ச்சியில் ‘உணர்வு பெறுதல் ‘ , சமூக ஒருங்கிணைப்புக்கு முன்னால் முனைப்புப் பெறுகிறது. இந்த உணர்வு பெறுதலைப் புரிந்து கொள்ளாதவர்கள் தம்முடைய கதகதப்பான அறையில் இருந்து கதைக்கத் தான் இது பயன் படும்.

அரசு பணத்தைச் சொந்த உபயோகத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என்பது உண்மை தான். ஆனால் இந்தியாவில் அரசு பணம் மேல்தட்டினரால் சுய தம்பட்டத்திற்காகப் பயன்படுத்தப் படுவது இப்போதும் கூடத் தொடர்ந்து நடக்கும் ஒன்று தான். கும்பமேளாவிற்கு அரசு பணம் 100 கோடிக்கு மேல் செலவவாகிறது. ஏன் என்பது கேள்வி. மக்களின் மத உணர்விற்காக என்று பதில் வரும். அழுக்குத் தண்ணீரில் மக்கள் குளிக்க கோடிக்கணக்கில் செலவு செய்யலாம் என்றால், தலித் மக்கள் உணர்வு பெறும் ஒரு கொண்டாட்டத்திற்கு ஏன் சில லட்சங்கள் செலவு செய்யக் கூடாது ?

மேற்சொன்ன மேளா போன்ற மதக் கொண்டாட்டங்களுக்கு வருடம் பூராவும் அரசு செய்யும் செலவு எவருக்கும் உதவுவதில்லை. இவற்றுடன் ஒப்பிடும் போது மாயாவதி செய்த செலவு மிகச் சொற்பமே. சமூகத்துக்கும் லட்சக் கணக்கான தலித்துகளுக்கும் இதனால் வரும் பயன் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

தலித்துகளுக்கு மாயாவதியின் பிறந்தநாள் கொண்டாட்டம் முழுக்க முழுக்க ஒரு புதிய அனுபவம். வரலாற்றில் முதன் முறையாய் அவர்கள் வியக்கும் ஒரு படிமம் கொண்டாடப் பட்டது. இது வரை ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தி, சியாம் பிரசாத் முகர்ஜி, தீன் தயாள் உபாத்யாயா போன்றோரின் பிறந்தநாள் கொண்டாடப் பட்டுத் தான் அவர்கள் கண்டிருக்கிறார்கள். நேருவின் பிறந்த நாள் ‘குழந்தைகள் தினம் ‘ என்று கொண்டாடப் படுகிறது. இப்படிப் பட்டவர்களின் விழாக்கள் மட்டும் கொண்டாடப் படுவதன் மூலம் இவர்கள் தான் இந்திய சமூக வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் என்ற ஒரு பிரமை உருவாக்கப் படுகிறது. தலித்துகளின் பங்களிப்பு கண்டு கொள்ளப் படுவதில்லை. இதனால் தலித்துகளின் கலாசார மூலதனம் அபகரிக்கப் படுகிறது. தம்முடைய வகுப்பிலிருந்து பங்களிப்பு அளித்தவர்களைப் பற்றி அவர்களுக்குச் சொல்லிகொள்ள ஏதுமில்லாதது போலாகிறது. பகுஜன்சமாஜ் கட்சி அதன் உருவாக்கத்திலிருந்து , தலித்துகளின் தலைவர்களை ஸ்தாபித்து காந்தி , நேருவிற்கு இணையான ஆளுமைகளாய் இனங்கண்டு வந்திருக்கிறது. ஜோதிபா ஃபுலே, நாராயண குரு, ஈ வெ ரா பெரியார், ஷாகுஜி மகராஜ், பாபசாஹேப் அம்பேத்கார் போன்றவர்களுக்கு விழா எடுத்திருக்கிறது. மாயாவதியின் பிறந்த நாள் கொண்டாட்டம் இந்த விதத்தில் ஒரு முக்கியமான அடுத்த படிக்கல்லாகும். இந்த நாள் ‘சுயமரியாதை தினம் ‘ (ஸ்வாபிமான் திவஸ்) என்று அழைக்கப் பட்டது மிகவும் பொருத்தமே.

பகுஜன் சமாஜ் கட்சியின் நிதிச் சேகரிப்பு இந்த பிறந்த நாள் விழாவின் இன்னொரு முக்கிய அம்சம். மாயாவதின் பிறந்த நாளின் போது நிதி சேகரிப்பை பகுஜன் சமாஜ் கட்சி 1999-ம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து செய்து வந்திருக்கிறது. 1999-ல் கட்சி 1.2 கோடி சேகரித்தது. 2002-ல் இந்தத் தொகை 4.4 கோடியாயிற்று. மக்களின் இயக்கத்திற்கு மக்களே நிதி வழங்க வேண்டும் என்ற கொள்கையிலிருந்து இது உருவாகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் கான்ஸிராம் இதை தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார். மேல் தட்டு மக்களிடமிருந்து உதவி பெறலாகாது என்று கூட்டத்தில் சொல்கிறார்.

இந்தச் சந்தர்ப்பத்தில், கான்ஸி ராம் ‘ஒரு நோட்டு ஒரு வோட்டு ‘ என்ற கோஷத்தைப் பரப்பினார். கூட்டங்கள் பேசவும் பணம் கேட்டு வாங்கினார். தன் 52-ம் பிறந்த நாளின் போது 52,000 கட்டணம் என்று நியமித்து வாங்கினார். உத்திரப் பிரதேசத்தில் கான்ஷி ராம் தொடர்ந்து செயல்படவில்லை. ஆனால் அவருடைய முன்முயற்சியின் பயன் மாயாவதிக்குக் கிட்டுகிரது. இபோது அது சர்வஜனக் கட்சியாகியுள்ளது. நான்கு முறை ஆட்சிக்கு வந்துள்ளது. – சமாவாதி கட்சியின் ஆதரவில் ஒரு முறை, பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவில் மூன்று முறை.

மக்கள் மூலமாக பணம் சேகரிப்பது என்ற பகுஜன் சமாஜ் கட்சியின் செயல்பாடு, மற்ற கட்சிகளின் பண வசூல் முறையுடன் ஒப்பிடும்போது முக்கியத்துவம் பெறுகிறது. பிற கட்சிகள் பெரும் வர்த்தக நிறுவனங்களிடம் பணம் சோக்ரிப்பதால், அவர்களுக்கே ஆதரவாய் இருப்பார்கள். பகுஜன் சமாஜ் கட்சி பெரிதும் தனிமனிதர்கள், உழைப்பாளிகளிடம் பணம் பெறுகிறது. கான்ஷி ராம் கூறினார் : ‘ என் வாழ்க்கை முடிவதன் முன்பே, எல்லாக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி மக்களின் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி முன்னுக்கு நிற்க வேண்டும். ‘

இந்த மேல்தட்டு ஆட்களின் மனநிலையை, மாயாவதியின் பிறந்த நாள் கொண்டாட்டம் தாக்கியிருக்கிறது. இதனாலேயே இந்த விழா என்ன சாதிக்க வேண்டும் என்று செய்யப்பட்டதோ அதைச் சாதித்து விட்டது என்று எண்ணுகிறேன். தலித் ஒற்றுமைக் குரலை ஒலித்து, ஒடுக்குவோரைக் காயப்படுத்தியிருக்கிறது இந்த விழா. மேல் தட்டு ஆட்கள் ஊழல் பண்ணிய பல கோடிகளுடன் ஒப்பிடும்போது, ஒரு சில லட்சங்கள் செலவில் தலித் மக்களை உணர்வூட்ட இந்த விழா பயன் படிருக்கும் என்றால் அதனால் நன்மையே.

(பயனீயர் பத்திரிக்கையிலிருந்து)

Series Navigation

விவேக் குமார்

விவேக் குமார்