இந்த வாரம் இப்படி (டிஸம்பர் 30, 2002) விவசாய வருமானத்துக்கு வருமான வரி, உலக நீதிமன்றம்

This entry is part of 30 in the series 20021230_Issue

சின்னக்கருப்பன்


விவசாய வருமானத்துக்கு வருமான வரி

கேல்கர் ஆலோசனைகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் 1 லட்சத்துக்கு மேல் வருமானம் வந்தால்தான் அவர்கள் வருமான வரி கட்டவேண்டும் என்ற விஷயத்தோடு, விவசாய வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும் என்ற விஷயமும் வெளிவந்துள்ளது.

விவசாய வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும் என்பதை அரசில் இருக்கும் அஜித் சிங் போன்றவர்களே எதிர்க்கிறார்கள். பாஜக இதனை வெளிப்படையாக எதிர்க்கிறது.

இது இன்னொரு மறைமுக ஐ.எம்.எஃப் ஆலோசனையோ என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் விவசாயிகளில் யாருமே வருமான வரி கட்டத்தேவையில்லை. ஆனால், 1 லட்சத்துக்கு மேல் வருமானம் இருக்கும்போது வரி கட்ட வேண்டும் என்று சொல்வது பணக்கார விவசாயிகளை மட்டுமே பாதிக்கும் என்று சொல்லலாம். ஆனால், இது வருமான வரி வசூலிக்கிறேன் என்று வரும் அரசாங்க ஊழியர்களின் அட்டகாசம் அதிகமாக ஆகி, சாதாரண விவசாயியையும் பயமுறுத்த இது உபயோகப்படும் என்றே கருதுகிறேன்.

இன்னும் விவசாயம் நவீனப்பட்டு, பலர் விவசாயத்திலிருந்து வெளியேறி பல தொழில்நுட்பவியளார்களாக ஆனபின்னர், சொல்லப்போனால், நிலங்கள் சிறுபண்ணைகளிலிருந்து பெரும் பண்ணைகளாக ஆனபின்னர் இந்த சட்டம் வந்தால் சரியானதாக இருக்கும். இன்றைய நிலையில் இது அரசாங்க அலுவலர்கள் இன்னும் விவசாயிகளை துன்புறுத்த உபகரணமாகத்தான் இருக்கும்.

***

அமெரிக்காவும் இந்தியாவும் தங்கள் போர்வீரர்களை அகில உலக நீதிமன்றத்துக்கு அனுப்பப்போவதில்லை என்று ஒப்பந்தம் செய்திருக்கின்றன.

இது பார்ப்பதற்கு தவறானதாகத்தான் தோன்றும். ஆனால், இது ஒரு முக்கியமான காரணத்திற்காகவே அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. பல நாடுகளில் அமெரிக்காவின் படை நிறுத்தப்பட்டிருக்கிறது. உலகத்தின் வேறெந்த நாட்டையும்விட அமெரிக்காவின் படைகளே உலகெங்கும் பல நாடுகளில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் கொரியாவில் அமெரிக்கப்போர்வீரர்கள் அத்துமீறி மூன்று சிறுமிகளை கொன்றுவிட்டிருக்கிறார்கள். தென் கொரியாவில் இருக்கும் அமெரிக்கப்போர்வீரர்கள் பாரபட்சமான ஒப்பந்தத்தால் மேலாண்மை செய்யப்படுவதால், அவர்கள் கொரியாவின் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவில்லை. உலக நீதிமன்ற ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டால், அமெரிக்காவின் போர்வீரர்களை மற்ற நாட்டினர் உலக நீதிமன்றத்துக்கு இழுத்துவந்து அமெரிக்கா செய்யும் அத்துமீறல்களையும், பொதுமக்களைக் கொல்வதையும் போர்க்குற்றங்களாக பரிசீலித்து தண்டனை வழங்கலாம் என அமெரிக்கா அஞ்சுகிறது. அதனால், அமெரிக்காவின் அரசியல்வாதிகள் முக்கியமாக குடியரசுக்கட்சியினர் இது அமெரிக்காவின் இறையாண்மைக்கு ஊறு என்று வாதிடுகிறார்கள்.

