சொல்லே வெடிகுண்டு : தேவை பொறுப்புணர்வு

This entry is part [part not set] of 35 in the series 20021022_Issue

மஞ்சுளா நவநீதன்


பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின் என்பது வள்ளுவர் வாக்கு. அது மிகவும் முக்கியமாக, ஆனால் கவனத்துடன் செயல்படுத்த வேண்டிய இடம் பத்திரிக்கை உலகம். நாளைய வரலாறு இன்றைய பத்திரிக்கை செய்தி என்பது உண்மைதான். ஆனால் நாளைய கலவரத்துக்கு இன்றைய பத்திரிக்கை காரணமாக இருக்கக்கூடாது.

இதை நான் சொல்லக்காரணம், சென்ற வாரம் நான் படித்த ஜ்ஊனியர் விகடன். அதில் இமாம் அலியின் கடைசிக் கடிதம் வெளியாகி இருக்கிறது. அது எந்த நபருக்கு எழுதப்பட்டது என்பது நல்லவேளையாக மறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதே கவனத்துடன் அதில் இருக்கும் இன்னும் சில வரிகளும் நீக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. ஜ்ஊனியர் விகடனில் எழுதப்பட்டுவிட்ட விஷயத்தை திண்ணையில் எழுதினால் அதிக ஆபத்து நிகழ்ந்துவிடப்போவதில்லை என்பதால் நான் இங்கே குறிப்பிடுகிறேன். குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த இது பற்றிய செய்திகட்டுரையில் இந்த கடிதம் சமாச்சாரமே இல்லை என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.

இமாம் அலி காபிர்களை கொல்லப்போவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் இடமும், இன்னும் பல இடங்களில் பல இளைஞர்களை தயார் படுத்தியிருப்பதாகச் சொல்லும் இடங்களும் நீக்கப்பட்டிருக்க வேண்டும்.

இது பல விதங்களில் தமிழ்நாட்டு மக்களைப் பாதிக்கும். ஜ்ஊனியர் விகடன் பட்டிதொட்டி எங்கும் விற்பனையாகும் செய்தி இதழ். அது ஆனந்த விகடன் என்ற மாபெரும் பத்திரிக்கை நிறுவனத்தின் ஒரு பகுதி. அதில் வெளியிடப்படும் ஒரு செய்திக்கு, மிகுந்த பாதிப்பு இருக்கும்.

ஏற்கெனவே இஸ்லாமிய தீவிரவாதிகள் செய்யும் விஷயங்கள் தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருக்கின்றன. அப்படி இருக்கும் நேரத்தில், சாதாரண இந்துக்கள் மனதில் அருகாமையில் இருக்கும் முஸ்லீம் குடும்பத்தை பற்றிய விஷவிதை ஒன்றை சர்வ சாதாரணமாக விதைத்துவிட்டுச் சென்றிருக்கிறது இந்தக்கட்டுரை.

பல விஷயங்கள் உண்மையாகவே இருக்கலாம். ஆனால் வெளியிடும் முன்னர், என்ன விஷயத்தை நாம் வெளியிடுகிறோம், இதனால் ஒரு சாதாரண இந்தியன் என்ன உணர்வு கொள்வான். ஒரு சாதாரண இந்து என்ன உணர்வு கொள்வான். ஒரு சாதாரண முஸ்லீம் என்ன உணர்வு கொள்வான் என்று சிந்தித்திருக்க வேண்டும். பதட்டமும், பதட்டத்துக்கான காரணமும், பயங்கரவாதத்தின் நிதர்சனமும் மிகுந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில், பத்திரிக்கையின் அக்கறை மிகவும் பெரியது. குஜராத் கலவரத்துக்குப் பின்னால், இரண்டு வெகுஜனப்பத்திரிக்கைகள் வெளியிட்டதில் பொய் செய்திகள் இருந்தன என்று பலர் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில், அப்படிப்பட்ட பொய்ச் செய்தி வெளியிடும் பத்திரிக்கைகள் மிகவும் அரிது. அதனாலேயே, ஒரு செய்தியை பொய் செய்தி என்று மக்களை ஒதுக்கச் சொல்லவும் முடியாது. கொஞ்சம் மிகைப் படுத்தி அவரவர் சார்பிற்குத் தக்க முக்கியத்துவத்தை ஏற்றி செய்தி வெளியிடுவார்களே தவிர பொய்ச்செய்திகள் அரிதானவை தான்.

