இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 19 2002 (நடிகர்கள், ராமதாஸ், குஜராத் தேர்தல்)

This entry is part of 27 in the series 20020819_Issue

மஞ்சுளா நவநீதன்


நடிகர் என்பவர் யார் ?

தமிழ்நாட்டின் பொதுவாழ்வில் நடிகர்கள் செலுத்தும் செல்வாக்கு பற்றி ஆரோக்கியமான ஒரு விமர்சனம் வரமுடியாதபடி, எல்லாக் கட்சிகளும் ஏதோ ஒரு நடிகரிடம் சரண் அடைந்துள்ளன. எம் ஜி ஆர் தொடங்கியே இந்த விமர்சனம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தி மு க எம் ஜி ஆர் மீது வைத்த விமர்சனம் எல்லாம் அவர் மலையாளி என்பது தான். (எம் ஜி ஆர் மறைந்தவுடன் இதுவே நெடுநாளைய நண்பர் ஆகிவிட்டது என்பது வேறு விஷயம். ) எம் ஜி ஆருக்கு மாற்றாக சிவாஜி கணேசனை காங்கிரஸ் அரவணைத்ததும் நமக்குத் தெரியும். இப்போது ரஜனி மூன்றாவது அணிக்குத் தலைமை தாங்க வருவாரா என்று சிதம்பரம் கேட்டிருக்கிறார். தமிழ்ப்பண்பாட்டின் இன்றைய நிலையில் பல அவமானகரமான விஷயங்கள் உண்டு. இதுவும் அதில் ஒன்று.

நடிகர்கள் பொது வாழ்வில் மக்கள் பிரசினைக்காகக் குரல் கொடுப்பது வரவேற்கத்தக்க விஷயம் தான். ரஜனி இந்த விதத்தில் மக்கள் பிரசினையை முன்னிறுத்திச் செயல் பட்டால் நல்லது தான். ஜெயலலிதாவை எதிர்த்துக் குரல் கொடுத்த ஒரு சந்தர்ப்பம் தவிர ரஜனியிடம் இப்படிப்ப்பட்ட சமூக உணர்வு இருப்பதாய்த் தெரியவில்லை. இருந்தும் கூட, தமிழ்நாட்டின் மக்களுக்கு நடிகர்கள் எல்லோருமே ஒரு சூப்பர் மேன் பிம்பம் கொண்டு தான் வளைய வருகிறார்கள்.

நடிகர்கள் பற்றி ஜெயகாந்தன் எழுதியிருந்ததை மீண்டும் படிக்க நேர்ந்தது. எத்தனை பேர் இதைப் படித்து உள்வாங்கிக் கொண்டிருப்பார்கள் ?

http://www.thinnai.com/jayakay1.html

**********

ரஜனி மீது ராம்தாஸ் விமர்சனம்

ரஜனியைக் கிட்டத்தட்ட கடவுளாகவே ஆக்கிவிட்ட ஒரு சூழல் தமிழ் நாட்டில். அவ்வப்போது ரஜனியை விமர்சித்து வந்த ஜெயலலிதாவும் கூட , இப்போது அடங்கிப் போய்விட்டார். பகுத்தறிவுச் செம்மல்களும், தமிழினத் தலைவர்களும், ரஜனியைப் பற்றி அமைதியாய் இருக்கிறார்கள். காரணம் : அடுத்த தேர்தலில் தயவு தேவைப்படலாம்.

இந்த நிலையில் ராம்தாஸ் ரஜனி மீது வைத்த விமர்சனம் வரவேற்கத் தக்கது. ரஜனி , எம் ஜி ஆர் போல உதாரண புருஷன் (ரோல் மாடல் ) அல்ல என்பது அவர் விமர்சனம். நடிகர்களிடம் ஓர் ஆதர்சபுருஷனைத் தேடக் கூடாது தான். ஆனால் தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டம் கடந்த 40 வருடங்களாக சினிமா என்ற சாதனத்தின் நிழல்களை நம்பித்தான் எல்லா அரசியல் செயல்பாடுகளும் இங்கே. எம் ஜி ஆர் முகத்தைக் காட்டினால் ஓட்டுக் கிடைக்கும் என்று அண்ணா கூடச் சொன்னதுண்டு. . இன்று ரஜனிக்கு மூலை முடுக்கெல்லாம் ரசிகர் மன்றங்கள். ரஜனி படம் வெளிவரவேண்டும் என்று தீக்குளிக்கத் தயாராய் இருக்கும் ரசிகர்கள். கோடிக்கணக்கில் புரளும் பணம். ஏழைத் தமிழ்நாட்டில் சினிமா டிக்கட் 100 ரூபாய்க்கு மேல்.

அதில்லாமல், ரஜனி அரசியலுக்கு வந்தால் இப்போது ராம்தாசுக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச வாய்ப்பும் கைநழுவிப் போகக் கூடும் என்று பயம் இருக்கலாம்.

