தவறு செய்யாத மனிதன்

This entry is part [part not set] of 25 in the series 20020902_Issue

பாரி பூபாலன்


அதனைப் பார்த்தவுடன் ஆத்திரம் அவனுக்குள் அடக்க முடியாமல் வந்தது. அலுவலகத்தில் நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்தவுடன் அவன் கண்ணில் முதன்முதலில் தென்பட்டது அந்த தவறுகள் பற்றிய அறிக்கைதான். ‘என்ன முட்டாள்தனமான வேலை இது ? யார் இதனைச் செய்தது ? ‘ என்று கோபத்துடன் யோசித்தபடி தனது எதிரிலுள்ள கணினியை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘நான் தவறு செய்து விட்டேன். மன்னிக்கவும். மென்பொருள் சரிசெய்தாகிவிட்டது ‘ எனக் கூறியபடி அருகில் வந்து நின்றவனைப் பார்த்ததும் அவனது கோபம் உச்சத்தை அடைந்து விட்டது. ‘என்ன வேலை செய்கிறாய் நீ ? இது கூட தெரியவில்லை உனக்கு ? ‘ என வந்தவனைப் பார்த்து வேகத்துடன் கேட்டான் அவன். ‘இவர்களெல்லாம் வந்து விட்டார்கள் வேலை செய்வதற்கு. முட்டாள்கள். எப்படிதான் இவர்களை வேலைக்கு எடுத்தார்களோ தெரியவில்லை ‘ என்று அவனுக்குள் வெறுப்புடன் புலம்பிக் கொண்டிருந்தான். வந்தவன் மெளனமாகத் திரும்பி விட்டான்

அவனது இயல்பு அது. உடன் வேலை செய்பவர்களிடம் ஏற்படும் பிழைகளை அவனால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. அவர்கள் செய்யும் பிழைகள் மிகச் சாதாரமானவை. இருந்தாலும் அவனால் அவற்றை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவன் எப்பொழுதும் ஒரு பிழையில்லா சூழலை எதிர்பார்த்தான். அவன் எதிர்பாராமல் சில தவறுகள் நடக்கும் போது அவனுக்குள் கிளம்பும் கோப உணர்வுகளுக்கு ஒரு எல்லை இல்லை. அப்படி தவறு செய்பவர்கள் மீது அளவிட முடியாத வெறுப்பும் ஆத்திரமும் ஏற்படும் அவனுக்குள்.

சில மணி நேரம் கழிந்தபின், அவனது வேக உணர்வுகள் ஒரு சாந்தநிலைக்கு வந்தபின், அவனுக்குள் குற்ற உணர்வுகள் குறுகுறுக்கலாயின. அவன் மீது அவனுக்கே வெறுப்பாயிற்று. ‘ஏன் இப்படி இருக்கிறோம் நாம் ? எதற்காக இந்த மாதிரி கோபப்பட வேண்டியிருக்கிறது ? தவறு செய்வது மனித இயல்புதானே ? ‘ என அவன் எண்ணிப் பார்த்தான். ‘அதுவும் இந்தத் தவறுகள் வெறும் சிறு பிழைகள்தானே! மிகச் சிறிய விஷயங்களாயிற்றே! ஏன் இதைப் இப்படி பெரிது படுத்துகிறோம் ? தேவைக்கதிகமாய் சின்னஞ்சிறு விஷயங்களில் ஈடுபடுகிறோமோ ? ‘ நல்ல வேளையாய் தவறு செய்தவன் திருப்பி சத்தம் போடவில்லை. அப்படி அவனும் ஒரு கோபக்காரனாய் இருந்திருந்தால் ஒரு சச்சரவு உண்டாகி இருந்திருக்காதா ? ஏன் இப்படி நாம் ? அவனிடம் சென்று மன்னிப்பு கேட்டு விடலாம். இனி இந்த மாதிரி உணர்ச்சி வசப்பட மாட்டேன் என்று உறுதி கூறி பொறுத்துக் கொள்ளச் சொல்லலாம்.

நாம் தவறு செய்ய வில்லையா ? நாம் இப்படி தவறுகள் செய்த போது, நம்முடைய மேலாளர் எப்படி எடுத்துக் கொண்டார் ? அவர் இப்படிக் கோபப்படவில்லையே ? அவர் இப்படிக் கோபப்பட்டிருந்தால் நமக்கு எப்படி இருந்திருக்கும் ? எண்ணிப் பார்த்தான். சங்கடமாக இருந்தது. அடுத்தவனைப் பார்க்க கூச்சமாக இருந்தது. இஇஇஇப்படிக் கோபப்பட்டதால் என்ன சாதித்தோம் ? மற்றவர்களது வெறுப்பைச் சம்பாதித்ததை விட. சிந்தித்துப் பார்த்தான். தன்னைப் பற்றி எப்படி நினைப்பார்கள் மற்றவர்கள் ? இதனால் நம்முடன் ஒன்று சேர்ந்து வேலை செய்ய யாருக்கும் பிடிக்குமா ? நம்மை வெறுத்து ஒதுக்கி விட மாட்டார்களா ?

ஏன் இப்படி இருக்கிறோம் ? இது ஒரு பிடிவாதமா ? ‘பிழைகளை ஏற்றுக் கொள்ள முடியாதென்று ? ‘ நாம் சிறிது வளைந்து கொடுக்கலாமே! பிழைகள் நேருவதால் என்ன குறைந்து போய் விடப் போகிறது ? அந்தப் பிழைகளை ஏற்றுக் கொண்டு, அதனை மறுபடியும் ஏற்படாமல் இருக்க வகை செய்யலாமே ? இந்தப் பழக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள என்ன செய்யலாம் ? தான் ஏன் ஒரு நீதிபதியாக இருக்க வேண்டும் ? மற்றவர்கள் செய்யும் பிழைகளை கண்டு ஏன் தண்டனை கொடுக்க தவிக்க வேண்டும் ? ஏற்படும் பிழைகளை ஏற்றுக் கொள்ளலாமே! பிழைகளினால் ஏற்படும் திருத்தங்களை அனுபவிக்கலாமே!

மேலும் அவன் யோசித்துப் பார்த்தான். தன்னுடைய வாழ்நாளில் இதுவரை தவறுகள் எதுவும் செய்யாமல் ஒரு குறைகூட இல்லாமல் உள்ள மனிதரைப் பார்த்திருக்கிறோமா ? பிழைகளும் திருத்தமும் மனிதப் பண்புகளாயிற்றே! ஒரு சராசரி மனிதனாய் வாழ்ந்து பார்ப்போம், சக மனிதர்களின் பிழைகளை ஏற்றுக்கொள்வோம். அவனுக்குள் சில தீர்மாணங்கள். எதற்கும் இருக்கட்டும் என்று, சில ஆண்டுகளுக்கு முன் -கோபமே வராத- தனக்கு மேலாளராக இருந்தவரின் பெயரை எழுதி தன் முன்னால் இருக்கும் கணினி மீது ஒட்டி வைத்துக் கொண்டான். இனி வரும் சூழ்நிலைகளிள் அவர் எப்படி நடந்து கொண்டிருப்பார் என யோசித்துச் செயல் படலாம் என்று எண்ணிக்கொண்டு.

***

pariboopalan@hotmail.com

Series Navigation

பாரி பூபாலன்

பாரி பூபாலன்