இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 6 2002 (காவிரி, முஷாரஃப், ஸ்டாலின், மனீஷா,மேற்கு வங்கம், சீனா)

This entry is part of 30 in the series 20020909_Issue

மஞ்சுளா நவநீதன்


***

காவிரி நீர் : நீதிமன்றத்துக்கு நன்றி : காங்கிரசுக்கு இகழ்ச்சி

சுப்ரீம் நீதிமன்ற உத்தரவை ஏற்கவில்லை என்றால் கர்நாடக அரசு டிஸ்மிஸ் செய்யப்படும் என்று வாஜ்பாய் சொன்னதால்தான் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சோனியா காந்தி சொல்லி அல்ல. சோனியா காந்தி இதனைப் பற்றிக் கவலைப்பட்டதாகவோ, இந்த பிரச்னையில் ஒரு நிலைப்பாடு எடுத்ததாகவோ தெரியவில்லை.

அனைத்திந்திய கட்சி என்றால் ஓரளவுக்கு அனைத்து இந்திய மக்களுக்கும் சாதகமான ஒரு முடிவு எடுக்கவும், விட்டுக்கொடுக்கத் தூண்டவும்தான் என்பது பலர் சொல்லி வரும் காரணம். இந்த காவிரிப் பிரச்னையில் ஒரு அனைத்திந்தியக் கட்சி, பாரம்பரியம் மிக்க கட்சி, சுதந்திரம் வாங்கிக்கொடுத்தக் கட்சி என்று பேசப்படும் காங்கிரஸ் செய்து இருப்பது மிகவும் கேவலமானது.. கர்நாடகாவில் காங்கிரஸ் ஏற்கனவே ஆட்சியில் இருக்கிறது. என்னதான் பிரம்மப் பிரயத்தனம் பண்ணினாலும் தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வரும் வாய்ப்பே இல்லை. இந்த லட்சணத்தில் தமிழ்நாட்டிற்குச் சாதகமாக காங்கிரஸ் முடிவு மேற்கொள்ளுமா என்ன ? கர்நாடகத்தில் காங்கிரசுக்கு இருக்கிற செல்வாக்கை விட்டுக் கொடுத்துவிடுமா என்ன ?

இதற்கு நடுவில், வீரப்பன் ஒரு கன்னடத் தலைவரைக் கடத்த, பிரச்னை தீவிரமாகி கன்னட-தமிழர் பிரசினையாகும் ஒரு சூழ்நிலை இருக்கிறது. இது யாருக்கும் நல்லதல்ல.

***

மனீஷா கொய்ராலா : டூப்ளிகேட் நடிகையும், கவர்ச்சி மீறலும்

மனீஷா கொய்ராலாவின் வேண்டுகோளின் படி , மனீஷா கொய்ராலாவின் அனுமதியில்லாமல் அவர் பெயரைப் பயன்படுத்தியதற்காக, படத்துக்கு நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இருந்தும் அந்த தடை உத்தரவை மதிக்காமல் அந்தப் படம் திரையிடப்பட்டிருக்கிறது. இதனை சிவசேனை கட்சியினரும் பெண்கள் சங்கத்தினரும் ஆட்சேபித்து, திரைப்படம் முன்னர் கலவரம் செய்திருக்கிறார்கள். அஷோக் மித்ரா என்ற பொருளாதார நிபுணர் சிவசேனையைக் கண்டித்து டெலிகிராஃபில் கட்டுரை எழுதியிருக்கிறார். அசோக் மித்ரா மார்க்ஸிஸ்ட் கட்சியின் சார்பானவர் என்ற ஒரே காரணத்திற்காக சிவசேனையைக் கண்டித்திருக்க வேண்டும்.

சிவசேனையின் செயல்பாடுகளை அறிந்தவர்களுக்கு இதில் சிவசேனையின் ஈடுபாடு ஏன் என்பது நிச்சயம் புரிந்திருக்கும். எவர் காலிலோ மனீஷா விழுந்திருக்க வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதற்கு ஏன் அசோக் மித்ரா வக்காலத்து வாங்க வேண்டும். எப்படியோ சிவசேனையைத் தாக்க வேண்டும் என்ற ஒரே காரணம் தான்.

