நன்றி

This entry is part of 23 in the series 20021221_Issue

பாரி பூபாலன்


அதிகாலையில் வீட்டு வாசலில் கிடந்த பேப்பரை எடுத்து வந்தேன். பேப்பருடன் கூடவே ஒரு வாழ்த்து மடல் இணைந்திருந்தது. பேப்பர் போடுபவர் கையெழுத்திட்டிருந்தார். சந்தோஷமாக இருந்தது. விடுமுறை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என மகிழ்வாய்க் கொண்டாட அவரிடமிருந்து வாழ்த்து. ஆனால் மடலை பிரித்துப் பார்க்கையில் கூடவே இன்னொரு உறையும், அவரது முகவரியுடன். நாம் சுலபமாக திருப்பி அனுப்பவதற்கு வசதியாய் அவரே தனது முகவரியை எழுதியிருந்தார். வாழ்த்து அட்டையில் வாழ்த்துக்கள் கூறும் அச்சடிக்கப்பட்ட வாசகங்களுடன், கூடவே நுணுக்கமான எழுத்துக்களில் ‘நன்றி கொடுங்கள் (Give Thanks) ‘ என எழுதப்பட்டிருந்தது.

சிரிப்பாகத்தான் இருந்தது, இப்படி வினோதமான வசூல் முறையை எண்ணிப்பார்த்தால். என்ன இவர் இலவசமாகத்தான் சேவை செய்கிறாரா ? ‘நன்றி கொடுப்பதற்கு ? ‘ நினைத்துப் பார்த்தேன். சென்ற வருடம் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து ‘நன்றி கொடுக்காமல் ‘ இருந்ததன் விளைவு என்ன என்று. இரண்டு மாதங்களுக்கு குறையாமல் என் வீட்டு பேப்பர் ரோட்டோரத்தில் வீசி எறியப்பட்டிருந்தது. அதுவும் மழை பெய்யும் நாட்களில் மழையில் நனைந்து, பாதி பிய்ந்து மிகவும் பரிதாபமான நிலையுடன். அந்த நிலை கண்டிப்பாக வேண்டாம் என்ற எண்ணத்துடன் உடனடியாக 20 டாலருக்கு செக் எழுதி வந்திருந்த உறையில் வைத்து விட்டேன், அன்றைக்கே தபாலில் அனுப்பிவிட ஏதுவாக.

பேப்பர் போடுபவரக்கு நல்ல வருமானம்தான் என்று தோன்றியது. உள்ளபடியே கொடுப்பவர்களிடமிருந்து அன்பளிப்புகள் வந்தாலும், என்னைப் போன்ற ஏனோதானோ காரர்களிடமிருந்தும் அன்பளிப்பு வரும்படி செய்யத்தக்க அளவில் அவரால் காரியங்கள் செய்ய முடிகிறது. இரண்டு நாள் பேப்பர் மழையில் நனைய வைத்தால் தன்னுடைய அருமை வாடிக்கையாளர்களுக்கு புரிந்து விடும் என்கிற வினோத உண்மையை உபயோகித்து பலனடைந்து கொள்கிறார்.

பார்க்கப் போனால் பேப்பர் காரர் மட்டுமல்ல. இதேபோல ஏகப்பட்டவர்கள். குழந்தையை பார்த்துக் கொள்பவர், தபால்காரர், கார் நிறுத்தும் இடத்தைப் பாராமரிப்பவர், கட்டிட மேற்பார்வையாளர், ஹோட்டலில் உணவு பரிமாறுபவர், முடி வெட்டுபவர் என நமக்கு உதவி புரிபவர்கள் ஏகப்பட்டவர்கள் இந்த அன்பளிப்பு எதிர்பார்க்கும் வகையில். பெரும் பெரும் பத்திரிக்கைகளில் கூட, இந்த ஆண்டு, விலைவாசியைப் பொருத்து இவர்கள் எவ்வளவு எதிர்பார்க்கிறார்கள் என்று. அந்த அளவில் நாம் நமது நன்றியை காட்ட வேண்டியதாய் இருக்கிறது.

‘தங்களுக்கு பணி புரிந்ததில் எனக்கு மகிழ்ச்சி. எனது பணியால், இந்த வருடம் தாங்கள் திருப்தி அடைந்திருப்பீர்கள் என நம்புகிறேன் ‘ என்று கூறி, புரிந்த பணியால் அடைந்த திருப்தியால் வெகுமதி எதிர்பார்க்கும் காலம் இதுவல்ல என்றே தோன்றியது. நான் செய்யும் பணியை கடனே என்று செய்தாலும், நீ கொடுக்க வேண்டிய வெகுமதியை கொடுத்தே ஆக வேண்டும் என கூறுவதாகத்தான் இருக்கிறது. எத்தனையோ முறை ஹோட்டலில் சாப்பிடும் போது பணியாளர் முகத்தை கடுகடுப்பாய் வைத்துக் கொண்டு பணி புரிந்தாலும் வெகுமதி கட்டாயமாய் வைத்துவிட்டு வர வேண்டியிருந்தது – சூழ்நிலையின் கட்டாயமாய். அடுத்த முறை சாப்பிடச் செல்லும் போது, அவர் எதுவும் ஏடாகூடமாய் செய்யாமல் இருக்க வேண்டி.

இரயிலில் செல்லும் போதும், கூட்டத்தில் நடந்து செல்லும் போதும், திடாரென ‘மன்னியுங்கள் ‘ என்று குரல் கேட்கும் பின்னாலிருந்து. பொதுவாக இது வழிவிடச் சொல்லும் காரணமாய் இருக்கும். ஆனால் சொல்லும் தொனி, மன்னிப்பு கேட்பதாக இருக்காது. ‘வழியிலிருந்து ஒதுங்கு மானிடா! இல்லையேல் மரியாதை கொடுக்க மாட்டேன் ‘ என ஓர் ஆணையாக, ஒரு வம்பு ஏற்படுத்தக் கூடிய தொனியாக அது இருக்கும். எதற்கு தொல்லை என்று ஒதுங்கிச் செல்ல வேண்டியிருக்கும், மன்னிப்பு கேட்ட கோரிக்கையை நிறைவு செய்வதாய். அது போலவே, எதற்கு தொல்லை என்றே, நன்றியை கொடுத்து விட வேண்டியிருக்கிறது கட்டாயமாய். மேலும், இந்த நன்றி, ஒரு உத்தரவாதத்தைக் கொடுப்பதாய் இருந்தது – இனி வரும் நாட்களில் பேப்பர் முழுமையாய் வீட்டுக்குள் வந்து சேரும் என்பதற்கு.

***

pariboopalan@hotmail.com

Series Navigation