இந்துத் தீவிரவாதத்தை இந்துக்கள் செய்தால், செய்தவர்கள் ‘உண்மையான இந்துக்கள் ‘ அல்ல என்று சொல்வதும், முஸ்லீம் தீவிரவாதத்தை முஸ்லீம்கள் செய்தால், செய்தவர்கள் ‘உண்மையான முஸ்லீம்கள் ‘ அல்லர் என்று சொல்வதும் இதனாலேயே.

எல்லா முஸ்லீம்கள் எல்லோரும் இப்படிப்பட்டவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்குவதனால் பயன் பெறுவது இந்துத் தீவிரவாதிகள் தான். அதனாலேயே, அவர்கள் முஸ்லீம் தீவிரவாதத்தினை முக்கியத்துவப்படுத்தி பேசுகிறார்கள். அதே போல, இந்துக்களே இப்படிப்பட்டவர்கள்தான், இந்து மதம் இப்படிக் கேவலமானது என்ற எண்ணத்தை உருவாக்குவதால் பயன்பெறுவதும் இந்துக்களை எதிரிகளாக வரித்துக் கொண்டவர்கள்தான். இதற்கு இரண்டுக்கும் இடையில், முஸ்லீம்களின் இந்தியப்பாரம்பரியமான சுபி இஸ்லாமை முக்கியத்துவப்படுத்துவதும், மக்கள் இணக்கமாக வாழ முயற்சி செய்த முஸ்லீம் சுபிகளையும், அவர்களது தத்துவத்தைப் பரப்புவதுமாக முஸ்லீம் எதிர்ப்பை மழுங்கடிக்க பலர் முயற்சி செய்கிறார்கள். அதே போல, இந்துகள் எல்லோருமே இப்படிப்பட்டவர்கள்தான் என்ற முஸ்லீம் தீவிரவாத பிரச்சாரத்தினை முஸ்லீம்களிடையே மழுங்கடிக்க பல இஸ்லாமிய அறிஞர்கள் பக்தி பாரம்பரியத்தை முக்கியத்துவப்படுத்தி, இந்துக்களையும் கடவுளின் பிரியமான மக்களில் ஒரு பகுதியினராக முஸ்லீம்களிடையே பிரச்சாரம் செய்துவருகிறார்கள். இஸ்மாயில், அப்துல் கலாம் போன்றவர்கள் இந்து மத நூல்களைப் பற்றி எழுதுகிறார்கள். கம்பராமாயணமும், பெரியபுராணமும் கற்பிக்கும் இஸ்லாமிய தமிழ் அறிஞர்களும் உண்டு. இவர்களே மக்களின் நண்பர்கள். இந்தச் சூழ்நிலையில் இந்துக்களை வெறியர்களாகக் காட்டும் பத்திரிக்கைகளும், முஸ்லீம்களை வெறியர்களாகக் காட்டும் பத்திரிக்கைகளும் ஒரே விஷயத்தையே செய்கிறார்கள். அதே போல இந்து மதத்தை கேவலமாக எழுதும் பத்திரிக்கைகளும், இஸ்லாமை கேவலமாக எழுதும் பத்திரிக்கைகளும் ஒரே விஷயத்தையே செய்கிறார்கள். எதிர்தரப்பு தீவிரவாதிகளுக்கு அவர்களது தீவிரவாதத்துக்கு நியாயத்தை இப்படி வெறுப்பெழுத்தைப் பயன்படுத்துகிிறவர்கள் ஏற்படுத்தித் தருகிறார்கள்.

1988 என்று நினைக்கிறேன். மெரினா கடற்கரையில் ராமகோபாலன் நடத்திய அரசியல் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். அதற்கு பிள்ளையார் ஊர்வலம் என்று பெயர் வைத்திருந்தார்கள். ராமகோபாலன் அந்தக் கடற்கரை மேடையில், முஸ்லீம்களது கடைகளையும், முஸ்லீம் வணிகர்களையும் புறக்கணிக்கவேண்டும் என்று பேசினார். அதிர்ச்சியடைந்த நான், கூட வந்திருந்த என் நண்பனிடம் இது பற்றி வெகுநேரம் விவாதித்தேன். ஆனால் அந்தப் பேச்சு அடுத்த நாள் பத்திரிக்கைகளில் எதிலும் வரவில்லை. அதில் ஒரு அதிர்ச்சி எனக்கு. ஏன் இந்தப் பேச்சு பத்திரிக்கைகளில் வரவில்லை என்பதைப்பற்றி விவாதித்தோம். நாஜி அரசின் கீழ் யூதர்களின் வியாபாரமுகப்புகளில் யூதர்கள் என்று எழுதுவது நாஜிகளின் ஒரு செயல். இது என்ன நாஜி அரசியல் பாணி இப்படி வெட்கமில்லாமல் நடைபெறுகிறதே என்று எனக்கு அதிர்ச்சி.

பத்திரிக்கைகளில் அந்தப் பேச்சு வராதது இரண்டு வேலைகளைச் செய்தது. முதலாவது ராமகோபாலனுக்கு முக்கியத்துவத்தை மறுத்தது. இரண்டாவது அந்தப் பேச்சு பலரைச் சென்றடைவதைத் தடுத்தது. ஒரு தீவிரவாதியின் உளறல்களுக்கு நாம் ஊடகமாக இருந்து பலரை அந்த உளறல் சென்றடைவதற்கு காரணமாக இருந்துவிடக்கூடாது என்று இருந்த பத்திரிக்கைகள் மீது பிறகு எனக்கு மதிப்பு வந்தது.

ஆனால், அப்போது நான் நினைத்தது வேறு. இந்தச் செய்தி பத்திரிக்கைகளில் வெளிவந்திருந்தால் இவர் மீது, ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை இன்னொரு சமூக மக்களுக்கு எதிராக கிளப்பி, அவர்களை பொருளாதார ரீதியில் நசுக்க முனைவது ஒரு வெறுப்பு பேச்சாக பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட வேண்டும் என வாதித்தேன். சற்று நேரம் இதே ரீதியில் பேசிக்கொண்டிருந்த போதுதான் ஏன் அதிமுக, திமுக அரசுகளால் அவர் கைது செய்யப்பட முடியாது என்பது எங்களுக்கு விளங்கியது. ராம கோபாலன் கைது செய்யப்படும்போது, இதே சட்டத்தின் கீழ், பிராம்மணர்கள் மீது வெறுப்புப் பேச்சை தினசரி பேசும் திராவிட கழகத்தினர் ஏன் கைது செய்யப்படவில்லை என்று கேட்டால் என்ன செய்வது ? அதிலும் அன்றைக்கு தி.மு.கவிலும், அதிமுகவிலும் நிரம்பி வழிந்த பலர் மேடை தோறும் முழங்கியது அதுதானே. தெருவெங்கும் எழுதப்பட்டிருப்பதும் அதுதானே ? அவர்களைக் கைது செய்யும் தைரியம் வரும் போது, ராம கோபாலனும் கைது செய்யப்படுவார். ராம கோபாலனை மட்டும் தாக்கும்படி சட்டம் எழுத முடியுமா ?

வடக்கில் இந்துத் தீவிரவாதம் வளர்வது பாகிஸ்தானிய முஸ்லீம் தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணிலிருந்து. தமிழ்நாட்டில் இந்துத் தீவிரவாதம் வளர்வது திராவிட கழக வெறுப்புப் பேச்சிலிருந்து. ஆனாலும் தமிழ்நாட்டு இந்துத் தீவிரவாதம் திராவிட கழகத்தை ஒரு புறம் தாக்கினாலும், முஸ்லீம்களையே முக்கிய எதிரிகளாகப் பார்த்து வந்திருக்கிறது. அதற்குக் காரணம், தமிழக இந்துத் தீவிரவாதத்தின் பிறப்பு வடக்கில்.