ஆனால் இந்த விமர்சனத்தில் இமாலய உறுத்தல் ஒன்று எட்டிப் பார்க்கிறது. ரஜனி வீரப்பனை விமர்சித்தது பற்றிய இந்த விமர்சனம் , மீண்டும் இந்தத் தமிழ் அரசியல்வாதிகளின் குறுகிய மனப்பான்மையைக் காட்டுவதாய் உள்ளது. வீரப்பன் தமிழர் அவரை எப்படி ரஜனி விமர்சிக்கலாம். ரஜனி கன்னடர் என்பதாக ஒரு நிலையை ராம்தாஸ் எடுத்திருக்கிறார். மக்கள் காதில், தமிழன் – மலையாளி என்று தி மு க பூச்சுற்ற முயன்றது. மக்கள் செவிசாய்க்கவில்லை. ஜெயலலிதா கன்னட பிராமணர் என்று ஒரு விமர்சனம் வந்தது. மக்கள் மீண்டும் ஜெயலலிதாவை வெற்றியடையச் செய்தார்கள். ரஜனி கன்னட ஆதரவாளர் என்று சொல்லி விமர்சிப்பது ராமதாசுக்கே ஆபத்தாய் முடியும். மக்கள் இந்த மாதிரி விமர்சனங்களை விரும்புவது இல்லை. இதற்குப் பின்னால் உள்ள இனவாதமும் பிரிவினைவாதமும் மக்களுக்குப் புரியத்தான் செய்கிறது.

ரஜனியின் அரசியல் தவறுகளையும், அவர் படங்களில் சிகரெட் பிடிக்கிறார், தண்ணி அடிக்கிறார் அதனால் அவர் பின்பற்றத் தக்க உதாரணத்தை ஏற்படுத்தித்தரவில்லை என்ற விமர்சனங்கள் வரவேற்கத்தக்கதே . ஆனால் இந்த கன்னட-தமிழ் பம்மாத்து மக்களிடையே செல்லுபடி ஆகாது.

நல்ல வேளை ராம்தாஸ் நீதிபதியாய் இல்லை. எல்லா தமிழ்க் கொலைகாரர்களையும் விடுதலை செய்து தன்னுடைய தமிழ்ப்பற்றைக் காண்பிப்பார். குற்றவாளிகளில் தமிழ்க் குற்றவாளி என்றால் சலுகைகள் தரவேண்டுமென்று கோருவது போல் உள்ளது இது.

********

குஜராத்தில் தேர்தல் உடனடியாக இல்லை

குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறியாட்டம் நடந்ததற்குப் பிறகு, தேர்தல் உடனே நடத்திட வேண்டும் என்று பா ஜ க துடித்தது. தேர்தல் கமிஷன் உண்மை நிலவரத்தை ஆய்வு செய்து, தேர்தல் நடத்த சுமுகமான நிலை இப்போது இல்லை என்று தெரிவித்துள்ளது. முன்பே பல பத்திரைகையாளர்களும், அரசியல் சார்பற்ற ஆய்வாளர்களும் இதையே சொன்னார்கள். முஸ்லீம் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதும், சகஜ வாழ்க்கைக்கு அவர்கள் திரும்புவதும் தான் இப்போது முக்கியம். ஜனாதிபதி ஆட்சி இங்கு நடந்தால் தான் அது முடியும். முஸ்லிம்களுக்கு நேர்ந்த குற்றங்களுக்குக் காரணமாய் இருந்தவர்கள் காபந்து அரசு பண்ணும் விதமாய் அரசில் இருப்பது விரும்பத்தக்க செயல் அல்ல.

தேர்தல் ஆணையம் ஜனாதிபதி ஆட்சிக்கும் பரிந்துரை செய்யக் கூடம் என்ற விஷயம் பா ஜ க – காரர்களுக்கு எரிச்சல் ஊட்டியுள்ளது. இது சட்ட அமைப்புக்குப் புறம்பானது என்பது சட்ட அமைச்சர் முன்வைக்கும் வாதம். தேர்தல் ஆணையம், சகஜ நிலை திரும்புவதற்கு ஒரு வழி முறையாக ஜனாதிபதி ஆட்சியைப் பரிந்திரைப்பது நல்லதே. மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த இது உதவும்.

இந்திய ஜனநாயகத்தின் தூண்கள் அரசாங்கத்தை நம்பாமல் சுதந்திரமாய்ச் செயல்படும் தேர்தல் ஆணையம், நீதித்துறை போன்ற அமைப்புகள் தான். இத்துடன் காவல்துறையும் அரசியல் சார்பற்ற நிலையில் இயங்கவேண்டும். அப்படி ஏற்பட்டால் தான் ஜனநாயகமும் சுதந்திரமும் பாதுகாக்கப்படும்.

*********

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation