இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 29 2002

This entry is part of 27 in the series 20021001_Issue

மஞ்சுளா நவநீதன்


ஜெயலலிதா- உலக வங்கியின் அடிமையா ?

மீண்டும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை மேலும் துயரமடையச் செய்யும் ஒரு முடிவை ஜெயலலிதா எடுத்திருக்கிறார். ரேஷன் அரிசியின் விலை இரு மடங்காகி விட்டது. காரணம் இப்படிப் பட்ட மானியங்களை நிறுத்தும்படி உலக வங்கி கேட்டுக் கொண்டது தானாம். காவிரி நீர் இல்லை. நெசவாளிகள் தெருவில். அரசுக் கல்லூரி மாணவர்கள் கட்டணம் உயரும் என்று அச்சம் கொண்டுள்ளார்கள். பஞ்ச நிலை உருவாகியுள்ளது. ஏழை மக்களின் அரிசிவிலையையும் ஏற்றினால் அவர்கள் எங்கே போவார்கள் ?

ஒரிஸ்ஸாவில் ஏற்கனவே தண்ணீர்க் கட்டணத்தை அதிகரிக்க வேண்டுமெ ன்று உலகவங்கி அழுத்தம் கொடுத்தது. வெறும் கடன் தரும் ஓர் அமைப்பாக இல்லாமல், உள்நாட்டுக் கொள்கைகளில் தலையிட்டு, பிரசினைகளை உருவாக்குவதன் மூலம் , அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கான பிரசினையை உணராத ஓர் அமைப்பாக உலக வங்கி உருவாகி வருகிறது.

கடன் வாங்கி – அதுவும் உலக வங்கி போன்ற அமைப்புகளிடன் கடன் வாங்கி – நாம் முன்னேற முடியாது.

********

குஜராத் கோயிலில் கொலைகள்

காஷ்மீருக்கு வெளியே ஒரு கோயிலின் உள்ளே புகுந்து கொலைகள் நடந்தேறியுள்ளன. காஷ்மீரில் கோயில்கள் தாக்கப் படுவது வழக்கமான விஷயமாகிவிட்டது. சோனியா காந்தியும், அத்வானி போன்ற தலைவர்களும் உடனடியாய்ப் போய்ப் பார்த்தது பலனளிக்கக் கூடும். இதற்கு எதிர்வினை, எதிர்வினைக்கு எதிர்வினை என்று இந்தப் போக்கு வளராமல் இருக்க வேண்டும். ஏற்கனவே விஸ்வ இந்து பரிஷத் திருப்பூரில் தன் வெறியாட்டத்தைத் தொடங்கியுள்ளது.

பாகிஸ்தானின் கை இந்தத் தாக்குதலில் உள்ளது என்று செய்திகள் கூறுகின்றன. இது உண்மையானால் இது தொடராமல் இருக்க இந்திய அரசு என்ன செய்யப் போகிறது என்பது கேள்வி.

*********

வெளிநாட்டுச் செலாவணி – 60 பில்லியன் டாலர்கள்

வெளிநாட்டுச் செலாவணி இந்தியாவின் கையிருப்பு 60 பில்லியன் டாலர்களை எட்டியிருக்கிறது. இதுவரையிலான கையிருப்புகளில் இது தான் அதிகபட்சமானது. இந்தக் கையிருப்பு இரண்டு பகுதிகளை உடையது. ஒன்று வெளிநாட்டு இந்தியர்கள் செலுத்தும் அன்னிய நாணய முதலீடு. இரண்டாவது பகுதி ஏற்றுமதியினால் அடையப் படும் அன்னியச் செலாவணி. முதல் பகுதி இந்தியாவின் ‘நம்பகத் தன்மையாலும் ‘ இரண்டாவது பகுதி இந்தியாவின் தொழில் முனைவர்கள் மற்றும் தொழிலாளர்களாலும் உருவாவது.

இரண்டாவது பகுதியைப் பற்றித்தான் அதிகம் பேச வேண்டும். வளர்ந்த நாட்டின் தொழிலாளியின் உழைப்புக்குப் பெறும் ஊதியத்தில் மிகச் சொற்பமே வளரும் நாடுகளில் உள்ள உழைப்பாளி பெறுகிறான். இந்தச் சமச்சீரற்ற தன்மையைத் தொடர்ந்து தக்க வைக்கும்படி தான் உலக வர்த்தகமும் செயல்படுகிறது. எனவே இந்த அன்னியச் செலாவணி இருப்பை எப்படி இந்தியா பயன் படுத்தப் போகிறது என்பதில் தான் அதன் பயன் இருக்க முடியும். மீண்டும் இது யுத்த தளவாடங்கள் வாங்கச் செலவு செய்யப் பட்டால் , இந்தக் கையிருப்பு மிக விரைவாக வளர்ந்த நாடுகளையே மீண்டும் சென்றடைய வழி வகுக்கும். ஏற்கனவே பிரிட்டிஷ் பிரதமர் டோனி ப்ளேர் தில்லி வருகை தந்து யுத்த தளவாடங்களை விற்பதற்கு அடிகோலிவிட்டுப் போயிருக்கிறார்.

எனவே இந்தச் செலாவணிக் கையிருப்பு இரண்டு வழிகளில் பயன்படுத்தப் படவேண்டும். ஒன்று : இந்திய அடிப்படைக் கல்வி எல்லோருக்கும் அடையுமாறும், உயர்கல்வியின் பண அடிப்படையை நீக்கி பெரும்பாலோர் உயர் கல்வி மிகச் சொற்பச் செலவில் பெறுவதற்கு வழை வகுக்க வேண்டும். இன்னொன்று , உயர் தொழில் நுட்பத் தொழிற்சாலைகள் தொடங்க வழிவகைகள் செய்ய வேண்டும். வெறும் சட்டை, துண்டு ஏற்றுமதி செய்வதென்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த சற்றும் உதவாது. ஆனால் அப்படிப் பட்ட தொலைநோக்கு யாருக்கும் இருப்பதாய்த் தெரியவில்லை.

*********

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation