இந்த வாரம் இப்படி – நவம்பர் 24 2002

This entry is part of 35 in the series 20021124_Issue

மஞ்சுளா நவநீதன்


போக்குவரத்துத் துறை – தனியார்மயம்

ஜெயலலிதாவின் தயவால் போக்குவரத்துத் துறை தனியார் மயமாகிறது. ஒரு புறம் வரவேற்கவேண்டும் என்று எண்ணினாலும் , இன்னொருபுறம் கட்டண உயர்வு மற்றும் வேலை வாய்ப்பு இழப்பு அச்சங்கள் நிலவுகின்றன. இதில் சில நடைமுறைகளைக் கையாளலாம்.

ஒன்று : வேலை வாய்ப்பு இழக்கும் ஓட்டுனர்கள் நடத்துனர்களுக்கே வழித்தட உரிமையை வழங்கி அவர்களை தொழில் முயலுனர்களாய்ச் செய்யலாம். இவர்களுக்குப் பண உதவி தர வங்கிகள் முன்வரவேண்டும். சிறு தொழில் அபிவிருத்தி பெற இந்த நிபந்தனை உதவும்.

இரண்டு : தனியார்மயமாகும் போது, இப்போது லாபம் ஈட்டும் வழித்தடத்துடன் சேர்ந்து, நட்டத்தில் ஓடும் வழித்தடமும் எடுத்தால் தான் அனுமதி வழங்குவது என்று நடைமுறை கொண்டு வரவேண்டும். இது ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது என்று அறிகிறேன். வழித்தடங்களில் ஒரு பகுதி அரசிடமும் இருக்கும் என்பதால் , நியாயமான போட்டியும் ஏற்பட வாய்ப்புண்டு. இது மூலமாய்ப் பெறப்படும் தொகையைக் கொண்டு மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும். ஏழைகளுக்கு குறைக்கப் பட்ட ரேஷன் அரிசி மற்றும் பொருட்கள் மீண்டும் தொடர வேண்டும்.

******

வீரப்பனுக்குப் பணம் ?

ராஜ் குமாரை விடுவிக்க வீரப்பனுக்குப் பணம் கொடுக்கப் பட்டதா இல்லையா ? கருணாநிதிக்குப் பணம் கொடுக்கப் பட்டதா இல்லையா ? எஸ் எம் கிருஷ்ணா பதவி விலக வேண்டுமா இல்லையா ? முன்னாள் காவல் துறை டைரக்டர் சி தினகர் புத்தகம் எழுதியது சரியா இல்லையா என்று பல விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆனால் , முக்கியமான ஒன்றைப் பற்றி விவாதம் நடைபெறவில்லை. ரகசியப் பாதுகாப்புச் சட்டத்தின் முனை எதுவரையில் இருக்க வேண்டும் ? எப்படிப்பட்ட ரகசியங்கள் பாதுகாக்கப் படவேண்டும் ? ஏன் பாதுகாக்கப் படவேண்டும் ? என்ன நடைமுறை கொள்ள வேண்டும் ? இது பற்றி யாரும் விவாதிக்க வில்லை.

வீரப்பனுக்குப் பணம் கொடுக்கப் பட்டது என்பது ஊரறிந்த ரகசியம் என்று சொல்லலாம். ஆனால் , ராஜ்குமார் விடுவிக்கப் பட்டவுடன் முழுமுதல் விவரங்களுடன் தேதி வாரியாக உண்மையில் நடந்ததென்ன என்பது பற்றி ஓர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டியது அரசின் கடமையல்லவா ? இந்த விவகாரத்தில் என்ன ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டியுள்ளது ? ராணுவ ரகசியங்கள் தவிர வேறு எந்த ரகசியமும் பாதுகாக்கப் பட வேண்டியதல்ல என்பது தான் அரசின் நடைமுறையாய் இருக்க வேண்டும்.

********

சோனியாவின் கேள்வி

கிட்டத் தட்ட ஒரு வருடமாக ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் நின்றிருந்தது. இப்போது படிப்படியாக பாகிஸ்தானின் எல்லையிலிருந்து படைகள் திரும்பப் பெறப் பட்டுள்ளன ? என்ன காரணத்துக்காக படைகள் நிறுத்தப் பட்டன ? அப்படி படைகள் நிறுத்தப் பட்டதன் குறிக்கோள்கள் நிறைவேறியுள்ளனவா ? அரசாங்கம் இதற்கு செலவு செய்தது எவ்வளவு ? இப்படிப் படை நிறுத்தத்தின் போது வேறு அவசர நிலைப் போர் முயற்சி மேற்கொள்ளும் தேவை ஏற்பட்டால் எப்படி அரசு எதிர்கொண்டிருக்கும் ? இது பற்றியெல்லாம ஒரு விவரமான வெள்ளை அறிக்கையை அரசாங்கம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற சோனியாவின் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது.

**********

வாழ்க பாகிஸ்தான் ஜனநாயகம்..

பாகிஸ்தானின் ‘மக்கள் பிரதிநிதிகளின் ‘ அரசு ஏற்பட்டுள்ளது. மிக விசித்திரமான ஒரு விஷயம். தொங்கு பாராளுமன்றம் . ஆனால் ,தேர்தலில் பெரும்பான்மை இடங்கள் பெற்றது மதவாத கட்சிகள். ஆனால் ராணுவ ஆட்சிக்கு ஆதரவான கட்சியை பிரதமர் பதவியில் அமர்த்தியாக வேண்டும். என்னதான் ஜனநாயகம் என்றாலும் , தேர்தல்கள் என்றாலும் அன்றும் இன்றும் என்றும் பாகிஸ்தானின் ஆட்சி புரிவது ராணுவமே. இதை எப்படி அடைவது என்று யோசித்தார் சர்வாதிகாரி. தேர்தலுக்கு முன்பு நிறைவேற்றிய கட்சித் தாவல் தடைச் சட்டத்தை தள்ளிவைத்தார். குதிரை வியாபாரம் அமோகமாய் நடந்தது. சர்வாதிகாரியின் நிழல் அரசு, மக்கள் அரசு என்ற போர்வையில்.

***********

manjulanavaneedhan@yahoo.com

***

Series Navigation