மார்க்சீய சித்தாந்தமும் அறிவியலும்

This entry is part [part not set] of 35 in the series 20021022_Issue

அரவிந்தன் நீலகண்டன்


கட்டுரை சுருக்கம்

சோவியத் அரசின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து புதைத்து வைக்கப்பட்ட பல நிகழ்வுகள் குறித்த ஆவணங்கள் வெளிவந்தன. அவற்றுள் முக்கியமான ஒன்று அறிவியல் எவ்வாறு கொள்கை பிரச்சார கருவியாக சோவியத் அரசால் பயன்படுத்தப்பட்டது என்பதுமாகும். பொதுவாக மார்க்சீய வட்டங்கள் இத்தகைய பயன்பாட்டினை மேற்கத்திய பிரச்சாரம் என்றே மறுத்து வந்துள்ளன. ஆனால் சோவியத் வீழ்ச்சியின் பின் வெளிப்பட்ட உண்மைகள் பிரச்சாரத்திற்கும் அப்பாற்பட்ட உண்மை நிகழ்வுகளென தெரியவந்த பின் இவை மிகவும் பரந்த மனம் கொண்டவர்களாக கருதப்படும் மார்க்சீய அறிஞர்களால் கூட ஒன்றிரண்டு வரிகளில் விவாதிக்கப்பட்டு ஒதுக்கப்படுகின்றன. இந்நிகழ்வுகளுக்கான பொதுவான சித்தாந்த விளக்கம் ஸ்டாலினின் தனிமனித மேன்மை இயக்கத்தின் விளைவுகள் என்பதும் இப்பெரும் மானுட அழிவுகள் மார்க்சீய சித்தாந்த விளைவுகள் அல்ல என்பதுமாகும். இக்கட்டுரை இந்த சித்தாந்த விளக்கத்தின் உண்மையை ஆராய்கிறது. புதிய இயற்பியல் மற்றும் மரபணுத் துறைகளினை குறிப்பாக கொண்டு மார்க்சீய சித்தாந்த பற்றே சோவியத் அரசில் அறிவியலின் மீது தொடுக்கப்பட்ட கொடுமைகளுக்கு காரணம் என இக்கட்டுரை சில ஆதாரங்களை முன்வைக்கிறது.

மார்க்சீய நிலைபாடு

மார்க்சீய வட்டாரங்களில் பொதுவாக ஸ்டாலினுக்கு பதிலாக ட்ராஸ்கி லெனினுக்கு பின் அதிகாரத்தை கைப்பற்றியிருந்தால் அறிவியல், கலை, மானுட உயிர் மற்றும் மானுட உரிமைகள் பெரும் அழிவுகளை சந்திக்க நேர்ந்திருக்காது என கூறப்படுகிறது. சோவியத்தில் நடந்த கலை மற்றும் அறிவியல் உலகின் மீதான தாக்குதல்கள் மார்க்சீயத்திலிருந்து விளைந்தவையல்ல என்றும் மாறாக மார்க்சீயத்திற்கு எதிரான ஸ்டாலினிசத்திலிருந்து தோன்றியவை என்றும் இன்று கூறப்படுகிறது1. ‘நிகழா நிகழ்வு நிகழ்ந்திருந்தால் ‘ என கூறப்படும் விளக்கங்கள் பொய்ப்பிக்கப்பட முடியாதவை. ஆனால் சோவியத்தின் அடிப்படைகளை வடிவமைத்த விளாதிமீர் இலியுச் லெனினின் அறிவியலையும் அதன் வளர்ச்சியையும் எவ்வாறு கண்ணுற்றார் என்பதனையும் அவர் காலத்திய அறிவியல் சித்தாந்த மாற்றங்களில் அவர் எடுத்த நிலைபாடு எவ்வாறு இருந்தது என்பதும் இவ்விளக்கத்தின் உண்மையை அறிய உதவும். மார்க்சிய சித்தாந்தம் ‘அனைத்தாற்றலுடையது (omnipotent) ஏனெனில் அது உண்மை ‘ 2என்பதே லெனினின் எடுத்துரைக்கப்பட்ட நிலைபாடு. இந்நிலைபாட்டிற்கான மூலம் மார்க்ஸின் வார்த்தைகளிலிருந்தே பெறப்பட்டன. ‘கலை இலக்கியம் உழைக்கும் வர்க்கத்தின் போராட்டத்தின் ஒரு அங்கமாக வேண்டும் ‘3 மற்றும் ‘இயற்கை குறித்த அறிவியலை மனிதனை குறித்த அறிவியல் தன்னகப்படுத்திக் கொள்ளும் ‘3 என்பவையே அறிவியல் மற்றும் கலை குறித்த மார்க்சீய சித்தாந்த பார்வையாயிருந்தது. இதனுடைய தர்க்க ரீதியான நீட்சியாகவே வி.இ.லெனினின் கலை மற்றும் அறிவியல் குறித்த கருத்துகளையும்

செயல்பாடுகளையும் நாம் கொள்ள வேண்டும்.

