ஆரிய இனவாதம் – ஒரு ‘பில்ட்-டவுண் ‘ மேற்கோள் ?

This entry is part [part not set] of 25 in the series 20020902_Issue

அரவிந்தன் நீலகண்டன்


இந்திய வரலாற்றாசிரியர்கள் வரிசையில் முக்கியமானவராக கடந்த சில பத்தாண்டுகளில் தன்னை முதன்மைப் படுத்திக் கொண்டவர் பேராசிரியை ரொமிலா தாப்பர். பாரதத்தின் தொல்வரலாறாகட்டும், அல்லது இடைக்கால இஸ்லாமிய படையெடுப்புகளாகட்டும், அல்லது நவீன இந்திய வரலாறாகட்டும் அனைத்திலும் பேரா.தாப்பரின் குரல் ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டின் பார்வை மூலமாக அக்கால கட்டத்தைக் காட்டுவதில் உயர்ந்து நின்றுள்ளது.பாரபட்சமற்ற அறிவியல் மனப்பாங்குடன் வரலாற்றினை அணுகுவதாக புகழ் பெற்றுள்ள இவரது வரலாற்றாராய்ச்சிப் பார்வை பெரும் மதிப்புடன் விளங்குகிறது. இங்கு அவரது ‘அறிவியல் பார்வையுடனான பாரபட்சமற்ற ஆய்வு முறை ‘யின் விளைவுகள் அடிப்படை வரலாற்றுத் தகவல்களுடன் ஒப்பிடப்படுகின்றன.

ஆரிய இனவாதத்தினை இந்திய தேசியவாதிகள் எவ்வாறு எதிர் கொண்டனர் ? பேரா.ரொமிலா தாப்பரை பொறுத்தவரையில் இந்திய தேசியவாதிகள் ஆரிய இனவாதத்தினை ஏற்றுக் கொண்டனர் என்பது மாத்திரமல்ல, அவர்களது இந்தியத் தன்மையை பற்றிய அறிதலே ஆரிய இனவாத அடிப்படையில்தான் அமைந்திருந்தது. பேரா.ரொமிலா தாப்பரின் வார்த்தைகளில், ‘இந்திய தேசியவாதிகளை பொறுத்தவரையில் ஆரிய இனக்கோட்பாடு இந்திய கலாச்சாரம் என அறியப்பட்ட மேல்ஜாதி கலாச்சாரத்தினை உருவாக்கியவர்கள் ஆரியர்கள் என சொந்தம் கொண்டாடவும், பிரிட்டிஷ் அரசினருடன் தாமும் இனரீதியில் தொடர்புடையவர்கள் எனக் கூறவும் பயன்பட்டது. உதாரணமாக கேஷப் சந்திர சென்னை இதற்காக நான் எல்லா இடங்களிலும் மேற்கோள் காட்டுவது உண்டு. பிரிட்டிஷாரின் இந்திய வருகையை ‘பிரிந்த உறவினர் இணைவதாக ‘ அவர் குறிப்பிட்டார். ‘1 பேரா. ரொமிலா தாப்பரின் இந்த கூற்றிலிருந்து நமக்கு பல கருத்துக்கள் உணர்த்தப் படுகின்றன. அவையாவன்:

அ) இந்திய தேசியவாதிகள் உயர்சாதி மேன்மைவாதிகள். அவர்கள் தங்களை மற்ற சாதியினரிடமிருந்து இனரீதியாக பிரிக்க ஆரிய இனக் கோட்பாட்டினை பயன்படுத்தினர்.

ஆ) கேஷப் சந்திர சென் இந்திய தேசியவாதிகளின் ஒரு எடுத்துக்காட்டான மாதிரி.

இப்போது நாம் வரலாற்றுத் தகவல்களைக் காணலாம். பிரிட்டிஷ் அரசினை இந்தியாவிற்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதியவரும், ‘ஏறக்குறைய கிறிஸ்தவராகவே மாறியவரு ‘மான கேஷப் சந்திர சென் தன் பொது வாழ்வில் பிரம்ம சமாஜ தலைவர். பிரம்ம சமாஜ வழிபாட்டு முறைகளில் கிறிஸ்தவ தன்மைகளை கூட்டியதற்காக பிரம்ம சமாஜத்திலிருந்து பின்னாளில் விலகவும் நேர்ந்தது. மேலும் சாதி பிரிவுகளை எதிர்த்தவர் அவர். ஒரு தோற்றுப்போன சமூக சீர்திருத்தக்காரரான அவரது வாழ்க்கை எவ்விதத்திலும் ஒரு தேசியவாதியின் வாழ்க்கையில்லை. பேரா.ரொமிலா தாப்பரால் மேற்கோள் காட்டப்பட்ட சென்னின் வரிகள் கூட அவரது மீதான மிஷினரி தாக்கத்தை காட்டுகிறதே தவிர அது எவ்விதத்திலும் தேசியவாதத்தை வெளிக்காட்டும் வரிகள் அல்ல. என்ற போதிலும் இந்திய தேசியவாதிகள் ஆரிய இனக்கோட்பாட்டினை எவ்வாறு எதிர்கொண்டனர் என்பது விஷயத்தை இன்னமும் சுவாரசியமாக்குகிறது.

இந்திய தேசியவாதத்தின் ஆன்மிக குருவாகவும், முக்கிய பரவு மையமாகவும் வேறெவரையும் விட சுவாமி விவேகானந்தரைக் குறிப்பிடலாம். ஆரிய இனவாதத்தினை பற்றிய சுவாமிஜியின் கருத்துக்களே பரவலாக இந்திய தேசியவாதிகளின் கருத்துக்களாகவும் இருந்தன. இனரீதியில் தங்களை வெள்ளையரோடு அடையாளப்படுத்திக் கொண்ட இந்தியர்கள் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகிறார். ஆனால் இந்த இந்தியர்கள் தேசியவாதிகள் அல்ல. சுவாமிஜியின் கடுமை பொங்கும் வார்த்தைகளில், ‘வறுமையிலும், படிப்பறிவின்மையிலும், ஒடுக்கப்பட்டும் வாழும் கோடிக்கணக்கான தங்களது தேச சகோதரர்களுடன் எவ்வித உறவும் இன்றி ஐரோப்பியர்களை போல நடக்கும் இந்தியர்களை காண்கிறேன். வெள்ளையர்கள் இவர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள், ‘கோவணத்துடன் வறுமையுடன் போராடும் கோடிக்கணக்கான உழைக்கும் தாழ்த்தப்பட்ட இந்தியர்கள் ஆரியர்களல்லவாம், இவர்கள் ஆரியர்களாம் எனவே அவர்கள் எவ்வித உறவுமற்றவர்களாம். ‘ ‘2. இந்திய தேசியத்தின் பாதுகாவலரான சுவாமிஜி மேலும் கூறுகிறார், ‘பாரதம் முழுவதுமான ஜனத்திரள் அனைத்துமே ஆரியரேயன்றி வேறில்லை. ‘ (இதே வார்த்தைகளை பின்னர் தன் சுய ஆராய்ச்சியின் மூலம் பாரத இரத்னா அம்பேத்கரும் கூறினார், ‘பிராம்மணர்கள் ஆரியர்கள் எனில் தீண்டத்தகாதோர் என ஒடுக்கப்பட்டவர்களும் ஆரியர்களே. ‘) விவேகானந்தர் மிகச் சரியாகவே இங்கு சாடுவது தேசியவாதிகளை அல்ல, மெக்காலேயிஸ்ட்களாக மாறிப்போன இந்திய வர்க்கத்தைதான் என்பது தெளிவு.

ஒரு வேளை சுவாமி விவேகானந்தர் ஒரு விதி விலக்காக இருக்கலாம். பல தீவிர இந்திய தேசியவாதிகள் ‘ஆரிய ‘ எனும் பதத்தை பயன்படுத்தியதை நாம் அறிவோம். ஒருவேளை அவர்கள் தங்கள் மேல்ஜாதீயத்தை ஆரிய இனவாதத்தைக் கொண்டு நியாயப்படுத்தினார்களோ ?

‘ஆரிய ‘ எனும் வார்த்தையினை மிக அதிகமாக பயன்படுத்திய தேசியவாதி ஸ்ரீ அரவிந்த கோஷ். அவரது எழுத்துக்களில் மிகத் தெளிவாகவே இனரீதியிலான தேசியம் மறுதலிக்கப்படுகிறது. மாறாக கலாச்சார மற்றும் வேதாந்த மதிப்பீடுகள் சார்ந்ததோர் தேசியத்தினை கிளர்ந்தெழ வைக்கும் முயற்சியே தெளிவாகத் தெரிகிறது.எனவே ஜாதி அமைப்பினைக் குறித்த வரையில் அதனை இனத்துடன் ஒப்பிடும் எவ்வித முயற்சியும் இந்திய தேசியவாதிகளுக்கு இல்லை என்பதுடன், அதனை கடுமையாக சாடுவதையும் நாம் காண முடியும். உதாரணமாக 1907 இல் ஜாதீயம் குறித்து ஸ்ரீ அரவிந்தர் பின்வருமாறு கூறுகிறார், ‘தேசியவாதி பழமையை மறுக்கவில்லை, மாறாக மாற்ற விரும்புகிறான்…நிர்ணயிக்கப்பட்ட பரம்பரைதன்மை கொண்ட ஜனநாயக விரோதமான ஜாதீய அமைப்பு, ஜனநாயக முறையில் தொழில் செய்யும் தன்மை கொண்டதொர் அமைப்பாக உருமாற வேண்டும். ‘3 பாரத கலாச்சாரத்தில் மிகுந்த பற்று கொண்ட தீவிர தேசியவாதியான ஸ்ரீ அரவிந்த கோஷின் பார்வையில் ஜாதி ‘நிர்ணயிக்கப்பட்ட பரம்பரைதன்மை கொண்ட ஜனநாயக விரோதமான ‘ அமைப்பாக இருந்த போதிலும் பேரா.ரொமிலா தாப்பருக்கோ இந்திய தேசியவாதிகள் மேல்ஜாதி உணர்வு கொண்டு அதனை நியாயப்படுத்த ஆரிய இனவாதத்தை துணைகொண்டதாக தெரிகிறது.

இந்திய தேசியவாதிகளில் முக்கியமான தென்னகத்தவரான பாரதியின் பார்வையில் ஜாதியும் சரி ஆரிய இனவாதமும் சரி, ஒத்த வெறுப்பான எதிர்ப்பையே பெற்றன. ஆரிய இனக் கோட்ப்பாட்டினை குறித்து வரலாற்று அறிஞன் என்ற முறையில் ஆராய்ச்சி செய்த லோக மான்ய திலகர் கூட ஜாதிக்கும் இனத்திற்கும் எவ்வித முடிச்சும் போடவில்லை. எனில் ஏன் இந்திய தேசியவாதிகளை இனரீதியிலான ஜாதீய மேன்மைவாதம் பேசுபவர்களாக காட்ட வேண்டிய அவசியம் பேரா.

ரொமிலா தாப்பருக்கு ஏற்பட்டது ஏன் ?

மேற்கில் தொழில் புரட்சியையும், காலனி வேட்டையையும் தொடர்ந்து எழுந்த தேசியவாத இயக்கங்கள் யாவும் இனமேன்மையை ஏதாவதொரு விதத்தில் தூக்கிப்பிடித்தவையாகவே இருந்தன. சமூகத்தின் உற்பத்தி உறவுகளே மற்ற அனைத்து கட்டுமானங்களையும் உருவாக்குவதாக கருதும் மார்க்சிய பார்வையில், தேசியவாதிகள் ‘பெட்டி பூர்ஷ்வா ‘ தன்மை கொண்ட தங்கள் வர்க்க நலனையே பாதுகாக்கும் படியான கோட்பாடுகளையே உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும். மார்க்சிய ஞானோதயத்திற்கு பிறகுதான் உழைக்கும் வர்க்கத்தினை தேசியம் தன் பார்வைக்குள் கொண்டு வரும். இந்த பரிணாமப் போக்கினை இந்திய தேசியவாதத்தின் மீது திணித்துப் பார்க்கும் முயற்சியின் விளைவே பேரா. ரொமிலா தாப்பரை ஒரு சமூக சீர்திருத்தவாதியை தேசியவாதியாக்கும் லைசன்கோ முயற்சியில் இறங்க வைத்தது. (ஜாதியையும் வர்க்கத்தையும் குழப்புவது நம்மூர் மார்க்ஸிஸ்ட்களுக்கு கைவந்த கலை.) ஒருவிதத்தில் இம்முயற்சி தங்களுக்கு பிடித்தமான பரிணாம இயங்குவிதியினை நிலைநிறுத்த (வேடிக்கையாக) உருவாக்கப்பட்ட ‘பில்ட்-டவுண் ‘ பித்தலாட்டத்திற்கு ஒப்பானது. உருவாக்கப் பட்ட எலும்புக் கூட்டிற்கு பதில் இங்கு தொடர்பில்லாத மேற்கோள். ஆனால் ஒரு முக்கியமான வேறுபாடு, இது வேடிக்கையல்ல.

இதன் விளைவுகள் மிகக் கொடுமையானவை. வேதாந்த மதிப்பீடுகளை தன்னியல்பில் கொண்டிருந்த காரணத்தால் இந்திய தேசியம் தன் தொடக்க வேர்களில் இருந்தே ஒற்றைத்தன்மை கொண்டு விளங்கவில்லை. மானுடத்தின் மிகப் பெரிய நேசிப்பாளர்கள் பாரத தேசியவாதத்தின் சிருஷ்டிகர்த்தர்கள். ஆனால் இந்த மார்க்சீய பித்தலாட்டமோ ஜாதிய மேன்மைக்கு இனவாத அடிப்படையில் நியாயம் கற்பித்தவர்களாக அவர்களை நம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் ‘மதச் சார்பற்ற ‘ வரலாற்று பாடநூல்களை உருவாக்கிடும் ஆபத்தை உள்ளடக்கியது.

குறிப்புகள்

* 1.The transcript of the lecture ‘The Aryan Question Revisited ‘ delivered by P on 11th October 1999, at the Academic Staff College, JNU.

* 2. Complete works of Swami Vivekananda, Vol.IV P.479)

* 3. (Sri Aurobindo, Early Political writings, ‘The Unhindu Spirit of Caste Rigidity ‘, Bande Mataram,September 20,1907)

***

hindoo_humanist@sify.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்