அதனாலேயே ஒரு பொதுவான நிலைப்பாட்டை எடுக்கும் கட்டாயம் சாதாரண இந்தியர்களுக்கு இருக்கிறது. எந்த வெறுப்புப் பேச்சும் கண்டிக்கப்படவேண்டியது. எந்த சமூகத்தினரையும் அந்த சமூகத்தினரை சார்ந்தவர்கள் என்பதாலேயே அவர்களை வெறுக்கும்படித் தூண்டும் பேச்சு எதுவும் கண்டிக்கப்படவேண்டியது. அது பிராம்மணர்களாக இருந்தாலும் சரி, முஸ்லீம்களாக இருந்தாலும் சரி, கிரிஸ்தவர்களாக இருந்தாலும் சரி, தலித்துகளாக இருந்தாலும்சரி. பிராம்மணர்களை வெளிப்படையாகத் திட்டுவது நம் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக ஆகிவிட்டது. அது மிகவும் ஆபத்தான விஷயம். இது போல ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விஷயத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனக்கோருபவர்கள் மீது கூட கல்லடி விழுகிறது இன்று. இஸ்லாமிய வெறுப்பு அரசியல் வடக்கில் விஸ்வ இந்து பரிஷத் என்று வளர்ந்துள்ளது. இந்து வெறுப்பு அரசியல் இன்று ஜிகாத் கமிட்டிகளாய் வளர்ந்துள்ளன. பிராமண எதிர்ப்பு இன்று ‘வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை ‘ என்பதாகவும், சாதிக் கலவரங்களிலும் கொண்டு சென்று விட்டிருக்கிறது. ஒரு வெறுப்பை நியாப் படுத்தும்போது, அந்த வெறுப்பின் அடிப்ப்டை வேராகி விடுகிறது. அந்த வெறுப்பின் இலக்கு கால்ப் போக்கில் மாறுவதும், வேறு வேறு வடிவங்களில் தோன்றுவதும் தவிர்க்க முடியாது.

‘அரசியலில் மதம் புகக்கூடாது என்று சொல்பவர்கள், மதத்தையும் புரிந்துகொள்ளவில்லை, அரசியலையும் புரிந்துகொள்ளவில்லை ‘ என்று கூறியவர் காந்தி. இந்தியாவில் மதத்தின் குறுக்கீடு இல்லாத எந்த விஷயமும் இல்லை. ஆனால் மதச்சார்புகள் 99 சதவீத நேரம் மற்றவர்களை உள்ளிடுவதாகவும், கொண்டாட்ட மன நிலையிலும் உள்ளன. அது பழி வாங்கும் உணர்வாக மாறும் ஒரு சதவீத சாத்தியமும் இருக்கக் கூடாது என்று தான் காந்தி சர்வ சமயப் பிரார்த்தனை என்றெல்லாம் தன் கூட்டங்களில் நிகழ்த்தினார். கம்யூனிஸ்டுக் கட்சிகளும் கூட கடைசியாக காந்தி பிறந்த நாளை இந்த வருடம் மத நல்லிணக்க நாளாய்க் கொண்டாடியிருக்கிறார்கள் என்ற செய்தி வந்துள்ளது.

பழிக்குப்பழி வாங்கும் மனித குணத்தைத் தாண்டி மனித குலம் செல்லவேண்டும் என்ற அடிப்படையில் வாழ்நாள் முழுவதும் தன் எழுத்தாலும், சொல்லாலும் செயலாலும் வாழ்ந்த காந்தியின் கடைசி நாட்கள் மிகவும் கொடியவையாக இருந்தன. அவருக்குப் பிரியமான இந்துக்களும் முஸ்லீம்களும் பழிக்குப்பழி என்ற உணர்வில் ஒருவரை ஒருவர் கொன்று குவித்துக்கொண்டு இரண்டு நாடுகளாகப்பிரிந்து சென்றார்கள். அது, அவருக்கும், அவர் வழி வந்த காங்கிரசுக்கும், நேருவுக்கும் ஒரு பாடமாக இருந்திருக்க வேண்டும்.

வரலாற்றை மறப்பவர்கள் அதே வரலாற்றை மீண்டும் மீண்டும் காணும்படி சபிக்கப்படுவார்கள் என்பது உண்மையான வார்த்தை. அந்த கொடிய வரலாற்றை நாம் மறுபடி பார்க்கக்கூடாது. எதைப் பற்றியும் பொறுப்புடன் எழுதவேண்டும்.

***

manjulanavaneedhan@yahoo.com

***

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்