லெனினின் ஆட்சி நடவடிக்கைகள்

கலை மற்றும் அறிவியலுலகை பொறுத்தவரை பல ஸ்டாலினிய நிகழ்வுகளின் முன்னோடிகளை லெனினின் செயல்பாடுகளில் தெளிவாகவே காணலாம். லெனின் பல கலைஞர்களை கைது செய்த போது எதிர்ப்பு தெரிவித்த மாக்ஸிம் கார்க்கியிடம் லெனின் அரசியல் எதிர் சித்தாந்தவாதிகளை ‘மக்கள் எதிரிகளை ‘ சிறையில் தள்ளுவதில் தனக்கு எவ்வித தயக்கமும் இல்லை எனத் தெளிவாகவே கூறினார்.மேலும் கார்க்கி பூர்ஷ்வா உலகின் மிகமோசமானவர்களால் சூழப்பட்டு அவர்களது கூப்பாடுகளுக்கு மதிமயங்கி விட்டதாகவும் குற்றம் சாட்டினார்4. 1920 இல் ஒரு பேட்டியின் போது அவர் ‘கலை மக்களுக்காகவே ‘ என்னும் கோஷத்தின் அடிப்படையில் கலையின் அனைத்து நவீன வெளிப்பாடுகளையும் நிராகரித்தார். இதனை தொடர்ந்து பல கலைஞர்கள் தங்கள் உயிரையும்,கலையையும்,சுதந்திரத்தையும் காப்பாற்ற வெளிநாடுகளுக்கு தப்பியோட நேர்ந்தது5.

இயற்பியலில் அடிப்படை மாற்றங்கள்

லெனின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு சில காலத்திற்கு முன் இயற்பியல் தன் அடிப்படை பார்வையில் பெரும் புரட்சியினை சந்தித்துக் கொண்டிருந்தது. இந்த இயற்பியல் அடிப்படை மாற்றத்தினை லெனின் மிகக் கூர்ந்து கவனித்து வந்தார். இன்றும் விரிவு பெறும் மிக முக்கியமான கணிதவியல் வித்துகள் இக்கால கட்டத்தில் தான் தூவப்பட்டன. இயற்பியலுக்கும் கணிதத்திற்குமான உறவுகள் புதிய சமன்பாடுகள் மூலம் புத்துருவாக்கம் பெற்று வந்த காலகட்டம் அது.எனவே நியூட்டானிய இயற்பியலின் அடிப்படை பார்வையினால் சமூக உறவுகளை வரையறை செய்து அதன் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு சித்தாந்தத்தின் ஏற்றமும் சிறந்த சித்தாந்தவாதி இம்மாற்றங்களால் அடைந்த மன உணர்வுகள் மற்றும் அவருடைய சித்தாந்த எதிர்வினைகளும் மிக முக்கியமானவை.

இயற்பியலின் இந்த அடிப்படை மாற்றங்கள் உண்மையில் சில நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த கலிலியோ புரட்சியினை விடவும் அடிப்படையானது. எனினும் பொதுவாக மேற்கத்திய அறிவியல் உலகம் இம்மாற்றத்தை எளிதாகவே ஏற்றுக் கொண்டு விட்டது.இதற்கு ஒரு முக்கிய காரணியாக இருந்தது சில ஆண்டுகளாகவே பல முக்கிய அறிவியலாளர்கள் மூலகூறு மற்றும் அணுக்களின் அடிப்படையிலான பொருள்வாத இயற்பியல் அடிப்படையினை சந்தேகித்ததுதான். இவர்களுள் முக்கியமானவர்கள் ஆஸ்திரிய இயற்பியல் அறிஞர் எர்ன்ஸ்ட் மாக், ஜெர்மானிய வேதியிலாளர் லுட்விக் ஆஸ்ட்வால்ட், ஜெர்மானிய இயற்பியலாளர் ஜியார்ஜ் கெல்ம் மற்றும் பியெரி கியூரி ஆகியோர். எதிரணியிலும் மிக முக்கியமான அறிவியலறிஞர்கள் இருந்தனர். போல்ட்ஸ்மான் போன்றவர்கள் பொருள்முதல்வாத நிலைப்பாட்டினையே எடுத்திருந்தனர். என்ற போதிலும் போல்ட்ஸ்மான் ஆஸ்ட்வால்ட்டுடனான ஒரு அறிவியல் விவாதத்தின் போது நியூட்டானிய அடிப்படையான அனைத்து நிகழ்வுகளும் மைய விசைகளால் நிர்ணயிக்கப்படும் பருப்பொருட்துகள்களின் இயக்கத்தால் விளக்கிவிட முடியும் எனும் நிலையிலிருந்து அறிவியல் வெகுவாக முன்னகர்ந்துவிட்டது எனக் கூறினார்.இது 1895 இல் நடந்தது. ஆக நியூட்டானிய அறிவியலில் இருந்து பெறப்பட்ட லாப்பேழேசிய நிர்ணயதன்மை 1905 களில் சற்றேறக்குறைய பத்தாண்டுகளாக புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளின் விளைவாக தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தது.

