இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 21 2002

This entry is part of 28 in the series 20020924_Issue

மஞ்சுளா நவநீதன்


காவிரி அனைத்துக் கட்சிக் கூட்டம்-தி மு கவின் தவறு

ஜெயலலிதா கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை தி மு க புறக்கணித்திருக்கிறது. ஜெயலலிதாவின் எதேச்சாதிகாரப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக என்று காரணம் சொல்லப் பட்டிருக்கிறது. ந்தக் காரணம் பொருத்தமானது தான் என்றாலும், காவிரிக் கூட்டத்தைப் புறக்கணிக்க இது ஒரு காரணமாய்ச் சொல்லப் பட்டிருப்பது தவறு. பொறுப்பற்ற செயல்.

ஜெயலலிதா மற்ற கட்சிகளை எதிர்க்கட்சி என்று மட்டும் பார்க்காமல் தமிழ் நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ள அமைப்புகளாய்ப் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும். தமிழ் நாட்டின் நலம் என்று வரும்போது அவற்றைத் தோழமைக் கட்சிகளாய்க் காண வேண்டும்.

காவிரிப் பிரசினையைப் பொறுத்தவரையில் தமிழ் நாட்டின் எல்லாக் கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் செயல்படுவதான ஒரு தோற்றம் இருந்தால் தான் தமிழ் நாட்டின் அரசுக்கு வெளியே மதிப்பு இருக்கும். இங்கே நடக்கும் அடிதடிகள் வரம்பு மீறியவை மட்டுமல்ல அநாகரிகமானதும் கூட. அதில்லாமல் புதிய தமிழகம் போன்ற கட்சிகளையும் அழைக்கவில்லை.

தி மு க தமிழ் நாட்டின் நலனைக் கருதியேனும் கட்சிக் குழாயடிச் சண்டைகளை ஒதுக்கி வைத்துவிட்டு இனி வரும் கூட்டங்களில் கலந்து கொள்வது நல்லது.

********

காஷ்மீர் தேர்தல்கள்

காஷ்மீர் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. காஷ்மீர் மக்களின் தேர்வு வெளியில் தெரியக் கூடாது என்று பயங்கரவாதிகள் எடுத்த முயற்சிகளால் நிகழ்ந்த கொடூரங்களையும் தாண்டி தம்முடைய தேர்வைத் தெரிவிக்க காஷ்மீர மக்கள் முன்வந்தது பாராட்டத்தக்கது. இனியேனும் பாகிஸ்தான் தன் விஷக்கரங்களை காஷ்மீர் பக்கம் நீட்டாமல் இருக்க வேண்டும்.

ஆங்காங்கே சில குளறுபடிகள் இருப்பினும், திருப்திகரமான முறையில் தேர்தலை நடத்திய தேர்தல் ஆணையமும், தேர்தலில் பங்கு பெற்ற காஷ்மீர் மக்களும் பாராட்டத்தக்கவர்களே.

********

இந்திய தேர்தலும் ஜனநாயகமும்

இந்தியாவின் ஜனநாயகம் பற்றி வெளியுலகிலும் சரி நம் அருமை அறிவு ஜீவிகளிடையேயும் சரி சரியான பாராட்டுணர்வோ, அதன் இருப்பு எப்படி இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காப்பாற்றுவதிலும் அதிகாரப் பகிர்வையும் பரவலையும் முன்னெடுத்துச் செல்வதிலும் பெரும் பங்கு வகித்திருக்கிறது என்ற உணர்வோ இல்லாமல் இருப்பது துரதிர்ஷ்டமானது. 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு எல்லோருக்கும் வாக்குரிமை என்ற கருத்தாக்கம் சட்டபூர்வமாய் உறுதி செய்யப் பட்டது. இது எவ்வளவு புரட்சிகரமானது, எளிமையான இந்தக் கருத்து கூட சுற்றிலும் உள்ள நாடுகளில் இல்லை என்பது யாருக்கும் நினைவில் வருவதில்லை. 1965 வரையில் கூட இன்று ஜனநாயகம் பற்றி வாய் கிழியப் பேசும் அமெரிக்காவில் கறுப்பர்கள் சம உரிமை , சமமாய் வெள்ளையர்களுடன் பொது வாழ்வில் பங்கு பெறுதல் நடைமுறைக்கு வரவில்லை. அதுவும் பல போராட்டங்களுக்குப் பின்னால் தான் சாத்தியமாயிற்று. ஆனால் நேரு, காந்தி, அம்பேத்கர் ஆகியோரின் வழி காட்டுதலில் எந்தச் சிக்கலும் இல்லாமல் எந்த மறுப்பும் இல்லாமல் இது சட்டமாயிற்று.

இதற்கு நடைமுறையில் பல தடைகள் உள்ளன என்பதும் உண்மைதான். கீரிப்பட்டி பாப்பாபட்டி போன்ற பகுதிகளில் தேர்தல்களில் தலித்கள் நிற்க முடியாமல் சமூகத் தடைகள் ஏற்படுவதே இந்த சட்ட பூர்வமான ஆக்கங்கள் எப்படி சமூகச் சிந்தனையைப் புரட்டிவிடாமல் இருக்கின்றன என்பதன் உதாரணங்கள். ஆனால் இவை சட்டபூர்வமாய் எதிர்கொள்ளக் கூடிய வழிமுறைகள் இருப்பதே பாதுகாப்பு.

***

manjulanavaneedhan@yahoo.com

***

Series Navigation