கலைகளும் கோடம்பாக்கமும்

This entry is part [part not set] of 27 in the series 20020819_Issue

அவினேனி


ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா…

கண்ணதாசனின் இந்த வரிகள் இன்றய கோடம்பாக்கத்து சினிமா கலைக்கும் பொருந்தும். இலக்கியக் கதைகளை படமாக்கியதில் தொடங்கிய நமது தமிழ் சினிமா இன்று எங்கே வளர்ந்து(!!!!!) நிற்கிறதென்றால் ஏற்காடு, கீழ்பாக்கம் கதைகளை படமாக்கி சாதனைப் படைக்கும் நிலைக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.

டினோசர் வைத்து தமிழ் படம் எடுக்கிறேன் என்று ஸ்டாவன் ஸ்பீல்பெர்க் வந்தால் கூட கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வைத்து டினோசர் உருவாக்கினால் தமிழ் மக்கள் அதை பார்க்க மாட்டார்கள். அதை கோடம்பாக்கத்து தயாரிப்பாளர்களும் விட மாட்டார்கள். கலைஞானி கமலோ, அல்டிமேட் ஸ்டார் அஜீத்தோ அல்லது ‘சின்ன கமல் ‘ விக்ரமோ டினோசர் வேடமிட்டு நடித்தால் மட்டுமே படம் ஓடும். பெண் டினோசர் வேடத்தில் நடிக்க தமிழ் ஒரு வார்த்தையும் தெரியாத வட இந்திய பெண்தான் வரவேண்டும். இதில் மட்டும் தேசிய ஒருமைப்பாடு… அந்தப் பெண் மிஸ் வார்ல்டாகவோ மிஸ் யூனிவர்ஸாகாவோ இருந்தால் அது கூடுதல் தகுதி எனக் கொள்ளப்படும். இதிலே கமலை நடிக்கவைக்க முடிவெடுத்துவிட்டால் கதை, திரைக்கதை, லொக்கேஷன், டைரக்ஷன் போன்ற சின்னச் சின்ன விஷயங்களைப் பற்றி ஸ்பீல்பெர்க் கவலைப்படத் தேவையே இல்லை. அந்த பிஸினெஸ் எல்லாம் கமலே பார்த்துக் கொள்வார். டைட்டிலில் டைரக்ஷன் ஸ்டாவன் ஸ்பீபெர்க் என்று வருகிறதா என்கிற முக்கியப் பணியைப் பார்த்துக்கொண்டால் போதும். டைனோசர் படம்தான் என்றாலும் அது தமிழ்ப் படம் என்பதால் நான்கு டூயட் இருக்கவேண்டும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. லிப் டூ லிப் கிஸ் கண்டிப்பாக வேண்டும். அஜீத் நாயகன் என்றால் கதையே தேவையில்லை. ‘சின்ன கமல் ‘ விக்ரம் நாயகன் என்றால் கீழ்பாக்கத்திற்கோ அல்லது ஏற்காட்டிற்கோ சென்று கதையே இல்லாத ஒரு படத்தை மிக எளிதாக எடுத்துக் கொண்டு வந்து விடலாம்.

சிலப்பதிகாரத்தை படமாக்கினால் கூட படத்தலைப்பு ‘மீண்டும் கண்ணகி ‘ என்றுதான் வைப்பார்கள். அதற்கு கீழே ‘Again Cleopatra ‘ என்று ஆங்கிலத்தில் (சம்பந்தமே இல்லாத) ஒரு வாக்கியம் எழுதப்படவேண்டும். அதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருப்பது உத்தமம். கோவலன் வேடம் விஜய்க்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் ஸ்நேகாவை கண்ணகியாக்கிவிடலாம், மாதவியாக நடிக்க மும்தாஜ் இருப்பதனால் வீண் அவஸ்தை இல்லை. இசைக்கு எஸ்.ஏ.ராஜ்குமார் அல்லது தேவாவை புக் செய்வது புத்திசாலித்தனம். ஏற்கனவே வந்து சூப்பர் ஷிட்டான ட்யூன்களை சிறிதும் மாற்றாமல் கொடுத்து விடுவார்கள். பாடல்கள் சூப்பர் ஷிட்டாகி விடும். இதற்கு பாட்டெழுத சிலம்பம் எழுதிய இளங்கோவடிகளார் வந்தாலும் வாய்ப்பு மறுக்கப்படும். அதற்கும் இரண்டு காரணங்கள் சொல்லப்படும், ஒன்று இளங்கோவடிகளுக்கு ஆங்கிலம் தெரியாது அப்படியே அவர் ஆங்கிலம் கற்றுவந்தாலும் அவரால் வெண்பா வடிக்க முடியுமே தவிர மெட்டுக்கு வார்த்தை அடுக்க முடியாது. ‘மாசறு பொன்னே…. ‘ என்று இருக்கலாகாது, ‘மாசறு golde… வலம்புரி pearle… ‘ என்று senதமிழில்தான் எழுதப்படவேண்டும். (இந்த அவல நிலையால்தான் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பிறந்த சில நல்ல கவிஞர்கள் கூட அமெரிக்கா, பெங்களூர் என்று சென்று தமிழ் வளர்க்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்கள்). கண்ணகி கூட ஜீன்ஸ் அணிந்திருப்பாள். மாதவிக்கு பாவம் அது கூட(குறைவாய்) கொடுக்கப்படாது, அவருக்கு மட்டும் ஆடை பஞ்சம். கண்ணகியும் கோவலனும் மலேசியாவிலோ அல்லது ஸ்விட்சர்லாந்திலோ தான் உதித்நாராயண் மற்றும் சாதனா சர்கம் பாடிய காதல் டூயட்டிற்கு உதடசைப்பார்கள். இப்படியாக படம் முடிந்து வந்தாலும் எப்பொழுதும் ஆளுங்கட்சிகளுக்கே சாதகமாக இருந்து பழக்கப்பட்டுவிட்ட தணிக்கைக் குழு, தலைப்பை மாற்றும்படி தலையிலடிக்கும். அதை கண்ணகி சிலையோடு சம்மந்தப்படுத்தும். ஆளுங்கட்சிக்கு எதிராக அறிக்கை விட ஏதாவது கிடைக்குமா என்று வெட்டியாய் இருக்கும் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றாய் இணைந்து அறிக்கை விடும். படம் ரிலீஸிற்கு முன்பே சூப்பர் ஹிட்டாகி விடும்.

கோடம்பாக்கத்தின் இந்த கலைவிதியை மாற்றுகிறேன் பார் என்று வரும் சில இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் நேற்றய இமய இயக்குனரோ அல்லது மூத்த நடிகரோ இளம் இயக்குனருக்கு வாய்ப்பு தருவார் கூடவே தனது மக்குப்பிள்ளையைத் தான் நாயகனாக போடவேண்டும் என ஒரு நிபந்தனை விதிப்பார். தன் கதை மேல் தனக்கு இருக்கும் நம்பிக்கையாலும் எப்படியாவது இயக்குனராக வேண்டும் என்ற ஆவலினாலும் அந்த இளம் இயக்குனரும் அப்பாவித்தனமாக ஒப்புக்கொள்வார் தனது தயாரிப்பாளர் கதையை தலைகீழாக மாற்றப்போகிறார் என்கிற உண்மை தெரியாமல்.

இந்த நிலை இன்றய தமிழ் சினிமாவிற்கு மட்டும் இல்லை அண்டை சினிமாக்களான தெலுங்கு, கன்னடம், மலையாளத்துக்கும் இதே கதி தான்.

தெலுங்கில் எப்பொழுதும் போலவே கதாநாயகர்களுக்கு பஞ்சமே இல்லை. ஒரு விஷயத்தில் அவர்கள் நம்மைவிட முன்னேறி இருக்கிறார்கள், நாகேஷவர ராவ் மற்றும் ராமா ராவின் பேரன்களும் கதாநாயகர்களாகி விட்டார்கள். கதாநாயகிகளுக்கும் கதைகளுக்கும் தான் அவர்களுக்கு பஞ்சம். தமிழில் ஓரளவுக்கு ஓடிய திரைப்படங்களையும் காப்பிரைட் வாங்கி ரீமேக் செய்து விடுகிறார்கள். சில நேரங்களில் அவர்கள் படங்களும் இங்கே வந்து கலக்குவதுண்டு. அவர்கள் கஷ்டப்பட்டு அலைந்து திரிந்து ஒரு கதாநாயகியை பிடித்து வருவார்கள். அந்த நடிகை நடித்த அந்தப் படம் தெலுங்கில் வெளிவருவதற்கு முன்னமே நமது தயாரிப்பாளர்கள் கடத்திவந்து நான்கைந்து படங்களுக்கு நாயகியாக்கிவிடுவார்கள். வங்கக் கடலில் உருவாகும் புயல் தமிழகத்தில் நன்றாக பொழிந்து ஆந்திராவில் கரை கடப்பது போல சில நாயகிகள் இங்கே சக்கைப் போடு போட்டுவிட்டு ஆந்திராவில் சென்று கரை கடப்பதும் உன்டு.

அன்றிலிருந்து இன்றுவரை மலையாளத்தில் நிலையான இடம் பிடித்திருக்கும் ‘பலான ‘ படங்களுக்கு பஞ்சமே இல்லை. ஷகிலா போன்றோறின் வருகையால் அந்தப் படங்களுக்கு முன்னம் இருந்ததைக் காட்டிலும் இப்பொழுது மவுசு அதிகமாகி உள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் இளைஞர்கள் குறைந்த பட்ச மலையாளம் சம்சாரிக்கிறார்கள் என்றால் அது ஷகிலாவின் உபயம் என்பதை மலையாளிகள் மறக்ககூடாது.

கன்னடத் திரை உலகம் ஒரு குழப்பத்தில் உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் வரும் அனைத்தையும் ரீமேக் செய்து விடுகிறார்கள். இதில் முக்கியமானவர்கள் நடிகர் ரவிச்சந்திரன், நடிகர் விஷணுவர்தன். பழைய நடிகர் ராஜ்குமாரை மற்ற மாநிலத்தார் அறியும்படி செய்தது வீரப்பனின் பெருந்தன்மை. நல்ல நடிகர், நான்கு மகன்களையும் களம் இறக்கி விட்டிருக்கிறார். தலைநகர் பெங்களூரில் தமிழ், தெலுங்கு, இந்திப் படங்கள் நன்றாக ஓடி கன்னடத் திரைத் துறையினரின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கின்றன.

வாழ்க கலைகள் ! ! ! வளர்க கோலிவுட் ! ! ! ! ! !

=

உங்கள் விமர்சனங்கள்–> avineny@netஸ்cap.net

Series Navigation

அவினேனி

அவினேனி