பருப்பொருட்களுக்கு அப்பால் எங்கெங்கும் பரவியதோர் ஈதரென்னும் ஆகாசப் பொருளின் வெளிப்பாடாக பருப்பொருட்களை காணும் கோட்பாடும் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் இதனை பொய்ப்பித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டானின் பங்களிப்பு முழுக்க முழுக்க புதிய பார்வையினை அளித்தது. அணுவாதத்தின் அடிப்படை உண்மையை சந்தேகித்த ஆஸ்ட்வால்ட் ஐன்ஸ்டைனின் ப்ரவுனிய இயக்கத்தினை அணுெமூலக்கூறு இயக்க அடிப்படையில் விளக்கியதன் பேரில் தான் அணுவாதத்தின் அடிப்படையை ஐயுற்றதை மாற்றிக்கொண்டார். பின்னாளில் மிகவும் அதிர்வுறச் செய்யும் க்வாண்டம் இயற்பியலின் சில அடிப்படை நிலைபாடுகளை ஆஸ்ட்வால்ட்டின் ஆற்றல் முதல்வாத அணியினர் கணிதவியல் மூலம் முன்னறிய முடிந்தது. உதாரணமாக, 1880 களில் கார்ல் பியர்சனின் கணித ரீதியான பிரபஞ்சவியல் அடிப்படையில், ஆர்தர் ஸ்கஸ்டர் எனும் பிரிட்டிஷ் கணிதவியலாளர், எதிர் பருப்பொருள் (antimatter) இருப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் , அத்தகைய எதிர் பருப்பொருள் பருப்பொருளோடு ‘சந்திக்கையில் ‘ முழு பருப்பொருள் அழிவும் ஆற்றலும் வெளிப்படும் எனவும் கூறினார். 1898 இல் வெளியிடப்பட்ட இம்முடிவுகள் க்வாண்டம் இயற்பியலினால் பின்னர் மெய்ப்பிக்கப்பட்டன6.

சார்பியல் மற்றும் க்வாண்டம் இயற்பியலில் உச்சமடைந்த இந்த மாற்றங்களின் சங்கிலித்தொடரில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது இதே தன்மையுடன் முந்தைய நூற்றாண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்களில் இருந்த தீயெரிப்பு மற்றும் புனித விசாரணைத் தண்டனைகள் இல்லை என்பதே. ஏனெனில் இவை நிகழ்ந்த நாடுகளில் நியூட்டானியலொப்பேழேசிய அறிவியலின் அடிப்படைகளை பூரண உண்மைகளாக கொண்ட அதிகார சித்தாந்தங்கள் அரசாளவில்லை. காலனியாதிக்கம் உண்மையில் தன் அடிப்படைகளை அரிஸ்டாட்டிலிய சித்தாந்த கூறுகளிலும் நியூட்டானிய கூறுகளிலுமிருந்து பெற்றிருந்தது எனினும் முழுமையாக இல்லை. (கிறிஸ்தவம் மற்றும் மார்க்சீயம் கலாச்சார காலனியத்தை நியாயப்படுத்தும் சித்தாந்தங்களாகவே இன்றும் இருந்து வருகின்றன.)

ஆனால் மார்க்சியம் தன் மிக அடிப்படையான முரண்பாட்டியங்கியல் வாதத்தின் அஸ்திவாரமாக நியூட்டானிய பொருள்முதல் வாதத்தினைக் கொண்டிருந்தது. மனித சூழலில் இந்த பொருள்முதல்வாத முரண்பாட்டியங்கியல் உற்பத்தி உறவுகளாக பரிணமித்து அதன் அடிப்படையிலேயே மனித பிரக்ஞை முதல் மானுட ஒழுக்கம் வரை அனைத்தும் அதன் மேல் அமைப்புகளாக உருவாக்கப்படுகின்றன. இச்சித்தாந்தத்தின் மூலம் அரசு அதிகார விழைவு கொள்ளும் ஒரு இயக்கத்தில் அறிவியல் இந்த அடிப்படை உண்மையை உறுதி செய்வதாகவே அமைய வேண்டும். இந்த உறுதிப்பாடே அறிவியலின் இருத்தலுக்கான நியாயமாகும். உறுதி செய்யப்பட்ட, தீர்மானிக்கப்பட்ட உண்மைகளை மீண்டும் தன் இயக்கத்தின் மூலம் உறுதி செய்வதே அறிவியலுக்கு அளிக்கப்பட்ட ஒரே பணியாக மத்திய கால கிறிஸ்தவ உலகில் இருந்ததை போன்றதோர் நிலையே இதுவும்.

இயற்கை அறிவியல் துறைகள் குறித்த லெனினின் பிரகடனம்

இயற்பியலின் இந்த இயக்கம் குறித்த மார்க்சீய சித்தாந்த எதிர்வினை 1908 -இல் வி.இ. லெனின் எழுதிய ஒரு சிறிய வெளியீட்டில் விரிவாக முன் வைக்கப்படுகிறது.பின்னாளில் தாங்கள் சோவியத் அரசு அதிகாரம் அடைந்த பிறகு சோவியத் அறிவியல் வளர்ச்சிக்கான திசைகள் இவ்வெளியீட்டிலிருந்தே பெறப்பட்டன. ஆற்றலியல் கோட்பாட்டுலகினைச் சார்ந்த அனைத்து அறிவியலாளர்களும் லெனினின் கடும் வசை சொற்களுக்கு ஆளாகின்றனர். அறிவியல் தத்துவவியலாளரான பெர்மானின் கூற்றுகள் ‘மூடத்தனமானவை ‘; கணிதவியலாளரான ஹென்றி பான்கரேயின் சித்தாந்தங்கள் ‘அதீத கற்பனையால் நிரம்பியவை ‘; டூஹெம்மின் சித்தாந்தங்களோ ‘பொய்மை ‘ நிறைந்தவை. மேலும் நியூட்டானிய இயற்பியலிலிருந்து புதிய இயற்பியலின் தோற்றம் மனித குலத்தின் அறிவு பரிணாமத்தின் ஒரு பொற்காலம் எனவே கருதப்படலாம். ஆனால் லெனினின் சித்தாந்த பார்வையில் இக்காலம் ‘தற்காலிகமான விலகல்; அறிவியலின் வரலாற்றில் விரைவில் மாறிவிடக்கூடிய நோய் பிடித்ததோர் காலம். ‘ இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக இவ்வெளியீட்டில் லெனின் இயற்பியல் எந்த திசை நோக்கி வளர வேண்டும் என்பதையும் எவ்வித நோக்குடன் அறிவியல் வளர்க்கப்பட வேண்டும் என்பதையும் விவரிக்கிறார், ‘ஒரு குறிப்பிட்ட அறிவியல் துறையைச் சார்ந்த ஒரு குறிப்பிட்ட சித்தாந்தமுடைய அறிவியலாளர்கள், தத்துவார்த்த பொருள்முதல் வாதத்திலிருந்து முரண்பாட்டு பொருள்முதல் வாதத்திற்கு முன்நகர முடியாது, பிற்போக்குத்தனமான தத்துவங்களில் மூழ்கிவிட்டனர். ஆயினும் இந்த முன்னகர்வு இயற்பியலால் எடுக்கப்படுகிறது, எடுக்கப்பட்டே தீரவேண்டியது. ஒரே உண்மை அறிவியல் முறை மற்றும் ஒரே உண்மையான அறிவியல் தத்துவமான முரண்பாட்டியங்கியல் நோக்கி இயற்பியல் வந்தே தீர வேண்டும்.நேராக இல்லாவிட்டாலும் சுற்றி வளைத்தாவது வர வேண்டும்.பிரக்ஞையற்று என்றாலும் தன்னியல்பாக அது நடந்தேற வேண்டும். தன் முதுகைக் காட்டிக்கொண்டாவது இயற்பியல் முரண்பாட்டியங்கியலை நோக்கியே நகர்ந்தாக வேண்டும். ‘7 அதிர்ஷ்டவசமாக லெனின் க்வாண்டம் இயற்பியலின் கோபன்ஹேகன் விளக்கத்தை கேட்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக ஸ்டாலின் கேட்டார்ெ அதன் முழு தத்துவ தாக்கத்துடன்.

சோவியத் இயற்பியல்

லெனினின் இப்பிரகடனமே பின்னர் ஸ்டாலினின் கீழ் சோவியத் அறிவியலில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னான சோவியத் இயற்பியலின் நிலை மிக அபாயகரமானதாக இருந்தது. லெனினின் பிரகடனத்தின் அடிப்படையில் சோவியத் தத்துவ அறிஞர்கள் 1930களிலேயே க்வாண்டம் இயற்பியலினை தீவிரமாக எதிர்த்து வந்தனர். கல்வி அமைச்சக உயர் அதிகாரியான காஃப்தனாவ் சோவியத் துணை அதிபரான கிலிமெந்தி வோராஷி லொவ்விற்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டார், ‘தீர்மானமான முறையில் முரண்பாட்டியங்கியலுக்கு எதிரான போக்குகளை தோலுரிப்பதை விட்டுவிட்டு சில அறிவியலாளர்கள் கருத்து முதல்வாத நிலைபாடுகளை தழுவி விடுகின்றனர். இக்கருத்துகள் மேல் படிப்பு துறைகளை இயற்பியல் மூலம் எட்டிவிடுகின்றன. ‘8 பல முக்கியமான இயற்பியலாளர்கள் .பீட்டர் காஃபிஸ்டா, இகாவ் ஃபெரன்கல், லெவ் லாந்தவ் போன்றவர்கள் முரண்பாட்டியங்கியலுக்கு எதிரானவர்களாக தண்டிக்கப்பட்டனர் அல்லது தங்கள் பதவிகளிலிருந்து இறக்கப்பட்டனர்8. ‘பிற்போக்குத்தனமான தத்துவங்களில் மூழ்கிவிட்ட ‘வர்களை ‘தன் முதுகைக் காட்டிக் கொண்டாவது முரண்பாட்டியங்கியலுக்கு நகர்த்தும் ‘ லெனினின் பிரகடனத்தின் செயலாக்க முயற்சியே ஸ்டாலினுடையது.

அணுஆயுத போட்டியும், சித்தாந்தத்தை விட அதிகாரத்தை நம்பும் ஸ்டாலினின் நடைமுறை வாத அரசியலுமே இங்கு சோவியத் இயற்பியலை லெனினிய அழிவிலிருந்து காப்பாற்றியது எனலாம். ஸ்டாலினின் வலதுகரமாக விளங்கிய லாவரெந்தி பெரியா சோவியத் அணு ஆயுத தயாரிப்புக்கான பொறுப்பினை ஏற்றிருந்தார். முழுமையாக இயற்பியல் முரண்பாட்டியங்கியலுக்கு ஏற்ப சீர்மை படுத்தப்படுவதற்காக அவர் ஒரு மாநாடு ஏற்படுத்தவிருந்தார். அணுஆயுத ஆய்வினை நடத்தி வந்த குருச்சட்டோவ் அப்போது குறுக்கிட்டு அதை நிறுத்தும் படி கூறினார். அதன் விளைவாக அம்மாநாடு நிறுத்தப்பட்டது. இதன் விளைவாக சோவியத் இயற்பியல் சோவியத் மரபணுவியலின் விதியை சந்திக்காமல் தப்பியது. இது குறித்து எரிச்சலடைந்த ஸ்டாலின் அதே சமயம் சோவியத் அணு ஆயுதத்திற்கு ‘பிற்போக்குத்தனமான தத்துவங்களில் மூழ்கிவிட்ட ‘ இயற்பியலாளர்களின் தேவையை அறிந்திருந்ததால் பின்வருமாறு கூறினார், ‘அவர்களை இப்போதைக்கு அவர்கள் போக்கில் விடுங்கள் பிறகு சுட்டுக் கொல்லலாம். ‘8

அணு ஆயுத தயாரிப்பு பிரிவின் இராணுவ மேற்பார்வையாளரான தளபதி மாக்கென்னோவ் இம்மாநாடு குறித்து பெரியா குருச்சட்டோவிடம் நடத்திய கேள்விகளை பின்வருமாறு தெரிவிக்கிறார், ‘ ‘முரண்பாட்டியங்கியலுக்கு எதிராக சார்பியலும் க்வாண்டம் இயற்பியலும் கருத்து முதல் வாதத்தை ஆதரிக்கின்றன என்பது உண்மையா ? ‘ என பெரியா கேட்டார். அதற்கு குருச்சட்டோவ் ‘சார்பியலையும் க்வாண்டம் இயற்பியலையும் மறுப்பதென்றால் அணு ஆயுதங்களையும் மறந்துவிட வேண்டியது தான் ‘ எனக் கூறினார். இதனால் கவலை அடைந்த பெரியா இவ்விஷ்யத்தை ஸ்டாலினிடம் உடனே தெரிவித்தார். இயற்பியல் குறித்த மாநாடு கைவிடப்பட்டது. ‘ 8ஆக, நடைமுறை ஆதாயங்களுக்காக உலகஅரசியலில் அதிகார ஆற்றல் கருதி லெனினிய நிலைபாட்டினை ஸ்டாலின் கைவிட்டதாலேயே சோவியத் இயற்பியல் ‘முரண்பாட்டியங்கியலுக்கு நகர்த்தப்படும் ‘ விதியிலிருந்து தப்பியது. (இந்த சித்தாந்தத்திற்கும் இயற்பியலுக்குமான போராட்டத்தில் சில நகைச்சுவை நிகழ்வுகளும் உண்டு. உதாரணமாக சோவியத் தத்துவ அகராதியின் படி பல காலமாக E=mc2 என்னும் சமன்பாடு மார்க்சீய தத்துவ அடிப்படையில் லெபையிதேவ் மற்றும் எஸ்.ஐ.வவிலோவ் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.) ஆனால் சோவியத் உயிரியலாளர்கள் அவ்வளவு கொடுத்து வைக்கவில்லை.

சோவியத் உயிரியல் -லைசன்கோ ஓர் சித்தாந்த உதயம்

மார்க்ஸ் தன்னை டார்வினின் சமூகதள வாரிசாகவே பாவித்து வந்தார். எனவே தன் மூலதனம் நூலை டார்வினுக்கு அர்ப்பணிக்க முனைந்த போது டார்வின் அதை மறுத்து விட்டார். டார்வினிய பரிணாமத்தின் அப்போதைய பலவீனம் மரபியல் செயல்பாடுகளின் அறிவின்மையே. பிரெடரி ஏங்கல்ஸ் இதற்கான தீர்வினை லமார்க்கிய மரபியல் செயல்பாட்டினை கொண்டார். அக்காலத்தில் அதுவே முன்வைக்கப்பட்ட தீர்வாக இருந்தது. ஒரு உயிர் அதன் வாழ்வின் போது அடையும் மாற்றங்களின் கூட்டு அதன் சந்ததிகளுக்கு கடத்தப்படும் எனும் இந்த மரபியல் செயல்பாடு முரண்பாட்டியங்கியலுக்கு உகந்ததாக ஏங்கல்ஸால் கருதப்பட்டது. இதில் உயிரியல் அடிப்படையில் நியாயப்படுத்தப்படும் ஐரோப்பிய கலாச்சார முதன்மை வாதமும் கலந்திருந்தது. உதாரணமாக அவர் , ‘ஒரு ஐரோப்பிய குழந்தை இயல்பாகவே ஒரு ஆஸ்திரேலிய ஆதிவாசியை விட கணித விதிகளை எளிதாகக் கற்றுவிட முடிவதை நாம் காணலாம். ‘9 என குறிப்பிடுகிறார். (இந்தியாவின் கலாச்சாரம் குறித்த மார்க்ஸின் பார்வையும் இச்சித்தாந்த அடிப்படையிலேயே அமையப் பெறுகிறது10. தமிழகத்தின் மார்க்சீய அடிப்படைவாதியான ஞானியிலும் மார்க்ஸின் காலனீய கலாச்சார பார்வையினை காணலாம்11.) எனவே ஸ்டாலினின் காலகட்டத்தில் உருவான லைசென்கோ நிகழ்வு ஒரு மார்க்சீய அடிப்படை அசைக்கப்பட்டதின் பேரில், அவ்வடிப்படையின் மேலெழுப்ப பட்ட அதிகார இயந்திரத்தின் எதிர்வினை எனவே காண வேண்டும்.இவ்வகையில் எந்த மத்திய கால கத்தோலிக்க புனித விசாரணைகள் மற்றும் தீயெரிப்புகளை விட சோவியத் விசாரணைகளும் தண்டனைகளும் மிகுந்த துல்லியத்தன்மை வாய்ந்தவையாகவே இருந்தன.

டார்வினிய பரிணாம வாதம் தன்னியல்பில் பெரும் பலவீனமாக கருதிய மரபியல் செயல்முறையினை மெநூடலிய மரபணுக் கொள்கையால் தீர்த்துக் கொண்டது. வெய்ஸ்மானால் முன்வைக்கப்பட்ட மரபியல் தொகுதிகள் மற்ற உயிரியல் தொகுதிகளிலிருந்து பிரிந்திருப்பதும், மெண்டலிய விதி சார்ந்த மரபணு இயக்கமும் பரிணாம வாதத்தினை முழுமையாக அறிவியல் தன்மைக்கு கொண்டு சென்றன. மார்க்சீயம் இங்கு ஒரு அடைக்கப்பட்ட சித்தாந்தமாக செயல்பட்டது. இந்நிகழ்வுகளின் முரண்தன்மை நோக்குதற்குரியது. முக்கியமாக இடதுசாரி சோஷலிஸ்ட் எண்ணவோட்டம் கொண்ட பல பிரிட்டிஷ் உயிரியலாளர்கள் மரபியல் துறையின் முன்னோடிகளாக உள்ளனர். உதாரணமாக கார்ல் பியர்சன், ஜே.பி.எஸ் ஹால்டேன் போன்றவர்கள். அதே சமயம் அவர்கள் இனதூய்மை வாதிகளாகவும் இருந்திருக்கின்றனர். (அதே சமயத்தில் மற்றொரு பரிணாம வாத தத்துவவியலாளரான ஹென்றி பர்கூசன் இனரீதியாக மரபியல் தன்மைகள் காலம்காலமாக சேர்ந்து தனி இனத்தன்மைகள் உருவாகக் கூடும் என்பதற்கு அறிவியல் அடிப்படை ஏதும் இல்லை எனக் கூறியுள்ளார்.)

1930 களில் சோஷலிசத்திலிருந்து மார்க்சிசத்திற்கு பரிணமித்துக் கொண்டிருந்தவர் ஹால்டேன். மரபணு சார்ந்த மனிதருக்கு மனிதர் ஏற்படும் வேறுபாடுகள் சோஷலிசத்திற்கு பெரும் ஆதரவான காரணமாக அமையும் என அவர் கருதினார்.12 ஆனால் மார்க்சீயத்திற்கு இது ஏற்படுத்தும் தத்துவார்த்த சிக்கல்களையும் அவர் உணர்ந்திருந்தார். 1932 இல் புதிதாக உயிர்த்தெழும் மரபணுவியல் துறையை அவர் ‘சோவியத் குடியரசு அறிவியல் மீது கொண்டுள்ள பற்றுக்கான பரீட்சை ’13 என குறிப்பிட்டார். ஆனால் மீண்டும் கால வேடிக்கையாக 1930 களில் தீவிர மார்க்சீய பற்றாளராக ஹால்டேன் மாறிய அதே சமயத்தில்தான் லைசென்கோ தன் போலிெஅறிவியலை சோவியத் அதிகாரத்தின் தத்துவ ஆசீர்வாதத்துடன் மிகக் கொடூரமாக அரங்கேற்றிக்கொண்டிருந்தார். ஹால்டேனின் லைசென்கோவிசத்திற்கான எதிர்வினைகள் முடிந்த வரை மார்க்சீய பாதுகாப்புக்காக உண்மையை மறுதலிப்பதாகவே இருந்தது. ஸ்டாலினின் தனிமனித துதி வட்டத்திற்கு எவ்விதத்திலும் ஆளாகாத அறிவியலாளரான ஹால்டேன் லைசென்கோ நிகழ்வுகளை எதிர்கொண்ட விதம் சித்தாந்த பற்றன்றி வேறல்ல. இவ்விதத்தில் ஹால்டேன் தன் தனிப்பட்ட நண்பரும் ரஷியாவின் சிறந்த மரபணுவியலாளருமான நிகலொய் வவிலாவ் லைசென்கோவினால் பெற்ற மரணத்தை கூட பொருட்படுத்த வில்லை. வவிலோவ் மிகக் கேவலமாக நடத்தப்பட்டு சிறையில் உயிரிழந்தார். அவரது விசாரணை குறித்த பதிவு இதனைத் தெளிவாக்குகிறது.

