மேலே பறந்து பறந்து….

This entry is part [part not set] of 30 in the series 20020917_Issue

பாலாஜி சுப்பிரமணியம்


நீந்தத் தெரியாத (பாரசூட்டில் கூட) பறக்கத் தெரியாத ஒருவன் 600/700 அடி உயரத்தில் Parasailing செய்த அனுபவம் பற்றி எழுதுகிறேன்.

நியு யார்க்கின் ஜார்ஜ் ஏரி மேல் ஆகாயத்தில் சிலர் மிதப்பதைப் பார்த்தவுடன் நாமும் மேலே சென்று அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. ஆனால், உடனேயே அறிவு தெளிந்து ‘ஏன் மேலே செல்ல உயிரைப் பயணம் வைத்து, சித்ரவதை செய்யப்பட்டு பாசக்கயிறு போல் ஏதோ ஒன்றை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இயற்கைக் காட்சிகளை ரசிக்க வேண்டும் ? ‘ என்று நடைமுறையை ஞாபகப்படுத்தியது.

மனதிற்குள் இருக்கும் வில்லன் சும்மா இருப்பானா ? கிலியும் குறுகுறுப்பும் நிறைந்த ம்னைவியை நோக்கி ‘நீ முதலில் செல். நான் குழந்தையை கவனித்துக் கொள்கிறேன். ‘ என ஆர்வமூட்டி அனுப்பினேன். அவளுக்கு வீட்டில் ஏதோ அவ்வ்ப்போது குள்ளமாக ஒன்று நடமாடுகிறது என்பது மட்டுமே அறிந்த கணவன், கபால் என்று அந்தர்பல்டியடித்து ஒரு மணி நேரத்துக்கு மேல் பார்த்துக்கொள்கிறேன் என்க்ிறானே என்ற சந்தோஷம். அவ்ளுக்குத் தெரியுமா ? பொண்டாட்டியை அந்தரத்தில் இருபதடி ஆழ தண்ணீர் மேல் தொங்கவிட்டு பார்க்க ஆசைப்படுகிறேன் என்று ?

அவள் வெற்றிகரமாகப் பற்ந்து திரும்பிய பிறகு, ஆஹா ஓஹோ எனக்கூற உட்கூற்றை அடக்கி ஒரு நப்பாசையுடன் நானும் செல்லப் பணத்தைக் கட்டிவிட்டேன்.அப்பொழுது ஆர்ம்பித்தது ஒரு வயிற்றுப் பிசையல். ஏதோ தைரியத்தில் டிக்கெட்டைக் காண்பித்துப் படகில் ஏறி உட்கார்ந்தேன். படகுக்கு விளிம்பே கிடையாது. வெறும் பலகைதான்; ஆனால், விசைப்படகு. சுமார் பத்து பேர் நடுக்கடல்… மன்னிக்க கடல் போன்ற நடு ஏரிக்கு சென்றடைந்தோம்.

‘இதுவே போதும்…இப்படியே என்னைத் திரும்பிக் கொண்டு விட்டுவிடு ‘ என்பது போல் இருந்தது முதல் பயணித்தவரின் புறப்பாடு மற்றும் வருகை. வயிற்றில் ஆரம்பித்து நெஞ்சு முதல் முழு உடம்பு வரை பயத்தில் நடுங்க சென்று வந்தவர் மேலே இன்னும் குளிர் அதிகமாக்கும் என வெடவெடக்க வைத்தார்.

ஒரு வழியாக என்னாட்டம் வந்தது.ஒரு Life Jacket மாட்டி, தொங்குவதற்கான கயிறு கோத்து பறக்கும் பலூனில் ஏற்றி ஒரு வேகப்படகுடன் இணைத்து அனுப்பிவிட்டார்கள். பார்சூட் மெல்ல மெல்ல மேலே செல்ல செல்ல என்ன ஒரு அனுபவம்! சிலு சிலுவென்ற மந்தமாருதம், மலையிடுக்குகளில் கண்ணைப் பறிக்கும் சூரியன், நீல நிற ஏரி, தூரத்தில் குட்டி குட்டி வாகனங்கள், பென்சில் மனிதர்கள், காகிதப் படகுகள் எனக் காட்சி விரிய விரிய ஒரு பரவசம். உயரமான மலையில் இருந்து, விமானத்தில் இருந்து கூட இந்தக் காட்சியைப் பார்த்திருக்கிறேந்தான். இப்பொழுதோ போதை இல்லாமலே பறந்து பார்ப்பது சுகமகத்தான் இருந்தது.

கொஞ்சம் வினாடிகள் கழியக் கழியப், பொறுமையை சோதிக்கிறார்களோ என்னும் அளவு திகட்டத் திகட்ட வானில் அலையவைக்கிறார்கள். கீழே இருந்துப் பார்க்கும்பொழுது சீக்கிரமே மற்றவர்களை இறக்கிவிட்டது போல் இருந்தது. மேலே சென்றபிறகோ அந்தரத்தில் தொங்குவதால் சீக்கிரமே போரடித்துவிடுகிறது. ஒரு வழியாக என்னை இறக்குவதற்கு ஆயத்தமானார்கள்.

வேகப்படகு என்னைத் திரும்ப பத்திரமாக முதற்படகுக்குக் கொண்டு செல்ல என் கயிற்றை சரியாகப் பிடித்து இறக்கி விட்டார்கள். எனக்குப் பிறகு இன்னும் இரணடு பயந்தாங்கொள்ளிகள் (நாம்தான் சாதித்தாகிவிட்டதே; இனி மற்றவர்களை என்ன வேண்டுமானாலும் கூறலாம்!!) இறங்கும்போது கயிற்றை ஒழுங்காகப் பிடிக்காமல், தண்ணீரில் கிட்டத்தட்ட மூழ்கடித்துப் படகில் ஏற்றினார்கள்.

வாலிபப் பையன்கள், டானேஜ் குமரிகளைத் தாங்கிப் பிடித்து ஏற்றும்போது (அந்தக்கால) பாரதிராஜாவின் காதற்காட்சிகளை ஞாபகப்படுத்தின.

வாய்ப்பு கிடைத்தால் அவசியம் ஒருமுறை சென்று வாருங்கள். ஆபத்தில்லாத, ஆனந்தமான, வித்தியாச அனுபவம்.

***

bsubra@yahoo.com

Series Navigation

பாலாஜி சுப்பிரமணியம்

பாலாஜி சுப்பிரமணியம்