இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 2 2002

This entry is part of 25 in the series 20020902_Issue

மஞ்சுளா நவநீதன்


சொத்துக் கணக்கும் காங்கிரஸ் அரசியலும்

முதலில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டினார்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் வலதுசாரிகள், இனவாதக் கட்சிகள், மதவாதக்கட்சிகள், சாதிவெறிக் கட்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரு சட்டத்தை கொண்டுவர ஒத்து ஊதினார்கள். சோனியா வாயைத் திறக்கவில்லை. பிறகு சட்டத்தை எழுதி மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டினார்கள். வழக்கம்போல அங்கும் எல்லோரும் அந்தச் சட்டத்தை கொண்டுவரும் அவசரத்தில் இருந்தார்கள். எல்லாப்பத்திரிக்கைகளும் கண்டித்து எழுதின. மணி சங்கர் ஐய்யர், டெலிகிராஃப் பத்திரிக்கையில், எல்லாப் பத்திரிக்கைகளும் கூடி இந்தச் சட்டத்தை எதிர்ப்பதை கண்டித்து எழுதினார். இந்தியாவின் சிறந்த குடிமக்கள், பல வகைகளிலும் நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்கள் கூடி, குடியரசுத்தலைவருக்கு அந்த சட்டத்தை திருப்பி அனுப்பி விடும்படி கேட்டுக்கொண்டார்கள். அதற்கும் சோனியா வாயைத் திறக்கவில்லை. பிறகு குடியரசுத் தலைவருக்கு முன்னால் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. குடியரசுத்தலைவர் அந்தச் சட்டத்தை மேலும் விளக்கங்கள் கேட்டு திருப்பி அனுப்பினார். சோனியா வாயைத் திறக்கவில்லை. மமதா பானர்ஜி மட்டுமே அந்தச் சட்டத்துக்கு மக்களிடம் எதிர்ப்பு இருக்கிறது; அதனைச் சட்டமாக ஆக்கக்கூடாது என்று சொன்னார். சட்டம் மீண்டும் குடியரசுத் தலைவரிடம் திருப்பி அனுப்பப்பட்டது. இதன் பின்னர் இதில் வேறு வழியின்றி குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டே ஆகவேண்டும். குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டதும், சோனியா ‘இந்த சட்டத்துக்கும் காங்கிரசுக்கும் சம்பந்தமில்லை. இதனை நாங்களும் சேர்த்து ஆதரித்தோம் என்று பத்திரிக்கைகள் எழுதுவது தவறு ‘ என்று வீராவேசமாக முழங்கியிருக்கிறார். சோனியா இது சட்டமாக ஆவதற்கு முன்னால் இது போல வீராவேசமாக முழங்கியதை வேறு பத்திரிக்கைகள் என்றால் விட்டிருக்கும். இந்துவும், டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் எப்படி விட்டிருக்கும் ? சொன்னாரா சொல்லவில்லையா ?

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனாக இருக்க முயற்சிக்கும் காங்கிரசுக்கு இது முதல் அல்ல. சட்டத்தின் மூலம் கிடைக்கும் விஷயங்களைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும், அதே நேரம் மக்கள் விருப்பத்துக்கு எதிராக ஒரு சட்டத்தை கொண்டுவர தான் உதவவில்லை என்ற நல்ல பெயரும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறது காங்கிரஸ். இன்னும் குடி முழுகிப் போய்விடவில்லை. காங்கிரஸ் ஆட்கள் எல்லோரும் இனி உச்ச நீதி மன்றம் கேட்டுக்கொண்டபடி தங்கள் சொத்து விபரங்கள், படிப்பு விபரங்கள், குற்ற விபரங்கள் அனைத்தையும் பத்திரிக்கையில் வெளியிட்டு விட்டால் தீர்ந்தது.

விரைவில் எதிர்பாருங்கள். மூப்பனார் குடும்பச்சொத்து எவ்வளவு, வாழப்பாடி ராமசாமி எவ்வளவு படித்தவர், இளங்கோவன் சொத்துக் கணக்கு என்ன – இன்னும் இதர காங்கிரஸ் வேட்பாளர்கள் மீதுள்ள குற்றப்பத்திரிக்கைகள் இருந்தால் அவை என்ன என்ன என்பவற்றை அவர்களே பத்திரிக்கையில் வெளியிடுவார்கள்.

***

வெளிநாட்டுக் காரர் பிரதமர் ஆவதற்கு ஜெயலலிதா ஆதரவு – உண்டா இல்லையா ?

திடாரென்று ஜெயலலிதாவிற்கு சோனியா வெளிநாட்டு ஆள் என்பது ஞாபகம் வந்துவிட்டது. செலக்டிவ் அம்னீசியா ஜெயலலிதாவிற்கு என்று யாரும் சொல்லலாம். 90 கோடிப் பேரில் வேறு யாரும் இல்லையா என்று கேட்டிருக்கிறார். ஆறு கோடி மக்களில் ஜெயலலிதா – கருணாநிதி தவிர வேறு யாரும் முதல்வார் ஆவதற்குத் தகுதி உள்ளவர்கள் யாரும் இல்லையா என்றும் நாம் கேட்கலாம்.

சோனியா பிரதராக முன்பு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று சொல்கிறார் ஜெயலலிதா. சொன்னதன் ஆதாரம் இதோ என்று காங்கிரஸ் பழைய கடிதங்களை நீட்டுகிறது. காங்கிரஸ் இதே அவசரத்துடன் கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் அரசிடம் சிபாரிசு செய்து காவிரித் தண்ணீரை வாங்கிக் கொடுத்திருந்தால் நன்றாயிருக்கும். ஒரு மகாராணிக்காக இன்னொரு மகாராணிக்கு வக்காலத்து வாங்கும் அவசரம் தமிழ் நாட்டின் விவசாயிகள் வாடும் போது காங்கிரசுக்கு தெரியவராது.

த மா க-காங்கிரஸ் இணைப்பிற்குப் பிறகு கொஞ்சம் காங்கிரசுக்கு ஆதரவு கூடியிருக்கிறது. இன்னும் நான்கு வருடங்களுக்கு காங்கிரஸ் தயவு ஜெயலலிதாவிற்குத் தேவைஇல்லை. இப்போது வழக்குகளுக்காக பா ஜ க ஆதரவு தேவைப் படுகிறது. இந்த அரசியலின் இடையில் விவசயிகளும், நெசவாளிகளும் துயர் படுவது இந்த அரசியல் வியாதிகளுக்கு எங்கே தெரிகிறது ?

***

இந்துவில் : சீனா வாழ்க , வட கொரியா வாழ்க

ராஜமோகன் இந்துவில் ‘திபெத்தை சீனா திறந்து விடுகிறது ‘ என்பதாகக் கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் The last few years have also seen a reasonable amount of social stability in Tibet, and China is sure that its side of the story can now be told with some credibility. அதாவது இது என்னவென்றால், சீனா திபெத் பற்றிச் சொன்னதை நம்பமுடியாதபடி இதுவ்ரை இருந்தது. இப்போது கொஞ்சம் நம்பகத் தன்மை வந்திருக்கிறது என்று எழுதியிருக்கிறார். என்ன அர்த்தம் ? இதுவரை கிரடிபிளிடி இல்லை என்றா ? இதுவரை அப்படி கிரடிபிளிடி இல்லை என்று இந்துவிலும் ஃப்ரண்ட்லைனிலும் எத்தனை கட்டுரைகள் வந்திருக்கின்றன ?

இத்தோடு கூட, ஃப்ரண்ட் லைன் பத்திரிக்கையில் வட கொரியாவில் தேனும் பாலும் ஓடுவதாக எழுதியிருக்கிறார்கள். அது கூட பரவாயில்லை. வடகொரியாவுக்கு சோஷலிஸத்தை கொண்டுவந்த கிம் இல் சுங் என்ற சர்வாதிகாரியை மக்கள் கிரேட் லீடர் என அழைப்பது நம் ஊரில் மகாத்மா என்று காந்தியை அழைப்பதுபோன்று என்று எழுதியிருக்கிறார். புரட்சித்தலைவர் என்று எம்ஜியாரை சொன்னதுபோல என்று எழுதிருந்தாலாவது ஓரளவு பொருத்தமாக இருந்திருக்கும். எனக்குக் கூட ஃப்ரண்ட்லைனில் இடம் கொடுத்தால், போல்பாட்டை மகாத்மா என்று எழுதிப் பார்க்கலாம். கம்யூனிஸ்ட கட்சியின் அறிக்கையை வெளியிட ஃப்ரண்ட்லைன் பத்திரிகை எதற்கு ? மகாத்மாவுடன் நெல்சன் மண்டேலாவை, மார்ட்டின் லூதர் கிங்கை ஒப்பிடுவதில் அர்த்தம் உண்டு. ஓர் அரசில் சர்வாதிகாரியாக உள்ள ஒருவரை, ஜனநாயகம் என்றால் என்ன பொருள் என்று கேட்கும் ஒருவரை மகாத்மா காந்த்தியுடன் ஒப்பிட்டு இந்தியப் பத்திரிகையில் எழுதவெண்டுமென்றால் அபத்தத்தின் எல்லையைத் தொடும் ஆசை இருக்கும் ஒருவரால் தான் இது முடியும். இத்தகைய அபத்தம் என் ராம் அல்லாமல் வேறு யாரால் செயல் படுத்த முடியும் ?

On the 90th anniversary of the birth of Kim II Sung, the heroic young revolutionary who fought in and led the resistance to both Japanese and U.S. imperialism, built up the Workers ‘ Party of Korea and steered the country on the path to socialism, and who is universally and lovingly addressed as ‘the Great leader ‘ (not unlike the word ‘Mahatma ‘ that comes before the name ‘Gandhi ‘ in India), you see a bastion of socialism that is not likely to fall with a huff and puff from Washington.

****

தமிழ்க் கலாசாரம் பரவுகிறதா ?

பாபா படத் தோல்வியினால் ஒருவர் தமிழ் நாட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

நாகப்பா கடத்தப்பட்டதால் ஒரு இளைஞர் மனம் உடைந்து கர்நாடகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி.

தமிழ்நாட்டிலிருந்து ஒரு கலாச்சாரம் வெளியே பரவுகிறது போலும். தயவு செய்து இந்த நபருக்கு பண முடிப்பு வழங்கி பலரையும் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டாமல் நாகப்பா கட்சியும், கர்னாடக அரசும் இருக்க வேண்டும்.

***

Series Navigation