ஆனால், இந்தியா ஏன் அதுபோன்றதொரு ஒப்பந்தத்தை கையெழுத்திடக் கூடாது என்று கேட்கலாம். முதலாவது மிகக்குறிப்பிட்ட காலங்களிலேயே இந்தியப்படை இந்திய எல்லையைக் கடந்திருக்கிறது. ஆனால், இந்தியாவின் படைகள் உலகெங்கும் ஐ.நாவுக்கு உதவ சென்றிருக்கின்றன. இந்தப் படைகள் அமெரிக்க படைகளும் ஐரோப்பிய படைகளும் செய்யமுடியாத காரியங்களையும் வெற்றிகரமாக முடித்து பல இடங்களில், ஸோமாலியா, சையரா லியோன் உட்பட, பல நாடுகளில் அமைதியை நிலைநாட்டி இருக்கின்றன. ஆனால், இன்றைய சூழ்நிலையில் மூன்றாம் உலக நாடுகள், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளால் பாரபட்சமாகவே நடத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக செயரா லியோனில் வைரங்களை கொள்ளையிட அங்கு உள்நாட்டுப்போரை உருவாக்கியது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளுமே. ஆனால், அமைதி நிலைநாட்ட உயிரைப் பணயம் வைப்பதோ மூன்றாம் உலக நாடுகளின் போர் வீரர்கள்.

என்னதான் மனித உரிமை பற்றிய ஆயிரம் வார்த்தைகளைப் பேசினாலும் போர் வீரர்கள் போர்வீரர்களே. எல்லையற்ற மன அழுத்தத்தில் இருக்கும் போர்வீரர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவும், அச்சத்தாலும், ஊர், மொழி தெரியாத ஊரில் யார் எவரென்ற உணர்வின்றி பொதுமக்களை கொன்றுவிடுவதோ நடக்க முடியாததல்ல. இப்படிப்பட்ட பொதுமக்களின் கொலைகளுக்கு, அந்த நாடுகளை, அந்த பிரதேசங்களை வன்முறைப் பிரதேசங்களாக, சட்டம் ஒழுங்கு அற்ற பிரதேசங்களாக ஆக்கிய அந்த மக்கள் தலைவர்களும், அந்த தலைவர்களின் பின்னே சென்ற வன்முறையாளர்களுமே முழுப்பொறுப்பு. ஆனால், இன்று இந்த ஒப்பந்தத்தின் மூலம், உதவி செய்யபோய், அவமானப்படும் நிலையை இந்த மூன்றாம் உலக நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் அடைகின்றன. ஏற்கெனவே பெல்ஜியத்தில், ர்வாண்டா நாட்டின் கன்யாஸ்திரிகள்,அங்கு இனப்படுகொலையில் பங்கு பெற்றதற்காக தண்டனை அடைந்தார்கள். எப்படி அந்த நாட்டு மக்களை பெல்ஜியம் தண்டிக்க உரிமை உண்டு என்பது முக்கியக்கேள்வி. இத்தனைக்கும் பெரும்பாலான ஆப்பிரிக்க இனக்கலவரங்களுக்கும் போர்களுக்கும் பெல்ஜியம் போன்ற நாடுகளின் முந்தைய காலனியாதிக்கமே காரணம் என்பது வெளிப்படை. இன்று அந்த நாட்டு மக்களைக் கட்டுப்படுத்த ஐரோப்பியர்கள் கொண்டு வரும் புது காலனியாதிக்க உபகரணம் இந்த உலகம் தழுவிய நீதிமன்றம் என்பது வெளிப்படை. இப்படிப்பட்ட நீதிகள் எப்போதுமே பாரபட்சமானவைதான் என்பது, இன்னும் பங்களாதேஷில் வெறியாட்டம் ஆடிய பாகிஸ்தானிய போர்வீரர்களும், தளபதிகளும் தண்டிக்கப்படவே இல்லை என்பதில் இருந்து தெளிவாக உணரலாம்.

இந்த ஒப்பந்தத்தில் ஆசியாவின் ஒரே முழு ஜனநாயக நாடான இந்தியா கலந்து கொள்ளாமல் இருப்பதுதான் சரியான விஷயம்.

***

karuppanchinna@yahoo.com

Series Navigation