***

பாகிஸ்தானின் சர்வாதிகாரி : காஷ்மீர் தேர்தல் பற்றி

வெற்றி பெறும் வாய்ப்புள்ள பேநஸீர் புட்டோ, நவாஸ் ஷரீஃப் பாகிஸ்தானுக்குள் வரவிடாமல் செய்து விட்டு , தேர்தல் பம்மாத்தை நிறைவேற்றும் சர்வாதிகாரி முஷரஃப் காஷ்மீர் தேர்தல் பற்றிக் கருத்துச் சொல்வது அபத்தம். தேர்தல் நடப்பதற்கு முன்பே பிரதமரை பதவி நீக்கம் செய்யும் உரிமையைத் தனதாக்கிக் கொண்டு விட்டார் முஷரஃப்.

காஷ்மீர் தேர்தல் அமைதியாக நடந்தேற வேண்டும் என்று அமெரிக்காவின் ஆர்மிடா போன்றவர்கள் முஷரஃபிடம் கண்டித்துச் சொல்லியிருக்கிறார்கள். பாகிஸ்தான ஆதரவு அணிகளைத் தவிர மற்ற காஷ்மீர் தலைவர்கள் பாகிஸ்தானின் உளவுத்துறையால் நீக்கப் படுவதும் அவ்வப்போது நிகழ்கிறது. ராணுவ ஆட்சி நடக்கும் பாகிஸ்தானை காஷ்மீர் மக்கள் விரும்புவதாக உலகமும் நம்பத் தயாரில்லை.

***

ஸ்டாலின் பதவிப் பறிப்பும் ஜெயலலிதாவின் அவசரக் கோலமான சட்டம்

பின் தேதியிட்டு அமல் படுத்த முயன்றதால் மேயர் பதவிப் பறிப்புக்காக இயற்றப் பட்ட சட்டம் செல்லாது என்று தீர்ப்பு வந்துள்ளது. அதில்லாமல், மேயரின் தகுதிகள் பற்றி சட்டங்களில் தெளிவில்லை என்பதும் மாநகராட்சி கலைக்கப் படவில்லை அதனால் ஸ்டாலின் பதவிப் பறிப்புச் செல்லாது என்றும் தீர்ப்பு வந்துள்ளது.

இனிமேலாவது கருணாநிதி குடும்பத்தைப் பழிவாங்கும் செயலை விட்டுவிட்டு ஜெயலலிதா ஆக்க பூர்வமான செயல்களில் ஈடுபடவேண்டும். வெவ்வேறு கட்சிகள் வெவ்வேறு அமைப்புகளில் நிர்வாகம் செய்வதும், வெவ்வேறு கட்சிகள் இணைந்து மக்கள் பிரசினைகளைத் தீர்க்க முன்வந்து செயல் படுவதுமே ஜனநாயகத்தின் அடையாளங்கள். தானே எல்லாம் என்று தன்னை முன்னிலைப் படுத்திய ஜெயலலிதாவின் போக்கு நாட்டுக்கும், நிர்வாகத்துக்கும் பெரும் தீங்கு விளைவிக்கும்.

******

ஈராக் மீது தாக்குதல் : அமெரிக்காவின் அடுத்த வியத் நாம் ?

ஜார்ஜ் புஷ் ஈராக் மீது நடத்தவிருக்கும் – நடத்தியிருக்கும் — தாக்குதல்கள் அர்த்தமற்றவை. ஆபத்தானவை. அமெரிக்க மக்களும் இதற்கு ஆதரவளிக்கவில்லை. ஏற்கனவே இஸ்லாமிய மக்கள் அமெரிக்காவை எதிரியாய்ப் பார்க்கிறார்கள். அவர்களை இந்தத் தாக்குதல் இன்னமும் அன்னியப் படுத்திவிடும்.

சதாம் உசேனைப் பதவி நீக்கம் செய்வதும் முடிகிற காரியமில்லை. நாடு தாக்கப் படும் என்ற அபாயம் இருக்கும் போது அப்போதிருக்கிற தலைமை பின்னால் தான் நாடு திரண்டு நிற்கும். சதாம் உசேனுக்கு இன்னமும் மக்கள் ஆதரவு இருக்கிறது. ஆபத்தான ஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகள் என்று பார்த்தால், பாகிஸ்தான், சீனா, வட கொரியா, இந்தியா என்று பல நாடுகள் உள்ளன. ஈராக் மீது புஷ்ஷின் பாய்ச்சல் அமெரிக்க நலனையும் முன்னிறுத்தவில்லை. உலகக் கருத்தையும் பிரதிபலிக்கவில்லை. புஷ்ஷின் தனிப்பட்ட யுத்தமாகியிருக்கிறது இது.

இந்தியா ஈராக் போருக்கு ஆதரவு கிடையாது என்று தெரிவித்துள்ளது.

****

மேற்கு வங்கம் : அரசு தொழிற்சாலைகள் விற்பனை

மத்திய அரசு தொழிற்சாலைகளை தனியார் வசம் ஒப்புவித்து வருவது குறித்து கடுமையான விமர்சனம் செய்து வரும் மார்க்ஸிஸ்ட் கட்சி , மேற்கு வங்க அரசுக்குச் சொந்தமான தொழிற்சாலைகளை தனியாருக்கு விற்க ஏற்பாடு செய்திருக்கிறது. மத்திய அரசு தொழிற்சாலைகளிலும் ,அரசு அலுவலகங்களிலும் கட்டாய ஓய்வுத் திட்டத்தைக் கொண்டு வந்த போது அதையும் மிகக் கடுமையாய் விமர்சித்தது மார்க்ஸிஸ்ட கட்சி. ஆனால் மேற்கு வங்கத்தில் இப்போது மார்க்ஸிஸ்ட் கட்சியே கட்டாய ஓய்வைக் கொண்டு வந்திருக்கிறது

இதையெல்லாம் விமர்சிக்கக் கூடாது. பெரும் நிதிநிலைச் சிக்கல் மேற்கு வங்க அரசிற்கு வளர்ச்சியின்மைக்குக் காரணம் மத்திய அரசு தான் என்று நிருபம் சென் எழுதியிருக்கிறார். நஷ்டத்தில் இருக்கிற நிறுவனங்களைத் தான் விற்கிறோம் என்று இவர் சொல்கிறார். கிட்டத்தட்ட எல்லா அரசு நிறுவனங்களுமே மேற்கு வங்கத்தில் நஷ்டத்தில் தான் உள்ளன. இவர் மேற்கு வங்கத்தின் தொழில் துறை அமைச்சர். மார்க்ஸிஸ்ட் கட்சியின் அதிகார பூர்வமான ஏடான ‘இந்து ‘வில் இவர் கட்டுரை வந்திருக்கிறது..

இதே மத்திய அரசுக் கொள்கைகளின் கீழே தான் ஆந்திராவும் இருக்கிறது. அது வளர்ச்சி அடைந்துதான் இருக்கிறது. ஏன் மேற்கு வங்கத்தில் வளர்ச்சி இல்லை. தம்முடைய தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் மத்திய அரசு மீது குற்றம் சாட்டுவது ஏன் ?

*******

சீனாவில் இணையத்திற்குத் தடை

‘மக்கள் ‘ சீனத்தில் இணையத்திற்குத் தடை விதிக்கப் பட்டிருக்கிறது. இணையத்தின் வழியாக தேடுபவர்கள் உபயோகிக்கும் ‘கூகுள் ‘ என்ற தேடும் இணையதளத்தை சீனாவில் வேலை செய்ய முடியாமல் செய்திருக்கிறார்கள். சீனக் கம்யுனிஸ்ட் கட்சியின் மாநாடு சமீபத்தில் நடைபெறவிருக்கிறது. அதிகாரச் சண்டை நடக்கக் கூடும் அதில்லாமல், சீனாவில் ஜனநாயகம் வேண்டும் குழுக்களும், ஃபாலுன் காங்க் போன்ற இயக்கங்களும் சீனா பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ளக் கூடாது என்பது சீன அதிகாரவர்க்கத்தின் நோக்கம்.

வழக்கமாகவே சீனாவின் தலைமை பற்றி விமர்சனம் செய்கிற இணையதளங்களைப் பறிமுதல் செய்வதும், செய்திகளை இருட்டடிப்புச் செய்வதும் சீனாவின் போக்குத் தான்.

இந்தச் செய்தி உலகமெங்கும் பத்திரிகைகளில் முதன்மையாய் வெளிவந்திருக்கிறது. இந்தியாவின் ஏடுகளிம் , இந்துவும் சரி மற்ற ஏடுகளும் சரி மிக விசுவாசத்துடன் இது பற்றி மூச்சே விடவில்லை. வாழ்க பத்திரிகை சுதந்திரம். – செய்திக் கட்டுப்பாடு.

***

manjulanavaneedhan@yahoo.com

***

Series Navigation