விசாரணையாளர் க்வாத்: நீர் யார் ?

நிகலொய வவிலாவ் : நான் அறிவியலாளர் வவிலோவ்

விசாரணையாளர் க்வாத்: நீர் அறிவியலாளர் அல்ல. நீர் வெறும் ஒரு மலக் குப்பை 14

லைசென்கோவிற்கு ஆதரவாக ஹால்டேன் வானொலி விவாதங்களில் தனது சக சிறந்த மரபணுவியலாளர்களான ரொனால்ட் பிஷர் போன்றவர்களை எதிர்த்து பங்கெடுத்தார். பின்னர் அறிவுடைய எந்த மனிதனாலும் ஆதரிக்க முடியாத அளவு லைசென்கோ ரஷிய உயிரியலை அழித்தொழித்திருப்பது வெளி வந்த பின் தன் பொது வாழ்விலிருந்தே ஹால்டேன் ஒதுங்கிக் கொண்டார். ஹால்டேனின் எதிர்வினையின் முக்கியத்துவம் எவ்வாறு ஒரு சிறந்த அறிவியலாளர் கூட தன் சித்தாந்த பற்றினால் மானுட சோகங்களுக்கு துணை போக முடியும் என்பதே. பற்று கொள்ளும் சித்தாந்தத்தின் தன்னியல்பும் இத்துணை போதலுக்கு பெரும் பங்காற்றுகிறது.

தொடரும் சித்தாந்த நிலைபாடுகள்

இன்றைக்கும் மார்க்சீயம் இவ்வியல்பினைத் தொடர்கிறது. சோவியத்தில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சிகள் யாவுமே தன் தேச அறிவு வளர்ச்சியில் பற்று கொண்ட அறிவியலாளர்கள் மற்றும் மார்க்சீய சித்தாந்தத்தை நடைமுறை வசதிகளுக்காக கை கழுவ தயாராயிருந்த அரசியல் தலைமை ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் விளைந்தவையே.

இந்த தேவைகள் ஏதுமற்ற மார்க்சீயவாதிகளுக்கோ அறிவியலை முரண்பாட்டியங்கியல் அடிப்படையில் ‘நல்ல ‘ அறிவியலாகவும் ‘கெட்ட ‘ அறிவியலாகவும், முதலாளித்துவ சமூக விளைவாகவும் சதியாகவும் காணும் போக்கு நீடித்தே வருகிறது.

கனாடிய கம்யூனிஸ்ட் கட்சியின் அர்தயால் பென்ஸ் மதச்சார்பற்ற மானுட வாதிகளை அமெரிக்க ஏகாதிபத்திய சதியின் ஒரு அம்சமாக காண்கிறார்15.சீரின்மை(chaos) அறிவியல் சித்தாந்த சமன்பாடுகள் பிரபலமடைந்து வருவதற்கு காரணம் நவீன முதலாளித்துவ உலகின் தன்னியல்பில் மூடநம்பிக்கைகளையும் ஆன்மீகமறையியலையும் நோக்கி திரும்பும் தன்மையே காரணம் என 1989 இல் மார்க்சீய அறிவியல் தத்துவவாதிகளான மன்ஜித் சிங்கும் ஜான் கிப்சனும் வாதிக்கின்றனர். அவர்களது ‘வழி பிறழ்ந்த ‘ அறிவியலாளர்களின் வரிசையில் புகழ் பெற்ற அறிவியலாளர்களான பிரிகோகைன், பவுல் டேவிஸ் ஆகியோரும் இடம் பெறுகின்றனர்16. மார்க்சீய குறை கூறல் பொதுவாக கணிதத்தின் அழகியல் குறித்ததாகவும் உள்ளது. சீரின்மை தத்துவத்தின் வேர்களை பான்கரேயில் காணமுடியும். வி.ஐ.லெனின் அவரை தன் நூலில் குறை கூறியிருந்தார். இன்று சற்றேறக்குறைய இதே காரணங்களுக்காக ஸ்டாபன் ஹாக்கிங்,

பென்ரோஸ், பிரிகோகைன், பவுல் டேவிஸ் ஆகியோர் மார்க்சீயவாதிகளால் குறை கூறப்படுகின்றனர்17. தன்னியல்பில் மூடலுடைய (closed) அதே சமயம் அதிகார விழைவும் பரவு தன்மையும் வாய்ந்த ஆபிரகாமிய மதத்தின் அனைத்து தன்மைகளையும் மார்க்சீய சித்தாந்தம் அறிவியலுடான உறவில் வெளிப்படுத்துகிறது.

பயன்படுத்த பட்ட நூல்கள் மற்றும் குறிப்புகள்

1. மார்க்சீய இன்றைய விளக்கங்களுக்கு சிறந்த உதாரணமாக காண்க

ப்ராங்க் ககிலோட்டி, The fate of Soviet genetics, 4 அக்டோபர் 1996

World Socialist Web Site. ஸ்டாலினின் கீழ் மரபணுவியலாளர் அனுபவித்த கொடுமைகளை பட்டியலிட்ட பின் கட்டுரையாசிரியர் பின்வருமாறு முடிக்கிறார், ‘இவையெல்லாம் சோஷலிசத்தினுடையவோ மார்க்சிசத்தினுடையவோ விளைவுகளல்ல, மாறாக அவற்றிற்கு எதிரான சித்தாந்தமான ஸ்டாலினிசத்தினுடையவை. ‘ மேலும் ‘ஸ்டாலினிச அதிகார வர்க்கத்தின் உடனடித் தேவைகளுக்காக அறிவியல் ஒடுக்கப்பட்டது. ‘ இக்கருத்தே இக்கட்டுரையில் பரிசீலிக்கப்பட்டு மறுக்கப்படுகிறது.

2. வி.ஐ.லெனின், Collected Works, நான்காவது ஆங்கில பதிப்பு , Progress Publishers,மாஸ்கோ , 1968,பாகம்ெ 19, பக்கம். 23

3.மார்க்ஸ் & ஏங்கல்ஸ், Selected Works VolெI பக்கங்கள் 398,400 அருண்ஷோரியால் மேற்கோள் காட்டப்பட்ட நூல் Eminent Historians

4.செப்டம்பர் 15,1919 தேதியிட்ட லெனினின் கடிதம்.இரகசியம் என குறியிடப்பட்ட இக்கடிதம் கார்க்கி தன் பூர்ஷ்வா அறிவுஜீவிகளுடனான தொடர்புகளை அறுத்துக் கொள்ளாவிடில் மரணத்தை சந்திக்க வேண்டுமென்றும், ஒரு படைப்பாளி என்ற முறையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கிறது.

5.ஆண்ட்ரூ ஜே கார்ட்டன்,The Forgotten Avant Garde, Central Europe Review Vol 1, No 1, 28 ஜூன் 1999.

6.ஹெல்கே க்ராக், Quantum Generations: A History of Physics in the Twentieth Century,Princeton University Press 1999. இயற்பியலின் வரலாறு குறித்த அனைத்து தகவல்களும் இந்நூலின் முதல் அத்தியாயத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

7.வி.ஐ.லெனின், Materialism and Empirio-Criticism Lenins Collected Works, Progress Publishers, Moscow, Volume 17, 1972 (புதிய இயற்பியலினைக் குறித்த லெனின் அனைத்து மேற்கோள்களும் இந்நூலிலிருந்து எடுக்கப்பட்டவையே ஆகும். இந்நூல் எழுதப்பட்ட காலகட்டங்கள் மே, 1908; பிப்ருவரி 1908ெஅக்டோபர் 1908.

8. டேவிட் ஹோலோவே, How the bomb saved Soviet Physics. The Bulletin of the Atomic Scientists, 1994. இணைய முகவரி: http://www.thebulletin.org/issues/1994/nd94/nd94Holloway.html

9. ப்ரெடரிக் ஏங்கல்ஸ், Dialetics of Nature, Third Revised Edition, Progress Publishers, மாஸ்கோ 1964.பக்ெ271

10.கார்ல் மார்க்ஸ், ‘The British Rule in India ‘ (1853), கார்ல் மார்க்ஸ் மற்றும் ப்ரெடரிக் ஏங்கல்ஸ், Articles on Britain , Progress Publishers, மாஸ்கோ 1971 பக்-166ெ72

11. ஞானி, கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை ? – ஒப்பிட்டு பார்க்க ஹனுமான் குறித்த ஞானியின் வார்த்தைகளை கார்ல் மார்க்ஸின் வார்த்தைகளுடன்.

12. ஜே.பி.எஸ் ஹால்டேன், The Inequality of Man, Penguin 1932.

13. அதே.

14.Soyfer, Valery Lysenko and the Tragedy of Soviet Science (Rutgers, 1994)

15.அர்தயால் பென்ஸ், வீரத்தியாகிகளின் முழக்கம், மார்க்ஸ் எங்கல்ஸ் லெனின் ஸ்டாலின் இன்ஸ்டிடியூட், டோராண்டோ, 1985. பக்ெ157ெ61

16. ஜான் கிப்சன் & மன்ஜித் சிங், Chaos Theory The science of despair, Living Marxism (Monthly review of Revolutionary Communist Party, UK, டிசம்பர் 1989 இதழ் எண்14

17. ஜான் கிப்சன் & மன்ஜித் சிங் The Marxist review of books, Living Marxism, நவம்பர் 1991, இதழ் எண் 37.

***

hindoo_humanist@sify.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்